செம்பருத்தி 21 – 1

அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே  போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்கமான முதல் நிகழ்ச்சியும் அப்போதே உருவானது. 

‘ஐயோ அவினாஷைப்  பிரிஞ்சு கிளம்பணுமே’ என்று செம்பருத்தியும் 

‘ஏன் இவள் கிளம்பணும்னு சொன்னா மனசு வலிக்கிறாப்புல இருக்கு? இந்த உணர்வுக்குப் பேரு என்ன?’ என்று குழப்பத்தில் அவினாஷும் 

இவனுங்களுக்கு எல்லாம் சொன்னாப் புரியாது. 90ஸ் கிட்ஸ்கு வாழ்க்கை தரணும்னா நானே ஏதாவது அதிசயத்தை நிகழ்த்தினாத்தான் உண்டு என்று கடவுளும் நினைத்ததால் 

‘டக் டக்’  என்று குதிரையின் குழம்படி ஒலித்தது. 

இது அவளோட நடை இல்ல. அவினாஷ் கூடவே எப்போதும் இருப்பாளா? என்று செம்பருத்தி எரிச்சல் உணர்வோடு நிமிர்ந்து பார்க்க, அவளை விட பன்மடங்கு முகம் முழுவதும்  மிளகாயைத் தடவி விட்டது போன்ற எரிச்சலுடன் அவினாஷ் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் இருந்த வாசல் வழியாக அவர்களை நோக்கி வந்தாள் காவ்யா. 

“இதுதான் நீங்க சொன்ன முக்கியமான  வேலையா அவினாஷ்” என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க. 

“எஸ்.., காவ்யா”

“எது, அவ்வளவு முக்கியமான மீட்டிங்கை மிஸ் பண்ணிட்டு இந்தக் கூலி…க்… வொர்கர்ஸ் கூட பார்ட்டி பண்ணிட்டு இருக்குறது பொறுப்பில்லாத்தனமா தோணலையா?” காவ்யா இவ்வளவு கடுமையாக அவினாஷிடம் பேசியதில்லை. ஆனால் அவன் எதிரே அமர்ந்திருந்த பெண் அவளது உள்ளத்தை ஆட்டுவித்து அப்படிப் பேசத் தூண்டினாள். 

எப்படி? இது எப்படி சாத்தியம்? தேடித் தேடி கொஞ்சம் மக்காகவும், அழகு குறைவாகவும் இருக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால். இந்தக் காக்கா மயிலாக மாறி நிற்கிறதே! 

“தோணலை காவ்யா” நிதானமாக அழுத்தி சொன்னான் அவினாஷ். 

“இங்கிருக்குற ஒவ்வொருத்தரும் எனக்கு அவ்வளவு முக்கியமானவங்க. அவங்க கூட சில மணி நேரமாவது ஸ்பென்ட் பண்றது அவங்க அன்புக்கு நான் செலுத்தும் பதில் மரியாதை. என்னோட பொறுப்புகளில் அதுவும் ஒண்ணு. என்ன இதை வரவு செலவு கணக்கில் நீயோ உங்க அப்பாவோ எழுத முடியாது.”

அவனிடம் பதில் பேசமுடியாத கையாலாகாத்தனத்தை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தாள். 

“நீங்க எல்லாரும் இங்க பொறுப்பில்லாம கூத்தடிச்சுட்டு இருந்தால் அபிராமை யார் பாத்துப்பாங்க?”

“அய்யாதான்  எங்களைப் போயிட்டு வர சொன்னார்” என்றாள் ஓவியா. 

“உங்கய்யா ஆயிரம் சொல்லுவார். ஏற்கனவே ஒரு தடவை கையைக் கிழிச்சு சூசைட் அட்டெம்ப்ட் அதிலிருந்து நாங்க காப்பாத்தி கவுன்சிலிங் கொடுத்து தேத்தி இருக்கோம். யாரும் கவனிக்கலைன்னா போதையைத் தேடுவாறு உங்கய்யா. பொண்ணு யாராவது கிடைச்சா அவ கூட மஜா. அதுனாலதான் ஊரெல்லாம் தேடி அசிங்கமா ஒரு பொண்ணை வேலைக்கு அனுப்பிச்சது…” அதற்கு மேல் அவள் தொடர முடியாதபடி 

“ஸ்டாப் இட் காவ்யா… இது என்னோட விருந்து. என் விருந்தினர்களை நீ அவமதிக்கிறதை நான் பொறுத்துட்டு இருக்க முடியாது” என்றான் கடுமையான குரலில். 

