செம்பருத்தி – 34-2

மறுநாள் அவளை சந்தித்து விவரம் கேட்கலாம் என்று நினைத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக அதன்பின் மந்தாகினி கல்லூரிக்கே வரவில்லை. நாகேந்திரனும் கூட வரவில்லை. 

கல்லூரியில் இருவரும் காதலித்து வந்ததாகவும் நாகேந்திரனின் குடும்பம் மந்தாகினியை மிரட்டி கல்லூரியை விட்டே வெளியே அனுப்பி விட்டதாகவும்  கிசுகிசுக்கப் பட்டது. அதன் நம்பகத்தன்மையை உறுதி படுத்தவேண்டிய நபர்கள் யாரும் அங்கு இல்லை. 

சுதர்சனும் படித்து முடித்துவிட்டு காவல்துறையில் பணியில் அமர்ந்தான். ஆனால் அவனது கேள்விகளுக்கு ஒரு நாள் விடை கிடைத்தது. அவளது உள்ளம் கொள்ளை கொண்ட மந்தாகினியை சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்தான். அவளது வாழ்க்கையை மீட்டெடுக்க வழி செய்ததில் அவனது மனம் மிகவும் மகிழ்ந்தது.

ந்தாகினி பம்பாயில் மேக்கப் உதவியாளராக பணியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஏற்கனவே அலங்காரத்தில் ஆர்வம் உள்ளவள் என்பதால் சுலபமாகவே கற்றுக் கொண்டாள். 

அவளது எஜமானி இந்தியாவிலேயே மிகச் சிறந்த அழகுக்கலை நிபுணர். வெளிநாட்டில் எல்லாம் படித்து வந்திருக்கிறாள். அங்கிருந்து தருவிக்கும் க்ரீம்கள், பேஸ் பேக்குகள், தலை அலங்காரங்கள் இவற்றால் சாதாரண பெண்களைக் கூட தேவலோக ரம்பை, ஊர்வசி மேனகையாக மாற்றி விடுவார். அழகுப் போட்டிகளுக்குத் தயாராகும் பெண்களுக்கு இந்த அழகு நிலையம்தான் ஒரு ஆபத்பாந்தவன். 

மணப்பெண் அலங்காரம் இவர்களது ஸ்பெஷாலிட்டி. இரண்டு மணி நேரத்தில் முடிவதல்ல அலங்காரம். எனவே திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே சென்று மணப்பெண்ணுக்கு பெடிக்கியூர், மெனிகியூர், வாக்சிங், மருதாணி  போன்ற முன் ஏற்பாடுகளை செய்து தயார் படுத்தி வைத்திருப்பார்கள். 

ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் என்று நடக்கும் பெரிய குடும்பத் திருமணங்களை மட்டுமே இவர்கள் ஒத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் அத்தகைய திருமணம் ஒன்றிற்கு செல்லுமாறு அவளது பாஸ் சொன்னாள்.

“நான் வெளியூர் போக மாட்டேன்னு சொன்னேன் மேடம்”

“மந்தாகினி வேற பொண்ணை தான் அனுப்பினேன். ஆனால் அவளோட அம்மா இறந்துட்டாங்கன்னு தகவல் வந்திருக்கு. அதனால வேற யாரும் அட்டென்ட் பண்ண வேண்டிய கட்டாயம். நான் திருமணத்துக்கு வந்துடுவேன். அதுக்கு முன்னாடி என்னென்னவோ பங்க்ஷன்  வச்சிருக்காங்க. அதுக்கு மட்டும் யாராவது அட்டென்ட் பண்ணனும். இந்த ஒரு தடவை மட்டும் போயிட்டு வா. இனிமேல் அனுப்பல”

போகாவிட்டால் வேலை போய்விடும். இந்த வேலையை வைத்துத்தான் அவளது குடும்பம் இருக்கிறது. படிப்பையும் பாதியில் நிறுத்தியாகிவிட்டது. வேறு வழியே இல்லை. சென்றுதான் ஆக வேண்டும். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் சம்மதித்தாள். 

“உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உன்னை காரில் அழைச்சுட்டுப் போய் பத்திரமா தங்க வச்சு கல்யாணம் முடிஞ்சதும் ட்ரைன் ஏற்றி அனுப்பிடுவாங்க. கவுரவமான குடும்பம். உன் பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம் தரேன்” என்று சொல்லியே அனுப்பினார் அவளது பாஸ்.

யாரோ ஒரு அரசகுடும்பத்தைச் சேர்ந்த செல்வன் வீரபாகுவிற்கும்  செல்வி மங்கையற்கரசிக்கும் திருமணம் என்று பல வீர தீர பட்டங்களைப் போட்டு வந்திருந்த அந்தத் திருமணப் பத்ரிக்கையைப் பார்த்ததும் அவளது ராணித் தேனீ தலையைத் தூக்கினாள். அவளைத் தட்டி அமரவைத்துவிட்டுத் திருமணத்திற்குக் கிளம்பினாள் மந்தாகினி. 

முதல் முறையாக அவள் கலந்து கொள்ளும் திருமண விழா. இதுவரை பார்லரில் புருவம் திருத்திவிட்டும், மருதாணி போட்டுவிட்டும், கை கால் நகங்களை வெட்டிவிட்டுமே பெரும்பாலான நாட்கள் சென்றுவிட்டன. இத்தகைய பணக்கார இடங்களுக்கு சென்று வருவது நன்றாகத்தான் இருக்கிறது. ஹப்பா எப்படி தங்கத்திலும் வெள்ளியிலும் அரண்மனையை இழைத்திருக்கின்றனர். 

இயல்பாகவே அழகான மந்தாகினி பாம்பேக்கு சென்றதும் தன்னை மேலும் அழகு படுத்திக் காட்டவும் நவநாகரீக உடைகளை அணியவும் பழகி இருந்தாள். 

அங்கிருந்த பெண்களுக்கு அவளது அழகினைக் கண்டு மூச்சே அடைத்தது. “உங்க தோல் எப்படி இவ்வளவு மாசு மருவில்லாம மிருதுவா இருக்கு? முடி அப்படியே அலை மாதிரி விழுதே தினமும் ஷாம்பூ போடுவிங்களா? நாங்கல்லாம் சீயக்காய்தான்” என்று அவளிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டனர். 

அந்தப் பெண்களில் மணப்பெண்ணும் அடக்கம். ஆனால் அவளது கேள்விகள் வேறு விதமாக இருந்தது. 

“பொண்ணுக்கு அலங்காரம் பண்ணப் போறிங்களா? எங்க மங்கையை மட்டும் அழகாக்கிட்டிங்க பாகமங்கலம் சமஸ்த்தானத்தில் பாதி எழுதி வச்சுருவோம்” பகடி பேசி சிரித்து சென்றதன் அர்த்தம் சில நிமிடங்களிலேயே புரிந்தது மந்தாகினிக்கு. 

மணப்பெண்ணை பார்த்ததும் மந்தாகினியின் பொறாமை மீண்டும் தலை தூக்கியது. சிண்ட்ரெல்லா கதைகளில் ஸ்னோ வைட் கதைகளில் காணப்படும் மாசு மருவில்லாத இளவரசியை எதிர்பார்த்து இருந்தவளுக்கு கருப்பாய் குட்டையாய் கொஞ்சம் குண்டாய் இருந்த அந்த சிறு பெண்ணைப் பார்த்ததும் ச்சே என்றாகிவிட்டது. 

படிப்பறிவில்லாதவளாய் வேறு இருக்கிறாள். “நீங்க என்ன படிச்சிருக்கிங்க? பாம்பாய்ல பெரிய காலேஜெல்லாம் இருக்காமே? அங்க பொண்ணுங்களும் படிப்பாங்களாமே?” என்று மங்கையற்கரசி அவளைக் கேட்டுத் துளைத்துவிட்டாள். 

“ஆமாம் நிறைய கல்லூரி இருக்கு. பெண்களும் அங்க ஆண்களுக்கு சமமாய் படிப்பாங்க. சென்னைல கூட அதே மாதிரிதான்”

“அப்பறம் ஏன் என்னை மட்டும் படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க?”

“அது உன் அப்பாவைக் கேட்க வேண்டிய கேள்வி. இப்ப கைகளைக் காட்டுறியா நகத்தை சீர் படுத்தி விடுறேன்”

மங்கையின் மேல் மரியாதை குறைந்திருந்தது மந்தாகினிக்கு. நீங்கள் நீ என்றானது. 

“நாளைக்கு என்னவோ பங்க்ஷன் போலிருக்கே. உன் பேரைப் போட்டு விழா ஒன்னு நடந்திருக்கு. திருமணவிழா ஏன் இத்தனை நாள் நடக்குது. என்னைக்குத்தான் முழுமையா முடியும்?”

அந்த சிறு பெண்ணால் அவளது குரலில் இருந்த பொறாமையும் இளக்காரத்தையும் கண்டு கொள்ள முடியவில்லை. 

“இன்னைக்குத்தான் வாளுக்கு மாலை போடுற விழா நடந்து முடிஞ்சது. நாளைக்கு அத்தானுக்கு பட்டாபிஷேகம். முறைப்படி பாகமங்கலத்து ராஜாவா பிரமாணம் எடுத்துப்பார். பட்டாபிஷேகம் முடிஞ்ச அடுத்த நாள் தாலி கட்டுறது நடக்கும். ஆனால் எங்க குடும்பத்தில் மட்டும் அடுத்த நாள் குலதெய்வ வழிபாடு. அதுக்கடுத்த நாள் தாலி காட்டுவார்.   அதுக்கப்பறம் பட்டிணத்துப் பழக்கப்படி  ரிசெப்ஷன்னு சொன்னாங்க”

பட்டாபிஷேகமா? பார்த்துட்டு வர வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டாள். 

அங்கு கட்டிளங்காளையாய் பட்டும் தங்கமும் இழைத்து நவரத்தினங்கள் பதித்த உடையில் நாகேந்திரன் கம்பீரமாக நடந்து வர, அவர்கள் குலதெய்வத்தின் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு விநாயகர் காலடியில் வைக்கப்பட்டிருந்த வைர கிரீடம் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நாகேந்திரனின் தலையில் சூட்டப்பட்டது. பட்டப் பெயராக வீரபாகு என்று முடியும்படி அவரது பெயர் மாற்றப்பட்டது. 

அன்னை மீனாட்சியின் கையில் ஆசீர்வதித்து தந்ததாக வழங்கப்பட்ட வைர செங்கோலும், மதுரை மீனாட்சி அம்மையின் கழுத்தில் அணிவித்து எடுத்து வரப்பட்ட வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அவரது கழுத்தில் சூடப்பட்டது. 

பாலகனாக வீட்டை விட்டு வெளியேறி, குருகுலத்தில் பயின்று, வீரத்தை நிரூபித்து, பங்காளிகளை போட்டியில் வென்று, மக்கள்  மனதைக் கவர்ந்து  இப்படி பலவாறு பட்ட கஷ்டத்திற்கு தரப்படும் வெகுமதிதான் பட்டாபிஷேகம் என்று சொல்வார்கள்.  

ஆனால் இன்று ஒரு பட்டாபிஷேகம்தான் நாகேந்திரனின் கஷ்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. 

 

error: Alert: Content selection is disabled!!