“வாங்க மேடம்… வாங்க மிஸ். ராதிகா பயணம் சுகமா இருந்ததா?”
“செம்பருத்தி… எப்படிம்மா இருக்க“ என்று அழைத்த மங்கையற்கரசி சற்று குள்ளம் என்று கூட சொல்லலாம். நிறம் கூட அதிகமில்லை. ஆனால் பார்வையில் அப்படி ஒரு தீர்க்கம். அவினாஷுக்கு இவரிடமிருந்து தான் இந்தப் பார்வை கிடைத்திருக்கும் போலும்.
“நல்லா இருக்கேன் மேடம்” என்றாள்.
“அம்மா… நல்லாருக்கிங்களா” ஒரு ஓரத்தில் நின்று லீலம்மா கேட்க,
“அய்யா சுகமா? உங்க பெட்டி படுக்கை எல்லாம் எடுத்து வைக்கிறேன்மா… “ என்று பாய்ந்து ஓடினார் லவங்கம்.
அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இருந்தது அந்த கொச்சு வீடு.
“சாப்பாடு தயார்மா… “
“வேண்டாம் லீலா, நம்ம விடுதியில் அவினாஷ் டின்னர் ஏற்பாடு செஞ்சிருந்தான். சாப்பிட்டுட்டேன். ராதிகாதான் சரியா சாப்பிடல, சாப்பாடு தா… ராதிகா, ராதிகா எங்க?”
“அந்தப் பொண்ணு அபிராம் ஐயாவைப் பாக்கணும்னு சொன்னதால செம்பருத்தி கூட்டிட்டு போயிருக்காங்கம்மா”
“அபிராம் எங்க?”
“தூங்குறார்மா”
“அவனுக்கு ரெஸ்ட் வேணும்மா”
“ம்ம்… “
மெதுவாக அபிராமின் அறைக்குள் சென்றவருக்கு அவன் நைந்த துணியாக படுக்கையில் இருப்பதைக் கண்டு மனது வலித்தது.
“நம்மை திட்டுறதுக்காவது அபி சீக்கிரம் குணமாகனும் அவி” என்றார்.
“நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா… நாங்க எல்லாரும் ஷிப்ட் போட்டு அவனைப் பாத்துக்குறோம்” என்றான்.
“ம்ம்… “ என்று அறைக்குள் சென்றார் மங்கையற்கரசி. காரிடாரில் தொங்கிய மந்தாகினியின் ஆளுயரப் படத்தை ஒரு சில வினாடிகள் நின்று ரசித்தார்.
“அம்மா… “ என்றபடி வந்தார் லீலம்மா.
“மந்தாகினி நல்ல அழகு இல்லையா லீலா”
“ஆமாம்மா பாம்பு மாதிரி”
“அப்படியெல்லாம் பேசக்கூடாது. இது அவங்க வீடு. உங்களை பாக்க அனுப்புச்சதே அவங்களை கவனிச்சுக்கத்தான் லீலா”
“பாம்புக்குத்தான் வீடு கட்டத் தெரியாதே. கரையான் கஷ்டப்பட்டுக் கட்டின புத்தில் போயி ஜாலியா உக்காந்து என்ஜாய் பண்ணும். விரட்ட வர்றவங்களைக் கொத்தும். எப்படி பாத்தாலும் நான் சொன்னது கரெக்ட்டுதான்மா” என்றார்.
“இந்த மாதிரி பேசாதே லீலா… கட்டினது வேற ஆளா இருந்தாலும் இப்ப யாரு இருக்காங்களோ அவங்களுக்குத்தான் சட்டப்படி சொந்தம்”
“சட்டத்தை வச்சு விளையாடிட்டே இருக்கவங்களுக்கு நியாயம் தர்மம்னு ஒன்னு இருக்குறது தெரியுமா?”
“பேசாம போயி தூங்கு. நானும் தூங்குறேன்”
“இந்தங்கம்மா… “ கையில் ஒரு பாட்டில் தண்ணீரைத் தந்தார்.
