அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை பாம்பாயில் தனது வேலையைத் தொடர விரும்பினார். அதுவரை அவர்களுடன் தங்கி லண்டனில் படித்துக் கொண்டிருந்த லீலாம்மா தனது வேலையை லண்டனில் தொடர விரும்ப இருவரும் பிரிந்தார்கள்.
பம்பாயில் வந்து மீண்டும் வேலை தேடியபோது வழக்கமாக பெண்களுக்கு ஏற்படும் அதே பிரச்சனை ஏற்பட்டது. குழந்தை பிறப்பு காரணமாகவும் அதன்பிறகு உடல்நிலை காரணமாகவும் ஏற்பட்ட சிறிய தடுமாற்றம் மற்றும் இரண்டு வருடம் வேலை பார்க்காமல் இருந்தது , அவரை முன்னேற்றத்தில் இருந்து சறுக்க வைத்து, மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டி இருந்தது.
எமனையே போராடி வென்று வந்த மங்கைக்கு இந்த சிறு சறுக்கல் எம்மாத்திரம்? உபகார சம்பளத்துடன் மேற்படிப்புக்கு சேர்ந்தார்.
நாகேந்திரன் அவரை வீடு பார்த்து தங்க வைத்தார். இருந்தாலும் சிறிய பிளாட் ஒன்றில் மட்டுமே தங்குவேன் என்று பிடிவாதமாக இருந்த மங்கையை ஒன்றும் செய்ய முடியவில்லை. தனது பாகமங்கலம் பயணங்களைக் குறைத்துக் கொண்டு மகளுக்கு உதவியாக தங்கிவிட்டார் பூபதி.
காலையில் பால் வாங்கி வந்து காய்ச்சி பூஸ்ட் போட்டு பேரனை மடியில் வைத்து சூட்டினை ஆற்றி ஆற்றி குடிக்க வைக்கும் இவரா பாகமங்கலம் ஜமீன்தார் என்று ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார் நாகேந்திரன்.
“நாகேந்திரா… உனக்கும் மங்கைக்கும் காப்பி போட்டு பிளாஸ்க்ல வச்சிருக்கேன்”
“மாமா… என்னால நம்பவே முடியல. உங்களுக்கு சமையல் செஞ்சு தரவே டசன் கணக்கா ஆட்கள் வீட்டில் இருக்கும்போது. நீங்க எனக்கு காப்பி போடுறது… பச் … மனசே பிசையுது. எல்லாம் என்னாலதானே மாமா? இந்த பாவத்தை எங்க போயி கழுவுவேன்?”
“இந்த நிமிஷம், என் பேரனை மடியில் வச்சு கொஞ்சுற சந்தோஷமான தாத்தா. தினமும் அவினாஷை நடந்து போயி ஸ்கூலில் விட்டுட்டு கூட்டிட்டு வரப்ப எவ்வளவு விஷயங்களைத் தெரிஞ்சுக்குறேன் தெரியுமா?
பால் காய்ச்சுறது, காப்பி போடுறது, ரசம் வைக்கிறது இதெல்லாம் புதுசா கத்துக்கிட்டு செய்யும்போது என்னவோ ஒரு நிறைவு. நிஜம்மா சொல்லப்போனா எந்த வித வெளிப்பூச்சும் இல்லாம, உணர்ச்சிகளை அடக்காம, மக்களோடு மக்களா கலந்து பழகும் இந்த வரத்தை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்”
“சாபத்தையே வரமாக்கிக்கும் புத்திசாலித்தனம் உங்களுக்கும் மங்கைக்கும் மட்டும்தான் இருக்கு மாமா! எனக்கும் கொஞ்சமாவது இருந்திருக்கலாம்” பெருமூச்சுடன் சொன்னார்.
“என்ன பெருமூச்செல்லாம் பலம்மா இருக்கு”
“நேத்து அவினாஷ் கூட மெரைன் ட்ரைவ் போயிருந்தப்ப கொச்சில இருந்து தெரிஞ்சவங்க ஒருத்தங்க பாத்துட்டாங்க. அவங்க மந்தாகினிக்கு பிரெண்டு”
“உண்மையை எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்?”
