Skip to content
அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது
“நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை.
“உங்க பொண்ணா யாரது?”
“கட்டிக்கரும்பா ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து, கண்ணுல தூசி படாம பொத்திப் பொத்தி வளர்த்த எங்க வீட்டுப் பொண்ணு செம்பருத்தி”
“ஓ செம்பருத்தியோட ரிலேட்டிவா நீங்க. பொத்தி பொத்தி வளர்த்திங்களா? அப்பறம் ஏன் இங்க வந்து வேலை பார்க்குறாங்க? உறவு யாரும் இல்லைன்னு சொன்னதா நினைவு” அவினாஷும் விடவில்லை.
“வேலை கேக்குறப்ப இரக்கம் வரணும்னு ஏதாவது சொல்றது தான். ஆனா அதெல்லாம் நம்பிட்டு அவளை அனாதைன்னு சொல்லுவிங்களா?
இதா இங்க பாருங்க…” ரமேஷை இழுத்து முன்னால் நிறுத்தினாள்.
“இவன்தான் என் மகன். இவனுக்குத்தான் செம்பருத்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என் தம்பி சாவுறதுக்கு முன்னாடி சத்தியம் வாங்கிருக்கான். அதை நிறைவேத்துறதுக்காகத்தான் நான் உயிரைக் கையில் பிடிச்சுட்டு இருக்கேன்”
“அப்படியா” என்று கிண்டலாக அவினாஷ் கேட்க, அவன் அருகில் இருந்த அந்த திராவிட அழகிக்கு முகத்தில் திகைப்பை மறைக்கவே முடியவில்லை.
“ஆமா எனக்காக அவ அவளுக்காக நான். என்னைப் பாத்தா அத்தான்னு ஓடி வந்து கட்டிப் பிடுச்சுச்சுக்குவா. எங்களோட மாசிலா அன்பை அப்ப பாப்ப”
அந்தப் பெண் தலையில் கை வைத்துக் கொண்டது. கேட்டுக் கொண்டிருந்த அந்த அவிநாஷோ மேஜையின் உள்ளிருந்த அமிர்தாஞ்சன் பாட்டிலை அந்தப் பெண்ணின் முன்பு வைத்தான்.
“அடேங்கப்பா அவ்வளவு லவ்வா? தீவிரமான காதல்தான் போல… இத்தனை அன்பை அப்படியே தேக்கி வச்சு காத்திருக்கிங்க.. இன்னைக்கு உங்க முறைப்பொண்ணை பாத்ததும் அப்படியே சுனாமியா பொங்கப் போறிங்க.
டூயட் எதுவும் பாட பிளான் இருந்தா, பாலத்துக்கு பக்கத்தில் ஒரு பார்க் கட்டி வச்சிருக்கோம், அங்க ஓடிப் போயிரணும். கார்டன்தான் பெருசா இருக்கேன்னு இங்க பாட்டு பாடி எங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது” முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு சொன்னவனை பக்கத்தில் அமர்ந்திருந்த செம்பருத்தி முறைத்தாள்.
“என்ன கிண்டலா? எங்க, எங்க என் தங்கம்… என் தங்கத்தை எங்க வச்சிருக்கிங்க” பாய்ந்தான் ரமேஷ்.
அவினாஷ் பக்கத்தில் அமர்ந்திருப்பது செம்பருத்தி தான் என்பதை அந்தக் குடும்பம் இன்னமும் உணரவில்லை.
“தங்கமா? அது யாரு செம்பருத்தின்னு தானே சொன்னிங்க”
“செம்பருத்தி தான் எங்க சொக்கத் தங்கம். டேய் பாவி, கேக்குறதுக்கு யாருமில்லைன்னு வித்துட்டிங்களா?” என்றாள் அத்தை
“ஏம்மா எங்களுக்கு வேற வேலை இல்ல” கடுப்பானான் அவினாஷ்.
