செம்பருத்தி 15 – 2

“உங்க கூட சேர்ந்து எனக்கும் இந்த வத்தல் பழக்கம் தொத்திக்கிச்சு” என்றாள் செம்பருத்தி செல்லமாய் சிணுங்கிக் கொண்டே.

“சரி வீடு காளியம்மா நீ பட்ட பாட்டுக்கு இவ பாஸானா விடிவுதான் போ” என்றார் சேச்சி. 

“அக்கா… நீங்க கரகாட்ட டான்ஸரா?” 

“ஆமாம்மா… “ என்ற காளியம்மா . “இந்த கரகம் இருக்கே… அது மாரியம்மனுக்கு உகந்ததும்மா… அந்த காலத்துல பெரியவீட்டில் இருக்குற மாரியம்மனுக்கு சக்திக் கரகம் எடுத்துட்டு போறவரு எங்க தாத்தா… எங்க வீட்டு பிள்ளைங்க எல்லாரும்  நடக்கத் தெரிஞ்சதும் காலுல சலங்கை கட்டி ஆட ஆரம்பிச்சுருவோம்”

“சக்திக்  கரகமா? குடத்தில் வேப்பிலையை திணிச்சு அம்மன் முகத்தை அலங்காரம் செஞ்சு சாமி கும்மிட வைச்சிருப்பாங்களே அதுவா?”

“எல். ஆர். ஈஸ்வரியம்மா பாட்டு கேட்டிருக்கியா… பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்…  அப்படி ஆரம்பிச்சதுதா சக்திக் கரகம். மஞ்சள்தண்ணி, வேப்பிலை, மாவிலை எல்லாம் போட்டு மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம் எல்லாம் விரதம் இருந்து, தொடுத்து அலங்காரம் செஞ்சு, அம்மன் முகத்தை பூவாலேயே செஞ்சு பெரிய கரகம் காட்டுவார் எங்க தாத்தா….

ஆத்துல இருந்து கரகத்தைக் கட்டி தலைல சுமந்துகிட்டு அஞ்சு மைல் தொலைவு நடந்து கோவிலுக்கு வரணும். அங்கிருந்த பூக்குழில இறங்கி திருவிழாவைத் தொடங்கி வைப்பாரு. சக்திக் கரகம் நல்லபடியா எந்த வித கோளாறும் இல்லாம  நடந்தால்தான் அந்த வருடம் ஊரு நல்லாருக்கும்னு நம்பிக்கை. இதெல்லாம் சங்க காலத்துலே இருந்து தொடர்ந்து வந்ததா ஒரு எங்க வீட்டில் சொல்லுவாங்க”

“ஆனால் இதெல்லாம் எப்படி மாறுச்சு?இப்ப கரகாட்டம் ராத்திரி பூரா நடக்குது. அதுவும் எங்களைப் பாக்கவே விடுறதில்லையே”

“சக்திக் கரகம் தவிர ஆட்டக் கரகம்னு ஒன்னு இருக்கு. அது பொழுது போக்குக்காக பண்ணுறது. பகலெல்லாம் சக்தி கரகத்துல மீனாட்சி வேஷம், காளி வேஷம் எல்லாம் போட்டுட்டு பக்தியை வளர்ப்போம். 

அந்த காலத்தில் திருவிழாவுக்கு சனம் முழுசும் பல ஊரிலிருந்து கூடி இருக்கும். அவங்களுக்கு பொழுது போகணும் இல்லையா. உழைக்கும் தொழிலாளி உற்சாகப் படுத்திக்க ஆட்டக் கரகத்தில் பொழுதுபோக்கா கிராமியப் பாடல்கள் நையாண்டி மேளத்துக்கு ஆடுவோம். நாட்டு நடப்பு, மாமியார் மருமக சண்டை, புருஷன் பொண்டாட்டி தகராறு எல்லாம் வச்சு பகடி செய்வோம். இது ராப்பொழுது முழுசும் நடக்கும். கொஞ்ச கொஞ்சமா அந்த நையாண்டியில்  கவர்ச்சி புகுந்திருச்சு. 

ராத்திரி முழுசும் சேலை கட்டி ஆடிட்டு இருந்தவங்க, வசதிக்காக பாவாடை சட்டை போட்டுக்க ஆரம்பிச்சாங்க. அது அப்படியே சிறுசாயிட்டே போயிருச்சு. 

எங்க குடும்பத்தில் சொந்தக்காரங்க குள்ளதான் கல்யாணம் நடக்கும். எல்லாரும் ஒரே குடும்பமா வேலை செய்வோம். அதனால சம்பாரிச்சா எல்லாரும் ஒரே சமயத்தில் சம்பாரிப்போம். இல்லைன்னா ஒரேடியா பட்டினி கிடப்போம். 

இதெல்லாம் பொறுக்க முடியாம நாங்க வருமானத்துக்காக பக்கத்து ஊரில் எல்லாம் சாமி வேஷம் போட்டுட்டு ஆடுவேன். அப்படிப் போனப்ப  வேற ட்ரூப் ஆளு ஒருத்தன் என்னை சுத்தி சுத்தி வந்தான். எனக்கும் வயசுக்கோளாறு. 

