செம்பருத்தி 25- 1

அந்த விடுதியே புதிதாகத் தெரிந்தது செம்பருத்திக்கு. ஒரு வேளை புதிய நபர்களுடன் இருப்பதாலோ, இல்லை அவர்களுக்காக புதிய விதமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாலோ என்பது தெரியவில்லை. 

“வாங்கம்மா என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள்” அவர்களைப் பார்த்தால் அங்கு வேலை செய்யும் வழக்கமான ஆட்களைப் போலத் தெரியவில்லை. 

“இவங்கல்லாம் எங்க காலத்து ஆட்கள்மா. எங்க நம்பிக்கைக்குப் பாத்திரமானவங்க. எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி” 

செம்பருத்தி மனதில் நினைத்ததைப் படித்தது போல மங்கை பதில் சொன்னார். 

“நம்ம சேச்சி மாதிரியா?” என்றாள் அவளும். 

“சேச்சி, லவங்கம், பாலன், கோபன், ஓவியாவும் அவ அம்மாவும் இப்படி எங்க குடும்பம் ரொம்பப் பெருசு”

நான் இதில் எங்கே? என்று மனது சற்று சுருங்கியது செம்பருத்திக்கு. கடைசியாக வந்தவள்தானே நான். அதுனாலதான் என்னை மறந்துட்டாங்க என்று சொல்லிக் கொண்டாள். அந்தக் கோட்டிக்காரி. 

 

காபியை எடுத்துக் கொண்டு ஒருவன் வரவும் “அய்யா எந்திருச்சுட்டாரா?” என்றபடி விரைந்தார் மங்கை. 

“குளிர் அதிகமா இருக்குறதால அவினாஷ் அய்யா கொஞ்ச லேட்டா எழுப்பி விட சொன்னாரும்மா. அதனாலதான் மெதுவா காப்பி கொண்டு வந்தோம்”

“சரி, நானே காப்பியைக் கலந்து தந்துக்குறேன். நீங்க எங்க மூணு பேருக்கும் டிபன் எடுத்துட்டு வந்துடுங்க”

“வழக்கம் போல இட்டிலி, இடியாப்பம், பிட்டு இப்படி அவிச்ச பொருட்கள்தானேம்மா”

“செம்பருத்திக்காக ஒரு சுவீட், அப்பறம் பூரி, தோசை, சப்பாத்தி எது பிடிக்கும் சொல்லும்மா”

“இல்லைம்மா எனக்கும் இட்டிலியே போதும். நானும் எண்ணெய் கொஞ்ச நாளா குறைச்சிருக்கேன்”

“லீலாம்மா சொன்னாங்க. காலைல நீர் மோர் தான் குடிப்பியாமே” இதெல்லாம் இவ்வளவு பெரியவங்ககிட்ட இந்த சேச்சி சொல்லணுமா? என்று வெட்கமாக இருந்தது செம்பருத்திக்கு. 

அவர்களது அறை அப்படி ஒரு அற்புதமாக இருந்தது. அவ்வளவு அழகான வரவேற்பறை. இத்தாலியன் சோபாக்கள். வேலைப்பாடுகள். பாகமங்கலம் குடும்பத்தைச் சேர்ந்த ராஜாக்களின் பெரிய பெரிய படங்கள். சிலவற்றில் ராணிகளுடனும் சிலவற்றில் தனியாகவும். 

“வாம்மா… செம்பருத்தி, படிப்பெல்லாம் எப்படி இருக்கு” என்று அழைத்தார்  நாகேந்திரன். குளிருக்கு மங்கி குல்லாய் போட்டிருந்தாலும் ஆஜானுபாகுவான உடல்வாகு. 

