அத்தியாயம்-10
அன்று வழமைபோல் அலுவலகம் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த நிரஞ்சனின் மனம் சிணுங்கிக்கொண்டிருந்தது. அங்கே திரையில் தெரிந்தவளை முறைத்துக்கொண்டிருந்தான். பின்னே, இரண்டு நாட்களாக அவனின் கண்களில் அவள் படவேயில்லை.
நேரில் அவளைக் கண்டு ஆசைதீர தரிசித்துக் கொண்டவனின் உள்ளம் இப்போது திரையில் தெரிந்தவளை கண்டு அமைதிகொள்ள மறுத்து அடம் பிடித்தது!
‘நான் பார்த்தா அவளுக்குப் பிடிக்காதமா? உடனே மறைஞ்சிடுவாளா?’ செல்லமாக கோபித்துக்கொண்டான்.
‘விளையாட்டுப்பிள்ளை மாதிரி இருந்தாலும் இதுல எல்லாம் விவரம்தான்!’ அவனது உதடுகளில் சிரிப்பு அரும்பியது.
‘இதுக்கெல்லாம் ஒருநாள் அனுபவிப்பீங்க செல்லம்!’ திரையில் தெரிந்தவரிடம் சொல்லிக்கொண்டான்!
அப்போது பாலா அழைத்தான்.
“மகள் பிறந்திருக்கிறாள் நிரஞ்சன்.” உற்சாகத்தில் துள்ளியது அவன் குரல்.
“வாழ்த்துக்கள் பாலா! மகளும் நந்தினியும் சுகமா இருக்கிறாங்களா?” அவனுக்கு குறையாத சந்தோசம் இவனுக்கும். நந்தினி அவனுக்கு கூடப் பிறக்காத சகோதரி!
“ரெண்டுபேரும் சுகம் நிரஞ்சன். நீங்க இண்டைக்கு கொழும்புக்கு போகோணும். முக்கியமான டீலிங். இண்டைக்கு முடிச்சே ஆகோணும். என்னால வர ஏலாது நிரஞ்சன்; சொறி. இப்பதான் பிள்ளை பிறந்தவள். நந்துக்கு இன்னும் ஏலாம இருக்கு. அதுதான்.. இல்லாட்டி வந்துடுவன்.” என்று இழுத்தான் அவன்.
“அதெல்லாம் நான் பாக்கிறன். நீங்க அங்கேயே இருங்க, கொஞ்சத்துல வாறன்.” என்றுவிட்டு செல்லை அணைத்தான் இவன்.
காதல் திருமணம் என்பதால் இன்னும் இருவீட்டாரும் அவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே கூட நின்று கவனிக்கவும் யாருமில்லை என்பதை நிரஞ்சன் அறிவான்.
உடனேயே அன்றைய தனது அனைத்து வேலைகளையும் மாலைக்கு தள்ளி வைத்துவிட்டு ஹாஸ்பிட்டல் செல்லத் தயாரானவனுக்கு, என்ன கொண்டுபோவது என்று தெரியவில்லை.
அன்னம்மாவிடம் கேட்கலாமா என்று யோசித்தபடியே வீட்டுக்கு வெளியே வந்தவனை, அவர்கள் வீட்டு மொட்டை மாடிச் சுவரில் அவனை முறைத்தபடி அமர்ந்திருந்த ஜீவி வரவேற்றாள்.
பார்த்ததும் நெஞ்சம் சந்தோசத்தில் துள்ளியது அவனுக்கு. ‘ரெண்டு நாளா என்ன பாடு படுத்திட்டா?’ ஆசைதீர அவளை பார்த்துக்கொண்டான்.
அவனை முறைத்துக்கொண்டிருந்தாள் அவள். ‘என்னவோ அவளுக்கும் அவனுக்குமிடையில் நடப்பது இந்திய பாக்கிஸ்தான் போர் மாதிரித்தான் சீன போடுவா.. சரியான சில்வண்டு!’
அவளோ, எல்லோருக்கும் நல்லவனாக இருக்கிற நீ எனக்கு மட்டும் ஏன்டா பொல்லாதவனா நிக்கிறாய் என்று இன்னுமே அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
அதைக் கவனித்தவனின் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளை சீண்டிவிடத்தான் துடித்தது. ஆனால், இனியும் சீண்டல் சிலுப்பலில் காலத்தைக் கடத்த அவன் தயாராயில்லை.
கையெட்டும் தூரத்தில் கூட அவளை நிறுத்தமுடியாமல் நின்றான். கைக்குள் அவள் வேண்டும்! காற்றுக்கூட புகமுடியாத நெருக்கத்தில் அவள் வேண்டும்! அதற்கான அடியை அவன் எடுத்துவைத்தே ஆகவேண்டும்!
உடனேயே காரியத்தில் இறங்குகிறவனாக கையசைத்து, “இங்க வா..!” என்று அழைத்தான்.
அதை எதிர்பாராதவள் ஒருகணம் திகைத்தாள். பிறகோ அவனை முறைத்துக்கொண்டே ஆட்காட்டி விரலை ஆட்டிக் கவனம் காட்டினாள்.
உதடுகளில் சிரிப்பு மலர, “ப்ளீஸ்டா.. கொஞ்சம் கீழ வாவன்(வாயேன்)..” என்றான் தன்னை மறந்து கெஞ்சலாக.
‘அது!’ என்பதாக மிதப்பாகப் பார்த்தாள். அப்போதும் ஆட்காட்டி விரலால் அவனை சுட்டிக்காட்டி பின் தன்னை நோக்கி அசைத்துக்காட்டி ‘நீ இங்க வா!’ என்றாள் சைகையில்.