“உண்மை தெரியறதால எனக்குக் கவலையில்லை. மங்கையோட உயிரைக் காப்பாத்தவே பெரும்பாடு பட்டோம். இப்ப அவினாஷ்… இவன் சின்ன குழந்தை மாமா… மந்தாகினியோட விஷக்கண்ணில் பட்டுடக் கூடாது” தழுதழுத்தார்.
அவரது கவலையைப் புரிந்து கொண்டார் பூபதி. சற்று நேரம் யோசித்தார்.
“மங்கை ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிக்கணும்னு சொல்லிட்டிருக்கா. படிக்கட்டும் விடு. நான் அதைக் காரணம் காட்டி அவினாஷை பாகமங்கலத்தில் நம்ம ஸ்கூலில் படிக்க வைக்கிறேன். நம்ம குடும்பத்து பசங்க படிக்கிறதால பாதுகாப்பு பலமாவே இருக்கும்”
நல்ல யோசனையாகவே பட்டது நாகேந்திரனுக்கு. அவருக்கு ஒரு மகன் மட்டுமா இருக்கிறான். அவரது முதல் மகன் அபிராம். முதன் முதலில் என்னை அப்பா என்று மழலை மொழியால் அழைத்தவன். அவனை எப்படி காப்பாற்றப் போகிறேன்.
“அபிராம்தான் அப்பா இருந்தும் அம்மாவோட நிழலில் மட்டும் வாழுறான். அந்த பேய் நான் மங்கையைக் கல்யாணம் பண்ணிக்க அவளை விலக்கி வச்சிருக்குறதா அந்த ஊரில் ஒரு பிம்பம் ஏற்படுத்தி வச்சிருக்கு. அதை நம்பி அபி நான் பக்கத்தில் போனாலே ‘ஐ ஹேட் யூ’ன்னு கத்துறான் மாமா”
“அந்தப் பொண்ணு மந்தாகினி எப்படி இருக்காங்க”
“அவளை பத்தி கேக்காதிங்க மாமா… இந்த அறுநூறு சதுர அடி பிளாட் அன்பாலே நிறைஞ்சு இருக்கு. ஆனால் அங்க அரண்மனையே களை இழந்து போச்சு. அதுவும் பூஜை ரூமா இல்லை பாதாள பைரவி குகையான்னு தெரியல. எப்பொழுதும் விளக்கு அணையாம எரியுது. கோழி எல்லாம் அறுத்து வீட்டில் பூஜை பண்றதா கேள்வி”
“சமீபத்துல கொச்சில திருட்டு கூட போனதா சொன்ன இல்ல”
“ஆமாம் மாமா”
யோசனையில் ஆழ்ந்தார்
“ஒன்னு செய், நம்ப லவங்கத்து கிட்ட சொல்லி வேட்டை நாய்களை கொச்சில இருக்குற அரண்மனைல பாதுகாப்புக்கு வாங்கு”
“நானும் அத பத்தி யோசிச்சேன் மாமா. ஆனா அரண்மனைல நம்ம நாய்களை பார்த்துக்கிற அளவுக்கு பயிற்சி பெற்ற நபர்கள் யாருமே இல்லை”
“முதலில் நாய்கள கொண்டு போயி லவங்கம் விடட்டும். நம்ம ஊரு நாய்களா கவனிக்கிறதுக்கு ஒரு தனி தகுதி வேணும். அது அங்க இல்லனா நம்ம லவங்கத்தையே அனுப்பி விடலாம்.”
“புரியுது மாமா. லவங்கத்தின் பொறுப்பு அங்க நாய்களை பார்த்துக்கிறது மட்டுமில்ல, அபிராம் வீட்டில் இருக்கும் பொழுது அவனுக்கு ஒரு ஆபத்தும் நேராம காப்பது”
லவங்கம் அடுத்த சில வாரங்களில் கொச்சி அரண்மனையில் குடியேறினார்.
***