Skip to content
“இல்லை மழை வர மாதிரி இருக்கே”
“ரெயின் கோட் எடுத்துக்கலாம்”
அடுத்த சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் சிறகை விரித்து பறக்கத் தொடங்கின. மெல்லிய சாரல், நல்ல குளிர் காற்று, மனதுக்கு நெருக்கமானவன் மிக மிக அருகில் தொட்டுவிடும் தொலைவில். இதை விட சொர்க்கம் என்ன பெரிதாகத் தந்துவிடப் போகிறது.
இருவரும் வாய்விட்டு எதுவும் சொன்னதில்லை. ஆனால் கண்களின் வழியே எப்போதோ அன்பு பகிரப்பட்டு விட்டது.
செம்பருத்திக்கு நீங்க அண்ணாவா தம்பியா என்று காவ்யா கேட்ட கேள்வி உரைக்க, ஆன்சர் உனக்குக் கடுப்பாத்தான் இருக்கும். பட் ரெண்டும் இல்லை காவ்யா என்றான் அவனுக்குள்.
இருபுறமும் மெலிதாகத் தூறல் போட ஆரம்பிக்க, முதல் முறையாக இந்தப் பயணம் இப்படியே தொடர்ந்தால் என்ன என்று தோன்றியது அவினாஷுக்கு. அவனுக்கு மட்டும் தோன்றினால் போதுமா அவளுக்கு?
காதலின் கல்விச் சாலையில் அவள் கண்கள் எனும் புத்தகத்தை ஆழமாகப் பார்த்து புரிந்துக் கொள்ளும் திறன் இந்த உலகிலேயே எனக்கு மட்டும்தான் உண்டு. பல மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியிலேயே அதைக் கண்டுபிடித்தவன் என்ற கர்வத்தில்
“சொல்லு டார்லிங்” என்றான்.
டார்லிங்கா! திகைத்தாள் செம்பருத்தி “எ… என்ன சொன்னிங்க அவினாஷ்?”
“வீட்டுக்கு சீக்கிரமா போகணுமா இல்லை மெ…..து…. வா…. போகணுமா?” என்று வேகமாகவும் மெதுவாகவும் ஓட்டிக் காண்பிக்க..
“மெதுவா போனால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அபிராம் சாரைப் பார்க்கணுமே… சீக்கிரமே போகலாம்”
இருள் தோன்ற ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தினான். ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு அவளது முகத்தைப் பார்த்து திரும்பி நின்றுக் கொண்டான் “எனக்கு ஒரு கேள்வி இருக்கு. அதுக்கு பதில் தேவை”
“சொல்லுங்க”
“இந்தக் குர்த்தி உனக்கு ரொம்ப அழகா இருக்கு.ஆனால் நான் ஆன்லைனில் குர்த்தியைத் தான் தேர்ந்தெடுத்தேன். அளவெல்லாம் காவ்யாதான் பார்த்து வாங்கிட்டு வந்தாள்”
“உங்க செலெக்ஷன் சூப்பர். தேங்க்ஸ் அவினாஷ். காவ்யா என்னைக் காயப்படுத்தணும்னு நினைச்சே நிறைய நல்லது செஞ்சிருக்காங்க. கவலைப்படாதிங்க. இந்த அழகான குர்த்தியைப் போட்டுக்கணும்னே நான் அதுக்காக என்னைத் தயார் படுத்திக்கிட்டேன். ஆனால் இதைச் சொல்லவா நிறுத்துனிங்க?”
“அபிராம்னா உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல”
“ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லவர்…”
சிரித்துக் கொண்டான் “அவன் நல்லவன்னு ஒரு வயசுப் பொண்ணு சர்டிபிகேட் தர்றது இதுதான் முதல் முறை”
“ஆம்பளைங்க சர்டிபிகேட் தந்திருக்காங்களா”
“எஸ்… நான்தான் அது”
“கேள்வி முடிச்சுடுச்சா?”
“இல்லை. அபிக்கு என்னை சுத்தமா பிடிக்காது. நீ இனிமே என் கூட பேச, பழகக் கூடாதுன்னு சொன்னா என்ன செய்வ?”
ஆச்சிரியமாகப் பார்த்தாள். “அப்படியெல்லாம் சொல்லுவாங்களா என்ன?”
