வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார் கண் பார்வையில் படும்படி நடமாடியதே இல்லை என்ற உண்மை உரைத்தது.
இவர்கள் அனைவரையும் ஏதோ வேலை சொல்லி அனுப்பி வைத்துவிட்டுத்தான் பாலன் அபிராமை உண்ண அழைத்து வருவது. யாராவது விருந்தினர் வரும்போது கூட ஏற்கனவே அவரை வரவேற்கும் வண்ணம் அமர்ந்திருப்பான். உணவருந்தும் முன்பு பட்லர் ஒருவர் அழைத்துச் செல்ல. விருந்தாளி கை கால் சுத்தம் செய்து வருவதற்குள் டின்னர் டேபிளில் இருப்பான்.
இப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும். தான் பிறந்து வளர்ந்த ஊரில் இப்படி நடமாடப் பிடிக்காமல் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் அபிராம் இப்படியே தொடர்ந்தால் மனநலம் பாதிக்கப்படுவது உறுதி.
தனது பிரச்சனைகளை மறக்க ஓடி வந்தவள் தன்னைப் பற்றிய நினைவே இல்லாமல் அந்த வீட்டின் பிரச்சனைகளில் அமிழ்ந்து தீர்வு கண்டுபிடிக்க முற்பட்டாள்.
ஓவியாவை அழைத்தான் அபிராம் “உனக்கு பாடம் கஷ்டமா இருக்குன்னு புரியுது. எந்த பாடம் கஷ்டமா இருக்கு?”
“எல்லா பாடமும்”
“எல்லா பாடமுமா. நீ வாங்கிருக்குறதிலேயே எந்த சப்ஜெக்ட்ல ரொம்ப கம்மி மார்க்?”
“இங்கிலிஷ்”
“இங்கிலிஷா? எத்தனை மார்க்னு இதில் எழுதி எனக்கு மாத்திரம் காமி”
ரகசியமாய் எழுதி அவனிடம் காண்பித்து வந்தாள்.
“இதில் இன்னும் எட்டு மாசத்தில் பரீட்சை. சோதனை!” என்றான் வாய்விட்டு.
“செம்பருத்தி தினமும் நீ ஓவியாவுக்கு பாடம் சொல்லித் தா”
“சார். இங்கிலிஷ் மட்டும் என்கிட்டே கேக்காதிங்க. இங்க பதில் கடிதம் எழுதுறதே எப்படின்னு தெரியாம தினமும் ஒவ்வொரு பழைய பதில் லெட்டர மனப்பாடம் பண்ணி சமாளிச்சுட்டு இருக்கேன்”
“உனக்கும் இங்கிலிஷ் ததிங்கிணத்தோமா… சரி ஓவியா நான் சொல்லுற வார்த்தைகள் எல்லாத்துக்கும் கரெக்ட்டா ஸ்பெல்லிங் எழுதிட்டா உனக்கு அடிப்படை நல்லாருக்குன்னு அர்த்தம்”
“கார்ல பிரேக் போட்டேன், எனது ப்ரைஸ் இந்தக் கப், ஒட்டகம் டெஸெர்ட்டில் காணப்படும் எங்க இந்த மூணு வாக்கியத்தையும் எழுது பார்க்கலாம்”
ஓவியா எழுதியதும், “நீ எழுதின ஸ்பெல்லிங் எல்லாம் எப்படி தப்பான அர்த்தம் வரும் தெரியுமா? பிரேக் brake போட்டேன் இதுக்கு இந்த break ஸ்பெல்லிங் உடைச்சேன்னு வருது. ப்ரைஸ்னா prize பரிசு நீ அதை எனது price விலைன்னு எழுந்திருக்க. Desert பாலைவனம்னு அர்த்தம் வரதுக்கு பதில் டின்னர் முடிச்சுட்டு கடைசியா சாப்பிடுற இனிப்பு dessert ஸ்பெல்லிங் எழுந்திருக்க. உன்னை படிக்க வச்சு பாஸ் பண்ண வைக்கிறதுதான் வாத்தியாருக்கு உண்மையான சத்திய சோதனை”
“வேற வழியே இல்லையா சார்?” என்றாள் செம்பருத்தியும் கவலையுடன்.
“இந்த சத்திய சோதனையை நம்ம காலேஜ் வாத்தியாருக்கே தரலாம். போன தடவை இங்கிலிஷ் டிபார்ட்மென்ட் நம்ம காலேஜில் சரியில்லைன்னு ஒரு லெட்சரர் லெட்டர் போட்டிருந்தாங்க. அவங்களுக்கே இந்த சத்திய சோதனையை பார்சல் பண்ணி விடுவோம்”
ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்கா. அவரை சோதித்த மாதிரியும் ஆயிற்று. அவர் வெற்றி பெற்றால் அவருக்கு பெயர் கிடைத்த மாதிரியும் ஆயிற்று.
கடைசியில் தினமும் ஒரு பாடம் டியூஷன் சொல்லித்தர ஏற்பாடு செய்தான். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பக்கத்து ஊரில் இருக்கும் அவர்களது கல்லூரிக்கு செல்ல வேண்டும். அங்கு வாத்தியார்கள் படிக்க வைக்க வேண்டும்.
“செம்பருத்தி நீயும் போயிட்டு வா”
“சார்… நானே மேற்படிப்பு படிக்கலாம்னு இருக்கேன்”
“நினைவிருக்கு. அங்கேயே ஈவ்னிங் காலேஜ் இருக்கு. அதில் சேர்ந்துக்கோ. என்ன சப்ஜெக்ட் படிக்கப் போற?”
