Skip to content
அனைவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். இல்லை இல்லை… உணவைக் கொறித்தார்கள். அதுவும் லீலாம்மா சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினாலே அண்ணன் தம்பிகள் இருவரும் உண்டதாகப் பேர் பண்ணினார்கள். அவர்களின் வழியைப் பின்பற்றி, செம்பருத்தியும் ராதிகாவும் நடந்தார்கள்.
சேச்சி எப்பொழுதுமே அளவுச் சாப்பாடு தான். அதனால் பெரிதாக ஒன்றும் சாப்பிடவில்லை. அதிசயத்திலும் அதிசயமாக காவியாவும் உணவை மிக மிகக் குறைவாக எடுத்துக் கொண்டாள். அவள் வயிற்றில் சுரந்த பய அமிலம் காரணமாக இருக்குமோ?
உண்டு முடித்ததும், லீலாம்மா தனது கதையைத் தொடர்ந்தார். அவர் நாற்காலியில் சாய்ந்து கொள்ள, பாட்டியிடம் கதை கேட்கும் பேரப் பிள்ளைகளைப் போல, அவரைச் சுற்றிலும் வளர்ந்த குழந்தைகள். இந்த முறை, கதை சென்னையில் ஆரம்பித்தது. அதுவும் எண்பதுகளில், நாகேந்திரனின் கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்தது.
ஒரு ஆணை நேருக்கு நேர் நிமிர்த்து பார்த்து விட்டாலே காதல். சக மாணவனிடம் ஹோம் ஒர்க் நோட் தா என்று கேட்டால் அதுதான் உரிமை. பெண்கள் தந்தை, உடன்பிறந்தவர்களைத் தவிர கணவனிடம் மட்டும்தான் அப்படி உரிமையாகக் கேட்க முடியும். அதனால அது கண்டிப்பாகக் காதல் தான். இப்படி 80களில் common பார்வையை எல்லாம் காமன் பார்வையாக்கிக் கொண்டாடியது தமிழ் கூறும் நல்லுலகம்.
எல்லா காலகட்டத்திலும் புத்திசாலிகள் மற்றும் சுயநலக்காரர்கள் இந்த சமுதாயத்தின் கோட்பாடுகளைத் தங்கள் நலத்திற்காக வளைத்துக் கொள்ளவே செய்தார்கள்.
சென்னையின் ஜன சந்தடி நிறைந்த திருவல்லிகேணியின் தெருவில் நுழைந்தது அந்த பச்சை நிற பஜாஜ். மாடுகள் சாவதானமாகத் திரிய, பிளாட்பார்ம் சிறு கோவில்களில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார்கள் மக்கள். ஐந்தாறு நிமிடப் பயணத்தில் அந்த சந்தடி சற்று குறைந்தது.
‘ராணித் தேனீ’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த பெரிய காம்பவுண்டுக்குள் நுழைந்து, இருபுறமும் பத்து பத்து என்று கட்டப்பட்டிருந்த ஒற்றை அறை லைன் வீடுகள் முன்பு வண்டியை நிறுத்தினார் சுகுமாரன்.
எதிரே இருந்த டீக்கடையில் சிலர் அமர்ந்து, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களைப் பார்த்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர்.
ஹே ஆத்தாஆத்தோரமா வாறியா?
நான் பார்த்தா பாக்காமலே போறியா?
அட அக்கம் பக்கம் யாரும் இல்ல
அள்ளிக்கலாம் வா புள்ள…
பற்களைக் கடித்தார் சுகுமாரன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பெண் பிள்ளைகளை வீட்டினுள் அடைத்து வைக்கவும் பொருளாதாரம் இடம் தர வில்லை. வெளியே அனுப்பவும் பகீரென்று இருக்கிறது. அவருக்கு மட்டும் பணம் இருந்தால் அவரது வீட்டுப் பெண்களை பத்திரமாக பல்லக்கில் வைத்து அழைத்து செல்வார். எப்போது அந்த அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறதோ தெரியவில்லை.
அவர் தனது வீட்டுப் பெண்களை மட்டுமல்ல தந்தையின் நண்பரான கிருஷ்ணன்குட்டியின் மகள் மந்தாகினியைக் கூட முடிந்த அளவு பாதுகாப்பாகவே அழைத்துச் செல்வார்.
மந்தாகினி அவருக்கு உடன் பிறவா சகோதரியைப் போன்றவள். இப்போதுதான் சில வருடங்களுக்கு முன்னர் மதராஸ் வந்து இறங்கி இருக்கிறார்கள். இங்கு இன்னும் எத்தனை நாள் வாசமோ தெரியவில்லை. ஏனென்றால் கிருஷ்ணன்குட்டி செய்த வேலை அப்படி.
சீட்டு பிடிக்கிறேன் என்று அக்கம் பக்கம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு ஊரை விட்டு குடும்பத்தோடு ஓடி வந்துவிட்டார். சுகுமாரனின் தந்தையும் அப்படியேதான். நண்பர்கள் இருவரும் இந்த மாதிரி குறுக்கு வழியில் சிந்திக்காமல் ஒரு குமாஸ்தா வேலைக்குச் சென்றிருந்தால் கூட சொந்த ஊரில் கவுரவமான வழியில் பிழைத்திருக்கலாம்.
காம்பவுண்டு வாசலில் ஒரு பெரிய பன்னீர் மரம் பூக்களை சிதற விட்டிருந்தது. பூக்களின் மணம் அந்தப் பகுதியில் எங்கும் நிறைந்து நான் இங்கிருக்கிறேன் பாரேன் என்று கூவியது. பன்னீர் பூக்கள் மணம் ஆரோமா தெரபி மாதிரி வேலை செய்து மனதை அமைதிப் படுத்தும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் எரிச்சல் கோபம் என்று ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மிகவும் நல்லது.
அதனால்தான் அந்தக் காலத்தில் வீட்டின் முன்பு பன்னீர் பூ மரம் வளர்ப்பார்கள். ஆனால் பன்னீர் மரம் பணத்தைக் காய்ப்பதில்லையே. சீக்கிரம் அதனை வெட்டி விட்டு அந்த இடத்தில் ஒரு குடுத்தனத்தை வைக்க வீட்டுக்காரர் யோசித்துக் கொண்டிருக்கிறார். யாரையாவது குடி வைத்தால் மாதாமாதம் சென்னையில் சில நூறுகள் உத்திரவாதமாக வரும்.
error: Alert: Content selection is disabled!!