எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு பெண்ணை பாராமல், பழகாமல் அவன் நேசிப்பது என்பது எத்தனை அதிசயமானது?! அதற்கான சந்தர்ப்பமே இல்லையே! அப்படி உதித்த காதல் எத்தனை அற்புதமானது? அந்தக் காதல் அவளை அவனை நோக்கி நகர்த்தும்! அவனிடம் கொண்டுவந்து சேர்க்கும்!
அப்படிக் கொண்டுவந்து சேர்க்கையில் அவன் மனதை உணர்த்துவான்! அவளைத் தன் சொந்தமாக்குவான்!
நெஞ்சம் உறுதி பூண்டது!
இரண்டு உள்ளங்கள் பேசிக்கொள்ளும் பரிபாஷை தானே காதல்! அவன் உள்ளத்தை அவள் உள்ளம் உணரும்!
ஆனால் எப்போது? மீண்டும் சிணுங்கிற்று நெஞ்சம்!
இதுவே அம்மம்மா அவனோடு இருந்திருந்தால்.. இப்போது திருமணத்தையே நடத்தியிருப்பார்.
அந்த நினைவு அவரின் கடைசி நாட்களை மனத்திரையில் படமாக விரித்தபோது, விழிகளை இறுக மூடிக்கொண்டான் நிரஞ்சன்.
அந்த நாட்களிலும் அவர்களின் தொழில் பொறுப்பு எல்லாம் அவனிடம் தான். ஆனாலும், அவரின் மேற்பார்வையின் கீழ் தான் இயங்கிக்கொண்டிருந்தான். அன்று, இந்தியாவிலிருந்து வந்த கப்பலில், அவர்களின் தொழில்சாலைக்கு தேவையான பொருட்கள் களவு போயிருந்தது.
எல்லோருமே திகைத்துப் போயினர். இதென்ன இன்று நேற்று நடக்கும் தொழிலா திடீர் என்று களவு போக. காலம் காலமாக நம்பிக்கையான மனிதர்கள் மூலம் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி.
அப்படியிருக்க… யாரை சந்தேகப்படுவது.. யாரிடம் கேட்பது.. எல்லோருமே வழிவழியாக அவனது தாத்தாவின் காலத்திலிருந்தே நம்பிக்கையோடு தொழில் புரிபவர்கள். தவறான இடத்தில் சந்தேகப்பட்டுவிட்டால் அவர்களின் நேர்மையை உடைத்ததாகிவிடும்.
எல்லோரும் செய்வதறியாது நிற்க, அந்தப் பதட்டமான சூழ்நிலையை சட்டென தன் கையிலெடுத்தான் நிரஞ்சன்!
நொடி கூடத் தாமதியாது துறைமுக பொறுப்பாளரை விசாரித்து, இந்தியாவுக்கு அழைத்து, அனைத்துப் பொருட்களும் ஏற்றப்பட்டதா என்று கேட்டு உறுதி செய்தான்.
வரும்போதே பொருட்கள் காணாமல் போயிருக்கிறது என்று தெரிந்ததும் அதிரடியாக களத்தில் அவனே இறங்கினான்!
உடனேயே விசை படகில் ஆட்களோடு கடலுக்குள் விரைந்தான். அவன் எதிர்பார்த்ததுபோல, கடலில் தான் திருட்டு நடந்திருந்தது. திருடியவர்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தனர், ஒரு சிறிய படகில்.
அவர்களை வளைத்துப் பிடித்தான். தொழில் அனுபவம் இல்லாத இளையவன் துணிச்சலாக இந்தளவு தூரத்துக்கு தங்களை துரத்தி வருவான் என்று கிஞ்சித்தும் எண்ணியிராதவர்கள் திகைத்து நிற்க, பொருட்களை விற்றவர்களே இதை செய்திருப்பது தெரிய வந்தது.
