நாகேந்திரன் எந்த விஷயத்தை மந்தாகினிடம் சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாரோ அது ஒரு நாள் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குக் காலம் தள்ளியது.
ஆம் அவரது அன்னை வடிவின் இறுதிச் சடங்கின் பொழுது தான் அவினாஷும் நாகேந்திரனின் மகன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
முதல் பேரன் என்ற உரிமையில் அபிராமும் மந்தாகினியும் வந்து இறங்க, அமைதியாக மங்கை காரியங்களை கவனிக்க, தன்னுடன் நெய் பந்தம் பிடித்துக் கொண்டு நின்றிருந்த சிறுவனை நட்போடு பார்த்து சிரித்தான் அபிராம்.
அவனைப் பொறுத்தவரை பாகமங்கலத்தில் நிறைய தம்பி தங்கைகள் அவனுக்கு இருக்கிறார்கள். குறிப்பாக அவனது சித்தப்பா மகேந்திரனின் பிள்ளைகள். அவனுக்குப் போட்டியாளர்கள். ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் அவன் தான் அந்த பாகமங்கலத்திற்கு வருங்கால ராஜா என்று அவன் அம்மா சொல்லி இருக்கிறார்.
இந்த குட்டி பையன் அங்கு இருக்கும் அனைவரையும் விட சிறுவனாக இருக்கிறான். எனவே இவனும் ஒரு தம்பியாகத் தான் இருக்க வேண்டும்
“நீங்க யாருண்ணா உங்கள நான் பார்த்ததே இல்லையே” என்று மழலையாக கேட்டான். அந்த சிறுவன்
“நான்தான் அபிராம். இப்ப கொச்சில இருக்கேன். பெரியவன் ஆனதும் எங்க அம்மாவை கூட்டிட்டு இந்த ஊருக்கு ராஜாவா வந்துருவேன். உன் பேர் என்ன?” என்று கேட்டான்
“என் பெயர் அவினாஷ். நான் பம்பாய்ல படிச்சேன். இப்ப பாகமங்கலத்து ஸ்கூல்ல எங்க தாத்தா சேர்த்து விட்டுட்டார். நீ ஏன் கொச்சில இருக்க நீயும் இங்கே வரலாமே”
“செத்து போனாங்க இல்ல அந்த பாட்டி தான் எங்க அம்மா கொச்சில இருக்குறதுக்கே காரணம். அவங்க எங்க அம்மாவை அடிப்பாங்களாம். அதனால எனக்கு அந்த பாட்டியை பிடிக்கவே பிடிக்காது. இப்ப கூட வந்திருக்க மாட்டேன். ஆனால் நான் வரலைன்னா வேற யாராவது ராஜா ஆயிடுவாங்களாம் அப்படின்னு சொல்லி எங்கம்மாதான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தாங்க.”
“அப்படியா, இந்த பாட்டி என்னை ரொம்ப பிரியமா பார்த்துப்பாங்க. அவங்க செத்துப் போனது நினைச்சு எனக்கு ரொம்ப அழுகையா வந்தது.அழுதுகிட்டே இருந்தேன் தெரியுமா. இந்தப் பாட்டி ரொம்ப நல்லவங்க அபிராம். ஆனா சின்ன வயசில் எங்க அம்மா தப்பு பண்ணும் பொழுது இந்த பாட்டி தலைல குட்டுவாங்களாம். ஆனால் குட் கேர்ளா இருந்தா கொஞ்சுவாங்களாம். உங்க அம்மாவ ஏன் அடிச்சாங்க உங்க அம்மா எதுவும் தப்பு பண்ணாங்களா?”
“எங்க அம்மா தப்பே பண்ண மாட்டாங்க அவினாஷ். அதனால எங்க அம்மாவை கஷ்டப்படுத்துறவங்க யாரையும் எனக்கு பிடிக்காது. எங்க அம்மாவுக்கு பிடிக்காதவங்க எனக்கு எனிமிதான்”
“நீ வந்ததிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலையே. சரி இந்த பிஸ்கெட்டை சாப்பிடு”
“எங்க அம்மாவும் தான் சாப்பிடல. எங்க அம்மா சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன்?”
குடுகுடுவென மந்தாகினிடம் ஓடிப் போன அவினாஷ் பிஸ்கட்டை நீட்டி “ஆன்ட்டி இதை நீங்க சாப்பிடுறீங்களாஅபிராமயும் சாப்பிட சொல்றீங்களா? நீங்க சொல்லாம அவன் சாப்பிட மாட்டானாம்” என்றான்.
அந்த சிறுவனின் கன்னத்தில் தட்டி புன்னகைத்தவரே “அபிராம் சாப்பிடுறா. குட்டி பையன் சொல்றான் இல்ல” என்றாள்
அந்த அன்பு எல்லாம் அவிநாஷ் நாகேந்திரனின் இரண்டாவது மகன் என்று தெரிந்ததும் அப்படியே மாறியது.
“அபிராம் வாந்தி எடுறா… அந்த பிஸ்கட்ல என்ன கலந்து கொடுத்திருக்காங்களோ தெரியலையே… இந்தக் குடும்பம் கொலைகார குடும்பம் டா.. வா இங்கிருந்து போகலாம்” என்று அவனைத் தரதரவென இழுத்துச் சென்றாள்.
குரங்கு கையில் சிக்கிக் கொண்ட பூமாலை போல மந்தாகினியின் கைகளில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட அபிராமியின் கண்களில் கோபம். அந்த சினத்துடன் நாகேந்திரனையும் மங்கையையும் வெறித்தான். ஆனால் அவர்களுக்கு நடுவே பயந்தபடியே நின்று கொண்டு அபிராமை அன்புப் பார்வை பார்த்த அவினாஷிடம் மட்டும்அவனால் கோபம் கொள்ளவே முடியவில்லை.
அந்த சம்பவத்திற்கு பின்னர் மந்தாகினியின் கொடூரம் பல மடங்காயிற்று. நாகேந்திரன்அபிராமைத் தரதரவென்று இழுத்துச் சென்ற மந்தாகினியின் செயலால் திகைத்துப் போயிருந்தார்.அபிராமை அவனது தாயிடமிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார்.
லீலாம்மாவை எதிர்பாராத விதமாக சந்தித்தவர் அவள்தான் அபிராமின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்ள முடியும் என்று முடிவு செய்தார். அவளும் சம்மதிக்கவும் சுகுமாரனின் மூலம் அரண்மனையில் வேலைக்கு அனுப்பினார். இப்படித்தான் லீலாம்மா அபிராமுக்கு பெறாத தாயானார்.
***