மாலை நேரக் கல்லூரியில் செம்பருத்தியுடன் பயிலும் ஜோஸி அவளிடம் ரகசியமாய் கேட்டாள்.
“உண்மையை சொல்லு அந்த குக் ராஜாவோட கீப் தானே?”
மேனேஜர் – டைப்பிஸ்ட், எம்டி – செக்ரெட்டரி, டாக்டர்-நர்ஸ், எஜமானன்-வேலைக்காரி என்று வரும் செய்திகளைப் படித்தும் அது போன்ற ஒன்றிரண்டு சம்பவங்களைக் கேட்டும் இப்படித்தான் நடக்கும் என்ற ஊகத்திற்கு வந்திருக்கும் பெண்களை என்ன செய்ய முடியும்?
“சே சே! லீலாம்மா அப்படியெல்லாம் இல்லை. அவங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா!” அவசரமாய் மறுத்தாள்.
“நான் கெட்டவங்கன்னா சொல்றேன். உங்க லீலாம்மா ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க. அவங்களும் சரி அவங்களைக் கல்யாணம் பண்ணி வச்ச வீட்லயும் சரி எல்லாரும் பரம்பரை பரம்பரையா ராஜாங்கத்தில் வேலை செய்றவங்க. இவங்க செம்ம அழகா இருப்பார்களாம். நிஜம்தானே”
“நிஜம்தான். ஆனாலும் அவங்களுக்கு எத்தனை வயசாச்சு. இப்ப போயி இப்படி பேசிகிட்டு”
“உங்க ராஜா மட்டும் குமரனா? லீலாம்மாவை விட பத்து வயசாவது அவர் பெரியவராத்தானே இருப்பார். உங்க பெரிய ராஜா வேற ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டவர். சின்ன வயசில் இவங்க மேலயும் ஆசை பட்டுட்டார். ராஜா ஆசைப்படும்போது வேலைக்காரியால மறுக்க முடியுமா?
இந்த தொடர்பு தெரிஞ்சதும் தட்டிக் கேட்ட அவங்க தம்பியைக் கொன்னுட்டு, அந்தப் பழியை அவங்க வீட்டுக்காரர் மேல போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாராம். லீலாம்மாவை இங்கயே கூட்டிட்டு வந்துட்டாராம்”
“இவ்வளவு விவரமும் உனக்கு எப்படித் தெரியும்?”
“என் வீட்டுக்காரர் ஜெயிலர். அவரு இப்பத்தான் கண்ணூர் ஜெயிலில் ஜாயின் பண்ணார். அங்க இருந்த ஆயுள் கைதி ஒருத்தர் சொன்னாராம். அவருதான் லீலாம்மாவோட கணவராம்”
“இதெல்லாம் என்னால நம்ப முடியல ஜோஸி. எனக்குத் தெரிஞ்சவரை அந்த வீட்டில் இருக்குற எல்லாரும் நல்லவங்க”
“நீ ரொம்ப நல்லவ செம்பருத்தி. அதனால எல்லாரையும் நம்புற. அந்த வீட்டு ஆம்பளைங்க சரியில்லை. அதனால நீயும் பத்திரமா இருந்துக்கோ”
“ரொம்ப நன்றி ஜோஸி. எனக்கெல்லாம் நீ நினைக்கிற மாதிரி பிரச்சனை வராது”
“என்னடி வராது? உன் அழகான கண்ணையும், பூ மலர்ந்த மாதிரி மனசு விட்டு சிரிக்கிற சிரிப்பையும் பாக்குற எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும் செம்பருத்தி”
“என்னோட உருவத்தைப் பார்த்தும் இப்படி சொல்ற”
“என்ன உருவம்? முன்னாடி கொஞ்சம் குண்டா இருந்த, இப்ப இளைச்சு, சுருட்டை முடியோட எவ்வளவு லட்சணமா இருக்க தெரியுமா? பசங்க எல்லாரும் எதுக்கு உன்கிட்ட வந்து வந்து பாடத்தில் டவுட் கேட்டு பேசுறாங்கன்னு நினைக்கிற? வாஷாவுட் ஆன வானரங்களுக்கு ஏதோ படிப்பில் திடீருன்னு அக்கறை வந்திருச்சாக்கும்”
இந்த செய்தியெல்லாம் செம்பருத்திக்குப் புதிது. என்ன நடக்கிறது? ஒரு ஃபேரி காட் மதர் திடீரென்று அவளது கண்முன் தோன்றி எல்லாவற்றையும் மாற்றி விட்டாரா என்ன!
“நீ கிளம்பலையாக்கா?” ஓவியா உலுக்கியதும்தான் நினைவுலகத்திற்கு வந்தாள்.
“இதோ வந்துட்டேன். யாரெல்லாம் போறோம்?”
“நீ, நான், எங்கம்மா, சேச்சி, கார் ஓட்ட கோபன் அண்ணன் அப்பறம் லவங்கம் மாமா”
“பாலா அண்ணன் வேற ஊருக்குப் போயிருக்காரே. கோபனும், லவங்கமும் நம்ம கூட வந்துட்டா வேற யாரு அபிராம் சாரைப் பாத்துக்கிறது?”
