செம்பருத்தி – 40-1

மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும். 

“குழந்தை உன் பேரு என்னடாப்பா?”

“அவினாஷ்”

“எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார். 

மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம் குறைந்து அமைதி அடைந்த பழனிக்கு  நாகேந்திரன் வந்துவிடுவார். கிறுக்குசாமியுடன் மடத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசுவதிலேயே அவரது மனம் சாந்தி பெற்று தெளிவடைந்துவிடும். இந்த முறை மங்கையுடன் வந்துவிட்டார். 

“சாமி, எனக்கு மந்தாகினியோட போக்கே பயம்மா இருக்கு. என் மகன் அவினாஷை ஏதாவது செய்துடுவாளோன்னு ராப்பகலா தூங்காம கொள்ளாம தவிச்சுட்டு இருக்கேன்” என்றார் பெரும் கவலையுடன். 

“மந்திரத்தால் மாங்காயைப் பழுக்க வைக்கிறது உண்மையா இருந்தா மந்திரத்தால் ஒருத்தனை அழிக்கிறதும் நடக்கலாம்” என்றார் கிறுக்குசாமி அலட்டிக் கொள்ளாமல். 

“அப்ப அதெல்லாம் உண்மையில்லையா சாமி”

“உண்மையா… அந்த உண்மையைத்தான் நானும் தேடிகிட்டு இருக்கேன். எதிரியைத் தடுக்க பதில் கட்டு போடுறேன். ஏவலை நிறுத்துறேன் அப்படின்னு எல்லாம் சொல்ல நான் ஒன்னும் மந்திரவாதி இல்லை. எல்லாத்தையும் கடந்து உள்ளே இருக்கும் உண்மையை உணர முயற்சிக்கும் ஆன்மீகவாதி”

“இதை அப்படியே விட்டுடலாமா. கண்டுக்காம போய்டலாமா?” 

“விட முடியாதே… எப்ப உன் மனசு இது உண்மையா இருக்குமோன்னு நினைக்க ஆரம்பிச்சுச்சோ அப்பயே அது உண்மைன்னு பயப்பட ஆரம்பிச்சுருச்சு. கண்டுக்காம விட முடியாது. அப்பறம் ஒரு அண்டங்காக்கா பறந்தா கெட்டதுன்னு நினைப்ப, நாய் குளிருக்கு ஊளையிட்டா துக்க செய்தி வருமோன்னு பதறுவ”

உண்மைதான் இதெல்லாம் அவருக்கும் மங்கைக்கும்  இருந்தது. 

“என் படிப்பும், சுயசிந்தனையும்  இதெல்லாம் மூடநம்பிக்கைன்னு சொல்லுது. ஆனால் நீ கற்றது கையளவுதான்னு இன்னொரு பக்கம் மனசு சொல்லுது. ஒருவேளை என் அறிவால் உணர முடியாத இந்த மந்திர மாயமெல்லாம்  உண்மையாயிட்டா அவினாஷை எப்படி காப்பாத்துறதுன்னு பயம்மா இருக்கு” தழுதழுத்தார் மங்கை. 

“புரியுதும்மா…  உன் மனசோட போக்குக்கே வர்றேன். இருட்டுன்னு ஒன்னு இருந்தால் வெளிச்சம்னு இன்னொன்னு இருக்குமே? உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா… கடவுளை மீறின சக்தி இல்லைன்னு நம்புறியா?”

“நம்புறேன் சாமி”

“சரி, அவினாஷ் இங்க வா. தாத்தா உனக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகத்தைத் தரேன். அதைப் பாடமாக்கிக்கோ. தினமும் ரெண்டு வேளை குளிச்சுட்டு அந்த வேலனை வணங்கு. அவன் உனக்குக் காவலாய் நின்று காப்பான் என்று நம்பு”

“இதனால் என்ன பிரயோஜனம் தாத்தா?”

“பயப்படுற மனசு இருக்கே அது மணல் மாதிரி. காத்தடிக்கிற திசை எல்லாம் அல்லாடும். உறுதியான மனசு பாறை மாதிரி, அதை எந்த சக்தியாலும் ஒன்னும் செய்ய முடியாது. அது எவ்வளவு பெரிய மந்திரமா இருந்தாலும் உன்னை எதுவும் செய்யாதுனு உன் மனசு நம்பனும். அதுக்கு  பக்குவத்தை அடைய உதவி செய்றதுதான் இறைபக்தி. முதல் முதலில் எழுதப் பழகும்போது  கை பிடிச்சு எழுதினியே அதே மாதிரிதான். இந்த மந்திரம் உன் மனம் உறுதி பெற துணை நிற்கும்”

“இந்த ஒரு மந்திரம் மட்டும்தான் ஹெல்ப் பண்ணுமா தாத்தா”

“எனக்கு உதவியது இந்த மந்திரம். மத்தவங்களுக்கு வேற மந்திரம் உதவி இருக்கலாம்”

