Skip to content
“ தப்பு செஞ்சது நான், என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசுங்க. ஆனால் என் பெத்தவங்களைப் பத்தி பேசாதீங்க.”
“அட தப்பு செஞ்சதையும் செஞ்சுட்டுப் பேசுறதை பாரு. இப்படி ஒரு உதவாக்கரையை பெத்தவங்களைப் பத்தி அப்படித்தான் பேசுவேன்”
கோபத்தில் கண்கள் விடுங்க அவளை நோக்கிய செம்பருத்தி “நீங்க ரொம்ப தப்பா பேசுறிங்க… என்னைப் பார்த்தே ஒரு சில நிமிடங்கள்தான் ஆயிருக்கும் அதுக்குள்ள எங்கம்மா அப்பாவை எல்லாம் முட்டாள்னு சொல்ற தகுதி எப்படி உங்களுக்கு வந்தது?
தப்பு செஞ்சதை உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டு நீங்க பேசுற மரியாதை குறைவான வார்த்தையைப் பொறுத்துகிட்டு, உங்ககிட்ட மரியாதையோடு பதில் சொல்ற பண்பான பெண்ணை பெத்து வளத்திருக்காங்க. அவங்களைக் குறை சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது.
பதிலுக்கு ஒரு சின்ன விஷயத்துக்காக ஊரையே கூட்டி, கடுமையான வார்த்தைகளை பேசுற ஒரு பெண்ணைப் பெத்து வச்சிருக்கிற உங்க அம்மா அப்பாவை திருப்பித் திட்டமாட்டேன். ஏன்னா கனி இருக்க காய் கவர்ந்தற்றுன்னு எங்க அப்பா சொல்லித் தந்திருக்கார்.”
வாயடைத்து போய் பேச வாய் எழும்பாமல் நின்றுக் கொண்டிருந்த காவ்யாவை மேலும் விட மனமே இல்லை செம்பருத்திக்கு. காலையில் இருந்து அடுக்கடுக்காய் வந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் வடிகாலாய் அவளுக்கு இந்த சம்பவம் மாறிப் போனது.
“நான் உங்களை மாதிரி சொகுசு காரில் பவனி வர முடியாதவளா இருக்கலாம். ஆனால் என்னோட பதினேழாம் வயதிலிருந்து இந்த நாலு வருஷமா நேர்மையான உழைப்பில் வாழ்ந்துகிட்டு இருக்குறவ.
சரி நான்தான் பஸ்ஸைப் பாத்துகிட்டே ஏதோ நினைவில் வந்தேன். நீங்க ரெண்டு பேரும் எதிரில் வேகமா ஓடி வர்ற இவ்வளவு பெரிய மனுஷியைக் கூட கவனிக்காம எங்க பாத்துட்டு வந்திங்க? என் மேல பாதி தப்புன்னா உங்க மேல மீதி தப்பு இருக்குல்ல. அதுக்காக உங்க வீட்டில் இருக்கவங்களை நான் திட்டட்டுமா” என்று சீறிய அந்த சிறு பெண்ணை வியப்போடு பார்த்தான் அவினாஷ்.
“முதலில் ரெஸ்ட் ரூம்ல போயி இந்த காப்பி கரை எல்லாம் க்ளீன் பண்ணிட்டு வரேன்”
என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிய காவ்யாவை கண்ணில் சிரிப்புடன் பார்த்த அவினாஷ் செம்பருத்தியிடம்
“சரி, நீங்க ஓகேயா? ஒரு காப்பி குடிச்சுட்டு போலாமா? நானும் காலைலேருந்து சாப்பிடல. அதனால கண்ணு கூட சரியா தெரிய மாட்டிங்குது” என்றான்.
“சாரி சார், வாங்க நான்தானே உங்க காப்பியைத் தட்டி விட்டேன். அதனால நானே வாங்கித் தரேன்” என்று சொல்லி அழைத்தாள்.
அவள் பக்கத்தில் இருந்த சிறிய டீ கடையை நோக்கி நடக்க, அவனோ “இங்க இல்லை. அதோ அந்த ஷாப்பில்” என்று நவீன கபே ஒன்றை சுட்டிக் காட்டினான்.
