“அதெல்லாம் சரி பட்டு வராதுக்கா. செம்பருத்திக்கு படிப்புக்கு பணம் வேணும், அப்பறம் அவளுக்கு கல்யாணம் பண்ணனும்”
“அதெல்லாம் நான் யோசிச்சுட்டேன். அவ எப்படியும் எங்க வீட்டு மருமக. உனக்கு சம்மதம்னா நம்ம சொந்தக் காரங்களுக்கு முன்னாடி தட்டு மாத்திடலாம். கல்யாணத்துக்கு அப்பறம் தர வேண்டியதை கொஞ்சம் முன்னாடியே செய்ற அவ்வளவுதானே. இதில் என்ன இருக்கு?”
செம்பருத்தி பதினெட்டு வயத்தினைத் தொடாத சிறிய பெண் என்பதால் வீட்டாரின் முன்னிலையில் அவள்தான் எனது மருமகள் என்று பிரகடனம் செய்தார் அத்தை. தனது மகள்களையும் மதனி என்று கூப்பிடச் சொன்னார்.
பள்ளிப் பருவத்தில் இதெல்லாம் செம்பருத்திக்கு வெட்கமாகவே இருந்தது. “உன் வீட்டுக்காரன் போன் பண்ணான் செம்பருத்தி. உன்னை நல்லா பரீட்சை எழுத சொன்னான்” என்று அத்தை சொல்லும்போது அவளுக்கு முகமே சிவந்துவிடும்.
அவள் பன்னிரெண்டாவது பாஸ் ஆனபோது. கல்லூரிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆட்சோபித்தாள் அத்தை.
“பேசாம ஏதாவது கோர்ஸ் படிச்சுட்டு கொஞ்ச நாள் வேலைக்குப் போ. ரமேஷ் உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டான். இப்ப ஒரு கம்பியூட்டர் படிப்பு படிச்சா வெளிநாட்டில் வேலை கிடைக்குமாம். கிடைச்சதும் கல்யாணம்தான். படிப்பை பாதிலேயே விட முடியாதுல்ல… “ என்று காரணம் சொன்னது அந்த நேரத்தில் சரியாகவே தோன்றியது.
“ஆமாம் செம்பருத்தி. அத்தை சொல்றதும் சரிதான். அந்த நிறுவனத்தில் ரமேஷுக்கு பயிற்சி முடிஞ்சதும் வேலைக்கு ஏற்பாடு பண்ணுறாங்களாம். வேலை கிடைச்சதும் கல்யாணம்தான்” என்று அப்பாவும் சொன்னதும் வேறு வழியில்லாமல் போனது செம்பருத்திக்கு.
சும்மா இருக்கப்பிடிக்காமல் தபால் வழியில் பி.காம் படிக்க ஆரம்பித்தாள். பட்டப்படிப்பும், முதுகலையும் படித்தவர்களே வேலை இல்லாமல் இருக்க, பன்னிரெண்டாவது மட்டுமே அப்போது முடித்த அவளுக்கு என்ன வேலை கிடைக்கும்?
மங்கிலால் கடையில் நம்பிக்கையான ஆள் கணக்கு வழக்கு பார்க்க வேண்டும் செம்பருத்தியால் முடியுமா? என்று கேட்டபொழுது மறுக்க முடியவில்லை அவரால். பணத்தேவை அந்த அளவுக்கு கடுமையாக இருந்தது.
அப்படி செம்பருத்தியும் அவளது தந்தையும் வருந்தி வருந்தி உழைத்த பணம் அவர்களது நன்மைக்கா செலவழித்தார்கள் என்று கேட்டால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். பெரும்பகுதி ரமேஷின் விடுதிக்கு பணம் கட்டவும் அவனது படிப்பு செலவுக்கும் என்றே செலவானது.
“இந்நேரத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உன் பணம் என் பணம்னு பிரிச்சு செலவு பண்ணிருப்போமா?” என்று அத்தை சொல்லியது அவளது அப்பாவுக்கு அப்போது நியாயமாகத் தெரிந்தது. இப்போது அடுத்தவருக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது.
ஒவ்வொரு பருக்கையிலும் அவற்றை உண்ணுபவரின் பெயர் எழுதி இருக்கும் என்று சொல்வார்கள். ஒவ்வொரு பருக்கையிலும் அவற்றை உழைத்து சம்பாதித்தவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று இருந்தால் அத்தையின் குடும்பத்தினர் அனைவரின் உணவிலும் இவளது பெயரும் தந்தையின் பெயரும் அல்லவா இருக்கும்.
மாமா மதுப்பிரியர், அத்தை காரியவாதி, அப்படி என்றால் ரமேஷ்… ஒவ்வொரு முறையும் கூசாமல் பணம் கேட்பானே? உரிமையோடு பணத்தை பெற்றுச் செல்வானே? அதை எல்லாம் எப்படி அவன் மறந்தான். ஓ… அவன் ஒரு ஊதாரிக்கும் காரியாவதிக்கும் பிறந்த சுயநலவாதி.
யோசித்துக் கொண்டே சென்றவள் “ஐயோ பஸ் போகுதே. இப்ப ஏறினா சரியான நேரத்துக்கு வேலைக்குப் போயிடலாம்” என்றபடி அந்தப் பேருந்தினைப் பார்த்தபடியே ஓடினாள். அந்த பரபரப்பில் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் யார் மேலோ மோதி, அப்படியே தரையில் விழுந்தாள்.