Skip to content
எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு.
திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்லும் தொடர்வண்டியில் காலை 8 மணிக்குக் கிளம்பினால் மதியம் மூன்று மணிக்குள் எர்ணாகுளம் சென்றுவிடலாம். அங்கிருந்து அவளைக் கூட்டிச் செல்லக் கார் வருமாம். அதைத்தவிர செலவுக்குப் பணம் வேறு தந்திருந்தனர். ஒரு வருடமாவது அங்கு கண்டிப்பாகப் பணி புரிய வேண்டும் என்று ஒப்பந்தம் வேறு.
“சார் அதுக்கு மேல இருக்க முடியாதா?” நைசாக வக்கீலிடம் கேட்டாள்.
“ஏம்மா அப்படிக் கேக்குற?”
“இல்லை சார். வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். மேலே ஏதாவது யூனிவர்சிட்டில ஆன்லைன்ல எம். காம் படிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அது முடிக்க ரெண்டு வருஷமாவது ஆகும். அதான்”
பெருமூச்சு விட்டார். “இங்க பாரும்மா… அந்த வீட்டில் வேலை செய்றவங்க மாசக்கணக்கில் தான் வேலை செய்வாங்க. ஆறு மாசம்தான் இது வரைக்கும் நடந்த மிகப் பெரிய சாதனை. நீ ஒரு வருஷம் தாண்டிட்டாலே பெரிய விஷயம்”
“எல்லாரும் இப்படித்தான் விடுகதை மாதிரி சொல்றிங்க. ஆனால் என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டிக்கிறிங்களே” அலுத்துக் கொண்டாள் செம்பருத்தி.
“நீ போற வீட்டில் இருக்கும் ஆண்மகன் அப்படி. கடிச்சுக் குதறி எடுப்பான். பயங்கர கோவக்காரன்”
“எதையும் வச்சு கூல் பண்ண முடியாதா?”
“பண்ணலாம். ஆனால் கூல் பண்ண அவன் கேக்குற விஷயங்கள் அவன் குடும்பத்தைக் கொதிக்க வைக்கும். அதனால விஷயம் என்னன்னா, உன்னை வேலைக்கு சேர்த்தவங்க சொல்றபடி கேட்டா அவனுக்குப் பிடிக்காது. அவன் உன்னை வேலையை விட்டுத் தூக்குற அளவுக்கு டார்ச்சர் பண்ணுவான். அவனுக்குப் பிடிச்சதை நீ செய்ய ஆரம்பிச்சா, அடுத்த நிமிஷமே வீட்டில் இருக்குறவங்க வெளிய அனுப்பிடுவாங்க”
“அப்ப கன்பார்ம்டா என்னை எப்படியாவது வெளிய அனுப்பிடுவாங்கன்னு சொல்றிங்க ”
“அப்படி நடக்காம பாத்துக்க வேண்டியது உன் சாமர்த்தியம்” என்று சுலபமாக சொல்லிவிட்டார்.
அவர் அவளது நலனில் அக்கறை உள்ளவர். தன்னை மோசமான இடத்திற்கு அனுப்பமாட்டார் என்ற நம்பிக்கை அவளுள் ஆழமாக இருக்கிறது.வக்கில் போலவும் மங்கிலால் போலவும், எப்போதோ பார்த்த அவினாஷ் போலவும் சில ஆண்கள் இருப்பதால்தான் அவளுக்கு ஆண்கள் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
“நீயும் வயசுப்பொண்ணு, முதல் தடவை வெளியூருக்குப் போற. யாரையும் நம்பிடாதே. பாத்து பாதுகாப்பா இருந்துக்கோம்மா” என்று சொல்லியே அவளை ரயிலில் ஏற்றிவிட்டார். அவளுக்காக, அவள் உபயோகத்திற்கென்று புத்தம் புதிய சாம்சங் செல்போன்.
மாரியம்மா அக்கா ஆறு மாதங்களுக்கு வேண்டிய சத்து மாத்திரைகளைத் தந்திருந்தார். அது தவிர உணவுப் பழக்கங்களை மாற்றச் சொல்லி ஒரு பெரிய பேப்பரில் அவள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை லிஸ்ட் போட்டுத் தந்தார்.