“அங்கேயா… “ இழுத்தாள் செம்பருத்தி.
“ஆமா, அங்க வாங்கின காப்பியைத்தானே நீ தட்டிவிட்டா.”
“ஹ்ம்ம்… சரி வாங்க” என்று முகத்தை சுளித்துக் கொண்டே நடந்தவளை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தவண்ணம் பின் தொடர்ந்தான்.
“தப்பா நினைச்சுக்காதிங்க. அங்க காப்பி எவ்வளவு இருக்கும்?”
“எவ்வளவா இருந்தாலும் அங்கதான் வாங்குறோம்” என்று அழுத்தமாகச் சொல்ல, வேறு வழியின்றி உள்ளே சென்றார்கள்.
ஓரத்தில் ஒரு டேபிளில் அவளை அமர வைத்தான்.
“பக்கத்தில் பெண்கள் உபயோகிக்கிற மாதிரி ரெஸ்ட்ரூம் எதுவும் இல்லை. வேலை பாக்குறேன்னு சொன்னேல்ல. இப்படி காப்பி அபிஷேகத்தோடவா போவ? இங்க காபி வாங்கினால் பாத்ரூமை உபயோகக்கலாம். நான் ஆர்டர் பண்ணுறதுக்குள்ள நீ ரிஃப்ரெஷ் ஆயிட்டு வா” என்று அனுப்பினான்.
அப்பாவையும், ஒரு சில நலம் விரும்பிகளையும் தவிர வெளி மனிதர்களிடமிருந்து இதைப் போல கரிசனை மிகுந்த வார்த்தைகளை சமீபத்திய சில வருடங்களாகக் கேட்டதே இல்லை எனலாம். இவனது வார்த்தைகளுக்குள் என்னவோ மந்திரம் இருக்கிறது. அவன் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டிவிட்டு மேலே பட்ட கறைகளைத் தண்ணீர் கொண்டு துடைத்துக் கொண்டிருக்கிறாளே இதுவே சாட்சி இல்லையா?
வாஷ்பேசினில் துடைத்துக் கொண்டிருந்தபொழுதே அருகில் இருந்த கழிவறைக் கதவு திறக்க, காவ்யாதான் வெளியே வந்தாள்.
“கடவுளே இன்னைக்கு காலைல யாரு மூஞ்சில முழிச்சேனோ தெரியலையே? எங்க பார்த்தாலும் ஏழரையா இருக்கே!” என்று சலித்துக் கொண்டாள்.
“இதுங்கெல்லாம் இங்க வந்து காப்பி குடிக்குற அளவுக்கு வளந்துடுச்சுங்க” என்று முணுமுணுத்ததும் அவமானத்தால் முகமே சிவந்துவிட்டது செம்பருத்திக்கு.
“என்ன சொன்னிங்க? ஏன் நாங்கல்லாம் இங்க வரக்கூடாதோ? இந்தக் கடையை உங்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்திருக்கங்களோ?”
“பட்டா எல்லாம் போடல, இங்க ஒரு காப்பி விலை முன்னூறு ரூபா? காசில்லைன்னா மாவாட்ட எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஆனால் தரையை குனிஞ்சு நிமிந்து பெருக்கித் துடைக்கணும். அதெல்லாம் உன்னால முடியுமா?” இளக்காரமாகக் கேட்டபடியே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.
ஒரு காப்பி முன்னூறு ரூபாயா? இவன் மூன்று காப்பிகள் வாங்கி இருந்தால் டிப்ஸ் கூட சேர்ந்து அதுவே ஆயிரம் ரூபாயாகி விடுமே. பஸ்ஸை பிடிக்கும் அவசரத்தில் கவனக்குறைவாக எதிரில் வந்தவரை இடித்ததற்கு ஆயிரம் ரூபாய் அபராதமா? முருகா இது உனக்கே நியாயமா இருக்கா?
இந்த ரமேஷ் தடிமாட்டோட பேரை நினைச்சு திட்டினா கூட எப்படியாவது பணம் தண்டம் கட்ட வேண்டி வந்துடுதுப்பா…’ மனதுக்குள் நான் ஸ்டாப்பாய் திட்டத் தொடங்கினாள்.
error: Alert: Content selection is disabled!!