செம்பருத்தி 3-1

“இடியட் அறிவில்லை? கண்ணு என்ன பொடனிலையா இருக்கு?” என்ற கிரீச்சிட்ட குரலைக் கேட்டதும்தான் செம்பருத்திக்கு தான் இருந்த சூழ்நிலையே நினைவுக்கு வந்தது. ஏதோ தேவையற்ற வெட்டி யோசனையில் யார் மேலோ இடித்து, நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் அப்படியே பப்பரப்பா என விழுந்து கிடந்தததை எண்ணி அவளுக்கு அவமானமாக இருந்தது. 

தன்னிடம் கத்திய குரல் வந்த திசையை பார்த்தாள். ஆலிவ் பச்சையில் சிகப்பு பூவேலை செய்யப்பட்டு கண்ணைப் பறிக்கும் சேலையை உடுத்தி இருந்த மிக அழகிய பெண் அவள். பளிங்கு மேனி, புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள், தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள். அந்த அழகியின் அழகைக் கெடுத்துக் கொண்டு கொடூரமாய் வளைந்த உதடுகள் சுருங்கிய புருவங்கள் 

‘ஏன்  இப்படிக்  காட்டுக் கூச்சல் போடுகிறாள்?’

ஓ அவளது கைகளில் என்ன? 

அவள் கையில் பிடித்திருந்த காப்பி கப் சற்றே நசுங்கி காப்பி அவளது கைகளில் சிதறி அப்படியே புள்ளிகள் ஏற்பட்டிருக்க, அருவருத்தபடி கையில் இருக்கும் பேப்பர் டிஸு வால்  துடைத்துக் கொண்டு அவ்வப்போது உடையில் கரை பட்டிருக்கிறதா என்று சோதித்துக் கொண்டிருந்தாள். 

செம்பருத்தி முயன்று எழுந்தாள் இல்லை இல்லை எழ முயற்சி செய்தாள். ஒரு புறமாகக் கைகளை ஊன்றி மடங்கி இருந்த வலது காலை நகர்த்தி, எழ முயன்றாலும் பிடிமானத்திற்கு பக்கத்தில் ஏதாவது இருந்தால் பிடித்துக் கொண்டு எழுந்திருக்கலாம் என்று கண்கள் தேடின. இந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு எழலாமா?

 இவளே சாப்பாட்டைக் கண்ணில் மட்டும்தான் பார்ப்பாள் போல, கொடி இடையாளாக இருக்கிறாள். இவளை பிடித்தால் பாரம் தாங்காமல் என் மேலேயே  விழுந்து விடுவாள். இப்போது எப்படி எந்திரிப்பது?

செம்பருத்தி யோசித்துக் கொண்டிருந்தபோதே அவளது கண்முன் ஒரு வலிமையான உறுதியான கரம் ஒன்று நீண்டது. 

“என் கையை பிடிச்சுக்கோம்மா. இப்ப எந்திரி” என்று சொன்ன அந்தக் குரல்தான் எவ்வளவு கணீரென்று இருக்கிறது.

அவளது கைகளை பற்றிய அந்தக் கரம் ஒன்றுதான் இப்போது பற்றுதல் என்று எண்ணி அந்தக் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள். ஒரு பக்கமாக சாய்ந்து மறுகையை ஊன்றி தம் கட்டி எழுந்து நின்றாள். சில வினாடிகளில் நடந்ததை அந்த அழகி ஒரு அருவருப்புடன் பார்த்தாள். 

“அய்யே! உங்க டிரஸ் எல்லாம் காஃபி கரை அவினாஷ்”

என்றதும்தான்  தனது கைகளைப் பிடித்துத் தூக்கி விட்ட இளைஞனை பார்த்தாள். முதலில் பார்த்தது அவனது கண்களைத்தான் சற்றே சிறிய கண்கள்தான் ஆனால் அதில் தான்  எத்தனை கூர்மை? 

அவனது குரலிலும், பார்வையிலும் வசீகரம் மட்டுமின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு கம்பீரம் தெரிந்தது. 

