செம்பருத்தி – 40-2

வீட்டில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை.  வீடு முழுவதும் விளக்கேற்றினாள். கோழியை அறுத்து அது துடிதுடித்து அடங்குவதை பார்த்திருந்தாள். பின்னர் அதன் தலையைத் திருகிப் போட்டுவிட்டு, எழுதி வைத்திருந்த மந்திரங்களை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தாள். 

எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்த தெய்வத்திற்கு ஆகாதாம். அதனால்தான் மின் இணைப்பைத் துண்டித்து அகல்விளக்கு ஏற்றி இருக்கிறாள். செல்போன் எல்லாவற்றையும் எடுத்து மூடி வைத்துவிட்டாள். 

அபிராமைப் பார்க்கப் போவதாக சுகுமாரனிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிட்டு தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.அபிராமோ ஸ்விசர்லாந்து சென்றிருக்கிறான். கேளிக்கைகளில் ஈடுபடுவதில் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவே மாட்டான். 

அப்பாடா மந்திர உச்சாடனத்தை செய்யலாம். மூன்று நாட்கள் தொடர்ந்து சொல்லவேண்டும். 

மந்திரத்தை ஆரம்பித்த பொழுதே அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது. இருந்தும் உச்சஸ்தாயில் தொடர்ந்து கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரம் சென்றது. 

யாரது, யாரோ நிழல் உருவம் போலத்  தெரிகிறதே. 

இல்லை இதெல்லாம் மனப்பிரமை. இப்படித்தான் மாய உருவங்கள் தெரியும், பயப்படுத்தி மந்திரங்கள் சொல்வதைத் தடுக்கும்  என்று நம்பூதிரி சொல்லி இருக்கிறான். 

 

ஹ்ரீம், ஹம்… ஹக்… தொடர்ந்தாள். 

என்னவோ அடைக்கிறதே. உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. அப்படியே நெஞ்செல்லாம் அடைத்தது. 

மலர்களைத் தூவ முடியவில்லை. ஏனென்றால் கைகளைத் தூக்க முடியாத அளவுக்கு பாரமாய் இருந்தது. தோள்பட்டை வலித்தது. வியர்வையில் உடலெல்லாம் நனைந்தது. தாகத்தால் நா வறண்டது. 

யார்.. யாராவது இருக்கிறீர்களா?  யாருமே இல்லையே… ஒரு வாய் தண்ணீர் தாங்களேன். 

இதற்கு மேல் அவளால் தாங்க முடியாது. ஒரு வாய் தண்ணீராவது கண்டிப்பாகத் தேவை. மந்திரத்தை நிறுத்திவிட்டு எழுந்து நிற்க முயன்றாள். அவளால் முடியவில்லை. தவழ ஆரம்பித்தாள். அப்படியே தவழ்ந்து தவழ்ந்து செல்வதற்குள் அப்படியே ஓரிடத்தில் அவளது அசைவு நின்றது. 

மந்தாகினி அவள் ஆசைப்பட்டது போல அரண்மனையில், அள்ள அள்ளக் குறையாத செல்வங்களுக்கு மத்தியில், ஒரு வாய் தண்ணீர் தர ஆளின்றி அனாதையாக செத்துப் போனாள். அவள் இறந்ததைக் கூட  மூன்று நாட்கள் கழித்து வந்த வேலைக்காரர்கள் கதவை உடைத்துத்தான் கண்டுபிடித்தார்கள். 

ந்தாகினியின் வாழ்க்கை இப்படித்தான் முடிந்தது. அவளது இப்போது அவளது பேராசையை, தாய்ப்பாசம் மிக்க அபிராம் தொடரப் போகிறானா? இல்லை உண்மையை உணர்ந்து நியாய புத்தியுடன் நடக்கப் போகிறானா? என்ற கேள்வி அங்கிருந்தவர்கள் பார்வையில் இருந்தது. 

அபிராம் விக்கித்து உட்காந்திருந்தான். அவனே அறியாத அவனது வாழ்க்கையின் பக்கங்கள் லீலாம்மாவின் உதவியால் அவன் கண்முன் விரிந்து நின்றது. 

 

இதைப் பொய் என்று அவனால் மறுக்க முடியாது. ஏனென்றால் சுகுமாரன், சுதர்சன், லீலாம்மா என்று அவனது நலம் விரும்பிகள் எல்லாரும் அதில் பங்கு பெற்று இருக்கிறார்கள். 

லீலாம்மாவின் ஆதாரங்கள் அனைத்தும் புரட்டு என்று ஒதுக்க முடியாத அளவுக்கு பலமானவை. மங்கை, நாகேந்திரன் திருமண விவரமே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இருந்தது. 

அனைத்திற்கும் மேலாக அவனது அன்னை இறந்த விதம். அவள் பாகமங்கலத்து அரச பதவியின் மேல் கொண்டிருந்த வெறி இவை அனைத்தும் உண்மை என்று அவனது நியாய புத்தி அடித்து சொன்னது. 

ஒருவன் மகளின் பிழையை பொறுத்துக் கொண்டு தண்டிப்பான். மனைவியின் பிழையை ஏற்றுக் கொண்டு கண்டிப்பான். ஆனால் இங்கு இவன் தாயே பிழையாகிப் போனாளே. இதனை எப்படி ஜீரணிப்பான்?. 

அபிராமின் யோசனையைக் கண்டு துணுக்குற்ற காவ்யா வாயைத் திறந்தாள் “இதுக்கெல்லாம் ஆதாரம் தாங்க பாக்கலாம். ஆதாரத்தை என் கண்ணு முன்னாடி காமிங்க. அதுக்கப்பறம் பேசுங்க”

“உன் கண்ணு முன்னாடி இருக்குற லீகல் டாக்குமெண்ட்ஸ், சுதர்சனோட ஒப்புதல் வாக்குமூலம் இத்தியாதி இத்தியாதி இதெல்லாம் என்ன காவ்யா?” என்றாள் செம்பருத்தியும் கடுப்புடன். 

“அதெல்லாம் நான் நம்ப மாட்டேன். சுதர்சன்னு ஒரு ஆள். என்னவோ கிறுக்கினா அதெல்லாம் உண்மை ஆயிடுமா? இது மாதிரி ஆயிரம் லீகல் டாகுமெண்ட்ஸ் நானே தயாரிச்சுத் தந்திருக்கேன். முதல்ல உங்களுக்கெல்லாம் மலையாளம் தெரியுமா? எங்கத்தை மலையாளத்தில் நம்பூதிரிக்கு எழுதினதாவும், மங்கை கல்யாணத்தைக் கெடுக்க எழுதின மொட்டைக் கடுதாசின்னும் சொல்றதை நான் நம்ப மாட்டேன்”

“சேச்சிக்கு மலையாளம் எழுத படிக்க தெரியும்”

“இந்தம்மாவே மங்கையோட கையாள். இந்தம்மா சொல்றதை எல்லாம் சாட்சியா எடுத்துக்க முடியாது. எங்கத்தை பத்தரை மாத்துத் தங்கம். அதை மட்டும் மனசில் வச்சுக்கோ அபிராம். இவங்க சொல்றதெல்லாம் அக்மார்க் பொய்”

 

error: Alert: Content selection is disabled!!