அத்தியாயம் 8
வெண்பளிங்கு வில்லாவைச் சுற்றி பச்சைப்பசேல் என்ற புல்வெளியும் அதன் ஒரு பக்கம் அம்மம்மாவும், இன்னொரு பக்கத்தில் நீச்சல் குளம், இன்னோர் பக்கத்தில் வாலிபால் கோர்ட்டும் அமைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் அரவணைத்து நிற்கும் குரோட்டன்ஸ், ரோஜாச் செடிகள், பலவகை மலர்கள் என்று ஒரு பூங்காவை சிருஷ்டித்திருந்தான் நிரஞ்சன்!
அத்தனையும் மலர்ந்துநின்று தலையாட்டி அவளை வாவா என்று வரவேற்பதுபோலவே தோன்றிற்று! மேலிருந்து பார்த்திருக்கிறாள் தான் என்றாலும் அருகில் பார்க்கையில் இன்னோர் அழகில் நெஞ்சை அள்ளியது. செல்வச் செழிப்பு கொட்டிக் கிடந்தது!
நீச்சல் குளத்தருகே சென்றதும், “வாரியா குளிப்பம்?” என்று கேட்ட ரதன், பதிலுக்காக காத்திராமல் பொட்டென்று உள்ளே குதித்துவிட்டான்.
“டேய்! என்னடா இது? யாராவது பாத்தா?” இப்போது அவள் பதட்டத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
“பாத்தா என்ன? எப்பவும் நடக்கிறதுதானே. நிரஞ்சன் அண்ணா நின்றிருந்தா சேர்ந்தே குளிச்சிருப்போம்.” சொன்னவன் நீருக்குள் மீனாகவே மாறிப்போனான்.
பார்த்திருந்தவளுக்கு உடலும் மனமும் குதித்துவிடலாமா என்றுதான் பரபரத்தது. அவளுக்கும் இந்த நீச்சல்குளத்தின்மீது தீராக்காதல் உண்டே! சின்ன வயதில் மகா திமிர் பிடித்தவனான நிரஞ்சனோடு நட்பு பாராட்டலாமா? என்று அவள் மனமிரங்கி ஒரே ஒருமுறை யோசிக்கக் காரணாமாக இருந்ததே இந்த நீச்சல் குளம்தான். பிறகு அந்த நீச்சல் குளத்துக்காகக் கூட அவள் அவனை ஏற்கத் தயாராக இல்லை!
அன்றே மனமிறங்காதவள் இன்றா இறங்குவாள்?!
‘அந்த விசரன் குளிக்கிறதுக்குள்ள நானும் குளிக்கிறதா?’ மனதில் சிலுப்பிக்கொண்டாள்.
ஆயினும், அதன் மீதான ஆசை அவளை விடாததில் அதனைச் சுற்றி மெல்ல நடந்தாள். நல்ல பெருசுதான். குறைந்தது பத்துப்பேராவது ஒன்றாக நீந்தலாம் என்று அவள் எண்ணுகையிலேயே, “எவ்வளவு பெருசு பாத்தியாக்கா? அண்ணா தன்ர பிரெண்ட்ஸோட சேர்ந்து குளிக்கிறதுக்காகவே கட்டினதாம்.” என்று தகவல் சொன்னான் ரதன்.
அதுதான் அவளுக்கு தெரியுமே! அந்தநாள் நினைவுகள் நெஞ்சில் வரவும் அவளின் இதழ்கள் சிரிப்பை சிந்தின!
ஒரு சின்ன முக்கால் வட்டமும் இன்னோர் பெரிய முக்கால் வட்டமும் ஒன்றாக இணைந்தது போன்ற குளம் அது.
“இந்தச் சின்ன வட்டம் ஆழம் கூடக்கா.” ரதன் தகவல் சொல்ல,“முந்தி பாத்த நினைவு இல்லையேடா. பெரிய வட்டம் மட்டும் தானே இருந்தது.” என்றாள் இவள்.
“ஆழமா வேணும் எண்டு இது இப்ப அண்ணா சேத்துக்கட்டினவர். பெரிய வட்டம் அவர் சின்னப்பிள்ளை எண்டு அம்மம்மா ஆழம் குறைவா கட்டினது.”
அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே தன் பார்வையை சுழற்றினாள். நீரின் மேலே மிதக்கும் பலூன் போட் நீந்திக்கொண்டு கிடந்தது. நீச்சல்குளத்தை சுற்றி வழுக்கி விழுந்துவிடாமல் இருப்பதற்கு ஏற்ப சற்றே கரடுமுரடான மார்பில் பதித்திருந்தான். அதன் விளிம்பில் குட்டிக் குட்டியாய் மூங்கில் காடுகள். அதனருகே மரத்திலான நீள மேசையும் அதன் இருபக்கமும் வாங்கில்களும் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்தது. ‘ரசிகன்டா நீ!’
‘இங்கேயே குளிச்சு இங்கேயே சாப்பிட்டு இங்கேயே படுப்பான் போல..’ கிண்டலாக எண்ணிக்கொண்டாலும், அதுகூட மிக அழகான அனுபவமாக இருக்கும் என்றே தோன்றிற்று அவளுக்கு!
அங்கே உட்புறமாகத் தள்ளி குட்டியாய் ஒரு குடிலைக் கண்டவளின் விழிகள் விரிந்தது. மேலிருந்து பார்க்கையில் தெரியவில்லையே.. என்று நினைக்கையில் தான் கவனித்தாள், ஒரு அடர்ந்த மரத்தின் கீழே அது இருப்பதை.
பனையோலைகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட குடில் அது! சித்திரம் பழகும் குழந்தைகள் வீடு வரையச் சொன்னால் வரைவது போல, நடுவில் கதவு, இரண்டு பக்கமும் சதுர வடிவில் குட்டியாய் யன்னல், கூரை காளானின் தலைபோல நிலத்தில் முட்டுகிறேன் என்று நின்றது! இடைவரை குனிந்துதான் உள்ளே போகமுடியும். அந்த வீட்டுக்கு முழங்கால் வரையிலான வேலி இதழ்களில் புன்னகையை வரவழைத்தது. அதற்கு ஒரு பாடலை வேறு. ஓடிப்போய் அப்படியே கட்டிப்பிடித்து கொஞ்ச வேண்டும் போல் நெஞ்சை அள்ளியது அந்தக் குடில்.
முன்னே விரிந்துகிடந்து பார்ப்பவர்களை பிரமிக்கச் செய்யும் அந்த வில்லாவுக்கு முழுக்க முழுக்க எதிர்ப்பதத்தில் எளிமையே குடிகொண்டிருந்தது அந்தக் குடில்.
அவள் வரைந்து வைத்திருக்கும் நிரஞ்சனுக்கும் இந்த எளிமை விரும்பிக்கும் ஆறல்ல ஆறாயிரம் வித்தியாசம் காட்டுகிறதே!
காலையில் அவளை வெறுப்பேற்றியவனும் இவனும் ஒன்றா என்ன?
திமிர் பிடித்த, அகங்காரம் கொண்ட, அலட்சியமான நிரஞ்சன் இயற்கையை ரசிக்கிறான், எளிமையை விரும்புகிறான், அயலில் இருக்கும் ஒரு சராசரியான இளைஞனுடன் அற்புதமான அன்பு பாராட்டுகிறான். இது எப்படிச் சாத்தியம்?
சின்ன வயதில் அவளை அவன் பார்க்கும்போதெல்லாம் வானில் பறந்துதிரியும் மர்மப் பொருளை பார்ப்பது போலவே புரியாத பார்வை பார்ப்பானே! என்னவோ காணவே முடியாத விசித்திரத்தைக் கண்டுவிட்டதைப்போல இருக்கும் அவனது பார்வையே எதையாவது செய்து அவனை வெறுப்பேற்றச் சொல்லி அவளைத் தூண்டும்!
“ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது அந்தக் குடிலுக்க இருப்பார் அண்ணா. அங்கதான் தன்ர சந்தோசம் இருக்கெண்டு சொல்லுவார்.” என்று அவளின் பார்வை சென்ற இடத்தை கவனித்துச் சொன்னான் ரதன்.
“ஓ…!” புது சுவாரசியம் பிறக்க, அவள் அந்தக் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
பின்னே, இத்தனை மூடு மந்திரங்கள் நிறைந்த இடத்தைப்பற்றி அறிந்துகொள்ள முயலாவிட்டால் அது ஜீவனி அல்லவே! இவன் இப்படித்தான் என்று அவள் வரையறுத்து வைத்திருந்த நிரஞ்சன் கூட மெல்ல மெல்ல புதிராக மாறிக்கொண்டிருக்கிறானே!
“அக்கா நில்லு!” அவசரமாகத் தடுத்தான் ரதன் “அங்க போகாத! இதுவரைக்கும் அண்ணாவை தவிர வேற யாரும் அதுக்க போனதில்லை. ஏன் நானே போனதில்லை.” என்றான் அவன்.
அந்த ‘நானே போனதில்லை’ அவளை உசுப்ப, “அப்ப நான் கட்டாயம் போயே ஆகோணுமே!” என்று கண்ணடித்துவிட்டு நடந்தாள்.
நனைந்த உடலோடு ஓடிவந்து அவளின் முன்னே நின்று கைகளை நீட்டித் தடுத்தான் ரதன்.
“எல்லாத்திலையும் விளையாடாத அக்கா! அது அவருக்கு மட்டுமே சொந்தமானது எண்டு அண்ணாவே சொல்லி இருக்கிறார். நீ போகக்கூடாது!” என்றான் உறுதியான அழுத்தமான குரலில்.
இத்தனை நாட்களில் அவளின் தம்பி அப்படி ஒரு குரலை அவளிடம் காட்டியதில்லை. அந்த உறுதியே நிரஞ்சனின் தொடக்கூடாத பாகம் அது என்று சொல்ல, “சரி விடு! அவன்ர ரகசியம் அவனோடேயே இருக்கட்டும்!” என்று தோள்களை அலட்சியமாகத் தூக்கிவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள்.
இப்போது திகைத்து நின்றவன் ரதன்!
இப்படி சொல்பேச்சு கேட்கிறவளா அவனின் உடன்பிறப்பு? நம்பமுடியவில்லையே!
அவளோ அங்கிருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள். அருகிலேயே அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்த ரோஜாவைக் கிள்ளி தன் தலையில் சூடிக்கொண்டாள். இன்னொன்றைக் கிள்ளி, அதன் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி முன்னிருந்த மேசையில் ஜீவனி என்று தன் பெயரை உருவாக்கத் தொடங்கினாள்.
‘அக்கா பூவை பிடுங்காத! அண்ணாக்கு பிடிக்காது!’ நுனி நாக்குவரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான்.
அவ்வளவு நேரமும் கலகலப்பாக இருந்த தமக்கை திடீர் என்று அமைதியாகிவிடவும் ஒருமாதிரி ஆகிவிட்டது அவனுக்கு. இதில் அதைவேறு சொல்லி அவளின் கோபத்தை அதிகப்படுத்துவானேன்?

