Skip to content
சூரிய விளக்கில் சுடர்விட்ட கிழக்கு அன்றைக்கு என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது ராதிகாவுக்கு.
செம்பருத்தி தன்னை ஒர விழிப் பார்வையில் சிறை பிடித்தவாறே விட்டு விலகி ஜாகிங் சென்ற அவினாஷைப் பார்த்தாள். சாம்பிள் கொடுத்திருந்த பொருட்களின் டெஸ்ட் ரிசல்ட் நாளை வந்துவிடும் என்று சொல்கிறார்கள். நான் தந்திருந்தால்தானே பயமிருக்கும். எனக்கு பயமே இல்லை. ஆனாலும் பிரச்சனைகள் சரியாகும் வரை அவினாஷுடன் மனம் விட்டுப் பேச வாய்ப்பில்லை.
“மோளே! சாயா” கண்ணாடி டம்ளரை அவள் முன் வைத்தார் சேச்சி.
“வேண்டாம் சேச்சி”
“செம்பா குட்டி, பல சமயங்களில் நம்ம செய்யாத தப்புக்கு இந்த சமுதாயத்தால் சிலுவை சுமக்க வைக்கப்படுறோம். அந்த சிலுவையை சுமக்கவாவது நமக்குத் தெம்பு வேணுமே… குடி” என்று தாயினும் சாலப் பரிந்து சொன்னவரை மறுக்க முடியாமல் அருந்தினாள்.
“எப்படி சேச்சி தப்பாச்சு. என்னோட கவனக் குறைவு தானே”
“அவினாஷுக்கு சொன்னதேதான் உனக்கும் சொல்றேன். நம்ம எல்லாரும் கண்ணு மூடாமத்தான் பாத்துக்கிட்டோம். ஆனாலும் ஒரு மனுஷன் தப்பு பண்றதுன்னு முடிவு பண்ணிட்டான்னா ஏழு கடல் ஏழு மலை தாண்டி உக்கார வச்சாலும் அவனைத் தடுக்க முடியாது. ஒருத்தன் இப்படித்தான் வாழணும் தீர்மானம் செஞ்சு வாழுறான். அவனை உன் போக்குக்கு வளைக்க நினைச்சா கடைசில தோல்விதான் மிஞ்சும். கடைசியா ஒன்னு மாற்றம் அபிராமோட மனசுக்குள்ள இருந்து தானா வரணும். நம்ம திணிக்கக் கூடாது”
“ஆமாம் சேச்சி. ஆனால் அவர் சுற்றுப்புறம் சரியாத்தானே இருக்கு. எப்படி போதை மருந்தைத் தேடினார்”
“கொலைப்பட்டினி இருக்குறவனுக்கு ஒரு வேளை சோறு அமிர்தம். தினமும் விருந்து சாப்பாடு சாப்பிடுறவனுக்கு அவனுக்குப் பிடிச்ச ஊறுகாய் சாப்பாட்டில் வைக்கலைன்னா கூட அது ஒரு பெரிய குறை. அதுதான் அபிராம் கேஸ். பர்ஸ்ட் வேர்ல்டு ப்ராப்ளம்… “
“சேச்சி பர்ஸ்ட் வேர்ல்டு ப்ராபளம் பத்தி எல்லாம் வெளுத்து வாங்குறிங்க. உண்மையிலேயே கேக்கணும்னு பாக்குறேன். ஒரு நேரம் கிராமத்து சமையலில் கஞ்சியும் கருவாடும்னு கலக்குறிங்க இன்னொரு நேரம் அபிராம் சாருக்காக ஸ்காட்டிஷ் பை செஞ்சு வைக்கிறிங்க. இதெல்லாம் எப்படி சேச்சி. நீங்க யாரு? எல்லாரும் சொல்றமாதிரி ஏஜென்ட் டீனாவா?”
“அப்படியும் சொல்லலாம். எங்க தாத்தா காலத்தில் இருந்து அரச குடும்பத்து வேலைதான் பார்த்துட்டு வர்றோம். எனக்கு சமையலில் இருக்குற இன்டெரெஸ்ட்டைப் பார்த்துட்டு நம்ம பெரிய அய்யா லண்டன்ல சேர்த்து படிக்க வச்சார். அதுக்கப்பறம் அங்கேயே ஒரு மிஷிலின் ஸ்டார் உணவகத்தில் சேர்ந்தேன். இங்கிலாந்து அரச குடும்பம் மாதிரியே ஸ்காட்லாண்டிலும் இருக்கு. அங்க படிச்சுட்டு ஒரு லார்டு வீட்டில் கிட்சன்ல இந்தியன் செஃப்பாவும் வேலை பார்த்தேன். ஒரு நாள் நம்ம பெரிய அய்யாவை மறுபடியும் அங்க நடந்த விழாவில் சந்திச்சேன். அவர்தான் அபிராமையும் மந்தாகினி அம்மாவையும் பார்த்துக்க என்னை இங்க வந்து சேரச் சொன்னார்”
“அவ்வளவு பெரிய வேலையை விட்டுட்டு இந்தக் குட்டியோண்டு லங்கைக்கு ஓடி வந்துட்டிங்களா சேச்சி”
“இந்த குட்டியோண்டு லங்கைதானே நான் பிறந்த மண் மோளே. இங்க கவுரவமான வாழ்க்கை கிடைச்சா வேண்டாம்னா சொல்லுவேன். அதுவும் இந்த வாழ்க்கை பெரிய அய்யா தந்தது. அவருக்கு நன்றிக் கடனைத் திருப்ப செலுத்துற வாய்ப்பு அத்தோட பெறாத இரண்டு பிள்ளைகள் அபிராம், அவினாஷ் இதெல்லாம் கசக்கவா செய்யும்?”
“உண்மைதான் சேச்சி. தாய்மடி மாதிரி பாதுகாப்பான இடம் வேறெங்கே இருக்கு? இன்னொரு சந்தேகம் எதுக்காக பெரிய அய்யா அபிராமைப் பத்தி இவ்வளவு கவலைப் பட்டார்? அபிராமும் எதனால அவினாஷையும் அவர் குடும்பத்தையும் இவ்வளவு வெறுக்கிறார்?”
“மகனை உலகம் தெரியாம மந்தாகினி அம்மா வளர்த்திருந்தா கூட தெரிஞ்சுக்க வைக்கலாம்.. ஆனால் தன் சுயலாபத்துக்காக அம்மா வார்த்தை தான் உலகம்னு ஆழமா பதிய வச்சாச்சு. உலகத்தில் இன்னும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அவனோட வாழ்க்கை எவ்வளவு உயர்ந்ததுன்னு அவனுக்குப் புரியல”
தூரத்தில் நடை பயிற்சி முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த மங்கையர்கரசியைப் பார்த்ததும், “மேடம் காப்பி குடிச்சாங்களா?”
“குடிச்சிருப்பாங்க… “ என்றார் பட்டும் படாமல்.
“நீங்க தரலையா சேச்சி” என்றாள் செம்பருத்தி திகைப்புடன்.
“நான் இந்த வீட்டிலிருந்து தர்ற பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் ஹோட்டலில் இருந்து வருது”
“அப்ப அவினாஷுக்கு?”
“அவருக்கும் தான். ஹ்ம்ம்.. வேற வழியில்லாம இங்க தங்கி இருக்காங்க. இல்லாட்டி மதியாதார் வாசல்படி கூட மிதிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு செம்பருத்தியின் காப்பி கப்பை வாங்கி கொண்டு சென்றார்.
“செம்பருத்தி” என்று அழைத்தார் மங்கை.
“சொல்லுங்க மேம்”
“லவங்கம் இருக்குற இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு போக முடியுமா?”
“போலாம் மேம்” என்றவாறு அந்த வீட்டிற்கு அருகிலேயே இருந்த ஒரு சின்ன ஒற்றை படுக்கை அறை சமையலறை அதில் டீ போட்டுக் கொள்வதற்காக சின்ன ஸ்டவ் சில பாத்திர பண்டங்கள்.
“வாங்கம்மா… சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே” காலையில் அவர்களை எதிர்பார்க்காத லவங்கம் பதறியபடி வரவேற்றார்.
“நன்றி சொல்ல நான்தானே உங்களைத் தேடி வரணும்”
“புரியலைங்கம்மா” தலையை சொரிந்தார்.
“உங்க பசங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். அவனுங்க வீட்டைப் பாத்து குரைச்சு ஆளுங்களை வேட்டியைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தானுங்களாமே. அதனாலதான் சரியான நேரத்தில் அபியைக் காப்பாத்த முடிஞ்சதுன்னு சொன்னாங்க”
அபிராம் நீச்சல் குளத்தில் தத்தளித்த சமயத்தில் அந்தப் பகுதியில் சுற்றிக் காவல் காத்தது லவங்கம் போற்றிப் பராமரித்து வளர்க்கும் செல்ல நாய்கள்தான். அவற்றை பாராட்டியதைக் கேட்டு தன்னையே பாராட்டியத்தைப் போல அகமகிழ்ந்து போனார். அதுவும் உதவிக்கு ஆட்கள் வரும் வரை ஒரு நாய் பாய்ந்து அவனது சட்டையைப் பற்றி மீண்டும் மூழ்காதவாறு கவ்விப் பிடித்திருந்ததாம்.
“ஆமாம்மா… பசங்க ரொம்ப அறிவாளிங்கம்மா… யாரைப் பாதுகாக்கணும்னு ஒரு கோடி காட்டிட்டா போதும் பிடிச்சுக்குவானுங்க. இல்லைன்னா வேட்டைக்கு கூட்டிட்டு போக முடியுமா சொல்லுங்க”
“உண்மைதான். உங்க பசங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்குத் தெரியல”
error: Alert: Content selection is disabled!!