“என்னோட பொறுப்பை அவமரியாதையா நினைக்கிறிங்க அவினாஷ். கூடிய விரைவில் அதுக்கான பலனை பார்ப்பிங்க. அபிராமை இவங்க இப்படி விட்டுட்டு வந்திருக்கக் கூடாது”

சச்சரவை மேலும் வளர்க்க விரும்பாமல் “நாங்களும் இப்ப கிளம்பிட்டோம்மா… நன்றி அவினாஷ் தம்பி” என்றபடி சேச்சி கிளம்பிவிட்டார். சத்தம் எழுப்பாமல் அவரைத் தொடர்ந்தனர் அனைவரும். 

“இதென்ன பிஹேவியர் காவ்யா? ஒரு நாள் கூட எங்கேயும் போகாம நம்ம குடும்பம்தான் அவங்க குடும்பம்னு வாழுறவங்க சேச்சி. அவங்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை யூ ஜஸ்ட் ஸ்பாயில்ட் இட்” என்று அடிக்குரலில் காவ்யாவிடம் சீறினான்.  

“அவினாஷ் தம்பியாமே. ஒரு சமையல்காரிக்கு நீங்கள் கொடுக்குற இடமா இது. கரகாட்டக்காரிக்கும்  நீங்க தம்பியா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உறவு, அளவுக்கு மீறின உரிமை வேற. புது வேலைக்காரி  செம்பருத்திக்கு நீங்க யாரு அண்ணனா இல்லை தம்பியா? சே உங்களுக்குத் தராதரம் தெரியல அவினாஷ். நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க எங்க கிளம்புறிங்க?”

“நீ சொன்னதும்தான் நினைவுக்கு வந்தது அவங்க எல்லாரும் என் உறவுக்காரங்கல்ல எப்படி அக்காவையும், அக்கா மகளையும் எப்படித் தனியா அனுப்புறது. இந்த மாமா வீடு வரைக்கும் கூட போயி விட்டுட்டு வந்துடுறேன்”

கொதித்தாள் காவ்யா “வீடு வரைக்கும் என்ன வீட்டுக்குள்ள கூடப் போய்த்தான் பாருங்களேன். அங்க இருக்கவன் படியேற விடுவானான்னு நானும் வெளியே நின்னு வேடிக்கை பார்க்க வரேன்”

அவளை தீர்க்கமாய் பார்த்த அவினாஷ் “அந்த வீட்டுக்குப் போக எனக்கு யாரோட அனுமதியும் தேவை இல்லை. அந்த வீட்டில் இருக்கறவங்களுக்குத் தான் என் அனுமதி தேவை. நீயும் அதை உணர்ந்து நடந்துக்கோ. இன்னொரு முறை என் விருந்தாளிகளை அவமானப் படுத்தின, நான் சும்மா இருக்க மாட்டேன். என் நட்பு வேணும்னு நீயும் உங்கப்பாவும் நினைச்சிங்கன்னா என்னைக் கட்டுப்படுத்த நினைக்காம தள்ளி நின்னு பழகிக்கிறது நல்லது” என்றான் தெளிவாக. 

அந்த அறையின் கதவை அறைந்து சாத்திவிட்டு தனது வேக நடையில் இறங்கி கார் பார்க்கிங் இடத்திற்கு சென்றான். இதென்னது பிள்ளையார் பிடிக்கக் குரங்காகி விட்டது, அவினாஷை ஓட்டமும் நடையுமாகத் தொடர்ந்தாள் காவ்யா. 

“கோபன் நில்லு, நானும் உங்க கூட வரேன்” என்றான் அவினாஷ்.

“நீங்களா… அய்யாவுக்கு… “ திணறினான். வராதே எங்க அபிராம் அய்யாவுக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட முடியுமா?

“ஏன் நான் வரக்கூடாதா? உங்கய்யா கெட் அவுட் சொல்லிடுவாரா?”

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல அவினாஷ். தம்பி உக்கார இடத்தை விட்டுட்டு ஓவியா பின்னாடி வந்து உக்காந்துக்கோ.”

error: Alert: Content selection is disabled!!