 

“ஆர் யூ  ஒகே?” என்று அவன் கேட்டதும்தான் அவனும் தனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

“அவளுக்கென்ன அவினாஷ்? நல்லா திம்முன்னு நிக்கிறா…  அவ கையைப் பிடிச்சு எந்திரிச்சதில் உங்களுக்கு பிராக்ச்சர் எதுவும் ஆகலையான்னு பாருங்க” என்று அவள் சொன்னது கேலிப்பேச்சுக்களை புறந்தள்ளிவிட்டு செல்லும் செம்பருத்திக்கு  இந்த முறை விலக்க முடியாது முள் போல நெஞ்சைத் தைத்தது. 

“ஷூ… காவ்யா… இதென்ன பேச்சு? நீ காருக்குப் போ… நான் வரேன்” தூரத்தில் தெரிந்த அந்த பென்ஸ் காரை சுட்டிக் காட்டினான். காரைக் கண்டதும் செம்பருத்திக்கு பயம் கொஞ்சம் வந்தது. ஐயோ பெரிய இடத்தில் மோதிட்டியேடி.. ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்களோ? காப்பி டம்பளரைத் தட்டி விட்டதுக்கெல்லாம் ஜெயிலுக்கு அனுப்பினா இந்தியாவை சுத்திலும் பார்டர் மாதிரி ஜெயில் கம்பி கட்டிற வேண்டியதுதான். 

“நான் ஏன் போகணும்? உங்க ஷர்ட் கூட கொஞ்சம் கரையாயிடுச்சு. ஏம்மா கண்ணு என்ன பொடனிலையா இருக்கு” என்று மறுபடி ஆரம்பித்தாள். 

தான் செய்தது தப்புத்தான். எந்த அவசரத்தில் இருவரும் இருந்தார்களோ… காப்பியைக் கொட்டிவிட்டு உடையினைப் பாழாக்கிவிட்டேன். இந்த உடையுடன் அலுவலகத்திற்கு செல்ல முடியுமா? எதையோ நினைத்துக் கொண்டு நடந்தது எனது தப்புத்தான். அவளது முட்டாள்தனம் உரைக்க கண்களில் நீர் கரை கட்டியது செம்பருத்திக்கு. 

“சாரிக்கா, வேணும்னே செய்யல… ஏதோ நினைவில் கவனிக்காம வந்துட்டேன்”

“அப்படி என்ன காலங்காத்தால நினைவு? இல்ல பகல் கனவு? இந்த கனவுக் கண்ணனை தேடுற வேண்டிய வேலை எல்லாம் சாய்ந்தர நேரத்தில் வச்சுக்க வேண்டியதுதானே.உன்னை மாதிரி பெண்கள் எல்லாம் அப்போதானே இந்த வேலையை ஆரம்பிப்பிங்க” அவளது குரலில் இருந்த மறைமுகக் குத்தல் செம்பருத்திக்குத் தெரியவில்லை. 

கூடஇருந்த இளைஞனின் முகத்தில் ஒரு இறுக்கம், கண்களில் சிவப்பு தோன்றி நொடியில் மறைந்தது.  கைகளை காவ்யாவை  நோக்கி நீட்டி நிறுத்தும்படி சொன்னான். 

“இல்லக்கா நிஜமாலேயே வேலைக்கு நேரமாச்சுன்னு நினைச்சுட்டே வந்தேன். பஸ் வேற தூரத்தில் வந்துச்சா, அதைப் பிடிக்கணும்னு முட்டாள்தனமா இந்தப் பக்கம் கவனிக்காம வந்துட்டேன்” என்றாள் அப்பாவியாக. 

“பரவால்லமா… “ என்று அவினாஷ் எதோ சொல்வதற்குள் இடையிட்ட அந்தக் காவ்யா 

“முட்டாள்தனமா? எல்லா பக்கமும் கவனிச்சுட்டுத்தான் க்ராஸ் பண்ணனும் இந்த பேசிக் அறிவில்லாம உன்னையெல்லாம் பெத்துவிட்டிருக்காங்களே அவங்களைச் சொல்லணும். அவங்கதான் அடி முட்டாள்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு காவ்யா பேசியபொழுது அவளது அழகெல்லாம் அடியோடு மறைந்து போனது போலத் தோன்றியது செம்பருத்திக்கு. 

error: Alert: Content selection is disabled!!