செம்பருத்தி 16 – 1

விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன. 

பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா தேவைப்படும் என்று தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள். அத்துடன் ஜர்னல் ஒன்று. தினமும் அவள் என்ன புதிதாகக் கற்றுக் கொண்டாள் என்ற விவரங்கள். எதுவும் இல்லையென்றாலும் அருகில் இருக்கும் ஒரு ஊரின் பேரோ அல்லது தெருவின் பேரோ உறங்குவதற்கு முன் ஓவியாவிடம் கேட்டு அறிந்து கொள்வாள். 

கற்றல் இருக்கிறதே அது போதை தரும் விஷயம். அதனை ஒரு தடவை சுவைத்துவிட்டால் இன்னும் இன்னும் என்று மூளை கேட்டுக் கொண்டே இருக்கும். 

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு குளிக்க எழுந்தாள். ஷாப்பிங் போகக் கூட நேரமில்லை. அவளுக்கும் ஓவியாவுக்கு  சேச்சிதான் மளிகை பொருட்கள் வாங்கும்போது பக்கத்தில் இருக்கும் ஆயுர்வேத கடையில் சோப்பு, பவுடர் எல்லாம் வாங்கி வருகிறார். 

“நான் வாங்கித் தரத அப்படியே போட்டுக்குறிங்களே. உங்களுக்குன்னு என்ன வேணும்னு சொல்லுங்க பொண்ணுங்களே”

“சேச்சி, நீங்க என்ன சோப்பு போடுறிங்களோ அதையே நாங்களும் போட்டுக்கிறோம். உங்க அழகு ரகசியத்தை எல்லாம் சொல்லுங்களேன். வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? உங்களை வெயிலுக்கே காட்டாம வளத்தாங்களா? என்ன ஒரு கலர்! கிள்ளினா அப்படியே சிவந்துடுறிங்க சேச்சி. எங்களுக்கும் கொஞ்சம் இந்த அழகைக் கடன் தர்றது?”

கன்னத்தைக் கிள்ளுவாள் ஓவியா. 

“போயி குளிங்கடி” என்று கையைத் தட்டி விடுவார். 

“சேச்சி இப்பத்தான் பாக்குறோம் கழுத்தில் என்ன தழும்பு?”

“அதெல்லாம் என் வாழ்க்கை போரில் பட்ட காயம். ரெண்டு பேரும் போயி குளிச்சுட்டு கிளம்புங்க”

மாரியம்மா அக்கா கஷ்டம் இல்லாதவங்க இந்த உலகத்திலேயே கிடையாது என்று சொன்னது அப்படியே எக்கோ எபெக்டில் செம்பருத்தியின் மனதில் ஒலித்தது. 

இங்கு வந்து இத்தனை மாதமாகியும் இன்னும் அவினாஷைப் பார்க்கக் கூட முடியவில்லை என்பதுதான் அவளது வருத்தம். 

பக்கத்து அறையிலிருந்து ஓவியா ஓடி வந்து “அக்கா இந்த கணக்கு ஹோம்வொர்க் மட்டும் செஞ்சு வச்சுறேன். சாய்ந்தரம் டியூஷன்ல டீச்சரம்மா   கேட்கும்”

“வீட்டுப்பாடம் மட்டும் நீதான் செய்யணும். நான் வேணும்னா உதவி செய்றேன்”

“சே.. இந்த பப்ளிக் எக்ஸாம் எப்பத்தான் முடியுமோ” என்று திட்டிக் கொண்டே ஓடினாள். 

செம்பருத்தியும் இனி கிளம்பி வேலைக்கு செல்ல வேண்டும். மாலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி அவளும் ஓவியாவும் பேருந்தில் கல்லூரிக்குக் கிளம்புவார்கள். அபிராமின் சிபாரிசு என்பதால் ஓவியாவைப் பாஸ் மார்க் வாங்கச் செய்வது வாத்தியார்களின் தட்ட முடியாத கடமை ஆயிற்று. எல்லாரும் சேர்ந்து அவளை மெனக்கெட்டு படிக்க வைத்தனர். ஒரு ஆசிரியர் மனது வைத்தால் படிப்பு வராது என்ற வார்த்தையே மாணவர்களின் அகராதியிலிருந்து நீக்கி விடலாம் என்று கற்றுக் கொண்டாள் செம்பருத்தி. 

ஓவியாவுக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தந்த தற்காலிக ஆசிரியை ஸபமோல் அவளது வீட்டுப் பாடத்தைக் கண்டு இவளை எப்படித் தேற்றுவது என்றெண்ணி கலங்கிவிட்டார். 

