Skip to content
இன்று, லங்கையில் சேச்சியின் கதையை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். இருட்ட ஆரம்பித்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க கூட முடியாத அளவிற்கு இருள் கனமான திரையை எழுப்பியிருந்தது. வெளியில் இருந்த மின்விளக்குகளை காளியம்மாள் ஓவியா மற்றும் வீட்டினர் அனைவரும் ஏற்றியிருந்தனர்.
செம்பருத்தி எழுந்து மின்விளக்குகளைப் போட்டாள். அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த அனைவரின் முக பாவனைகளும் அவர்களது மனதில் இருந்த உணர்ச்சியைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.
கதையினை உள்ளது உள்ளபடி எடுத்து கூறும் தீர்க்கம் சேச்சியின் முகத்தில். முன்பே தெரிந்திருந்த செய்தி ஆதலால் அமைதியான நதியினை போன்ற ஒரு தெளிவு அவினாஷின் முகத்தில். ஆச்சரியமான விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆவல் ராதிகாவின் முகத்தில். அவளது கைகளைப் பற்றி இருந்த அபிராமின் முகத்திலோ உண்மையான வாரிசு மங்கைதான் என்று தெரிந்த பேரதிர்ச்சி. காவியாவின் முகத்திலோ உண்மைகள் வெளி வருகிறது நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ என்ற கலக்கம்.
“சொல்லுங்க லீலாம்மா, அப்புறம் என்ன ஆச்சு? அப்பா உங்க மங்கைய கல்யாணம் பண்ணிக்கல இல்லையா? எங்க அம்மாவ தான கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? எங்க அம்மாவும் அப்பாவும் தானே உண்மையா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இவனோட அம்மா கூட நடந்தது கட்டாயத் திருமணம் தானே? ” அவினாஷைச் சுட்டிக்காட்டி அபிராம் கேட்டான்.
°இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னா முதல்ல என் உடம்பில் தெம்பு வேணும். காலையில இருந்து பட்டினியா இருக்கறதுனால எனக்கு இப்ப தெம்பு இல்ல” என்றார் சேச்சி.
°காலைல இருந்து பட்டினியாக சாப்பிடாமல் இருக்கீங்க உங்க உடம்புக்கு என்னாகும்?”
” நீங்க மாத்திரை எல்லாம் சாப்பிடணும் இல்ல ” என்று அவினாஷ் ஒரு புறமும், அபிராம் ஒருபுறமும் மாற்றி மாற்றி அவரைக் கடிந்துக் கொண்டனர்.
“இதெல்லாம் நல்லா பேசுங்க. நீங்க சாப்பிடாம எப்படி சேச்சி மட்டும் சாப்பிடுவாங்க?” என்று செம்பருத்தி அவர்கள் இருவரையும் கடிந்து கொண்டாள்.
“இன்னொரு திருத்தம் அபி சார். உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறதுல இருந்து சேச்சி மேரி மாதாவுக்காக ஃபாஸ்டிங் இருக்காங்க. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும்தான் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்று சொன்னாள்.
இதனை கேட்டதும் அபிராம் மனது கலங்கிவிட்டது.
காலை அவன் எழுந்ததும் செம்பருத்தி மங்கையுடன் காலை உணவு அருந்த சென்றிருக்கிறாள் என்ற விஷயத்தை காவியாவின் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் கொதிப்புடன் இருந்தான்.
செம்பருத்தி திரும்பி வந்த நிமிடம் வார்த்தைகள் தடித்து அவினாஷுடன் சண்டையாக வெடித்தது. மதியத்திற்கு மேல் தான் சேச்சி கதை சொல்ல ஆரம்பித்தது. இப்பொழுது இருட்டும் வேளையாகி விட்டது. ஆக வீட்டில் யாரும் காலையிலிருந்து உணவு உண்டிருக்கவில்லை என்பது அபிராமுக்குப் புலனாகியது.
அவனது வீட்டில் இருப்பவர்கள் பட்டினியாக கிடக்கலாமா? அது அவனுக்கு அவமானம் இல்லையா? என்ற விருந்தோம்பல் பண்பு உடனடியாக அபிராமின் மனதில் தோன்றியது.
“யாரும் பட்டினி கிடக்க வேண்டாம் வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றான் அபிராம் தன் மனதைத் தேற்றிக்கொண்டு.
