ரிசெப்ஷனில் சென்று “அவினாஷ் நாகேந்திரன். போன வாரம் இந்தியாவிலிருந்து புக் செய்தோம்”
“வெல்கம் சார். உங்களது படுக்கை நான்காம் தளத்தில் இருக்கிறது. இந்தாருங்கள் அதற்கான கீ. உங்களது உடமைகளை வைக்க வேண்டிய லாக்கர் ரூமின் சாவி இதோ”
லாக்கர் அறையில் சாவியைப் பெற்றுக் கொண்டு பெட்டியை அங்கு வைத்துவிட்டு, பதினைந்து நிமிடங்களில் குட்டிக் குளியல், இலகுவான உடையை அணிந்து கொண்டு, தனது அழுக்கு உடைகளை அங்கிருந்த லாண்ட்ரொமேட்டில் துவைக்கப் போட்டான்.
லௌஞ்சில் அமர்ந்தவுடன் அவனுக்கு தேநீர் வேண்டுமா என்று கேட்டுவிட்டு அவன் சம்மதித்தவுடன் சூடான மாச்சா க்ரீன் டீ தயாரிக்கத் தொடங்கினர். தண்ணீரை சரியாக எண்பது டிகிரி சூடு படுத்தி, விலையுர்ந்த அந்த பச்சை நிற மாச்சா க்ரீன் டீ பொடியினை சல்லடையில் சலித்து, கப்பில் கொட்டி சரியாக ஒன்றரை நிமிடங்கள் கலக்கி நுரையுடன் அந்த பச்சை நிற பானத்தை தேநீர் கோப்பையில் ஊற்றித் தந்தனர்.
நம் ஊர் சாய் போல பாலோ, சர்க்கரையோ இதில் சேர்ப்பதில்லை. சற்று கசப்பு சுவையுடன் பருக நன்றாகவே இருந்தது. அதனுடன் வாகாஷி என்ற அவர்களது இனிப்பையும் பரிமாறினர். தித்திப்பாகத் திகட்டாமல் பாதி இனிப்புடன் இருந்த வாகாஷியும் மாட்சா க்ரீன் டீயும் அவனது களைப்பை விரட்டின.ஜப்பானியர்கள் தேநீர் தயாரிப்பதையும் அருந்துவதையும் கூட எவ்வளவு ரசித்து செய்கின்றனர் என்று வழக்கம் போல் வியந்தான். அதனால்தான் அவர்களால் அக்கறை இன்றி ஏனோ தானோவென்று செய்யும் வேலைகளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
அபிராமிற்கு சொந்தமான கிராம்புத் தோட்டங்கள் கன்யாகுமரியிலும் நாகர்கோவிலிலும் இருந்தன. உலகிலேயே முதல் தரமான கிராம்புகள் விளையும் மண். கிராம்பு என்பது மரத்தில் விளைவும் பூவின் மொக்கு. அத்தனை உயரத்தில் இருக்கும் அந்தப் பூ மொட்டுக்களைக் கவனமாகப் பறித்து உடைந்துவிடாமல் காயவைத்து அப்படியே தந்தால்தான் விலையும் அதிகம்.
காய வைக்கும்போது உடைந்துவிட்டால் விலை குறையும். அதனால் வருடத்தில் பிப்ரவரி மாதம் போல் தொடங்கும் அந்த வேலைக்கு நன்றாகத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களையே தேடி புக் செய்ய வேண்டும். அவர்கள் எஸ்டேட்டில் சில மாதங்கள் தங்கி சீசன் முடியும் வரை வேலை செய்துவிட்டு செல்வார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் கிராம்பு வேலைகளை செய்வதில் தேர்ச்சி பெற்ற குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் முன்கூட்டியே முன்பணம் கொடுத்து புக் செய்யவில்லை என்றால் அம்பாநாடு, மூணாறு என்று மற்ற எஸ்டேட்டில் வேலை செய்யக் கிளம்பி விடுவார்கள்.
அபிராம் சற்று கவனக்குறைவாக இருந்ததால் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. அவர்களாக இருந்தால் மரங்களில் ஏறி முதல் முறை பார்க்கும்போதே இன்னும் ஒரு வாரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும் அய்யா. இல்லைன்னா பூவெல்லாம் உதிர்ந்திரும் என்று கணித்து சொல்லிவிடுவார்கள். அதனை இழந்துவிட்டார்கள்.