“எனக்குத் தெரியும் நான் செய்தித் தாளில் படிச்சிருக்கேன். எங்க பொண்ணு பாக்க வேணும்னா அப்படி இப்படின்னு இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமா ரெண்டு கிட்னி இருக்கு, இதயம், கல்லீரல், நுரையீரல், கொஞ்சம் மூளை கூட இருக்கு. அதுக்கெல்லாம் தனித்தனி ரேட்டு போட்டு வித்தா ரெண்டு கோடி போகும்”
“சாரி, நான் வித்ததில்லை. வாங்குனதும் இல்லை. அதனால விலை தெரியாது. அப்ப செம்பருத்தியோட விலை ரெண்டு கோடியா… “
டேபிளில் மேனேஜர் என்ற பெயர் பலகை இருந்ததை பார்த்தான் ரமேஷ். இவன் மேனேஜரா? எப்படி திமிரும் தெனாவெட்டுமாய் பேசுகிறான். கூட இருக்கும் பெண் வேறு முட்டைக் கண்ணை வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து முறைக்கிறாள். கொஞ்சம் மூக்கும் முழியுமாக பக்கத்தில் பெண் இருந்தால் போதுமே இவனுங்களுக்கு தைரியம் தாண்டவமாடுமே!
“பல கோடியா… அவளுக்கு இருக்குற சொத்தை விட்டுட்டேயே… அதெல்லாம் தெரிஞ்சு மேனேஜர் நீ மடக்கலாம்னு பாக்குறியா? எங்க காதல் முன்னாடி தோத்துத்தான் ஓடப் போற”
“நான் எதுக்குப் பா ஓடுறேன். இந்தா, உங்க செம்பருத்தி இங்கதான் பக்கத்தில் உக்காந்திருக்கா. உன் அத்தான் கூட வேணும்னா டூயட் பாடிட்டு வா. நான் வெய்ட் பண்ணுறேன்”
“என்னது, என்னது….” திகைத்தான்.
இந்த அழகி செம்பருத்தியா? அவன் எதிர்பார்த்து வந்தது ஒரு நல்ல பருமனான, வெகு சுமாரான, தாழ்வு மனப்பான்மையால் பயந்து ஒதுங்கி தான் இட்ட வேலையை தலையில் தாங்கி செய்யும் ஒரு பெண்ணை. ஆனால் இங்கு இருப்பதோ நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், பதவிக்குத் தகுந்த பொருத்தமான தோற்றம், இவை அனைத்தும் தந்த கம்பீரமும் சேர்ந்த ஒரு பெண்.
அவளது உடல் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதால் அகல்விளக்காக அழகில் சுடர்விட்டாள். மூவரும் பேச வார்த்தை வராமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
“என்ன முடிவு சொல்ற செம்பருத்தி?” என்றான் அவினாஷ்.
“என் அத்தை குடும்பம்தான் அவினாஷ் என்னோட சொந்தம். எங்க அத்தான் இருக்காரே வீரன் தீரன். என் கண்ணில் தூசி பட்டா கூடத் துடிச்சுடுவாரு. என்னைப் பாக்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்காங்க. சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்பறம் பேசலாம்” என்றாள்.
ஏதோ ஒரு பிளான் அவள் மனதில் ஓடுகிறது என்பதை அவினாஷ் கண்டு கொண்டான்.
அவர்களுக்கு இளைப்பாற அறை ஒன்று ஏற்பாடு செய்யச் சொன்னான்.
அப்படி குதித்தவர்கள் வாயைத் திறந்து கூட ஒரு வார்த்தை பேச முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே சென்றனர்.
புட்டை கடலைக்கறியோடு சேர்த்து குழப்பியடித்து ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்த தாயிடம் “என்னம்மா இது, காக்கா குயிலானா கூட நம்பலாம். இதென்னம்மா மயிலா மாறி நிக்குது”
error: Alert: Content selection is disabled!!