“நேரம் கிடைக்கிறப்ப ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் அவனுங்க கூட விளையாடுங்கம்மா… சந்தோஷப் படுவானுங்க”
“அன்பைக் காட்ட நேரத்தைத் தாங்கன்னு சொல்றிங்க”
“ஆமாம்மா நேரத்தை விட சிறந்த பரிசு உலகத்தில் இல்லைங்களே”
“அது போதுமா? ஸ்பெஷல் விருந்து சாப்பாடு எதுவும் சொல்லட்டுமா?”
“வேட்டையாடி இரை தேடிப் பழகுனவனுங்க. அதைத்தான் விரும்புவானுங்க”
“அப்ப ஒரு நாள் வேட்டைக்கு கூட்டிட்டுப் போலாம். அபிராம் உடம்பு தேரட்டும்”
“பழையபடிக்கு வேட்டைக்கு போக ஆரம்பிச்சா அய்யா மனசும் தேறிடும்மா”
பெருமூச்சு விட்டபடி அவரது பசங்களைத் தடவித் தந்தார். அவைகளும் ஆர்வத்துடன் அவரது மடியில் தலையை சாய்த்து செல்லம் கொஞ்சின.
“அம்மா ஒரு விண்ணப்பம். இந்த நேரத்தை சாதகமா எடுத்துக்கிடுறதா நினைக்கக் கூடாது”
“சொல்லுங்க லவங்கம்”
“பாதுகாப்புக்கு நாய் வளர்கிறதா இருந்தா நாட்டு நாய் வளக்குறதை பரிசீலிக்கிறிங்களாம்மா?”
அவரைக் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தார்.
“நாட்டு நாய்கள் இனமே குறைஞ்சுகிட்டு வருதும்மா. பிள்ளைக எல்லாருக்கும் புசு புசுன்னு பாரின் நாயைத் தான் வாங்கித் தராங்க.அந்த நாய்களுக்கு அங்கீகாரம் இருக்கு. நம்ம பிள்ளைக நம்மை மாதிரியே அமுங்கிப் போயி இருக்காங்க. நம்ம ராஜபாளையமோ கன்னியோ நம்ம ஊருக்குத் தகுந்தாப்பில உடல்வாகும் அறிவும் இருக்கும். நீங்க அரண்மனையில் இவனுங்களை வளக்குறப்ப அதைப் பாத்து மத்தவங்களும் வாங்குவாங்கம்மா”
பெரிதாகப் புன்னகைத்தார் மங்கை “சரி எங்க வாங்குறதுன்னும் சொல்லிடுங்க”
“மதுரைல வருஷத்துக்கு ஒரு தடவை எக்ஸிபிஷன் நடக்கும்மா எல்லா நாட்டு வகை நாய்களையும் அங்க பாக்கலாம்”
“சரி, ஒன்னு பண்ணுங்க யாரு யாரு இந்த பிசினெஸ்ல இருக்கா, எவ்வளவு விலைன்னு முறைப்படுத்தி நேர்மையான வெப்சைட் ஒன்னை உங்க கூட்டாளிகளை ஆரம்பிக்க சொல்லுங்க. நிறைய பேர் பலனடைவாங்களே”
“சரிம்மா”
தான் சொல்வது லவங்கத்துக்குப் புரிகிறதா என்று தெரியாமல் தடுமாறியவரிடம்
“நான் அவரு தம்பி பய்யன் கிட்ட சொல்லிடுறேன் மேம். அவருக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் க்னோலெட்ஜ் இருக்கு”
இருவரும் கிளம்பினார்கள்.
அவர்களை எதிர்கொண்டு அழைத்தான் அவினாஷ்.
“அம்மா, சாப்பாடு சாப்பிட்டுட்டு வந்துடலாம்” என்றான்.
“பசிக்கலடா… “
“எல்லாம் ஹோட்டலுக்கு போறதுக்குள்ள பசி வந்துடும்”
“எதுக்குடா அங்க போகணும்”
“ஏன், எங்கப்பாவைப் பாக்க வேணாமா? அபியைப் பார்த்ததும் உலகமே மறந்துரும். நாங்கல்லாம் கண்ணுக்குத் தெரிஞ்சாதானே” ஓரக்கண்ணால் செம்பருத்தியைப் பார்த்தபடி சொன்னான்.
“ஐயோ… ஆமாம் கண்ணா. அவரு காத்திருக்காரா?” என்றவாறு விரைந்தார் மங்கை.
செம்பருத்தி என்ன செய்வது என்று புரியாமல் அவர்களை பின்தொடராது அங்கேயே நிற்க, அவள் பின்னால் வராதது கண்டு முறைத்தபடி வந்தான்.
“உனக்கு வேற தனியா சொல்லனுமா? நீதானே எங்கம்மாவுக்குக் கம்பெனி கொடுக்கணும்”
“அபிராம் சார்” மூணு வரிக்கு முன்னாடிதான் டைலாக் சொல்லிருக்கேன். புரிஞ்சுக்குறாளா பாரு என்று ஒரு லுக் விட்டான்
“அந்தக் கண்ணனுக்கு பணிவிடை செய்ய ஒரு கோபிகா, சாரி ராதிகா வான்டெட்டா வந்திருக்காங்க. அவரு அவங்க கூட ஜொள்ளுக் கடலில் மிதந்துகிட்டு இருப்பார். நீ எங்கம்மா கூடக் கிளம்பு”
சரி என்று ஓடப் போனவள் கைகளைப் பற்றி நிறுத்தி “இப்படியே போகாதே. எங்கப்பா வேற அங்க இருப்பாரு. பர்ஸ்ட் இம்ப்ரெஷன் கொஞ்சம் நல்லா தா தாயே!”