அவினாஷுக்குத் தகவல் தெரிந்து ஆட்களை ஏற்பாடு செய்து கிராம்புப் பூக்களைப் பறித்துத் தயார் செய்வதற்குள் கொடுத்த கெடு தாண்டிவிட்டது. அந்த சமயத்தில் அடித்த புயல்காற்றால் பூக்கள் உதிர்ந்து உற்பத்தியும் குறைந்து விட்டது.
ஜப்பானியர்களுக்கு நேரம் முக்கியம். நேரம் தவறாமல் பிசினெஸ் நடக்க வேண்டும். அபிராம் செய்த குளறுபடியால் வழக்கமாக ஸ்பைசஸ் நேரடியாக வாங்கும் ஜப்பானிய மார்க்கெட்டில் போட்டி நிறுவனத்தில் அவர்களது வியாபாரத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் அவினாஷ் சென்று மன்னிப்பு கேட்டு, தங்களது பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
அலுவலக அறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு அங்கு சென்று அடுத்த நாள் மீட்டிங்கிற்கு தயாராக ஆரம்பித்தான். இப்பொழுதெல்லாம் வேலைப்பளு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அபிராம் அவனது தொழிலை அவனே கவனிக்கும் அளவுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றாலும் ஏதாவது ஒரு துறையிலாவது ஈடுபடுவது அவனுக்கும் நல்லது. அவனது நலத்தினை விரும்பும் இவனுக்கும் நல்லது.
அபிராமின் குணாதிசயத்தில் மாற்றம் வந்திருக்கிறது என்று அங்கு நடப்பதை அவனுக்கு ரிப்போர்ட் செய்யும் பாலனும், சேச்சியும் சொல்லி இருக்கிறார்கள். அதற்குக் காரணம் செம்பருத்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அவளை நினைத்த பொழுதே அவன் இதழ்களுக்குள் ஒரு சிறிய புன்னகை. அவளது கடின உழைப்பும், போர்க்குணமும் அபிராமிடமும் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று கணித்திருந்தான். அதனால்தான் அன்று செம்பருத்தியை செலெக்ட் செய்திருக்கிறோம் என்று சுகுமாரன் சொன்னபொழுது உடனே அவளை வேலையில் சேர்க்க எல்லா முயற்சியும் செய்தான்.
‘சைனா மாடல் செல்போன்தான் சார் என்கிட்டே இருக்கு. நீங்க வித்தா கூட ஒன்னும் காசு கிடைக்காது’. என்று அப்பாவியாய் அவள் சொன்னதை நினைவில் வைத்து
“செம்பருத்திக்கு லேட்டஸ்ட் மாடல் புது செல்போன் ஒண்ணு முதலில் தாங்க. நம்மால எப்ப வேணும்னாலும் தொடர்பு கொள்ள முடியணும்”. என்றான்.
அவள் சென்றதிலிருந்து அபிராமின் செயல்களில் ஓரளவு மாற்றம் தெரிகிறது. ஓவியாவையும் செம்பருத்தியையும் படிக்க வைக்கிறான். அவ்வப்போது பாடம் எல்லாம் சொல்லித் தருகிறானாம். இதெல்லாம் முன்னேற்றமே. இருந்தாலும் சமீப காலமாக அபிராமின் உடல்நிலை குறித்த தகவல்கள் அவனைக் கவலைப்பட வைத்தது. இந்தப் பின்னடைவுக்கு என்ன அல்லது யார் காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை. மருத்துவர்களிடம் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறான். இந்த வேலை முடிந்ததும் கொச்சி சென்று அதனை கவனிக்க வேண்டும்.
அறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா?
பெட்டியைத் திறந்து துணிகளை அடுக்கி வைத்தவள் அதன் அடியில் பத்திரமாய் ஒளிந்திருந்த ப்ளூ நிற குர்த்தியைப் பார்த்து கேள்வி கேட்டாள்.
அவனைப் பற்றித் தானாகக் கேட்காவிட்டாலும் அவளது காதில் வந்து விழுந்த செய்திகள் அவினாஷ் இந்த வீட்டிற்கு எந்த அளவுக்கு இன்றியமையாதவன் என்று சொன்னது. அதில் ஒன்று அபியின் தற்கொலை முயற்சியின் போது அவினாஷ் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் காப்பாற்றியது.
