‘ஐ’ என்றால் அது காந்தம் என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?
‘ஐ’ என்றால் அது அன்பு என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?
அவினாஷ் வந்துவிட்டான், அவள் கண் முன் நின்றுவிட்டான் என்பதை நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது செம்பருத்திக்கு. அந்தக் காந்தக்கண்ணழகனின் அன்புக்குள் சிறை பட்டிருந்தது அவளது இதயம் மட்டுமில்லை. அங்கிருந்த அனைவரின் உள்ளமும்தான்.
அவினாஷ் என்று கேக் துண்டினை வெட்டி அன்புடன் சேச்சி வாயில் திணிக்க, தம்பி என்று காளியம்மாவும், அண்ணா என்று ஓவியாவும் இருபக்கமும் கைகளைப் பிடித்து இழுக்க,
“அய்யாவுக்கு மதுர ஸ்டைல் முட்ட பரோட்டா நானே செஞ்சு எடுத்துட்டு வரட்டுமா?” என்று லவங்கம் கேட்க
அன்பில் திணறிக் கொண்டிருந்த அவினாஷோ “இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட் லவங்கம். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க”
“அவி, என் கையால ஏதாவது சமைச்சுத் தந்தே ஆவேன்” அடம் பிடித்த பெர்த் டே சேச்சியின் அன்பை மறுக்க முடியாமல்
“இந்தாங்க ஜப்பானிலிருந்து உங்களுக்காக வாங்கிட்டு வந்தது. வெரி ஸ்பெஷல்” என்று ஒரு சோயா சாஸ் பாட்டிலைத் தந்தான்.
“ஐயோ சொர்ணம், தங்கம் மாதிரி ஸ்பெசலாச்சே தா தா” என்று அதனை வாங்கி அப்படியே முகர்ந்து பார்த்தார்.
“நூறு சதவிகிதம் நேச்சுரல். இந்த பாட்டில் இயற்கை முறைல பேரல்ல நாலு வருஷமா ஊற வச்சுத் தயார் செஞ்சது. வொயின் மாதிரி விலை உயர்ந்ததுன்னு வச்சுக்கோயேன்” என்று முகம் விகாசிக்க சொன்னார் லீலாம்மா.
“டார்லிங், இந்த கேக், டின்னர், நான் இது எல்லாத்தையும் விட இந்த பாட்டிலைப் பாத்ததும்தான் உங்க முகம் பிரைட்டா மாறுது” செல்லமாகக் கோபித்துக் கொண்டான் அவனைக் கண்ட விநாடியிலிருந்து ஆயிரம் வாட்ஸ் பல்பாய் ஒளிரும் ஒருத்தியின் முகத்தை நோக்காமலேயே.
அதன் பின்னர் கிட்சன் ஸ்டாப்பை அழைத்து சேச்சிக்கு வேண்டியதை எடுத்துத் தர சொல்லிவிட்டு அந்தக் கும்பலிலிருந்து மெதுவாக விடுவித்துக் கொண்டு நகர்ந்தான்.
தனது ஓரக்கண்ணால் அவனை சிறை எடுத்துக் கொண்டிருந்த செம்பருத்தியின் அருகில் இருந்த நாற்காலியை அடி மேல் அடி எடுத்து நெருங்கின அவனது கால்கள். செம்பருத்தி படபடத்த அவளது இதயத்தைக் கட்டுப்படுத்தினாள்.
நீ யார் என்று நானறியேன், உன்னை எனக்குப் பிடிக்குமா சிறிதுமறியேன். இந்த அன்பு கைகூடுமா ஈசன்தான் அறிவான் இருந்தாலும்
எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்! எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன்!
“எப்படி இருக்க செம்பருத்தி?” என்ற அந்தக் குரல் அவளது மனதின் ஆழத்தில் ஊடுருவி தித்தித்தது.