“அவன் சொல்லுவான். ஏன்னா அபி ஒரு முரட்டு முட்டாள்”
“திருத்தம் அழகான முரடன்”
“அதெல்லாம் நான் கேட்டேனா?” என்றான் கடுப்புடன். பொறாமை பொறாமை… லைட்டாத்தான்…… ஆனால் செம்பருத்திக்கு அதெல்லாம் கண்டுபிடிப்பதைவிட ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிப்பதில் மூளை ஓவர்டைம் வேலை செய்தது.
“இல்லைதான். ஆனால் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை அவினாஷ்”
“எனக்கும் அவனுக்குமா? சூரியனும் சந்திரனும் மாதிரி நாங்க ரெண்டு பேரும். அப்படி என்ன ஒற்றுமை?”
“இதே மாதிரிதான் அபிராம் ஒரு நாள் என்கிட்டே நீ யாரு தேர்ந்தெடுத்து வேலைக்கு சேர்ந்திருந்தாலும் பரவால்ல, இனிமே எனக்கு மட்டுமே உண்மையா இருக்கணும்னு சொன்னார். உங்க கேள்விக்கும் அவர் கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”
“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நீ என் கேள்விக்கு பதில் சொல்லு”
“உங்ககிட்ட பேசவேண்டாம்னு அபிராம் சொன்னால் காரணம் கேட்பேன். உங்களுக்காக அபிராம் சார்கிட்ட வாதாடுவேன். சண்டை போடுவேன்”
“நான் அவனுக்குப் பிடிக்காதது நிறைய செஞ்சிருந்தா”
அவனை ஆழ்ந்து பார்த்தவள் “அவருக்கு பிடிக்காததா இருக்கலாம். ஆனால் அவருக்கு நல்லது மட்டுமே செஞ்சிருப்பிங்கன்னு மனப்பூர்வமா நம்புறேன் அவி”
அவன் முகம் பெரிதாக மலர்ந்தது. அவளது கரங்களைப் பற்றிக் கொண்டவன் “தேங்க்ஸ், தேங்க் யூ சோ மச் டியர்” என்றான் முகம் கொள்ளா பூரிப்புடன்.
“இதுக்கு ஏன் தேங்க்ஸ்”
“போகப் போகப் புரியும்”
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டியர் சொன்னானா? சேச்சியை டார்லிங்னு சொன்னான். அப்ப அவங்க மேல லவ்வா? மேல்தட்டுக் குடும்பத்தில் பெண்களை எல்லாம் டார்லிங், டியர்னு கூப்பிடுவாங்களா? எங்களை எல்லாம் இப்படி கூப்பிட்டா பொண்டாட்டியையும் காதலியையும் எப்படிக் கூப்பிடுவானுங்க? ஒரு பக்கம் குழப்பி அடித்தது செம்பருத்திக்கு.
இருவரையும் சுமந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் சிறிய சாலைகளில் புகுந்து புறப்பட்டது அந்தக் காதல் ரதம்.
“இன்னைக்கு அபிராமைப் பார்க்க வீட்டுக்கு வரப்போறேன் செம்பருத்தி”
“உங்களை கெட் அவுட் சொல்லிட்டா… “
“நீ தான் இருக்கியே எனக்காக சண்டை போட”
அங்கே வண்டி நின்றபோது, வீடே பரபரப்பாக இருந்தது.
“டாக்டர் முதலுதவி தந்துட்டு இருக்கார். சரியான நேரத்தில் அபிராம் ஐயாவைக் காப்பாத்திட்டோம்யா” என்றான் தோட்டக்காரன்.
பைக்கை அப்படியே கீழே போட்டுவிட்டு “அபிராமுக்கு என்னாச்சு ? “ என்றபடி வேகமாய் இரண்டிரண்டு படியாகத் தாவி ஏறி ஓடினான் அவினாஷ்.
“ட்ரக்ஸ். நம்ம காவலை மீறி சப்ளை பண்ணிருக்காங்க. இவதான், இவதான் எல்லாத்துக்கும் காரணம்” செம்பருத்தியைக் காட்டிக் கிறீச்சிட்டாள் காவ்யா.
நானா? அபிராமுக்கு நான் போதை மருந்து தந்தேனா? தன் மீது அநியாயமாக பழி சுமத்தப்பட்டதின் காரணம் புரியாமல் திகைத்து நின்றாள்.
error: Alert: Content selection is disabled!!