அபிராம் கால்கள் முறிந்து சற்று நடக்கலாம் என்ற நிலை வந்த பொழுது முதலில் செய்தது தற்கொலை முயற்சிதான். ஆப்பிள் வெட்டும் கத்தியை எடுத்து மணிக்கட்டை அறுத்துக் கொண்டான். அவினாஷ் கிராம்புத் தோட்டம் எஸ்ப்போர்ட் விஷயமாக அபிராமின் கையெழுத்து வேண்டும் என்று கேட்க, கையெழுத்தினைப் பெறச் சென்ற கோபன் ரத்தவெள்ளத்தில் மிதந்த அபிராமைப் பார்த்து கத்த, உடனடியாக பக்கத்தில் இருந்த க்ளினிக்கிலிருந்து டாக்டர் டீம் ஆம்புலன்ஸுடன் வந்தது. முதலுதவி தந்துக் கொண்டிருக்கும்போதே புயல் வேகத்தில் வந்த அவினாஷ் அபிராமைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான். மருத்துவர்கள் குழு அவனது உயிரை எமனின் வாயிலிருந்து மீட்டது.
அவினாஷின் சாகசங்களை மற்றவர்கள் வாயிலாகக் கேட்கக் கேட்க அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் செம்பருத்திக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது.
எத்தனை நாளா உங்களைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன் அவினாஷ். அவி, அவின்னு சொல்லியே ஆவியா போய்டுவேன் போலிருக்கு. மனதுக்குள் புலம்பியவளிடம்.
“அக்கா சூப்பரா இருக்கு இந்த குர்த்தி. இதையெல்லாம் விட்டுட்டு ஏன் இப்படி எல்லாப்பக்கமும் கீழ தொங்குற துணியைப் போர்த்திட்டு ஆவியாட்டம் சுத்துற” டைமிங்கான கேள்வியுடன் அந்த குர்த்தியை கையில் பிடிங்கிவிட்டு சொன்னாள் ஓவியா.
“கொஞ்சம் சிறுசா இருக்கும். அதுதான் பிரிக்க முடியுமான்னு பாக்குறேன்”
“லார்ஜ் சைஸ் தானே? உனக்கு சரியா இருக்கும். உனக்கு பத்தலைன்னா எனக்குத் தந்துடு, நான் போட்டுக்குறேன். ஹப்பா! ட்ரெஸ் என்ன கலருப்பா… பரவால்ல உனக்கு நல்ல டேஸ்ட் “
‘என்னை சுத்தி இருக்கிறவளுங்க எல்லாருக்கும் இந்தக் குர்த்தி மேலவே கண்ணு. இதையே காப்பாத்தி வச்சுக்க முடியலைன்னா எப்படி’ மனதுக்குள் அலுத்தபடி
“இல்ல, இல்ல எனக்கு சரியா இருக்கும். ஏதாவது பண்டிகை அன்னைக்குப் போட்டுக்குறேன்”
“இன்னைக்குத்தான் பண்டிகை. போட்டுக்கோ”
“நீ எல்லா பரிட்சைலயும் பாசானதையே எங்களைப் பண்டிகையா கொண்டாட சொல்றியா?”
“இல்லையா பின்ன? நான் பன்னெண்டாவது பாஸானதும் ஒரே வாணவேடிக்கை போட்டுட்டு, டான்ஸ் ஆடிட்டே போயி காலேஜுல சேரப் போறேன் பாரேன்”
“சரி அன்னைக்குப் போட்டுக்குறேன்”
“ஹே இன்னைக்கு நம்ம எடப்பள்ளி தேவாலயத்துக்குப் போறோம். ஆசியாவிலேயே பெரிய சர்ச். அங்க போயி சாமி கும்மிட்டுட்டு, சாப்பிட்டுட்டு சாய்ந்தரம்தான் வீட்டுக்கு வர்றோம்”
“என்னடி ஸ்பெஷல் இன்னைக்கு”
“டன்டடாய்ங்… சேச்சியோட பிறந்தநாள்”
“நிஜம்மாவா? சொல்லவே இல்லையே… ஏதாவது ப்ரசென்ட வாங்கிருக்கலாமே”
“ஆமாம்கா… இந்த சேச்சி சொல்லவே இல்லை. கொண்டாட மாட்டேன்னு ஒரே அடம்”
“நம்ம எதுக்கு இருக்கோம் கொண்டாடிடலாம்” என்று சொன்ன பொழுதே அவளது வகுப்பில் ஒருத்தி
“ஹே செம்பருத்தி, உங்க வீட்டில் இருக்கும் குக் அந்த லீலாம்மா உங்க பெரிய ராஜாவோட கீப்பாமே. அது நிஜம்தானா?” என்று கேட்டது மின்னி மறைந்தது.