Skip to content
“நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான்.
“இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்”
“அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” பாய்ந்தாள் காவ்யா.
“இல்லம்மா முன் அனுமதி வாங்கியாச்சு” என்றார் சேச்சி.
“எனக்கு அனுமதி வேண்டும் கடிதம் எதுவும் வந்ததா நினைவில்லையே. உங்களுக்கு வந்துச்சா அவி?” என்றாள்.
இல்லை என்று தலையசைத்து மறுத்தான் அவினாஷ்.
“நான்தான் அந்த பாட்டிலை எடுத்துட்டுப் போயி டாக்டர்கிட்ட காமிச்சு தரலாமா இதனால அவருக்கு கெடுதல் வராதேன்னு கேட்டுட்டு வந்தேன்” என்றார் சேச்சி.
“டாக்டர் இதில் கேஃபின் கன்டென்ட் அதிகமா இருக்குறதால வேண்டாம்னு சொல்லிருப்பாங்க. லிமிட்டா குடிக்கலாம்னு சொன்னதுக்கு அப்பறம்தான் நான் வாங்கிட்டு வர ஆரம்பிச்சேன்” என்றாள் செம்பருத்தி.
“அவனோட ரெகுலர் செக் அப் போது வர்ற டாக்டருக்கு இது தெரியுமா?”
“சொல்லிருக்கோம். ஹெல்த் பைலில் சேர்க்காம தனிக் குறிப்பா உங்களுக்கு அனுப்புறேன்னு சொல்லிருக்கார். நான் செஞ்ச தப்பு இதைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரிவிக்காததுதான்”
வேலை பிசியில் முக்கியம் என்று குறிப்பிட்டு வந்தது தவிர மற்ற கடிதங்களைப் படிக்க நேரமில்லை. தனிப்பட்ட மின்னஞ்சல்களை செக் செய்ய வேண்டும் என்று குறித்துக் கொண்டான் அவினாஷ்.
“நல்ல கதை. டாக்டர்கிட்ட அனுமதி வாங்கினங்களாம். ஆனால் அதை சீக்ரெட்டா பைல் பண்ணங்களாம். காதில் பூ வச்சுட்டு வர்றவங்க யாருகிட்டயாவது இந்தக் கதையெல்லாம் சொல்லு” ஏகப்பட்ட எகத்தாளம் காவ்யாவின் குரலில்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவினாஷிடம் “அபிராம் சாருக்குத் தன்னை எல்லாரும் அடக்கி வைக்கிறதாவும் அவங்களை எதிர்த்து ஏதாவது செய்யணும்னு ஒரே வேகம். அதனாலதான் இதை ரகசியமா விதிமீறலா செய்யுறதா அவருக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைத் தந்தோம். நாங்க செய்யாம இருந்திருந்தா வேற ஏதாவது ட்ரை பண்ணிருப்பார். எங்களுக்கு அது தெரியாமையே போயிருக்கும். அதனால அவருக்கு ஆபத்தில்லாத சில தப்புக்களைத் தெரிஞ்சே செய்யவிட்டோம். ஆனால் இது எங்களையும் மீறி நடந்த அசம்பாவிதம். எப்படின்னுதான் தெரியல”
“அதுதான் இப்ப பாயிண்ட். முதலில் அதுக்கு வா… எல்லாரையும் ஏமாத்திட்டு அபிக்கு ட்ரக்ஸ் கொடுத்திருக்க” கிளிப்பிள்ளையாய் திருப்பித் திருப்பி அதையே சொன்னாள்.
ஒரு நபரைப் பற்றி பொய்யான தகவலை பத்து முறை திருப்பித் திருப்பி பல இடங்களில் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது ஆன்லைன் பாடம். அதை இங்கு கடைபிடித்தாள் காவ்யா.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே என்பது செம்பருத்தி இத்தனை வருட வாழ்க்கையில் கற்ற வாழ்க்கை பாடம். அவளா இந்தப் பழிக்குக் கலங்குவாள். தனது பையில் இருந்த பாட்டில்களை எடுத்து வைத்தாள். “சில சமயம் நான் வாங்கிட்டு வந்த கூல்ட்ரின்க்ஸ மாத்தி வேற கடைல வாங்கிட்டு வந்த கூல் ட்ரிங்க்ஸை சேச்சி வச்சுடுவாங்க. சேச்சி நான் வாங்கிட்டு வந்த ஒரிஜினல் கூல் ட்ரிங்க்ஸ் பத்திரமா வச்சிருக்கீங்களா சேச்சி?”
“இருக்கு மோளே. நான் அவினாஷ்கிட்ட டெஸ்ட்டுக்குத் தந்துடுறேன்” என்றார்.