“இந்த வீட்டில் பச்சைத் தண்ணி கூடக் குடிக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். இது கடைல வாங்கி வச்சிருக்கேன். இந்தப் பைலை பிஸ்கெட், பழம் இருக்கு. சாப்பிடுங்க”
லீலம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்ட மங்கையற்கரசி “லீலா… தாங்க்ஸ் நீ செஞ்ச எல்லாத்துக்கும்” என்றார்
அவரும் சொன்னார் “தாங்க்ஸ்மா… நீங்க எனக்குத் தந்த அடையாளத்துக்கு” என்றார்.
இருட்டு பிரியாத அதிகாலை நேரத்தில் அபிராமின் அறைக்கு வந்து மங்கையற்கரசி பார்த்தபொழுது ஏற்கனவே அங்கு ராதிகா நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.
“நீ என்னம்மா இங்க… “
“தூக்கம் வரல மேடம்.. இங்க வந்தேன். பெட் ஈரமாகி இருக்கு. அபி ட்ரெஸ் எல்லாம் நனைஞ்சிருக்கு”
வந்து தொட்டு பார்த்தார். வளர்ந்த குழந்தையாக இருந்தான்.
“இங்க இருந்த நர்ஸ் எங்க?”
“ஷிப்ட் முடிஞ்சிருச்சுன்னு இப்பத்தான் கிளம்பி போனாங்க. செம்பருத்தி அடுத்த ஷிப்ட் நர்ஸ காண்டாக்ட் பண்ண போயிருக்காங்க. அவினாஷ் மிட் நைட்டுக்கு மேலதான் தூங்கப் போனார்”
அபிராம் ஈரத்தின் அசௌகரியத்தில் சற்று நெளிய,
“அவர் கஷ்டப்படுறார் மேடம். நம்மளே மாத்திடலாம். ஒருத்தர் அவரைத் திருப்பிப் பிடிச்சுக்கலாம் இன்னொருத்தர் அடியில் துடைச்சுட்டு வேற உடை போட்டு விட்டுரலாம். நல்லா தூங்குறார்”
அவர் சம்மதம் சொல்வதற்குள் அவனை சாய்த்துப் பிடிக்க ஆரம்பித்து இருந்தாள். மங்கயற்கரசியும் அந்த படுக்கையை எடுத்துவிட்டு காய்ந்த துணியால் துடைக்கப் போக,
லீலாம்மாவும் சரியாக அங்கு வந்துவிட, அதிர்ச்சியுடன் “அம்மா நீங்களா? நாங்க பாத்துக்குறோம்மா” என்று துணியினை வாங்கிக் கொண்டார்.
“லீலா நாம செய்யலாம். ஆனால் ராதிகா வேண்டாம். வயசுப்பொண்ணு”
“அபிராமைப் பொறுத்தவரை நானும் செய்யலாம் மேடம்” என்ற ராதிகாவின் பேச்சு அவர்களுக்கு எதையோ உணர்த்த பேசாமல் அவனுக்கு வேண்டியதை செய்ய ஆரம்பித்தனர்.
அவனது பின்புறத்தைப் பார்த்த ராதிகா திடுக்கிட்டுப் போனாள். கணுக்காலில் இருந்து பின்புறம் வரை ஒரு கோடாக நீளமாக ஒரு இன்ச் அகலத்தில் பெயர்த்து எடுத்ததைப் போல கிழித்த தடம்.
“ஐயோ இது என்னது?” பதறினாள்.
“பைக் ஆக்சிடெண்ட்… காப்பாத்துனதே பெரிய விஷயம்”
“அப்ப… “
“நடப்பார். பழையபடி மாரத்தான் எல்லாம் ஓட முடியாது” பதிலளித்தார் சேச்சி.
“நாங்களும் எவ்வளவோ முன்னேற்பாடு செய்யுறோம். ஆனால் அவனோட மனசு எதைத் தேடுதுன்னே தெரியல” என்றார் மங்கை.
பொழுது விடிந்து சூரியன் நன்றாக வெளிச்சத்தை வாரி வழங்கிய நேரம், கண்களைக் கஷ்டப்பட்டு விழித்த அபிராமின் முன்னே ஒரு உருவம். அது அவனது காயம்பட்ட காலில் இருந்த தடத்தை வருடிக் கொண்டிருந்தது.
அபிராம் மெலிதான குரலில் சொன்னான் “ஜங்லி ராணி”
அந்தக் குரலைக் கேட்டதும் பெரிதாக விரிந்தன ராதிகாவின் கண்கள்.