“எல்லாரும் இங்கிருந்து போங்க. ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கத்தினான் அபிராம்.
உடனே அனைவரும் அங்கிருந்து அகன்றார்கள்.
வெளியே வாசலில் தயங்கி நின்றாள் ராதிகா. “அவரை இந்த மாதிரி நிலைல தனியா விட முடியாது”
“ஹீ நீட்ஸ் சம் டைம் டு டைஜஸ்ட் தி ட்ரூத். நான் இங்க கேமிரா செட் பண்ணி வச்சுட்டேன். நம்ம பக்கத்து ரூமிலிருந்து மானிட்டர் பண்ணலாம். ஏதாவது எமர்ஜென்சின்னா அடுத்த வினாடி இங்க இருப்போம்” என்று சொல்லி ராதிகாவை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றாள் செம்பருத்தி.
தான் நம்பி சாய்ந்தது தாயின் மடி என்று நினைத்தேனே அது படமெடுத்து ஆடும் கருநாகத்தை தலை என்று சொல்கிறார்களே. மனம் நொறுங்கி அமர்ந்திருந்தான்.
அவனது நியாய புத்தி இதுவரை மங்கையோ அவினாஷோ ஒரு முறை கூட அவனைக் காயப்படுத்தவோ, தோற்கடிக்கவோ முயன்றதில்லை என்று சொன்னது. என்னைக் கொலை செய்ய முயன்றார்கள் என்றால் இரண்டு முறை என் உயிரைக் காப்பாற்ற அவசியமில்லையே. என்னைப் பாதுகாக்கத்தானே இத்தனை ஆட்கள் சுற்றி காவலாய் நிற்கிறார்கள்.
அவனது அம்மா அனாதையாய் இறந்த அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்க மனமில்லாமல் இவன்தான் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்கிறானே தவிர, அவர்கள் யாரும் கொச்சி அரண்மனையில் தங்க வேண்டாம் என்று சொன்னதில்லை. இன்று வரை அவனுக்காக அரண்மனையைப் பராமரித்தே வருகின்றனர்.
அவனது தந்தை உழைத்து சேர்த்த சொத்து முழுவதும் இன்றும் அபிராமின் பெயரில்தான் இருக்கிறது. அதில் வரும் வருமானத்தை இந்த நிமிடம் வரை அவன்தான் அனுபவித்து வருகிறான். அதுமட்டுமில்லை இப்போது மங்கையின் சொத்தான இந்த வீட்டினைக் கூட அவன்தான் அனுபவிக்கிறான். உரிமை உள்ளவனோ ஒருதரம் கூட இந்த வீடு என்னுடையது. என் அம்மாவின் சொத்து என்று சொன்னதே இல்லை.
அவினாஷை எத்தனை முறை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி இருக்கிறேன். ஆனால் இதெல்லாம் அவினாஷுக்கு அல்லவா உடமையானது. என்ன ஒரு பைத்தியக்காரத்தனத்தை செய்திருக்கிறேன். எனக்கு உடமை இல்லாதது சொந்தமில்லாததை சொந்தக்காரர்களைத் துரத்திவிட்டு வெட்கமில்லாமல் அனுபவித்து இருக்கிறேனே.
அவனது மனத்தினைப் போன்று இருண்டிருந்த வானத்தை வெறித்தான்.அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
வீடியோ வழியே அவனை கவனித்துக் கொண்டிருந்த ராதிகாவின் கண்களிலும் கண்ணீர். எழுந்து அபிராமை செல்ல முயன்றவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தாள் செம்பருத்தி.
“அவர் அழட்டும் ராதிகா… அழுகை ஒரு வடிகால். எத்தனை நாள் ஆம்பளை சிங்கமா அழாம இருன்னு சொல்லி சொல்லி ஆண்களின் உணர்ச்சிகளை அடக்கி வச்சுப் பழக்கப்போறோம். ஒரு நாள் அழுதுட்டா அவரது கவலை பாரம் எல்லாம் தீர்ந்துடும்”
ராதிகா அமர, காளியம்மாவிடம் அவளுக்கு ஒரு கப் டீ ஒன்றைப் போட்டு எடுத்து வரச் சொன்னாள்.
“ராதிகா நான் சமீபத்தில் ஒரு ஆர்டிகல் படிச்சேன். அதில் சொல்லப்பட்ட சில சம்பவங்கள் நாம் பேசவே தயங்குறது. அது என்ன சொல்லுதுன்னா உலகத்தில் மிகவும் உயர்ந்த வரம் என்ன தெரியுமா தாய்மை. தாய்மைன்னா குழந்தை பெத்துக்குறது மட்டுமில்ல. ஒரு குழந்தையை நல்லவனா தயார்ப்படுத்தி உலகத்துக்குத் தர்றது.
பலர் அம்மா வேலையை அழகா செஞ்சாலும் சிலரால் இதை சரிவர செய்ய முடியல. சுயநலம், தன்னலம் பிடிச்ச சில அம்மாக்கள் இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஒரு தனிப்பட்ட உயிராவே நினைக்கிறதில்லை. மாறா தங்களோட கைப்பாவையாத்தான் ட்ரீட் பண்றங்க.
இதுக்கு ஒரு உதாரணம் எங்க அத்தை. உங்களுக்கு கஷ்டப்பட்டு சாப்பாடு போட்டேன், துணிமணி வாங்கித் தந்தேன், பீஸ் கட்டினேன், கல்யாணம் பண்ணித்தந்தேன் உங்க அப்பா கிட்ட எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு உன்னை வளர்த்தேன். நீ இருக்குற வாழ்க்கை நான் போட்ட பிச்சை. அப்படின்னு சொல்லி சொல்லிக் காமிப்பாங்க.
இதுனால பிள்ளைகள் அவங்களுக்கு கடமைப்பட்டவங்களாகவும் அம்மா சொல்றதை எல்லாம் கேட்கலைன்னா தப்பு செய்றோம் என்ற குற்ற உணர்ச்சியும் உண்டாகிடும்.
அத்தை பொண்ணு ரொம்பவே பாவம். அம்மா சொல்றதை அப்படியே கேட்டால் அவங்க வீட்டில் தகராறு வரும். ஆனால் இந்த அம்மாக்களுக்கோ பெண்களின் கஷ்டம் இயலாமை பத்தி எல்லாம் கவலை இல்லை.
“பாரு பாரு கல்யாணம் ஆனதும் பெத்து வளர்த்த தாய் தந்தையை மறந்துட்டு வீட்டுக்காரன் வீடே சொர்க்கம்னு சொல்லுது. நாங்கதான் உனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தோம். அந்த நன்றி இருக்கா பாரு” என்று வார்த்தையால் குத்திக் கிழிக்கத் தயங்க மாட்டாங்க.
அவங்களைப் பொறுத்தவரை தான் நினைக்கிறது நடக்கணும். அப்படி நடக்கலைன்னா ஊரு பூரா பிள்ளைகளைப் பத்தி குறை சொல்லிட்டு வருவாங்க.
மந்தாகினியும் டாக்சிக் மதர்தான். அவங்களோட விஷத்தன்மை யாருமே கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியாதது. எப்படின்னா தனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத்தான் அபிராம் வாழணும்னு பல குறுக்கு வேலைகளை செஞ்சாங்க. அதாவது அவங்களோட வாழ்க்கையின் தொடர்ச்சியாத்தான் அபிராமின் வாழ்க்கையைப் பாத்தாங்களே தவிர, அவருக்குன்னு ஒரு மனசு இருக்கு ஒரு ஆசை இருக்குன்னு நினைக்க மறுத்தாங்க. தனக்குப் பிடிக்காதவர்களை அபிராமின் எதிரின்னு சொல்லி சொல்லி பதிய வச்சாங்க.
கடைசில அபிராம் தனக்கு ஆக்சிடென்ட் ஆனதும் யாரை நம்புறது? எது உண்மைன்னு திக்குத் தெரியாம நின்னார். இப்படி அவரை தத்தளிக்கும்படி வச்சதும் அவரோட அம்மாதான்.
மந்தாகினி மட்டும் நினைச்சிருந்தால் ஒழுங்கா படிச்சு வேலைக்கு போய் ஒரு வாழ்க்கையை அமைச்சிருந்திருக்கலாம். ஒருவேளை நாகந்திரனுடன் வாழ்க்கை அமைஞ்சதும் இப்ப இருக்குற சொத்தே போதும்னு மங்கைக்கு வேற இடத்தில் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். இது எதுவுமே அவங்க செய்யல. அவங்களோட கஷ்டமெல்லாம் பேராசையின் விளைவுதான்.
தாய்மை எத்தனை உயர்வுன்னு பேசுற நம்ம, இந்த டாக்சிக் மதர்ஸ் பத்தி பேச ரொம்பவே தயங்குறோம். இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு தெரிஞ்சால்தானே ஒவ்வொருத்தரும் நம்ம போகும் பாதை தவறுன்னு உணர முடியும்”
செம்பருத்தி சொன்னது அனைத்தும் சத்தியமாகப் பட்டது ராதிகாவுக்கு. காசுக்காக, தான் பெற்ற குழந்தையைத் தகாத செயலுக்குப் பயன்படுத்தும் எத்தனை பெற்றோர்களை சேவை மையத்தில் பார்த்திருக்கிறாள். அவர்கள் டாக்சிக் பேரெண்ட்ஸ் மட்டுமல்ல டாக்சிக் ஹியூமன்ஸ்.
இரவு முழுவதும் அவர்கள் இருவரின் பேச்சில் கழிந்தது.
நள்ளிரவுக்கு மேல் அவினாஷ் மெதுவாக அங்கு வந்தான் “அபிராம்”
“அவருக்கு மருந்து கொடுத்து தூங்க வச்சாச்சு. தூக்க மாத்திரை அவரது வலிகளுக்கு நிவாரணியா இருக்கும்”
அவனை அறைக்கு சென்று பார்த்துவிட்டு வந்த அவினாஷ் “செம்பருத்தி நான் கொஞ்சம் தூங்கணும்” என்றான்.
“பக்கத்து ரூமை ரெடி பண்ண சொல்றேன் அவினாஷ்”
“இல்ல இங்க தூங்கினா அபிராம் கண்ணுல காலைல பட்டா ரொம்ப கில்டியா பீல் பண்ணுவான்”
“ஹோட்டலுக்கு போறிங்களா”
“இல்லை இப்ப நான் அவன் பக்கத்துலயே இருக்கணும். ஆனால் அவன் கண்ணில் படாம தள்ளி இருக்கணும். அதனால கார்ல தூங்குறேன். ஏதாவது தேவைன்னா எழுப்பிவிடு”
“நல்லாருக்கே நீ கார்ல தூங்குவியா. கீழ ஒரு ரூமை ரெடி பண்ணித் தரேன். தூங்கு” என்றார் சேச்சி கண்டிப்புடன்.
ஊசி விழுந்தால் கூட கேட்கும் அந்த அமைதியான இரவில் பக்கத்து அறையில் தூக்கக் கலக்கத்தில் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிராமின் கண்களில் இருந்து அவனையும் அறியாமல் நீர் வழிந்தது.