அவர்களும் நம்பிக்கையான மனிதர்கள் தான். அவனுடைய தாத்தா காலத்திலிருந்து இரு தரப்பினரும் நண்பர்கள். இது இளைய தலைமுறை விளையாடி இருந்தது. ஆட்களை கடலிலேயே மறித்து, பொருட்களை வாங்கியதோடல்லாமல் அவர்கள் வீட்டு பெரியவர்களோடும் கதைத்து, இனி இதுபோல் நடவாது என்கிற உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டே கரையை தொட்டான் நிரஞ்சன்.
தள்ளாத வயதில் கலக்கத்தோடு வீட்டில் காத்திருந்த அம்மம்மாவிற்கு, காதில் தேனென வந்து பாய்ந்தது பேரனின் துணிகர செயல்.
‘உங்கட பேரன் உங்கள மாதிரியே இருக்கிறானப்பா..’ கண்ணாடி பிரேமுக்குள் சிரித்துக்கொண்டிருந்த கணவரிடம் சொல்லிச்சொல்லி பூரித்துப்போனார்.
அவன் வீடு வந்தபோது, “நான் பயந்தே போனேன் ராஜா. எல்லாத்தையும் நீயே செய்ய வேணுமே? வேற யாரையாவது விட்டிருக்கலாம் தானே. இத்தனைபேருக்கு சம்பளம் குடுக்கிறம் இப்படி நீ ஒற்றை ஆளா நிண்டு செய்யவே?” என்றார் தவித்துப்போய்.
அவரின் கைகளை பற்றி, “நாங்களே நேரடியா இறங்கினாத்தான் சில விஷயம் நடக்கும் அம்மம்மா!” என்று அவன் சொன்னபோது,
“முதலாளியே இறங்கி வேல செய்தாத்தான் முன்னுக்கு வர முடியும்மா.” என்று அடிக்கடி சொல்லும் கணவனின் வார்த்தைகளை நினைவு படுத்திவிட்டதில் விழிகள் பனித்தன அவருக்கு.
“அம்மம்மா! என்ன இது? நான் இருக்கேக்க உங்களுக்கு என்ன பயம்? இனி இப்படி சும்மா பயந்து அழுறேல்ல? எனக்கு ஒண்டும் நடக்காது, எல்லாத்தையும் நான் பாத்துக்கொள்ளுவன். நீங்க நிம்மதியா இருங்கோ.. சரியா?” அணைத்து கண்ணீரை துடைத்துவிட்டு, பாசம் பாதி மிரட்டல் மீதியாக அவன் சொன்னபோது, பெருமையும் சந்தோசமும் தாளாமல் விம்மிவிட்டார் அந்த பெண்மணி!
“அம்மம்மா!” அவன் அதட்டியபோது,
“ஒண்டுமில்ல கண்ணா. இது சந்தோஷ கண்ணீர். இது போதும் எனக்கு. இது போதும்..” மனம் நிறைய சொல்லிக்கொண்டே போனார்.
தளர்ந்த நடையில் மிகவும் சோர்ந்து போகிறவரையே பார்த்திருந்தான் நிரஞ்சன்.
‘அம்மம்மாவ இன்னொருக்கா புல் செக்கப் செய்யோணும். இந்தமுறை அவ எவ்வளவு மறுத்தாலும் விடக்கூடாது.’ என்று நினைத்தவன், உடனேயே அவர்களின் குடும்ப டாக்டருக்கு அழைத்து அதற்காக ஒரு நாளையும் குறித்துவிட்டே தன்னுடைய அறைக்கு சென்றான்.
அடுத்தநாள் காலை, எப்போதும்போல் அவன் அவரை நாடிச் சென்றபோது, சாந்தம் தவழும் முகத்தில் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருக்க இறையடி எய்தியிருந்தார் அவர்.
நிஜத்தை ஜீரணிக்கவே முடியாமல் துடித்துப்போனான் நிரஞ்சன்.
முதல்நாள் மாலை சந்தோஷமும் பெருமையாக விம்மியவரே கண்ணுக்குள் வந்து நின்று சிரித்தார்.