அவள் மனதில் கண்டிப்புக் குரலில் அபிராம் திட்டினான் வேலை பார்க்க வந்த சமயம் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தவளிடம் பேசும் அதே குரலில் “ஏன் இப்படி ஆந்தை மாதிரி கொட்ட கொட்ட முழிக்கிற. சீக்கிரம் ரியாக்ட் பண்ணிப் பழகு. இது சூப்பர் ஃபாஸ்ட் உலகம். இந்த மாதிரி ஸ்டில் போஸ் எல்லாம் கவனிச்சு உன் மனசைப் படிக்க இங்க யாருக்கும் நேரமில்லை, நேரமிருக்குறவங்களும் மந்திரவாதி இல்லை”
இவன் வேற மனசுக்குள்ள கூட திட்டிக்கிட்டே வந்து நின்னுடுவான் என்று தன்னை மீட்டுக் கொண்டு இயல்பு உலகிற்கு வந்தாள்.
“நல்லாருக்கேன் அவினாஷ். நீங்க எப்படி இருக்கிங்க?”
“நாட் பேட். அப்பறம் புது இடம், புது சூழ்நிலை பிடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு” என்றால் அவனது கண்களை நோக்கியவாறு.
“உ.. உனக்குப் பிடிச்சிருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ சந்தோஷமா இருக்கியா?”
“நூறு சதவிகிதம். நீங்க ஏன் இவ்வளவு இளைச்சுட்டிங்க”
“ஒரே அலைச்சல் செம்பருத்தி. நீயும் தான் பாதியா மாறிட்ட” அப்போதுதான் அவளது குர்த்தியை கவனித்தவன். தாடையைத் தடவிக் கொண்டே யோசித்தான்.
“அன்னைக்கு இந்த உடை உபயோகப் படல போலிருக்கே”
“இன்னைக்குத்தான் நான் போடணும்னு இருந்ததால அன்னைக்குப் போட முடியலையோ?” அவனைப் போலவே தாடையைத் தடவிக் கொண்டே பதிலளித்தாள்.
“என்னைக் கிண்டல் பண்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா… ஹா… ஹா… “
“அதுக்கு அவ்வளவு தைரியம் வேணுமோ?”
“உன் தைரியத்துக்கு என்ன குறைச்சல்? முதல் சந்திப்பிலேயே நியாயத்துக்காக தைரியமா சண்டை போட்டது நினைவிருக்கு”
“இப்ப தைரியமா கேக்குறேன். நீங்கதான் என்னை இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்திங்களா அவினாஷ்? எதனால? அபிராம் சார் மனசைக் கலைக்காத அளவுக்கு ஒரு பொண்ணு வேணும்னா?” அழகற்ற பெண் வேண்டும் என்று அவினாஷா தேர்ந்தெடுத்தான் என்று அவள் மனதில் பல மாதமாக உறுத்திய கேள்வி அது.
“தப்பு, அபிராமால் மனசு கலையாத ஒரு பொண்ணு வேணும். வெரி ஸ்ட்ராங் அண்ட் டிடர்மைன்ட். ஈஸியா பின்வாங்காத ஒருத்தி. நல்லா பாத்தேன்னா அவனை சுத்தி இருக்குறவங்க எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க. சரி இப்ப சொல்லு உன்னை எத்தனை தடவை உங்கய்யா கெட் அவுட் சொன்னார்?”
“பத்து, இருபது, நூறு… “ என்று எண்ணியவளைக் கண்டு.
“போதும், போதும்… நீ வீக் மைண்டட் என்றால் சொல்லிருக்க மாட்டான்”
“போதும் அவினாஷ். ஏன் எல்லாரும் அவரைப் பத்தி இப்படி சொல்றிங்க? எவ்வளவு நல்லவர் தெரியுமா? ஒரு தப்பான பார்வை பாத்தது கிடையாது. என்னை விடுங்க அவரைக் கவரும் அம்சம் எதுவும் என்கிட்டே இல்லை. ஆனால் இத்தனை பொண்ணுங்க அந்த வீட்டில் இருக்கோம் அப்டிங்கிறதே அவரோட நல்ல குணத்துக்கு ப்ரூப்”
“அட உங்கய்யா நல்லவருதான். ஆனால் செம்பருத்தி… அபிராம் கண்ணாடி மாதிரி. நீங்க எல்லாரும் நல்லதை அவனுக்குக் காட்டினிங்க அதையே அவனும் பிரதிபலிச்சான்”