‘உடம்பு முழுக்கத் திமிரு!’ உள்ளம் சொன்னாலும், அவனின் ஏவலுக்கு சேவகம் செய்ய எத்தனையோ பேரிருக்க, அவளின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் மதில் சுவர் அருகே சென்றான் நிரஞ்சன்.
மேலே அவளைப் பார்த்து, “என்னோட கடைக்கு வாரியா?” என்று கேட்டான்.
“கடைக்கா..!!” கேட்டுவிட்டு முகத்தைச் சரித்து சந்தேகமாக அவனை அளவிட்டாள். கழுத்தில் தொங்கிய தங்க சங்கிலியின் பென்டன்ட்டினை வாயில் வைத்தபடி இவன் ஏன் என்ன கூப்பிடுறான்? ஏதும் பிளானோ? என்று யோசித்தாள்.
நல்லவன் தான் என்று உறுதியாக தெரிந்திருந்தாலும், அவளின் அகராதியில் நிரஞ்சன் என்பதன் பொருள் ‘பொல்லாத திமிர் பிடிச்சவன்’ ஆயிற்றே!
“ஒன்டுமில்லமா… என் ஃபிரெண்டுக்கு மகள் பிறந்திருக்கிறாள். பாக்க போகோணும். என்ன வாங்கிக்கொண்டு போறது என்று தெரியேல்ல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.” தன்மையாக அவன் கேட்டதில் அவள் மனம் கொஞ்சம் இரங்கியது.
ஆனாலும், அவன் மீதிருந்த கோபம் சம்மதிக்க விடவில்லை. “அதுக்கெல்லாம் நேரமில்ல.. நான் என்ன உங்கள மாதிரி வெட்டியா?” என்றாள் சிலுப்பலோடு!
இதழ்கள் புன்னகையால் விரிய, “இப்ப நீ ஃப்ரீதானே..” என்றான் அவன்.
“யார் சொன்னது? முக்கியமான விசயத்த பற்றி யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்!” எடுப்பாகச் சொன்னாள்.
சட்டென சிரித்துவிட்டான் அவன். ‘பெரிய யோசனை! இன்னும் என்னை என்ன செய்யலாம் எண்டு யோசிப்பா! சில்வண்டு! இதுல அவ பிசியாம். நான் வெட்டியாம். என்னட்ட சிக்கின.. மகளே.. இருக்கடி உனக்கு!’ மனம் தாபம் கொள்ள, ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான்.
அவளும் விடாமல் பார்த்தாள்.
“என்னை பாத்தா பாவமா தெரியேல்லையா உனக்கு?” அவன் இறங்கி வர, அவளுக்கும் பாவமாகத்தான் தெரிந்தது.
எனவே சரி என்றாள்.
“அப்ப வா!” என்று அவன் அழைக்க, “இப்பயேவா? நான் ரெடியாக வேண்டாமா?” என்றாள் அதட்டலாக.
“இப்பவே அழகாத்தான் இருக்கிறாய். அதனால இப்படியே வா..” என்றதுதான் தாமதம்,
“பாக்க பாவமா இருக்கே எண்டுதான் வாறன். அதுக்காக அழகு கிழகு எண்டு சொல்லிக்கொண்டு வழிஞ்சா கண் ரெண்டையும் நோண்டி காக்காக்கு வச்சிடுவன். விளங்குதா?” என்றாள் அதட்டலாக.
பிரமித்து போனான் நிரஞ்சன்! விளையாட்டாக இருந்தாலும் ஒரு ஆணை தன்னை நெருங்கவிடாமல் எவ்வளவு கவனமாக இருக்கிறாள். உள்ளம் கொள்ளை போக தலையை மட்டும் அசைத்தான்.
அதைத்தான் அப்போது செய்ய முடிந்தது அவனால்!
சற்று நேரத்திலேயே தயாராகி வந்தவளை பார்த்தவனுக்கு மூச்சடைத்தது!
வெள்ளை ஜெகிங்க்ஸ் அணிந்திருந்தாள். மேலே யு நெக் கொண்ட சிவப்பு நிற நீண்ட டாப். அதில் மார்பில் யு ஷேப்பில் வெள்ளை கல் வேலைப்பாடு. சிவப்பு கரையுடன் கூடிய வெள்ளை ஷால் ஒருபக்க தோளில் தொங்கியது. முடியை மேலே நன்றாக உயர்த்தி போனிடேயில் போட்டிருந்தாள். இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவுக்கு ஒரு சின்னப்பொட்டு. கால்களில் வெள்ளையில் சிவப்பு கற்கள் பதித்த சாண்டில்ஸ். சலங்கையின்றியே அவன் மனதை ஆட்டிப்படைத்தது. கையில் கோல்ட் கலர் வாட்ச். அவளின் நிறத்துக்கு அது இருப்பதே தெரியவில்லை.
சட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டு, காரின் பின் கதவை திறந்து விட்டான். அவள் ஏறியதும் கதவை மூடிவிட்டு கதிரவனின் அருகில் அவன் ஏறப்போக, “ஹலோ பாஸ்!” என்று கையால் சுண்டி அழைத்தாள் அவள்.
அவன் திரும்பி பார்க்க, “நான் என்ன தேவையில்லாத லக்கேஜ்ஜா? என்ன பின்னால போட்டுட்டு நீங்க முன்னால ஏற? மரியாதையா பின்னுக்கு வாங்க!” என்றாள் உத்தரவாக.
அவனே இதை எதிர்பார்க்கவில்லை எனும்போது கதிரவன்? தன் எஜமானனை, ