நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
நாகேந்திரன் அவன் உடல் தேறும் வரை அங்கிருந்து விட்டுத்தான் சென்றார். மங்கையும் நாகேந்திரனும் அவனை அப்படியே விட்டு விடாமல் பாதி நாள் கொச்சியிலும் மீதி நாட்கள் மும்பையிலும் கழிக்கின்றனர். இருவருக்கும் கடமைகள் இருக்கிறதே. அதை அப்படியே விட்டு விட முடியுமா?
அபிராம் மாடியில் இருக்கும் மற்றொரு பெரிய அறையை தயார் செய்து அவர்கள் உபயோகத்திற்காக கொடுக்கும்படி கூறிவிட்டான். அனைவரும் கட்டி அணைத்து அன்பு மலர்களே என்று பாட்டு பாடவில்லை. ஆனாலும் ஒருவரின் மீது மற்றவருக்கு இருக்கும் அக்கறையை உணர்ந்தே இருந்தனர்.
அவர்கள் இல்லாத சமயத்தில் அவினாஷ் இவனை கவனித்துக் கொள்கிறான். அவனை மட்டும் விடுதியிலேயே தங்கச் என்று சொல்லிவிட்டான் அபிராம்.
அதற்கு அவன் சொன்ன காரணம்தான் வியப்பு
“இவன் செம்பருத்தியை பாத்தாலே உருகுறான். ஹைபியையும் ஓவியாவையும் ஒரு ஜெயலலிதா மாதிரி, இந்திராகாந்தி மாதிரி இரும்புப் பெண்மணியா உருவாக்கப் போறேன். அதுக்கு இவன்தான் வில்லன்” என்ற தமையனைப் பார்த்து பல்லைக் கடித்தபடி
“இவன் போடுற கட்டுப்பாட்டை எல்லாம் பாத்தா அவங்களை ஔவையாராத்தான் மாத்தப் போறான் ராதிகா” என்று சொல்லிவிட்டு தனது பைக்கில் கிளம்பினான் அவினாஷ்.
அவ்வையார் யார் என்று கூகிள் செய்து படித்துவிட்டு நிமிர்ந்தவனின் கண்களில் யோசனையாய் நின்றுக் கொண்டிருந்த ராதிகா பட்டாள்.
“உனக்கு என்ன யோசனை”
“அபி ஊருக்குத் தான் உபதேசமா… நானும் போயி கொச்சில தங்கிக்கிறேன். அவனாவது ஒரே மாதிரி காதலோட செம்பருத்தியைப் பாக்குறான். ஆனா நீ உன் கொள்ளிக்கண்ணை வச்சு என்னைப் பல மாதிரி பாக்குற”
“ஹே ஜங்க்லி ராணி. ஊருக்குத்தான் உபதேசம். நமக்கெல்லாம் இல்லை. இதுதான் முதல் லெசன். இப்ப என் பக்கத்தில் வந்தா அடுத்த லெசன் ஆரம்பிச்சுடலாம்”
“உடம்பு சரியில்லைன்னு காரணம் சொல்லியே ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குற. உனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டேன்”
முகத்தை சுருக்கிக் கொண்டு
“ரொம்ப தலை வலிக்குது ஜங்க்லி கொஞ்சம் அமுக்கி விடுறியா” என்று முகம் சுருங்கி கேட்டவனிடம், தான் முதலில் சொன்னதை அறவே மறந்து
“இதோ வந்துட்டேன்… இங்கதானே வலிக்குது” என்று ஓடினாள்.
அடுத்த சில நாட்களிலேயே சேச்சியை அழைத்து, ராதிகாவைத் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொல்லிவிட்டான்
“ரொம்ப சந்தோஷம் அபி நீ வழி தவறுற காலத்திலேயே உனக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா இந்நேரம் உன் பையன் டென்த் படிச்சிட்டு இருந்திருப்பான்” என்று கிண்டல் செய்துவிட்டு
“சரி பெரியய்யாகிட்ட சொல்லி நல்ல நாள் பாக்கலாம்” என்றார்.
“ஏன் இந்த வாரத்தில் நல்ல நாள் இல்லையா?”
“அவசரத்தைப் பாரு. பாகமங்கலம் ஜமீன் கல்யாணம்னா சும்மாவா? அழைப்பிதழ் ரெடி பண்றதிலிருந்து சாப்பாடு வரை எத்தனை வேலை இருக்கு. குறைஞ்சது ஆறேழு மாசமாகும்”
“ஆறு மாசமா? அப்ப ரெண்டு முகுர்த்தமா பாருங்க”
“எதுக்கு ரெண்டு முகுர்த்தம்? அவினாஷ் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டான்”
“அவினாஷுக்கா முகுர்த்தம் பாக்குறேன். நான் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் திருத்தல. ஆறு மாசம் கழிச்சு ரெண்டு முகுர்த்தமா பார்த்தா கல்யாணமும் வளைகாப்பும் சேர்த்து வச்சுடலாம். ஒரே செலவா முடிஞ்சுடும். இன்னும் ரெண்டு மூணு மாசம் தள்ளிப்போனா கல்யாணமும் என் பொண்ணோட பேர் சூட்டு விழாவும் சேர்த்து வச்சுடலாம்”
“அபிராம் இதெல்லாம் எப்ப நடந்தது? அதுவும் வயசுக்கு வந்த பிள்ளைங்க வீட்டில் இருக்காங்க… அடங்க மாட்டியா? பொறுப்பு இருக்கா? அடுத்த முகுர்த்தத்திலேயே கல்யாணத்தை பண்ணி அடக்கி வைக்கிறோம். கல்யாணம் பண்ண அரண்மனை ரெடியாகணுமே… ” பட படவென ஆரம்பித்தார் லீலாம்மா.
