செம்பருத்தி – 37-1

அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது. 

அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்துச் சொல்வார் நாகேந்திரன். 

சிலரை சில நாள் ஏமாற்றலாம். பலரைப் பல நாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா? நாகேந்திரன் விழித்துக் கொண்டார். 

முதல் விழிப்பு மங்கைக்கான வரனை நாகேந்திரன் பார்க்க ஆரம்பித்ததும் தொடங்கியது. 

மங்கை முதுகலை முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கல்யாணம் குழந்தை இதில் எல்லாம் நாட்டம் இல்லை. வெறியோடு படித்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றிலும் முதல் மாணவி, தங்கப் பதக்கம் என்று அடித்து தூள் கிளம்பினாள். இவ்வளவு அறிவுள்ள ஒரு பெண்ணை குடும்பப் பொறுப்பு என்று சொல்லி வீட்டில் அடைக்க இருந்தோமே என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டார். 

மங்கையிடம் அவருக்கு சில வருத்தங்கள் கூட இருந்தன. படிக்கும்போதே சிறு சிறு வேலைகளையும் பார்த்தாள். காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் அவளுக்கு மெத்து மெத்தென்று இருக்க வேண்டும் என்று காஷ்மீரத்துக் கம்பளத்தை விரித்திருக்கும் அரண்மனையில் வசித்தவள், தட்டச்சு செய்து விரல் வலி என்று சொடக்கு போட்டுக் கொண்டிருப்பது அவருக்கு மிகவும் மனக்கஷ்டத்தைத் தந்தது. 

“இதெல்லாம் தேவையாம்மா? நீ எப்படி வளர்ந்த பெண். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா”

“அத்தான், அதெல்லாம் அப்பாவோட பரம்பரை சொத்து. டைப் அடிச்சு நான் சொந்தமா சம்பாரிச்ச பணம் இருபத்தி அஞ்சு ரூபாய். நிஜம்மா அவ்வளவுதான் என் தகுதி. அதை இன்னமும் உயர்த்திக்க வேண்டாமா?”

அடுத்து சிறிய பிளாட் ஒன்றை வாடகைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டார். மங்கையை இப்படியே விடக்கூடாது. நல்லவனாகப் பார்த்து கல்யாணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும். 

நாகேந்திரன் அவரது நட்பு வட்டாரத்தில் மங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். உறவினர்களில் சில வரன்கள்  இருந்தும் அவனது மாமா பூபதி, மங்கையின் தந்தை அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

அவனுக்கே அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. ஏனென்றால் பூபதி சிரத்தை எடுத்து மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகத் தெரியவில்லை. அதனால் நாகேந்திரன் தனது தம்பி மகேந்திரனிடம் மங்கைக்குத் திருமண ஏற்பாடு செய்யச் சொன்னால் முறைக்கிறான்.

நாகேந்திரன் மட்டுமல்ல மகேந்திரன் கூட காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரு பையனையும் பெற்று விட்டான். நம்மை மாதிரியே மங்கையும் குடும்பம் குழந்தை என்று இருந்தால்தானே அவளுக்கும் பாதுகாப்பு. மாமாவுக்கும் நிம்மதி. 

‘ராஜா பட்டம்’ வேறு முள்ளாய் குத்துகிறது. சொத்துக்களைத் திருப்பி எழுதித் தருகிறேன் என்று சொன்னால் ‘கொடுத்ததைத் திருப்பி வாங்கும் பழக்கம் நமது பரம்பரைக்கே இல்லை’ என்று சொல்கிறார். வீட்டில் இருக்கும் பணப்பேய்க்கு இது தெரிந்தால் ‘அவரே சொல்கிறாரே நீ எதற்குத் தர வேண்டும்?’ என்று தகராறு செய்யும். 

மாமா வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மங்கையின் நிலை அவரது ஆரோக்கியத்தை பாதித்திருந்தது. உடல் நிலை முன்புக்கு  இப்போது வெகுவாய் தளர்ந்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டினால் ‘மங்கை உனது பொறுப்பு. எனக்கு என்ன நேர்ந்தாலும் நீ பார்த்துக் கொள்வாயல்லவா’ என்று கேட்கும் போது யாரோ கத்தியால் இதயத்தைக் குத்திக் கிழிப்பதைப் போன்ற வலி ஏற்படுகிறது. 

இதை எல்லாம் நினைக்கும்போதே தனது குடும்பமே மாமா வீட்டில் ஒட்டுண்ணியாக வாழ்வதைப் போல அருவருப்பாய் இருந்தது நாகேந்திரனுக்கு. 