“சரி தாத்தா” 

“மந்திரம் மாயம் ஏவல் இதெல்லாம் உண்மையான்னு கேக்குறிங்க. அதெல்லாம் விட ஒரு சத்தியமான உண்மை இருக்கு. சக மனுஷனுக்கு  தீமையோ கொலையோ செய்தா அது சாபமாகவோ இல்லை பாவமாகவோ நம்ம ஆன்மாவில் பதிஞ்சுரும். ஏழேழு ஜென்மத்துக்கும் நம்மை விடாம துரத்தும். அந்தப் பொண்ணு அதெல்லாம் செய்யுது. பாவத்தை அடுக்கிக்குது. பாவத்தின் சாபமெல்லாம் அது மிகவும் பிரியம் வச்சுருக்குற ஒரு இடத்தில்தான் விடியும். அதாவது கத்தியை எடுத்தவனுக்குக் கத்தியாலயே ஆபத்து. இதை சொல்லி நல்லபடியா மனசுக்கு மருத்துவம் பாருங்க” என்றார் கிறுக்குசாமி. 

ஆனால் மருத்துவம் பார்க்கும் கட்டமெல்லாம் தாண்டியிருந்தாள் மந்தாகினி. 

அவினாஷை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை சிறுவனாகப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளது மனதில் வேரூன்றி  நிற்கிறது. 

அவனை மங்கையை செய்தது போல ஆள் வைத்து அடிக்க முடியவில்லை. அப்படி ஏதாவது  நடந்தால் பாகமங்கலத்தின் ஜமீனாக மகேந்திரனின்  மகன்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மங்கையின் தந்தை பூபதி அவரது மறைவிற்கு முன்னரே உயில் எழுதி வைத்ததாக சுதர்சன் அவளிடம் எச்சரித்து ஒழுங்காக வாழும்படி சொல்லியிருந்தான். 

சுதர்சன் மந்தாகினியின் உண்மை முகம் அறிந்தவுடன்  நேரில் வந்து திட்டினான். எச்சரித்தான். அதன்பின் பெரிதாக அவனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. சொல்லப்போனால் வடநாட்டில் வேலை பார்த்து வரும் அவன்தான் ஒரு வகையில் அபிராமிற்கு காட் பாதர். அபிராம் இரண்டு மூன்று முறை சிறு விதி மீறல்கள் செய்து மாட்டிக் கொண்டபோது காப்பாற்றி இருக்கிறான். அதனால் அபிராமின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானான். 

ஆகையால் இன்றுவரை துரோகங்கள் பல செய்திருந்தும் இந்த மந்தாகினி  நாகேந்திரனின் மனைவி என்ற பதவியால் தப்பித்து வருகிறாள். அந்தப் பதவியை  அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியுமா?

அவினாஷை ஆட்களை வைத்து அடித்து கொலையாக செய்தால்தான் பிரச்சனையே. இதுவே விபத்தாய் அல்லது தற்கொலையை இருந்தால். அவளுக்கோ இல்லை அபிராமிற்கோ பிரச்சனை இல்லை. அது பலிப்பதற்காகத்தான்  இத்தனை வருடங்களும் பல பூஜைகளை செய்து வருகிறாள். இருந்தும் அவினாஷ் திம்மென்று அசையாமல் நிற்கிறான். 

ஒன்றை கவனத்தில் கொள்ள மறந்தாள் மந்தாகினி. அடுத்தவருக்கு தீங்கு நினைத்து நினைத்து மனசில் விஷவிருட்சத்தை வளர்த்து அந்த விஷம் அவளையே கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்தது. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய் எல்லாம் அவளுக்கு நெருங்கிய நண்பர்களாகி இருந்தனர். 

இன்று அவளது கனவுக்கே கேடு  வரும் போலிருக்கிறது. அவினாஷ் பதினெட்டு வயதினை நெருங்கி வருகிறான். அவனுக்கு பட்டம் கட்டிவிட்டால் அபிராம் என்ன செய்வான்? 

அதற்காக இன்னொரு ஸ்பெஷல் பூஜை. இந்த துர்தேவதை பயங்கர கொடூரமாம். மந்திரம் சொல்லி எழுப்பி விட்டால் உயிர் காவு வாங்காமல் போகாதாம். ஐந்து நாட்கள் இரவும் பகலும் பூஜை செய்ய வேண்டி இருக்கிறது. நாளை அவினாஷ் விமானத்தில் பயணம் செய்கிறானாம். விமானத்தில் அவனுக்கு ஏதாவது நேர்ந்தாலும் பரவாயில்லை. இல்லை விமானமே கிராஷ் ஆனாலும் அவளுக்கு கவலை இல்லை. அவள் தொடங்கிய போரில் அபிராம் வெற்றிக்கொடி  நாட்ட  வேண்டும். அவளது கனவுகள் அவள் மகன் மூலம் நிறைவேற வேண்டும். 

 

error: Alert: Content selection is disabled!!