Skip to content
லவங்கத்தின் பாட்டன் பூட்டன் என்று அனைவரும் இதே தொழில்தான் செய்து வந்தனராம். வீட்டில் குறைந்தது இருபது முப்பது நாய்களாவது இருக்கும் என்பார். அதைவிட நகைச்சுவையான செய்தி அவர்களின் நாய்களில் இருந்து ஒரு குட்டியைக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் அவரது அக்காவை சம்பந்தம் முடிக்க வந்தார்களாம். லவங்கத்தின் தாத்தாவோ “பொண்ணைக் கூடக் கல்யாணம் பண்ணித் தாரேன். இதை சாக்கா வச்சுட்டு நாயைக் கேட்ட கல்யாணத்தை நிறுத்திப் புடுவேன்” என்றாராம்.
லவங்கம் பேசுவதை இன்று முழுவதும் கேட்கலாம். அவ்வளவு விஷயம் தெரிந்தவர். லீல்லாம்மாவைப் போல அவருக்கும் இந்த ஜமீன் குடும்பத்தில் மிகவும் நெருக்கம்.
“நீங்க ஏன் இங்க வந்துட்டீங்க மாமா?”
“வேட்டை நாய் வளர்ப்புன்னா சும்மாவா? இப்ப இருக்குற பாரின் நாய் மாதிரி கடைல சாப்பாடு வாங்கிப் போட முடியாது. நல்ல தானியம் வாங்கி வீட்டுல தனியா சமைக்கணும். அவனுங்களுக்கு கறி தனி பக்குவத்தில் செய்யனும். கட்டிப் போடுற எடம் கூட பாக்கணும் இல்லைன்னா காலு வளஞ்சுடும். தனி ஒருத்தனா நின்னு கவனிக்க முடியல. அப்பத்தான் அய்யா இங்க அரண்மனைல வீட்டை நாயை வளர்க்க ஆள் வேணும் வர்றியான்னு கேட்டு அனுப்பினார். கரும்பு தின்னக் கூலியான்னு நானும் கிளம்பி வந்துட்டேன்”
இவரும் லீலாம்மாவைப் போலவே வேலையை ரசித்து செய்கிறார்.
“நம்ம எல்லாரும் இங்க வந்துட்டோமே.. அபிராம் சாரை யாரு பாத்துக்குவா?”
“நம்ம புள்ளைங்க நாலு பேரையும் அவுத்து விட்டுட்டு வந்திருக்கேன். ஒரு ஈ காக்காவை எல்லைக்குள்ள விடமாட்டானுங்க”
மீசை முறுக்கினார் லவங்கம். இருந்தாலும் வயிற்றைப் பிசைந்தது செம்பருத்திக்கு.
“லீலாம்மா ரொம்ப அழகா இருக்கு சர்ச்சு. சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?” என்று லவங்கம் கேட்டார்.
“என்ன கேட்பேன் லவங்கம் உங்களுக்குத் தெரியாதா?”
“எங்களுக்குத் தெரியாது சேச்சி சொல்லுங்களேன்” என்றாள் ஓவியா.
“பெரிய அய்யா நல்லாருக்கணும்னு தான் வேண்டிக்கிட்டேன். அவரு பிரச்சனை எல்லாம் தீர்ந்து அபிராமோட ஒண்ணு சேரணும். அபிராம் அய்யா மனசும் உடம்பும் சரியாகி அவருக்கு நல்ல காலம் பிறக்கணும்”
“உனக்குன்னு ஒண்ணும் வேண்டிக்கலையா லீலாம்மா?” என்றார் லவங்கம்.
“அய்யாவைத் தவிர எனக்குன்னு யாரு இருக்கா லவங்கம். நானும் தனி மரம்தான். அய்யாதான் என் தெய்வம். அவரு குடும்பம்தான் என் குடும்பம். அவரு பிள்ளைங்கதான் என் பிள்ளைங்க”
“நான் சேச்சி. நான் உங்க பிள்ளை இல்லையா?” என்றாள் ஓவியா சிணுங்கிக் கொண்டே.
“நீதான் என்னோட கடைசி பிள்ளை. இந்த செம்பருத்தி உனக்கு அக்கா. நீங்க ரெண்டு பேரும் என் மகள்தான். என் குடும்பம் பெருசு சரியா?”