“லீலாம்மா… வெளிய எங்கயும் வேண்டாம். இந்த வீட்டிலேயே கல்யாணம். லீலாம்மாதான் என் சார்பில் எல்லா வேலையும் முடிக்கணும்”
தலையில் குட்டிவிட்டு “ஏன் உனக்கு வேற வேலை இருக்காக்கும். கல்யாணம் முடியுற வரைக்கும் ராதிகாவை செம்பருத்தி ரூமில் தங்கப்போறா… “
அடுத்த சுப முகூர்த்தத்திலேயே அபிராமின் விருப்பப்படி மிக எளிமையாக அந்த வீட்டிலேயே திருமணம் நடந்தது. மங்கையும் நாகேந்திரனும் தாலி எடுத்துக் கொடுக்க, அதனை ராதிகாவின் கழுத்தில் கட்டினான்.
ஒரு சின்ன பிரசண்ட் என்று ஆரம்பித்த மங்கையிடம் “மன்னிச்சுக்கோங்க, அம்மா உங்க கிட்ட இருந்து நிறைய பறிச்சுட்டாங்க. இனிமேலும் எதுவும் வாங்குறதுக்கு எனக்கு விருப்பமில்லை. பாகமங்கலம் சொத்தாகட்டும் வாரிசு பட்டமாகட்டும் எதுவுமே எனக்கு உரிமை இல்லாதது.
அப்பா, நீங்க உங்களோட சம்பாத்தியத்தில் எனக்கு எழுதி வச்ச சொத்துக்களைக் கூட சரிபாதியா பிரிச்சு அவினாஷுக்கும் எழுதி வச்சிருங்க. ஏன்னா அதில் அவனுக்கும் பங்கிருக்கு”
தான் நாகேந்திரனின் மகன் என்று நியாயமாக நடந்து உணர்த்திய பெரிய மகனைப் பெருமையுடன் பார்த்தார் தந்தை.
“அவருக்கு மட்டுமில்லை அபி. எனக்கும் நீங்க ரெண்டு பேரும் வாரிசுகள்தான். பாகமங்கலத்து தொழில் பொறுப்புக்களை அவினாஷ் கவனிக்கட்டும். நாங்க நடத்திட்டு வரும் ட்ரஸ்ட்டின் பொறுப்பை ஏத்துக்கும் தகுதி உனக்கு மட்டும்தான் இருக்கு. காயம்பட்ட ஒவ்வொருத்தரும் உன் நிழலில் இந்த வீட்டில் நிம்மதியா இருக்காங்க. இந்த நிம்மதியையும் எதிர்காலத்தையும் நீ எல்லா குழந்தைகளுக்கும் கொடு”
***
அபிராம் அவசரமாக கையெழுத்து போடவேண்டிய கடிதங்களை சரிபார்த்து ராதிகாவிடம் தந்துவிட்டு
ஏதோ நினைவு வந்தவனாக “ஹைபி எங்க? காலைல இருந்து ஆளே காணோம்.” என்றான்.
“அவ காலேஜுக்கு போயிருக்கா. ஹால் டிக்கெட் வாங்கணுமாம். அடுத்த வாரம் செமஸ்டர் ஆரம்பிக்குதுல்ல” என்றாள் ராதிகா.
“சரி அவினாஷ் எங்க போனான்? இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அவன் நேரடியா கவனிச்சுக்குற வேலைகளாச்சே” என்று கேட்டான்
“செம்பருத்தி ஹால் டிக்கெட் வாங்கணும்ல, சாரதி வேலை பார்க்கிறதுக்கு போய் இருக்கார்” என்றாள் ராதிகா.
“வீட்ல கோபன் இல்லையா?”
“டியூப் லைட்டாட்ட பேசாதீங்க அபி. ரெண்டு பேரும் இதுதான் சாக்குனு ஊர் சுத்த போயிருக்காங்க.அப்ப கோபன கூட்டிட்டா போவாங்க”
“சரி, ஹைபி வந்த உடனே என்ன பார்க்க வர சொல்லு.அவ என்னைப் பார்க்க வந்து அஞ்சு நிமிஷம் கழிச்சு அவினாஷை பாக்க வரச் சொல்லு”
வீட்டுக்கு வந்த செம்பருத்திக்கு அபிராமிடமிருந்து சராமாரியாகத் திட்டு விழுந்தது
“பரீட்சைக்கு படிக்கணும்னு அறிவு வேண்டாம். அவன் கூட ஊர் சுத்துனா படிப்புல எப்படி கவனம் போகும். பரிட்சை முடியறதுக்குள்ளார இன்னொரு தடவை உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். உன்னைத் தொலைச்சிட்டேன்” என்றான்.