“நல்லாருக்கு சார்” 

“குட்… மேல்படிப்பு படிக்கக் கூட வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க. உன் பேப்பர் ப்ரெசென்ட்டேஷன் பார்த்து எதோ ப்ராஜெக்ட் வந்துருக்காமே… வெளிநாட்டில் போயெல்லாம் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பிருக்குன்னு உங்க பிரின்சிபால் சொன்னாரு. அதில் உனக்கு சம்மதம்தானேம்மா”

“வெளிநாட்டு வாய்ப்பா? எனக்குத் தெரியாதே? வேற யாருக்காவது இருக்கும்” என்றாள் அசட்டையாக. 

கணவனைப் பார்த்து முறைத்தார் மங்கை. 

“என்ன முறைக்கிற? ஓ செம்பருத்திக்கு இன்னும் தெரியாதா? நீ நான் சொன்னதை மறந்துடும்மா… உங்க பிரின்சிபால் சொல்லுறப்ப புதுசா கேக்குற மாதிரி கேட்டுக்கோ” என்றார். 

 “அவருக்கு எங்க என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும்னு சுத்தமா தெரியாதும்மா”

சந்தோஷத்தில் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் செம்பருத்தி. இது நிஜமா? வாழ்க்கையில் ஒரு சந்தோசம், வெற்றி கூட கிட்டியதில்லை. இந்த செய்தி எவ்வளவு பெரிய அங்கீகாரம்… 

“நிஜம்மாவா சொல்றிங்க சார். ஒரு வேளை உண்மையா இருந்தால் அதெல்லாம்  எல்லாம் எங்க அபிராம் சாருக்குத்தான் சேரும். அவர்தான் என்னை கைட் பண்ணார்”

இருவரும் வாயடைத்து போய் அவளைப் பார்த்தார்கள். எதிர்பக்கம் ஒரு பதிலும் வராததைக் கண்டு 

“ஏதாவது தப்பா சொல்லிட்டேனா சார்” என்றாள் தணிந்த குரலில். 

“இல்லம்மா… அபிராம் பத்தி நீ சொன்ன விஷயத்தைக் கேட்டே எங்க மனசும் வயிறும் நிறைச்சிருச்சு. நீ சொன்னது உண்மைதான் மங்கை. அபிராமுக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு கிடைச்சுருச்சு” என்றார் உணர்ச்சி பொங்க. 

அதற்குள் சாப்பாடு வந்துவிட, “எனக்கு முதலில் காப்பி வேணும்” என்றார் சிறு பிள்ளையைப் போல 

“அதை, காலை பலகாரம் முடிஞ்சதும் குடிக்கக் கூடாதா?”

“காலைல முதல் வாய் காப்பிதான். அதுக்கப்பறம் சாப்பிடுறேன்” என்று அடம்பிடித்து காப்பியை வாங்கிக் கொண்டார். 

அப்படியே அந்த வாசத்தைப் பிடித்தவர் “இந்த வாசத்துக்கு நான் அடிமை. செம்பருத்தி இந்தக் காப்பிக்கு இன்னொரு பேரு காலை சாராயம்னு மங்கை வச்சிருக்காம்மா… “ என்றார் சிரிப்புடன். 

“உண்மைதான் சார். காப்பி குடிச்சு பழகினவங்களுக்கு அப்படித்தான். அபி சார் கூட உங்களை மாதிரிதான் சார். காலைல எந்திரிச்சதும் காப்பி வேணும்னு கேட்பார். இப்ப அவரைப் பார்த்தாலே பாவமா இருக்கு சார்”

அந்த இடமே அமைதியாக, மங்கை அமைதியைக் கலைத்தார். 

“சுகுமாரன் சொன்னது படி பார்த்தால் காவ்யா மேல அபிக்கு ஒரு அட்டாச்மெண்ட் இருந்திருக்கணுமே. எனக்கு அப்படித் தோணலை.காவ்யா அபியை கவனிச்சுக்கிட்ட மாதிரி தெரியல. அவனோட அறை இருக்குற திசைக்குக் கூட வரல. அவனும் அவ கூட ஒரு வார்த்தை கூட பேசின மாதிரி தெரியல ” 

error: Alert: Content selection is disabled!!