அதனால் தானே மங்கையின் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார்.  எப்படியாவது இந்த கள்ளமில்லா பெண்ணை நன்றாக வாழ வைப்பேன். ஒரு நான்கைந்து வரன்களை இதுவரை பார்த்தாகிவிட்டது. சிலர் பெண் பார்க்க வருவதாகக் கூட சொல்லி இருந்தனர். இருந்தும் ஒன்று கூட கை கூடவில்லை. கடைசி நேரத்தில் எப்படியோ தட்டிப் போயிற்று. 

நல்லவேளை எல்லா முன்னேற்பாடுகளையும்  முடித்துவிட்டு, இன்ப அதிர்ச்சியாக மணமகனை மாமாவின் முன்பும் மங்கையின் முன்பும் நிறுத்தலாம் என்றெண்ணி தகவல்களை மனைவியைத் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  இல்லை என்றால் இன்னொரு ஏமாற்றமாக மங்கைக்கு இருந்திருக்கும். 

மந்தாகினிக்குக்  கூட பணத்தின் மேல் கொஞ்சம் நாட்டம் அதிகம் என்றாலும் மங்கையின் திருமண விஷயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். மனிதர்களுக்கு சில பலவீனங்கள் இருக்குமல்லவா மந்தாகினிக்கு பணமும் அந்தஸ்த்தும் பலவீனங்கள். 

ஆனால் தடங்கலுக்கு காரணம் என்னன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டிருந்த பொழுது தான் சமய நேரம் கூடி வர, காரணங்கள்  ஒவ்வொன்றாய் நாகேந்திரனுக்குப்  புலனானது. மங்கைக்கு திருமணம் செய்வது எவ்வளவு கடினம் என்று உணர்ந்து திகைத்துப் போனார். 

ஒரு மாப்பிள்ளை மங்கையை பெண் பார்க்க வருவதாக சொல்லியிருக்க. உறுதி செய்ய அவர்களது வீட்டிற்கு சென்றபொழுது முதல்நாள் சொன்னதற்கு மாறாக இந்த சம்பந்தம் ஒத்து வராது என்றார்கள். 

“நேத்து வரைக்கும் சரின்னு சொல்லிட்டு இப்ப மறுக்கிறது சரியில்லை. உங்க கிட்ட நேர்மையில்லை” என்று முகத்திற்கு நேரே மாப்பிள்ளை வீட்டுக் காரர்களிடம் நாகேந்திரன் முகம் சிவக்க சொல்ல, 

“நேர்மை இல்லாதது உங்களிடமா  இல்லை எங்களிடமா?  நாங்களே தன்மையா சொல்லி கல்யாணத்தை மறுக்கலாம்னு நினைச்சா எங்க மேலேயே குத்தம் சொல்றிங்களே இதுதான் உங்க நியாயமா?”

“அப்படி என்ன நேர்மை இல்லாத காரியம் செஞ்சோம்?”

“ராசி இல்லாத பெண்ணை எங்க தலைல கட்டி விடப் பாக்குறிங்களே இது நேர்மையான காரியமா?”

“ராசி இல்லாத பெண்ணா?”

“ஆமாம் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ண நினைச்ச உடனே அவரே இறந்துட்டாராமே. அதனாலதான நீங்களும் உங்க தம்பியும் வெளிய பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டிங்க.”

“இல்லை… அவளுக்கு என் கூட தான் கல்யாணம் நிச்சயம் ஆயிருந்தது. ஆனால் அது நின்னு போனதுக்கான காரணத்தைக் கூட சொல்லியிருந்தேனே “

“அது உண்மையான்னுதானா?”

“நான் சொன்னது உண்மையில்லைன்னா வேற யாரு சொல்றது உண்மை?”

“உங்க மனைவி. அவங்கதான் இந்த உண்மையை சொன்னாங்க”

“என் மனைவியா?” அதிர்ந்தார்.  

“அவங்க இங்க வந்திருந்தாங்க. அந்த மகராசி சொல்லலைன்னா எங்களுக்கு இந்த உண்மை தெரிஞ்சிருக்காது. அவங்கதான் சொன்னதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சா அவங்களுக்கும் மகனுக்கும் ஆபத்துன்னு சொன்னதாலதான் நாங்க உங்ககிட்ட சொல்லத் தயங்கினோம்”

பேசக் கூட முடியாமல் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டார். இப்படி நெஞ்சறிய பொய் சொல்லக்கூடியவளா அவர் மனைவி? பணமும் பகட்டும் இப்படியா ஒருத்தியை ஆட்டுவிக்கும்?

“இங்க பாருங்க நாகேந்திரன். யாரோ ஒரு சொந்தக்காரப் பெண்ணை வாழ வைக்கிறதுக்காக உங்களையே நம்பி வாழ வந்திருக்கும் மனைவியை வதைப்பது சரியில்லை. இனிமேல் மந்தாகினிகிட்ட நீங்க கடுமையா நடக்க அனுமதிக்க மாட்டோம்” என்று அவரையே முறைத்தனர். 

 

error: Alert: Content selection is disabled!!