இவ்வளவு வேலை நடந்திருக்கிறதா… அவினாஷ் எண்ணிக் கொண்டிருந்த போதே “இந்த பீடி கூட அய்யா ஆசைப்பட்டு சில நேரம் கேட்பாருன்னு நான் வாங்கிட்டு வந்து தருவேன் சின்னய்யா” என்றவாறு பாலன் பீடிக்கட்டை எடுத்து வைத்தான்.
அபிராமுக்கு பீடி பழக்கம் வேறா? எங்கிருந்துதான் தேடித் தேடி கெட்டுப் போகிறானோ என்றெண்ணிக் கொண்டு அதையும் எடுத்து வைத்தான்.
“எல்லாத்தையும் லாப் டெஸ்ட்டுக்கு அனுப்புறேன். அது வர்ற வரைக்கும் யாரும் இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது” என்றான் அவினாஷ்.
***
நீங்க பிரச்சனையே இல்லாம லவ்வில் குதிச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ஸ்டெப்புக்கு போனா விதின்னு ஒரு பெயரில் உங்க லைஃப்ல விளையாடுற எனக்கு என்ன மரியாதை இருக்கு என்று விதி விளையாடியதின் பயனாக திருநெல்வேலியில் அடுத்த காட்சி அரங்கேறியது
“காணாமப் போனது எங்க பொண்ணு. அவளைப் பத்தித் தெரிஞ்சுக்குற முழு ரைட்டும் எனக்கு இருக்கு. ஒழுங்கு மரியாதையா அவ எங்கிருக்கான்னு சொல்லல நான் போலிஸைக் கூப்பிட்டுட்டு வருவேன்”
வக்கிலின் ஆபிஸின் நடுவில் தலைவிரி கோலமாய் காளியின் அவதாரம் போல நின்று கொண்டு கத்திக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்மணியைப் பார்த்த வண்ணம் அலுவலகத்தில் நுழைந்தார் சுகுமாரன்.
அந்தக் காளியின் உக்கிரம் தாங்க முடியாமல் முகம் சுளித்த வண்ணம் அலுவலகத்திற்கு வந்த வேகத்தில் அனைவரும் கிளம்பி சென்றனர். என்னப்பா இது, சந்தைக் கடை மாதிரி… என்று வரவேற்பறையில் கேள்வி கேட்கவும் மறக்கவில்லை. அது அது தானே அந்த பெண்மணிக்கும் தேவை. அவமானப்படுத்தினால் தானே அவளுக்குத் தேவையான விவரங்கள் கிடைக்கும்.
சுகுமாரன் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் “வாங்க சார்? உங்களுக்கு வேண்டிய விவரத்தை இந்த பைலில் போட்டு வச்சிருக்கோம்” என்றான் உதவியாளன்.
“அதை விடு, யாருப்பா இந்தம்மா இந்தக் கத்து கத்துது?”
“இது ஒரு தலைவலி சார். தினமும் வந்து நின்னு கத்தி கூப்பாடு போடுது”
“உங்க வக்கில் சார்கிட்ட சொன்னிங்களா?”
“சார் கிட்ட ரெண்டு மூணு தரம் அந்தப் பொண்ணோட அட்ரெஸைக் கேட்டுச்சு. அவரு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாரு. இப்ப அவரு இல்லாத நேரத்தில் ஆபிசுக்கே வந்து கத்த ஆரம்பிச்சிருச்சு”
“எந்த பொண்ணுய்யா?”
“அதுதான் சார் அந்த செம்பருத்தி. நீங்களும் சாரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து அனுப்பினிங்களே”
“ஓ… அவளா? ஏதாவது சொல்லி அந்தம்மாவை அனுப்பி விடுய்யா… “
“முடியல சார்.ஆபிஸை விட்டு அனுப்பிச்சா ரோட்டில் நின்னு கத்துறாங்க. போலீசுக்கு போகலாம்னா பொண்ணு அவங்க வீட்டுப் பொண்ணுன்னு சொல்றாங்க. இதனால நமக்கு ஏதாவது வில்லங்கம் வந்துட்டா?” பரிதாபமாய் சொன்னான்.
“அந்தம்மாவோட அட்ரஸ வாங்கிட்டு சீக்கிரம் விசாரிச்சு சொல்றோம்னு சொல்லி அனுப்புய்யா”
அட்ரெஸ்ஸைத் தந்துவிட்டு அத்தையம்மாள் “இன்னும் ரெண்டு நாளில் செம்பருத்தி இருக்குற இடத்தைப் பத்தி தகவல் தெரிவிக்கல நான் டிவிகாரனைக் கூட்டிட்டு வந்துடுவேன் பாத்துக்கோ” என்று மிரட்டிவிட்டுப் போனாள்.
அவள் சென்றதும் காவ்யாவை அழைத்தார் சுகுமாரன் “அங்க எப்படிம்மா நிலைமை இருக்கு?”
“நான் எதிர்பார்த்தது நடக்கத் தாமதமாகுதுப்பா, ஆனால் நான் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும் போல இருக்கு?”
error: Alert: Content selection is disabled!!