செம்பருத்தி 21 – 2

அவர்கள் வந்தது சிறிய வண்டிதான். இப்போது அவினாஷும் வருவதென்றால் ஓவியாவை பின் இருக்கையில்  மடியில்தான்  உட்கார வைக்க வேண்டும். 

முன்னிருக்கையில் கோபன், லவங்கம் மற்றும் அவினாஷ். பின்னிருக்கையில் சேச்சி, காளியம்மா, ஓவியா, செம்பருத்தி என்று தீர்மானமானதும் ஒரு குரல் இடையிட்டது. 

“நானும் உங்க கூட வர்றேன்” காவ்யாதான் அது. 

“நீங்களா?” என்றான் கோபன். இதென்னடா சோதனை. இத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்திருந்தால் பெரிய வண்டியாக எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்.

“ஏன்? நான் வந்ததில்லையா?”

“அப்படி சொல்லலைம்மா”

“மந்தாகினி என் அத்தை. அபிராம் என்னோட அத்தை மகன்னு உங்களுக்கு நினைவு படுத்துறேன்”

செம்பருத்திக்கு ஒரே அதிர்ச்சி. “சாரோட முறைப் பொண்ணா?” என்று சேச்சியிடம் மெதுவாக கேட்க…

“தூரத்து சொந்தம். தூரம்னா ஒரு ஆயிரம் கிலோமீட்டராவது இருக்கும்” என்றார் சேச்சி கிண்டலாக.

மேலும் “அவங்கப்பா சுகுமாரன் மந்தாகினி அம்மாவுக்கு தூரத்து உறவு முறை. அண்ணன்னு கூப்பிடுவாங்க” என்று தகவல் சொன்னார். 

ஓ அதனால் வந்த உரிமையா? வேலை செய்யும் நபர்களை துச்சமாக மதிக்கும் தன்மை வேறு இருக்கிறது. ஒரு வேளை ராஜகுடும்பமோ? இருக்காது, மந்தாகினி சாதாரண குடும்பத்துப் பெண் என்று தானே சொல்கிறார்கள். 

இந்தக் குடும்பத்தில் இருக்கும் உறவு முறைகளைப் பற்றி இப்போதுதான் கொஞ்சம் புரிகிறது. அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே… 

“செம்பருத்தி கொஞ்சம் இறங்கு” என்றாள் அதிகாரமாக. 

ஒன்றும் புரியாமல் காரிலிருந்து இறங்கிய செம்பருத்தியின் கைகளில் ஒரு நூறு ரூபாய் தாளைத் திணித்து விட்டு. 

“பஸ்ல ஏறி வந்துடு” என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டாள். 

“நானும் அக்கா கூட வர்றேன். இறக்கி விடுங்க” என்று அடம்பிடித்த ஓவியாவிடம். 

“ஏன் உங்கக்காவுக்கு விவரம் தெரியாதாக்கும். இந்நேரத்துக்கு ஊருல இருக்குற பாதி பேரைத் தெரிஞ்சு வச்சிருப்பா” என்று சொல்லியதைப் பொறுக்க முடியாது. 

“ஸ்டாப் இட் காவ்யா. ரொம்ப தப்பா பேசுற நீ” என்று சீறிவிட்டு வண்டியிலிருந்து இறங்கினான் அவினாஷ். 

“என்ன தப்பா சொல்லிட்டேன். இவ்வளவு நாளா இந்த ஊரில் யாரும் தெரியாமலா இருக்கும்?”

“விடுங்க சார். அவங்களை மாதிரியே என்னையும் நினைச்சுட்டாங்க போலிருக்கு. நான் உங்க அளவுக்கு வேகம் இல்ல மேடம். கொஞ்சம் ஸ்லோதான்” என்றாள் செம்பருத்தியும் போலிப் பணிவுடன். 

கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

பின் இருக்கையில் ஒரு ஜன்னலுக்கருகே தாராளமாக காவ்யா அமர்ந்திருக்க, அவள் அமர இடம் விட்டுவிட்டு காளியம்மா அவள் மேல் படாமல் ஒரு இன்ச் இடைவேளை விட்டு சேச்சியை இடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சேச்சியோ காரின் கதவிற்கும் காளியம்மாவிற்கும் இடையே தனது ஆஜானுபாகுவான உடலைக் குறுக்கிக் கொண்டிருக்க, இருவரும் சேர்ந்து அழுத்தியதில் கை கால்கள் கூட அசைக்க முடியாமல் ஓவியா பரிதவித்துக் கொண்டிருந்தாள். 

“இதென்ன காவ்யா. நீ உன் காரில் வரக்கூடாதா?”

“நீங்கதானே அவினாஷ் சொன்னிங்க இவங்க உங்க பாமிலின்னு உங்க குடும்பம் எனக்கும் குடும்பம் தானே. நான் இவங்க கூட இந்தக் காரில்தான் போறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன்”

அவளை தீர்க்கமாகப் பார்த்தவன் “ஓகே நீ தீர்மானம் பண்ணிட்டா தடுக்க நான் யாரு? அதுவும் அபிராமோட உறவுக்கார பொண்ணு வேற. பட்  சின்ன சேஞ்ச் மட்டும் பண்ணுறேன். சேச்சி நீங்க முன் சீட்டுக்கு வாங்க”

அவினாஷ் இறங்கிக் கொண்டு முன் சீட்டில் சேச்சியை அமர வைத்தான். பின் சீட்டில் மூவர் மட்டுமே இப்பொழுது. 

“கோபன் இவங்க எல்லாரையும் பத்திரமா வீட்டில் கொண்டு போயி சேர்த்திடு”

“அவினாஷ் அப்ப நீங்க?” கிரிச்சிட்டாள் காவ்யா. 

“நானும் செம்பருத்தியும் ஜாலியா பஸ்ஸில் வர்றோம். பை”

கோபத்தில் தணலாக மாறிய காவ்யாவின் முகத்தைக் கண்டு அனைவருக்கும் உள்ளூர மகிழ்ச்சியே. ஒரு நல்ல பெண்ணை என்னென்ன வார்த்தைகள் பேசிவிட்டாள். இவளுக்குத் தேவைதான். 

அவள் மறைந்ததும் “ஐ ஆம் சாரிம்மா. காவ்யா நாக்கை கண்ட்ரோல் பண்ணவே முடியறதில்லை”

“சே சாரி எல்லாம் அவசியமே இல்லை. காவ்யா பேசுனத்துக்கு அவங்கதான் பொறுப்பு. ரொம்பல்லாம் பொறுத்துக்க மாட்டேன். கண்டிப்பா பதிலடி கொடுப்பேன். அதுக்காக கோச்சுக்க கூடாது”

“கோச்சுக்குறதா… நான் இந்த அக்கினி நட்சத்திரம் சண்டையை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்”

“சரி கிளம்பலாமா?” 

“எங்க?”

“வீட்டுக்குத்தான். இப்ப கிளம்புனாத்தான் பஸ் பிடிச்சு போக சரியா இருக்கும்”

“அது இன்னொரு நாள். இன்னைக்கு டோண்டோடையிங்” விரித்துக் காண்பித்த கையில் சாவி.

“இன்னொரு கார் இருக்கா?”

“என் பைக். அதில்தான் போகப் போறோம்” என்று சொல்லியதும் செம்பருத்திக்கு மனதில் ஆயிரம் ரோஜாக்கள் பூத்தது. ஆனால்…

“என்னாச்சு… பைக்கை மெதுவாவே ஓட்டிட்டு போறேன்”

 

error: Alert: Content selection is disabled!!