“சில வாரத்துக்கு முன்னாடி வரை எம்.காம் படிக்கலாம்னு இருந்தேன். இப்ப இங்கிலிஷ் படிக்கலாம்னு ஐடியா இருக்கு. ஆனால் லிட்டரேச்சர் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குமேனு யோசிச்சுட்டு இருக்கேன்”
“என்ன எடுத்தாலும் இங்கிலிஷ்ல பக்கம் பக்கமா எழுதுற ஹிஸ்டரி, சைக்காலஜி இந்த மாதிரி இல்லைன்னா பிசினஸ் ஸ்டடிஸ் எடுத்துக்கோ. ஆட்டோமேடிக்கா மொழி பழகிடும். இப்ப தட்டுத் தடுமாறி மலையாளம் பேசுறியே அந்த மாதிரி”
“சரி சார்…“ என்று சொன்னாலும் இவன் கண்களுக்கு எதுவுமே தப்புவதில்லை என்று உணர்ந்தாள். இதே போல இன்னொருவனிடமும் உணர்ந்தாளே. அவன் எங்கிருக்கிறானோ தெரியவில்லை.
“என்ன சரி சார்? என்ன சப்ஜெக்ட்தான் உனக்கு இண்டெர்ஸ்ட்”
“இது வரைக்கும் என் சம்பந்தப்பட்ட முடிவுகள் எல்லாம் எங்கப்பாதான் எடுத்தார். என் படிப்பு கூட என்னோட தேவை தான் தீர்மானிச்சதே தவிர என்னோட விருப்பம்னு எந்த காலத்திலும் யோசிச்சதில்லை. இந்த வேலைக்கு வந்ததுதான் நானே எனக்காக எடுத்து வச்ச முதல் அடி. அடுத்த அடி யோசிச்சுத்தான் எடுத்து வைக்கணும்” என்றாள்..
“உண்மைதான். நானும் எங்கம்மா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் என்ன படிக்கணும், எங்க படிக்கணும் எல்லாம் தீர்மானிச்சது அவங்கதான். நான்தான் அவங்க உலகம். இப்பக் கூட அவங்க இருந்திருந்தா எனக்கு ஒரு தூணா இருந்திருப்பாங்க” அதன்பின் ஏதோ நினைவில் ஆழ்ந்தவாறு மெதுவாக பழரசத்தைப் பருகினான்.
“அய்யா… காலேஜு ஆரம்பிச்சு நாளாகுதே… நான் வேணும்னா ப்ரின்சிபாலை கூப்பிட்டு ஒரு சீட்டு சொல்லி வைக்கட்டுமா?”
“ஈவினிங் காலேஜ்ல ஒரு இடம் உறுதி செய் பாலா. செம்பருத்தி, உனக்கு ரொம்ப நாள் டைம் கிடையாது. அடுத்த வாரத்துல இருந்து காலேஜ் போக வேண்டி இருக்கும்” என்று சொல்லிவிட்டான்.
இரவு உணவு அவன் முடித்து எழுவதற்குள் செம்பருத்திக்கு கல்லூரியில் இடமும் ஓவியாவுக்கு பாடம் சொல்லித் தர ஆசிரியரும் தயார்.
அவன் சென்றதும் சுத்தம் செய்துவிட்டு வேலையாட்கள் சாப்பிடும் உணவறைக்குள் நுழைந்தார்கள்.
அன்று இவர்களுக்காகவே சில உணவுப் பதார்த்தங்களை சமைத்திருந்தார் சேச்சி. பதார்த்தம் என்றால் பெரிய கஷ்டமான உணவு வகை இல்லை. கருவாடு, ரசம், கொத்தவரங்காய் வற்றல் இவற்றுடன் சூடான அரிசிக் கஞ்சி.
“ரொம்ப தாங்க்ஸ் சேச்சி. இந்த சீனி அவரை வத்தல் இருக்கே… இதுதான் எங்க வீட்ல பாதி நேரம் வயத்தை நிரப்ப… ” என்றாள் காளியம்மா.
“இன்னைக்கு தரைலயே உக்காந்து சாப்பிடலாம்” நாற்காலிகளைத் தள்ளி வைத்துவிட்டு அனைவரும் ஒரு கிண்ணத்தில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வட்டமாக தரையில் அமர்ந்து விட்டார்கள்.
“அதனால்தான் தினமும் இதை சாப்பிடுறீங்கலாக்கா?” துவர்ப்பான அந்த கொத்தவரைங்காய் வற்றலைக் கடித்துக் கொண்டே கேட்டாள் செம்பருத்தி.
“ஆட்டக் கரகமா இருந்தா சீசன் இருக்கும். வருமானமும் இருக்கும். நாங்க சக்திக் கரகம் ஆடுறவங்க. திருவிழா சீசனப்ப மட்டும்தான் வேலை. அதுவும் ஒவ்வொரு சீசனுக்கும் ஒண்ணு ரெண்டு கோவில்ல மட்டும்தான் வேலை செய்ய முடியும். அதில் என்ன பெரிய வருமானம் இருந்துடப் போகுது? வீட்டில் இருக்குற வறுமைல பாதி நாள் தினத்துக்கும் ஒரு வேளை அரிசிக் கஞ்சிதான். அதுக்கு தொட்டுக்க இந்த சீனி அவரைக்காய் வத்தல், ஒரு ஊறுகாய் பாக்கெட், அத்திப் பூத்தாப்புல கருவாடு. இதுதான் எங்க விருந்து சாப்பாடு”