“அக்கா என்னைப் போயி சாப்பாட்டைக் குறைன்னு சொல்றிங்களே. இதெல்லாம் என்னால முடியுமாக்கா?”
“நல்லா பாரு, சாப்பாட்டைக் குறைன்னு சொல்லல, அரிசி கோதுமை மாதிரி மாவு பொருட்களைக் குறைன்னு சொல்லிருக்கேன். காய்கறி சாலட் சாப்பிடு, கொண்டைக் கடலை மாதிரி பயிறு வகைகளை எடுத்துக்கோ. வறுத்து பொரிச்சு சாப்பிடாம காய்கறிகளையும் கீரையையும் நீராவியில் அவிச்சோ நல்லா கடைஞ்சோ பருப்போட கூட்டியோ சாப்பிடு”
சரி என்று தலையாட்டினாள். அங்கு போனவுடன் என்ன நடக்கப் போகிறதோ தெரியலையே. தனியாக ஒரு ஜாகை தந்து இவளையே சமைத்து சாப்பிடச் சொல்வார்களோ இல்லை நாங்க சமைக்கிறதில் இருந்து ஒரு கவளம் போடுறோம் கேட்ச் பண்ணிட்டு போ என்று சொல்கிறார்களோ யாருக்குத் தெரியும்?
“மண்டைய மண்டைய ஆட்டாம, நாக்கை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா. தினமும் ஒரு இருபது நிமிஷம் நட. இதெல்லாம் செஞ்சுட்டு மாசத்துக்கு ஒருக்க உன் எடையை எனக்கு மெஸேஜ் பண்ணு”
இவர்கள் காட்டும் அன்பில் ஒரு துளி கூட அந்தத் தெருவில் அவளது உறவினர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் காட்டவில்லை. ஜலப்பிரியா வீட்டில் அங்கு குடி வந்ததும்
“நீங்க யாரு? எதுக்கு இங்க வந்திங்க” என்று விசாரணையை மட்டும் அவள் மாரியம்மா அக்காவைப் பார்க்கச் சென்ற பொழுது செய்திருக்கின்றனர்.
மாரியம்மா கூட “பேசாம படிக்கப் போறேன்னு எல்லாருகிட்டயும் சொல்லிடு. வேலைக்கு சொன்னா இன்னம் ஏதாவது குட்டையைக் குழப்புவாங்க” என்று சொல்லி இருந்ததால் அதையே தன்னைப் பற்றி விசாரித்த தெரு மக்களிடம் ஜலப்பிரியாவும் சொன்னாள்.
“படிக்கப் போறேன்னு சொன்னால் ஏண்டி குட்டையைக் குழப்புறாங்க?”
“வீட்டை வாடகைக்கு விட்டுட்டு அந்த காசில்தான் படிக்கப் போறான்னு ஏதோ ஒரு ஊகத்துக்கு வந்திருப்பாங்க. இப்ப வாடகைக்கு விடாதேன்னு உன்கிட்ட தகராறு பண்ணி பீஸ் கட்ட காசு கேட்டு அவங்க கிட்ட நின்னுட்டேன்னா?”
தூரத்தில் தெரிந்த அவளது அத்தை வீட்டைப் பார்த்தபடி
“ஆமா உன் அத்தை வீடு இங்கத்தானே இருக்கு. அப்பறம் ஏண்டி அவங்க மகன் ரமேஷ் உங்க வீட்டில் வந்து தங்கினான்?”
“நாங்க தோட்டத்து வீட்டில் இருக்கும்போது அத்தை பக்கத்து ஊரில் தான் இருந்தாங்க. ரமேஷ் அத்தான் பாதி நேரம் எங்க வீட்டில் தான் இருப்பாரு, சே! அந்த நாய்க்கு என்ன மரியாதை இருப்பான். அத்தை வீட்டில் பயங்கர பிரச்சனையாகி மாமா வாடகை கட்டாம காலி பண்ண சொல்லிட்டாங்க”
“கிட்டத்தட்ட எங்க வீடு மாதிரி திக்கில்லாம நின்னாங்க. மேல சொல்லு”
error: Alert: Content selection is disabled!!