“போங்க சேச்சி. நான் சேச்சி நல்லாருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். அக்கா நீயும் அப்படித்தானே வேண்டிக்கிட்ட?” செம்பருத்தியின் ஆமாம் என்ற தலை அசைப்பைப் பார்த்த பின் “நீங்க என்னடான்னா பெரியய்யா வீட்டை மட்டும் நல்லாருக்கணும்னு வேண்டிருக்கிங்க. அவரு மேலதான் உங்களுக்கு லவ்வு சேச்சி”
“ஆமாண்டி. பெரியய்யா மேல எனக்கு பயங்கர லவ்வு. ஏன்னா நான் பிரச்சனையில் இருந்தப்ப எல்லாம் அவர்தான் காப்பாத்தினார். ஆனால் அதுக்காக உங்களை எல்லாம் மறந்துட்டேன்னு சொல்லாதிங்க மனசு கஷ்டமா இருக்கு”
“சரி சொல்லல. நீங்க என்ன வேண்டிக்கிட்டீங்க லவங்கம் மாமா?” மனதில் பட்டதை உடனே கொட்டிவிடும் ஓவியாவும் லவங்கத்திடம் கேட்க
“லீலாம்மா இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா இருக்கணும். நிறைய ஆயுசை குடு ஏசுசாமின்னு கேட்டேன்”
அவரைப் பார்த்த லீலாம்மா சேச்சியின் கண்களில் நீர் “இந்த பொறந்த நாள்தான் எனக்குன்னு வேண்டிக்க சொந்தங்கள் நினைச்சிருக்கு”
“சரி நம்ம கிளம்பலாமா? இன்னைக்கு கொச்சி ஹோட்டலில் நமக்குன்னு லஞ்சு ஏற்பாடு பண்ணிருக்காங்களாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
அவர்கள் முன்னால் வேகமாய் சென்றுவிட, லீலாம்மா இறங்க உதவி செய்தபடி லவங்கம் சொன்னார் “இந்த பொறந்தநாள் மட்டும் இல்ல லீலா பல வருஷங்களா உன் பொறந்தநாள் அன்னைக்கு இனியாவது நீ சந்தோசமா இருக்கணும்னு தான் சாமி கும்முட்டுட்டு இருக்கேன்”
ஏற்க்கனவே லவங்கத்தின் அக்கறையை உணர்ந்திருந்தாலும் மனசெல்லாம் இனிப்பாய் இனித்தது லீலாம்மாவுக்கு.
அடுத்தபடியாக அதிர்ச்சி காத்திருந்தது செம்பருத்திக்கு. உணவகத்தில் அவர்கள் அனைவருக்கும் டேபிள் ரிசெர்வ் செய்யப்பட்டு ஸ்பெஷல் உணவு வகைகள் சமைக்கப் பட்டிருந்தன.
“வாங்க, வாங்க” என்று வரவேற்ற மேனேஜர் அனைவரையும் சென்று அமர வைத்தார். அவர்களுக்குப் பரிமாற மூன்று நபர்களை ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய ஸ்பெஷல் மகராஜா லஞ்ச். ஒரு மேஜையை மறைக்கும் அளவிற்கு பெரிய தாமிரத் தட்டு. அதில் குட்டி குட்டியாய் கிண்ணங்கள்.
வடநாட்டு அரசர்கள் குடும்பத்தில் இப்படித்தான் ஒரே தட்டில் அனைவரும் உண்ணுவார்களாம். தாம்பாளத்தட்டில் கைகழுவ சொன்னதே அவர்களுக்கு வியப்பாக இருந்தது.
சேச்சியின் விருப்பப்படி அன்று சைவ உணவு.
கேசர் ஸ்ரீகண்ட், ஹல்வா என்று இனிப்புடன் தொடங்கிய உணவு, ரொட்டி, தெப்லா, ஃபுல்கா, பைங்கன் கட்லட், ஆலூ, பன்னீர், சுவீட் கடி, சோயா பிரியாணி என்று முப்பது நாற்பது வகைகளாக விரிந்தது. அப்படி ஒரு விருந்தினை செம்பருத்தி சுவைத்ததில்லை.
உணவினை முடித்ததும் அந்த அறையே இருளில் மூழ்கியது. “ஹாப்பி பெர்த் டே டூ யூ” என்ற பாடல் ஒலிக்க, அனைவரும் எதிர்பாராத வண்ணம் பெரிய கேக்கினை ஏந்தியபடியே ஒரு உருவம் உள்ளே வந்தது. கேக்கினை மேஜை மேல் வைத்ததும் விளக்கு எரிய அந்த உருவம்
“ஹாப்பி பெர்த்டே லீலாம்மா டார்லிங்” என்றபடி அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினைத் தெரிவித்தது.
“அவினாஷ்… எப்ப இங்க வந்த?”
“உங்களுக்கு இது முக்கியமான நாள் இல்லையா. உங்களுக்கு வேண்டியதை செஞ்சுத்தர்ற பொறுப்பை பெரியய்யா என்கிட்டே கொடுத்திருக்கார்”
“நன்றி மோனே” சேச்சி கலங்க.
“டார்லிங், நான் இருக்கிறப்ப நீங்க கலங்கலாமா?” என்று அணைத்துக் கொண்ட அவினாஷின் கண்கள் அப்படியே மெதுவாகத் திரும்பி சாதாரணமாகப் பார்ப்பதை போல செம்பருத்தியைப் பார்த்தது. அவனது இதழ்களில் ஒரு ஸ்நேகப் புன்னகை அவனது புருவங்கள் உயர்ந்து எப்படி இருக்க? என்று கேட்டது.
செம்பருத்தியின் விழிகளை உரசிச் சென்ற அவனது பார்வை அவளது மனதில் வண்ண வண்ண மத்தாப்புக்களைக் கொளுத்தி மனதை மகிழ்ச்சியில் சிதறடித்தது. .
error: Alert: Content selection is disabled!!