ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான்.
பட்டாபிஷேக விழா முடிந்து நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப் பெருமானின் கோவிலை அடைந்தனர். ராஜாவாக வீற்றிருந்த நாகேந்திரன் என்ற வீரபாகுவை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவர். ஒன்று மங்கையற்கரசிக்கு மணப்பெண் அலங்காரம் செய்ய வந்த மந்தாகினி. மற்றொருவன் சுதர்சன்.
சுதர்சன் சற்று தள்ளி இருக்கும் டவுனில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்திருந்தான். ராஜ குடும்பத்தின் திருமணம் பட்டாபிஷேகம் என்று கேள்விப் பட்டதும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். அவனுக்கும் நாகேந்திரன் தான் அந்த ராஜா என்பது தெரியாது. நாகேந்திரனைப் பார்த்தது முதல் அதிர்ச்சி என்றால் அங்கு மந்தாகினியைக் கண்டது இரண்டாவது அதிர்ச்சி.
“மந்தாகினி நீ எங்க இங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் சுதர்சன்.
“ஓ நாகேந்திரனின் பட்டாபிஷேகத்துக்கு அழைப்பு வந்ததா?அவனை பார்க்கத்தான் வந்தியா?ஆனா பட்டாபிஷேகம் முடிஞ்சதும் கல்யாணம்னு கேள்விப்பட்டேனே! உன் காதல் நிறைவேறுவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்”
“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சுதர்சன். ஆனால் இதில் எந்த விழாவிற்கும் எனக்கு முறையான அழைப்பு இல்லை. நான்தான் வேறு வழி இல்லாமல் இங்கு வந்து இருக்கேன். அதுவும் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் ஒரு பணி காரணமாக”
அதிர்ந்தான் சுதர்சன். “நீ என்ன சொல்ற மந்தாகினி…. உங்களோட காதல் என்ன ஆச்சு? காதலியை, தான் கல்யாணம் பண்ணிக்க போற பட்டத்து அரசிக்கு அலங்காரம் பண்றவளா வரவழைத்து இருக்கானா நாகேந்திரன். இவ்வளவு கேவலமானவனா அவன்?”அருவருப்பில் சுதர்சனின் முகம் சுழிந்தது.
“தயவு செய்து இதுக்கு மேல என்னைய வேற எதுவும் கேட்காதீங்க. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதிங்க”
“சரி கேக்கல. இந்தா என்னோட விசிட்டிங் கார்டு. நான் இதுக்கு பக்கத்தில் இருக்கிற டவுனில் வேலை பார்க்கிறேன். அடுத்த வாரம் எனது ஐபிஎஸ் பயிற்சிக்காக செல்ல இருக்கிறேன். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் சொல்”
அதற்குள் அங்கு ஓடி வந்த ஒரு சிறு பெண் மந்தாகினியிடம் “அக்கா உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று சொன்னாள்.
“வரேன் சுதர்ஷன். கண்டிப்பாக எனக்கு உதவி தேவைப்படும் போது உங்களை அழைப்பேன். அப்போது என்னை இந்த ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து கைவிட்டு விடாதீர்கள்”
என்று கண்கள் கலங்க சொல்லிவிட்டுக் கூட்டத்தில் மறைந்தாள் மந்தாகினி.
அங்கு இருந்த பெண்கள் இரண்டு பேருக்கு மருதாணி வைக்க வேண்டியது இருந்தது. அந்த வேலை முடிந்ததும் ஓய்வு எடுத்து வருவதாக சொல்லி விட்டுஅந்த அரண்மனையில் பூனை போல் பதுங்கி, நாகேந்திரனை தேடத் துவங்கினாள்.
அந்த வீட்டில் ஒரு சிறுவனை கொச்சப்பா என்று அனைவரும் அழைத்தார்கள். கொச்சப்பா லீலாம்மாவின் தம்பி. அக்காவை அப்படியே உரித்து வைத்திருந்தான்
“கொச்சப்பா இங்க வா” என்று அவனை அழைத்தால் மந்தாகினி.