“அபிராம் சார்தான் நம்ம போயிட்டு வர பெர்மிசன் கொடுத்திருக்கார். அரை நாள் தானே அவர் சமாளிச்சுக்குவாராம்”
“இருந்தாலும் அவரு கூட யாராவது இருந்தா நல்லது. நான் வேணும்னா இருக்கட்டுமா?”
அதெல்லாம் தேவையில்லை என்று அபிராமே சொல்லியதும் அவளும் கிளம்பிவிட்டாள்.
“சார் கூல்ட்ரிங்க்ஸ் எதுவும் குடிக்கல போலிருக்கு”
“ஆமாம், என்னவோ தோணல”
“இத்தனை பாட்டில் இருக்கே. நான் ஒண்ணு எடுத்துக்கவா?” ரொம்ப நாட்களாக ஏன் இவன் தினமும் கூல்ட்ரிங்க்ஸ் கேட்கிறான் என்று சந்தேகம் அவளுக்கு. ஒரு நாளாவது அதனைக் குடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.
“உனக்கு சந்தேக புத்தி ஜாஸ்தி செம்பருத்தி. இந்த பாட்டிலில் எதை வேணும்னாலும் நீயே எடுத்துக்கோ”
அபிராமே சொன்னதும் அதில் ஒன்றினை எடுத்துக்கொண்டவள், “இன்னொன்னும் எடுத்துக்குறேன் ஓவியாவுக்கு இல்லைன்னா என்னுதைப் புடிங்கிக்குவா”
“தொலை” என்று வழி அனுப்பி வைத்தான்.
எடப்பள்ளி தேவாலயத்தின் பிரம்மாண்டத்தைப் பார்க்க இரு கண்கள் போதவில்லை செம்பருத்திக்கு.
“அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து இந்த தேவாலயத்தோட அழகை ரசிக்கணும்”
தீராத ஆசைகள் இன்று ஒரே நாளில் எப்படித் தீரும். அவளுக்கு நிறைய நிறைய புதிய ஆசைகள் துளிர்விட்டன. ஆசையே வாழ்வதற்கான ஊக்க சக்தி. ஊர் சுற்றும் ஆசை, சாப்பாட்டு ஆசை, துணி மணி ஆசை இதெல்லாம் இல்லாவிட்டால் இந்த உலகம் எப்படி இயங்கும்? அது பேராசையாகும் பொழுதுதான் அழிவு சக்தியாக மாறுகிறது.
ஊரு சுற்றல், உணவு, உடை, சம்பாத்தியம், பணம், பதவி இவை எல்லாம் ஆசைகள். ஆனால் அவினாஷை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று மனது துடிக்கிறதே. இது ஆசையா பேராசையா? ரமேஷ் அத்தானை நிச்சயம் செய்த பொழுது கூட இந்த அளவுக்கு அவளுக்கு பரபரப்பா, ஆவலோ இருந்ததில்லை. சொல்லப்போனால் அவன் விடுதியிலிருந்து அவளது வீட்டிற்கு வந்து தங்கும் நாட்களில் கூட ‘ஐயோ இவனுக்கும் இவனைப் பாக்க வர்ற பிரெண்ட்ஸ்க்கும் டீ போட்டுக் கொடுத்தே என் வாழ்க்கை கழிஞ்சுடும் போலிருக்கே’ என்று நினைத்தே பயந்து கொண்டிருந்தாள். நல்லவேளை அந்தக் கல்யாணம் நடக்கலா.
சே இனிமேல் அவினாஷைப் பத்தி நினைக்கவே கூடாது என்று மனதில் எண்ணிக் கொண்டாலும் அவளது மேனியைத் தழுவி இருந்த அந்த ப்ளூ குர்த்தி அவனது நினைவினைப் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறதே.
“அக்கா நம்ம எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம் வா… ” என்று அழைத்தாள் ஓவியா. அனைவருக்கும் அந்த அவுட்டிங்க் மிக மிக சந்தோஷமாக இருந்தது.
“லீலா விழுந்துடாதே” தவறி விழ இருந்த லீலாம்மாவைதித் தாங்கிப் பிடித்துக் கொண்டார் லவங்கம்.
லவங்கம் பற்றி உங்களுக்கு இதுவரை சொல்லவில்லை அல்லவா. ஒரு சிறு அறிமுகத்தைப் பார்ப்போம் பட்டாளத்தில் வேலை செய்தவர். ஓய்வு பெற்றதும் ஊருக்கு வந்தவருக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டதாகக் கேள்வி. அவரும் துக்கப்படாமல் அவர் குடும்பத்தில் செய்து வந்த வேட்டை நாய் வளர்ப்பைக் கையில் எடுத்துக் கொண்டார்.
மதுரைப் பக்கம் வேட்டை நாய் வளர்ப்பு என்பது ஒரு கலை. பரம்பரை பரம்பரையாக சிப்பிப் பாறை, கன்னி, ராஜபாளையம் என்று நாய் வளர்ப்பில் பி எச் டி படிக்கும் அளவிற்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் நாய் என்று சொல்வதில்லை. பிள்ளை என்றுதான் அவற்றை அன்புடன் சொல்வார்கள். அந்தக் காலத்தில் வேட்டை நாய் வளர்த்து ஜமீன் குடும்பங்களுக்குத் தருவது இவர்கள் தொழில். ஒரு ஊரில் நாயைப் பார்க்க வருவதென்றால் பெண் பார்க்க வருவது போல வருவார்களாம்.