அவரருகில் ஒரு கடிதம். காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. உள்ளம் துடிக்க அதை எடுத்து விரித்தான்.
சின்னக் கண்ணப்பா என்று ஆரம்பித்திருந்தார். அதிலேயே அவன் விழிகள் உடைப்பெடுத்தது.
என்ர உள் மனம் என்னவோ சொல்லுது எனக்கு. உன்ர தாத்தாவும் என்ன கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். இந்த கடிதத்த படிக்கிற நிலை வந்தா எதற்காகவும் நீ கலங்கக் கூடாது! அம்மம்மா போயிட்டாவே என்று அழக்கூடாது. நான் எந்தக் குறையும் இல்லாம சந்தோசமா தான் போறன். என்ர பேரன் அவன்ட தாத்தாவைப்போல் தனியாக நின்று எல்லாத்தையும் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை எனக்கு வந்தாச்சு. ‘இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்ளுவன். நீங்க ஓய்வா இருங்கோ..’ என்று நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை போதும். அத கேக்கத்தான் இவ்வளவு நாளும் இந்த உயிரை கையில பிடிச்சுக்கொண்டு இருந்தனான். கேட்டுட்டன்! அது போதும் எனக்கு! நான் எங்க போனாலும் உன்னோடதான் என்ர உயிர் இருக்கும். உன்ன நம்பி எத்தனையோ குடும்பங்கள் இருக்ககீனம். அவர்களை கடைசிவரைக்கும் கை விட்டுடாத! நீயும் சந்தோசமா இருந்து அவர்களையும் எந்த குறையும் இல்லாம பார்த்துக்கொள். உனக்கு எல்லாத்தையும் செய்த அம்மம்மா ஒரு கல்யாணத்த மட்டும் செய்து வைக்கேல்ல. ஏன் தெரியுமா? அது மட்டும் உனக்கு பிடிச்சவளோட நீ விரும்பி நடக்கோணும். உன்ர தாத்தா என்ன விரும்பித்தான் கட்டினவர். உன்ர அப்பா உன்ர அம்மாவ விரும்பித்தான் கட்டினவன். அதே மாதிரி நீயும் உன்ர மனதுக்கு பிடிச்சவள கட்டி சந்தோசமா வாழோணும்! உன்ர மனம் ஒருத்திய காட்டி சொல்லும் இவள்தான் எனக்கு வேணும் எண்டு. அவளும் உன்னை தேடி வருவாள். உன்ர வாழ்க்கை சந்தோசமா அமையும். அத உன்ர அம்மா அப்பாவோட சேர்ந்து தாத்தாவும் நானுமா பார்த்து சந்தோசப்படுவோம்.
என்ர பேரன ஒரு பொறுப்பான பிள்ளையா எதற்கும் கலங்காம திடமாக நின்று முடிவெடுக்கிறவனா வளர்த்திருக்கிறன் என்கிற என் நம்பிக்கை உன் கண்ணீரால் உடைந்துவிடக் கூடாது. மண்ணில் வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் மற்றவர்களுக்கு இடமேது?
ஆயிரம் முத்தங்களுடன் உன் அம்மம்மா.
என்று முடிந்திருந்தது அந்த மடல்!
அவர் அழக்கூடாது என்று சொன்ன இடத்திலேயே அவன் கண்ணீர் கண்களுக்குள் தடைப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒரு துளி சிந்தியதில்லை அவன்.
ஆனால், ‘இப்படி நடக்கும் என்று தெரிஞ்சிருந்தா கடைசி வந்தாலும் அந்த வார்த்தைகளை சொல்லியே இருக்கமாட்டன் அம்மம்மா.’ என்று உள்ளுக்குள் உடைந்து போனான். மருகி மருகியே மாய்ந்து போனான். கல்லாக இறுகிப் போனான்.
அந்த இறுக்கத்தை தன் செயல்களாலும் பேச்சாலும் மெல்ல மெல்ல தளர்த்தியவள் அவனின் அவள்!