வேகமாய் சென்று நன்றாக முகம் கழுவிக் கொண்டு வேறு உடை மாற்றி வந்தாள். நல்ல க்ரே கலர் காட்டன் சுடிதாரில் சில்வர் பார்டர் போட்டிருந்தது. அப்படி கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவளை அந்த தோற்றத்தில் பார்த்ததும் அவினாஷின் கண்களில் ஒரு பளிச் தோன்றி மறைந்தது.
“மேக் அப் எல்லாம் போடத் தெரியாது அவினாஷ்”
“இனிமே ஓவியா கிட்டக் கத்துக்கோ. போன தடவை அவளுக்கு மேக் அப் செட் வாங்கித் தந்திருக்கேன்”
“அதில்தான் தினமும் மூஞ்சிக்கு வெள்ளையடிக்கிறா”
“ஐயோ… ரெண்டு பேரும் ராதிகாகிட்ட கேளுங்க”
“காவ்யாகிட்ட கேட்கட்டுமா? உங்களுக்குப் பிடிச்ச மாதிரி கத்துத் தருவாங்களோ அவி” என்றாள் காவ்யாவின் பாணியில்.
யோசித்தவன் “நல்ல யோசனை. செய்” என்றவனைப் பார்த்து முறைத்தாள்.
“கவனி செம்பருத்தி, நீ மட்டும்தான் அம்மா கூட போற. நான் இங்க இருக்கேன். எங்கம்மா இங்க இருக்குறது எனக்குப் பிடிக்கவே இல்லை. உங்க சார் எப்ப அவங்களை அவமானப் படுத்துவானோன்னு முள் மேல நிக்குற மாதிரி நிக்குறேன். அவங்களை முடிஞ்ச அளவுக்குக் கன்வின்ஸ் பண்ணி ஹோட்டலில் இருக்க வை” என்றான்.
“எனக்கும் அதே மாதிரிதான் உங்களை நினைச்சு எனக்குத் தவிப்பா இருக்கு அவினாஷ். நான் வரும்போது நீங்க சாப்பிட சாப்பாடு எடுத்துட்டு வரேன்”
கலங்கிய அந்தக் கடல் போன்ற கண்களில் அப்படியே தானும் அமிழ்ந்து சந்தோஷமாய் மூழ்கிவிடலாமா என்று யோசித்தான் அவினாஷ்.
தாயை அனுப்பிவிட்டு அதே மகிழ்ச்சியுடன் அபிராமைப் பார்க்க அறைக்கு சென்றவனைக் கண்டு முகம் கொதித்தான் அவன்.
“உன்னை யாருடா இங்க என் வீட்டுக்குள்ள விட்டது? கதவைத் திறந்து போட்டு வச்சிருந்தாங்களா? கெட் அவுட்” என்றான் கடுமையான குரலில்.
அதைக் கேட்டு அருகில் நின்றிருந்த ராதிகா திகைக்க, பக்கத்தில் மறைவாக பேசுவது அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டிருந்த காவ்யாவின் முகத்தில் மலர்ச்சி.
மங்கையை விடுதிக்கு விரட்டியாச்சு. கூடவே பதிலுக்கு பதில் பேசி கடுப்பைக் கிளப்பும் செம்பருத்தியும் சென்றுவிட்டாள். புதிதாக வந்த ராதிகா அபிராமின் படுக்கையை விட்டு இம்மி கூட நகர்வதில்லை. அபியோ அவளது கையைப் பிடித்துக் கொண்டே தூங்குகிறான். இந்தக் கூத்தெல்லாம் எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறது இந்தக் குடும்பம்.
அவளது மனக்கண்ணில் ஸ்விம்மிங் பூலில் நீச்சலடித்துவிட்டு வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அபிராம் தெரிந்தான். அவனது கால் விரல்களை வருடியவாறு சொன்னாள் காவ்யா.
“அபிராம், நான் கூட மார்டர்ன் பொண்ணுதான். ராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை படப் போற பெண்கள் உடை ட்ரடிஷனலா இருக்கணும்னு அப்பா சொன்னதாலதான் இந்த ஸ்டைல். மத்தபடி உன் மனசுப்படி நடந்துப்பேன். இப்ப ஸ்விம் சூட்டில் இல்லையா அது மாதிரி”
கால்களை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்ட அபிராம் சொன்னான் “நோ காவ்யா… சின்ன வயசில் இருந்து கசின்னு சொல்லி சேர்ந்து வளந்தோம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க துளி கூட ஐடியா இல்லை” இலகுவாக அவளை விலகிச் சென்றுவிட்டான்.
‘என்னை உதாசீனப்படுத்தின எல்லாருக்கும் பதில் மரியாதை கண்டிப்பா கிடைக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எட்டி உதைச்ச அபிராம் அந்தக் காலே நடக்க முடியாம கிடக்கான்.
அவினாஷ் என்னை அந்த வேலைக்காரி முன்னாடி எப்படி அவமானப் படுத்தின? உன்னை அபிராம் வீட்டுல எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்துறான். செம்பருத்தி துரோகியே… இருக்குடி உனக்கு உன் முடியைப் பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டுப் போக உன் அத்தைக்காரி வந்துகிட்டே இருக்கா’ வில்லத்தனமான புன்னகை அவளது இதழ்களில்.