“ஓவியாவுக்கு கணக்கே வரல. இவ பெயில் ஆனா தன்னோட பேரு கெட்டுப் போயிடும்னு எல்லாரும் என்கிட்டே இவளைத் தள்ளிட்டு போய்ட்டாங்க.  இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம் ஷெம்பருத்தி. என்னைக் கல்யாணம் கட்டினவர் குடும்பத்தைப் பாக்க சவுதிக்கு போய்ட்டார். கொஞ்ச நாளா அவருக்கு உடம்புக்கு முடியல. எனக்கு இந்த வேலை நிரந்தரமானா இங்கேயே வந்துடுவார். ஆனா இவ பாசாகலைன்னா என்னோட வேலையும் போய்டும்”

“நீங்க கவலைப்படாதிங்க டீச்சர் நான் அவளை வீட்டில் படிக்க வைக்கிறேன்” என்று உறுதி அளித்தாள்.

“தினமும் காலைல இந்த பார்முலா எல்லாத்தையும் ஒரு தடவை பாக்காம எழுத வை செம்பருத்தி. அது போதும்”

“சரி டீச்சர்”

சபமோலைப் பார்ப்பவர்கள் அவளது மலர்ச்சியான முகத்திலும் அழகான உடைகளையும் கண்டு அவளுக்கென்ன வீட்டுக்காரன் அரபு நாட்டில் சம்பாரிச்சு கொட்டுறான். காசாசை பிடிச்சு இங்க வேலைக்கும் வர்றா பாரு. என்று அவளது காது பட பொறாமையில் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஆனால் அவளது நிலையோ இப்படி.  

சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும்  எத்தனை விதமான கவலைகள்? அவர்களைக் கரித்துக் கொட்டுபவர்களுக்குத்தான் எவ்வளவு வன்மம்? இந்த சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே. அதற்காகத்தான்  முதுகலை சோசியாலஜியைத் தேர்ந்தெடுத்தாள். 

செம்பருத்திக்கு ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை கல்லூரி அதன் பின்னர் சில நாட்கள் கார் சில சமயம் பஸ் என்று வீட்டுக்கு வந்து சேர்வார்கள். இரவு உணவு முடித்துவிட்டு படிப்பு, மறுபடியும் அதிகாலை விழித்து படிப்பு என்று இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. சமீபத்திய தேர்வில் ஓவியா எல்லா பாடங்களிலும் பாஸாகி இருந்தாள். அதுவே அனைவருக்கும் சந்தோஷம். 

“குட், குட்… “ என்று பாராட்டி ஓவியாவுக்கு புதிய வாட்ச் ஒன்றைப் பரிசளித்திருந்தான் அபிராம்.

ஓவியா பள்ளிக்குக் கிளம்பிவிட, செம்பருத்தி வேலையில்  ஆழ்ந்தாள். “செம்பருத்தி இன்னைக்கு வரும்போது கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வர்றியா?” என்று பைலைப் பார்த்த வண்ணம் கேட்டான் அபிராம்.

“சரி சார். ஆனால் நீங்க குடிக்கிற ப்ராண்ட் கொச்சில தானே கிடைக்கும். பேசாம கோபன் கிட்ட வாங்கிட்டு வர சொல்லலாமே”

“சொல்லலாம். ஆனால் நான் குடிக்கிற ப்ராண்ட் வாங்கித் தர மாட்டிங்கிறாங்க. அவங்களே தர்றதைத் தான் குடிக்கணும். இவங்க கிட்ட கேட்டால் உடனே பெரிய வீட்டுக்குத் தகவல் போயிரும். தினமும் காலைல எந்திரிச்சதிலிருந்து ராத்திரி தூங்குற வரை நான் என்னென்ன செய்யணும்னு ரிமோட் கண்ட்ரோல்ல என்னை இயக்குறது அராஜகம் இல்லை. கடுப்பா இருக்கு. ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு”

மது அருந்துவதைக்  கூட நிறுத்தி விட்டிருக்கிறான். இந்த சின்ன சலுகை தரலாம். பெரிய வீட்டில் ஏன் சிறிய விஷயங்களில் கூட கட்டுப் படுத்துகிறார்களோ தெரியவில்லை. 

“சரி சார். இன்னைக்கு நான் வேணும்னா காலேஜை கட் அடிச்சுட்டு வாங்கிட்டு வரேன்”

“ச்ச காலேஜை கட் பண்ணாதே. நான் வேறேதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்”

சிறிது நேரத்தில் வந்தவன். “ஒரு ஆள் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். தினமும் கல்லூரியில் கொண்டு வந்து தருவான். நீ வீட்டுக்கு எடுத்துட்டு வந்து என் கிட்ட தந்துடுறியா?”

 

error: Alert: Content selection is disabled!!