ஆடப் போன இடத்தில் எனக்குக் காதல். எங்களைப் பிரிக்க நெனச்ச அம்மா வீடு வெறுப்பா இருந்துச்சு. வீட்டை விட்டு அவனை நம்பி ஓடி வந்தேன். எங்க வீட்டில் என்னைத் தலை முழுகிட்டாங்க. நாங்க கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நல்லா ஊரு சுத்தினோம். கொஞ்ச நாள் கழிச்சதும்தான் தெரிஞ்சது நான் அவனுக்கு நாலாவது பொண்டாட்டின்னு. வெளியவே வர முடியாம அவன்கிட்ட சிக்கிட்டேன். அந்தாளு என்னை மறுபடியும் ஆடச் சொன்னான். ஆனால் கரகாட்டம் இல்லை கவர்ச்சி ஆட்டம். 

முதல்ல பேரை மாத்துனாங்க. அப்போதைக்கு பேமசா இருக்குற நடிகை பேரா வச்சாங்க.. ஒரு காலத்தில் கணுக்கால் தெரிய கண்டாங்கி சேலையைக் கட்டிட்டு கரகத்தை சுமந்த என்னை தொடை தெரிய குட்டைப் பாவாடை கட்டிட்டு ஆடச் சொன்னாங்க. ஏன் எங்காத்தா அப்பத்தா எல்லாம் புடவையை இழுத்து சுத்திட்டுத்தானே கரகம் ஆடினா? 

அதுவும் அந்த குட்டைப் பாவாடையை மாத்தக்கூட பாதிநேரம் மறைவிடம் கிடைக்காது. ஒரு மூலைல இடத்தைப்  சேலையை நாலு பக்கமும் ட்ரூப் ஆளுங்க பிடிச்சுக்க உடை மாத்திக்கணும், மேக் அப் போட்டுக்கணும். வீட்டு திண்ணைல கூட எங்களை உக்கார விடமாட்டாங்க. பாத்ரூம் போக கூட சரியான வசதி கிடையாது. இதுதான் எங்க நிலமை.

கரகாட்டம்னு பேரு ஆனா பாதி நேரம் கரகம் தலைல இருக்காது. சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவோம். அதுவும் ஒரு ரெஸ்டே இல்லாம ராத்திரி முழுசும் டான்ஸ் ஆடனும். 

ரெட்டை அர்த்த வசனம் பேசினாத்தான் சம்பளம். அதில் எவனெவனோ ரூபா நோட்டை ஜாக்கெட்டில் குத்த வருவான். அதை சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கணும். 

அப்பல்லாம் குடும்பங்க பாக்கத்தான் நாட்டுப்புறக் கலை. இப்ப குறிப்பிட்ட ஆளுங்களை சந்தோஷப் படுத்தத்தானே எங்களைக் கூப்பிடுறாங்க. கோவில் மண்டபத்தில் ஆடிட்டு இருந்த சதிராட்டம் சீரமைக்கப்பட்டு, ஆடுறவங்க கவுரவப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தால் வளர்க்கப் பட்டு உலகமெல்லாம் அரங்கம் ஏறுது. ஆனால் அம்மனுக்காக அவ திருவிழாவில்  ஆடப்பட்ட கரகாட்டம் இப்ப ரெக்கார்டு டான்ஸ் அளவுக்கு மோசமா நடத்தப்படுது. 

இப்படித்தான் என்னோட காலமும் போச்சு. ஏன் பிடிக்காம வேலை செஞ்சேன்னு கேக்கலாம். என்னோட மூத்தாள் என்னை சொந்த தங்கச்சி மாதிரி பாத்துக்கிட்டா. நான் இதை விட்டு வேற எங்க போயி வாழுறது? நான் போயிட்டா அவளும் அவ குழந்தைங்களும் சாப்பாடு இல்லாம கஷ்டப்படுமே? இதெல்லாம்தான் என்னை அந்த வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திருச்சு. 

நானே என் விதியை நொந்து நடைபிணமா இருக்கேன். இதில் நான் ஆடின  டான்ஸை அசிங்கமான கோணத்தில் எடுத்து யாரோ ஒரு எச்சக்கலை வீடியோ போட்டிருக்கான். இதை எங்கப்பாரு கிட்ட ஊரு ஜனங்க காமிக்க அன்னைக்கே நெஞ்சுவலி வந்து செத்துட்டாரும்மா… “

புடவைத் தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு கேவினாள் காளியம்மா. “எங்கப்பாவை என் பொழைப்பே கொன்னுடுச்சேன்னு ஏற்பட்ட குற்ற உணர்வை என்னால தாங்க முடியல, ஒத்துகிட்ட டான்ஸ் எதுக்கும் வர முடியாதுன்னு என் வீட்டுக்காரனைத் திட்டிட்டு எங்க ஊருக்குப் போயிட்டேன். இனிமே இந்தத் தொழிலை செய்யக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டேன்”

சிறிது நேரம் ஜன்னலின் வழியே நிலவை வெறித்துப் பார்த்தாள் காளியம்மா. ஓவியா அவளது மடியில் படுத்து நிம்மத்தியாகத் தூங்கி விட்டாள். மகளின் நெற்றியில் மெதுவாக முத்தம் கொடுத்தாள் காளியம்மா .

“அதுக்கப்பறம் அம்மாவும் பொண்ணும் வேலை தேடி இங்க வந்துட்டீங்களாக்கும். ஓ… பெரிய குடும்பத்து அம்மன் கோவிலுக்கு நீங்கதான் சக்திக் கரகம் எடுக்குறவங்கன்னு சொன்னிங்கல்ல? அவங்கதான் உங்களை இங்க அனுப்பினாங்களா?”

error: Alert: Content selection is disabled!!