“ஹோட்டல்ல இருந்து சாப்பாட்ட எல்லாருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்” என்றாள் செம்பருத்தி.
“எல்லாரும் யாருக்காக வெயிட் பண்றீங்க. வாங்க சாப்பிடலாம். எனக்கு ரொம்ப பசிக்குது” என்று கிளம்ப, ஒரு இன்ச் கூட நகராமல், ஜன்னலின் வழியே இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவினாஷை கண்களால் சுட்டிக் காட்டினாள் ராதிகா.
அபிராமுக்கு மனது சுருக்கென்று தைத்தது.
“உன் பிரண்டையும் சாப்பிட கூட்டிட்டு வா செம்பருத்தி”
என்ற அவனின் வார்த்தைகள் அவினாஷின் மனக்காயத்தை ஆற்றவில்லை.
பொறுத்துப் பார்த்த அபிராம் அவனிடம் “ஏன் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா? இதுவும் உன் வீடுதானே? சாப்பிட வர மாட்டியா?” என்றான்.
அதில் தொணித்த உரிமை அவிநாஷின் மனதை அசைத்தாலும், அதைவிட பலமாக அவனது வார்த்தைகள் தாக்கியிருந்தது. கத்தியால் ஆழமாக குத்தி விட்டு ஆயின்மென்ட் போட்டால் புண் சரியாகிவிடுமா என்ன? அவனுக்கு வலியும் குறையவில்லை, காயமும் ஆழமாகவே இருந்தது.
அவனை சில வினாடிகள் ஆழ்ந்து பார்த்த அபிராம் “சாப்பாட்டை எல்லாம் இங்கே எடுத்துட்டு வந்துருங்க. நம்ம எல்லாரும் இங்கே உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றான்.
“போலீஸ்காரங்க?” என்று செம்பருத்தியிடம் மெதுவாகக் கேட்டான் அவினாஷ்.
“அவங்க எங்க அத்தை குடும்பத்தை விசாரிச்சுட்டு இருக்காங்க. வீட்ல இருக்குற மத்தவங்களுக்கு காளியம்மா சாப்பாடு போட்டுருவாங்க”
அடுத்த பத்து நிமிடங்களில் உணவு ட்ரேயை தள்ளிக் கொண்டு பணியாட்கள் பரிமாற வந்துவிட்டனர். தனது இருக்கையில் இருந்து எழுந்த அபிராம், உதவி செய்த செய்ய வந்த வேலையாட்களைத் தடுத்துவிட்டு,தானே தனது கையினால் ஒரு தட்டில் உணவினைப் பரிமாறி, பழ ரசத்தையும் ஒரு டம்ளரில் நிரப்பினான். பின்னர்,சற்று தடுமாறியபடியே நடந்து சென்று, தனது கையில் இருந்த உணவு தட்டினையும் பழ ரசத்தையும் அவினாஷிடம் நீட்டினான்.
“நான் பேசின வார்த்தை ரொம்ப தப்புதான். என்னை மாதிரியே தானே நீயும் உங்க அம்மா மேல பிரியம் வச்சிருப்ப. ஒரு அம்மாவை நான் அப்படி பேசி இருக்க கூடாது மன்னிச்சுக்கோ” என்றவனை அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள்.
அபிராமுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என்று வியந்து போய் பார்த்துக்கொண்டே நிற்க, அவினாஷின் கைகளைப் பற்றி, அபிராமிடமிருந்து தட்டினை வாங்கச் செய்தாள் செம்பருத்தி.
கதையின் ஆரம்பத்திலேயே அபிராமின் மனதில் இத்தனை மாற்றம் என்றால், கதை முடியும் போது என்ன ஆகும் என்று எண்ணியபடியே செம்பருத்தி பார்த்தாள். ஏனென்றால், அவளுக்கு தரப்பட்ட டாக்குமெண்ட்ஸ் மூலமும் கடிதங்கள் மூலமும் அந்தக் கதையின் போக்கினை ஓரளவு யூகித்தே வைத்திருந்தாள்.
இதுவரை கஞ்சி போட்ட போலீஸ் யூனிஃபார்ம் போல் மிடுக்காக இருந்த அபிராம், தனது நிலையில் இருந்து இறங்கி வரவும், அவினாஷும் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டான்.
error: Alert: Content selection is disabled!!