மலையாளத்தில் யாரோ அவனை அழைத்து பேசியதும் கொச்சப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
“நீங்களும் எங்க ஊர் தானா” என்றான்
“ஆமா, கொச்சப்பா நீ எனக்கு ஒரு சகாயம் செய்யணுமே” என்றாள்
“சொல்லுங்க சேச்சி”
“லெட்டரை கொண்டு போயி அங்க உட்கார்ந்திருக்கிறாரே நாகேந்திரன் அவர்கிட்ட கொடுக்குறியா”
அவனும் நாகேந்திரனிடம் கொடுத்தான். காலையிலிருந்து பட்டாபிஷேகம் கோவில் விழா என்று அழைச்சலில் இருந்த நாகேந்திரன் அப்பொழுதுதான் உணவருந்தி விட்டு சற்று பொறுமையாக அமர்ந்திருந்தார்.
“என் கேள்விக்கு என்ன பதில்? ஒரு பெண்ணின் கேள்விக்கு விடை தர முடியாது பயந்து ஓடி ஒளிந்த ஒரு நபர் ராஜாவாம்! வியப்பாகத்தான் இருக்கிறது. இப்பொழுதாவது என் கேள்விக்கு பதில் சொல்லும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டதா.
வந்துவிட்டது என்றால் ஒரு முறை என் கண்களைச் சந்தித்து, உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள். அதன் பின் உங்கள் பார்வையிலே பட மாட்டேன். வெகு தூரம் சென்று விடுகிறேன்.
இப்படிக்கு
உங்களை அன்றும் இன்றும் என்றும் காதலிக்கும் ஒரு அபலைப் பெண்
கடிதத்தைப் படித்ததும் அது மந்தாகினியிடமிருந்து வந்தது என்று புரிந்து கொண்டார் நாகேந்திரன். இவள் எங்கே கல்யாண சமயத்தில் இங்கே என்று திகைப்பில் ஆழ்ந்தார்.
அங்கு ராஜ குடும்பத்தினர் என்று வந்த பெண்களுக்கெல்லாம் அலங்காரம் செய்வதற்குள் மந்தாகினிக்கு முதுகே ஒடிந்தது. சாதாரணமான நாள் என்றாலும் பரவாயில்லை இன்று அவள் கண்ட கனவெல்லாம் களைந்து, மௌனமாய் மனதால் செத்துக் கொண்டிருந்தாள். தான் மனதில் விரும்பியவனை மணக்கப் போகும் பெண்ணுக்கு அலங்காரம் செய்வது எவ்வளவு துன்பம் தரும் என்பதை எவராலும் கூற இயலாது.
“மங்கை உன்னை கல்யாணம் பண்ணிக்கிறவரும் நீயும் எங்கேயாவது வெளியில் போயிருக்கீங்களா?”
“போயிருக்கோமே திருவிழா கல்யாணம் எல்லாம் போயிருக்கோம்”
பொறாமையில் வயிறு காந்தியது மந்தாகினிக்கு
“வெளிய போறப்ப அவர் கிஃப்ட் எதுவும் உனக்காக வாங்கி கொடுத்தாரா?”
“தெரியலையே! அப்ப நான் சின்ன பிள்ளை. அதனால எதுவுமே நினைவில்லை”
மங்கையர்கரசியின் நகங்களைச் சீர்படுத்திய படி மேலும் தொடர்ந்தாள்.
“சின்ன குழந்தைல போனதைக் கேட்கல. சமீபத்துல உங்க கல்யாணம் உறுதியானதும் எங்கேயும் வெளில போயிட்டு வந்தீங்களா?”
“அது எப்படி வெளியில அனுப்புவாங்க? திருமணத்துக்கு முன்னாடி எங்கேயும் தனியா அனுப்புறது வழக்கம் இல்லையே”
“சரி அதுக்கு முன்னாடி உங்க அத்தான் கல்லூரியில் படிச்சப்ப எப்போதாவது”
“அத்தான் தான் வெளியூர்ல படிச்சாரே”
“ஓ அப்ப நீ எங்கும் அவரோட வெளியில போனதில்லன்னு சொல்லு. சரி ஏதாவது பேசி இருக்கியா? அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது ஏதாவது உனக்கு தெரியுமா? முதல்ல அவருக்கு உன்ன பிடிக்குமான்னு தெரியுமா”
மங்கை முகத்தில் கலக்கம். “அவருக்கும் புடிச்சதனாலதான கல்யாணமெல்லாம் நடக்குது நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்றாள்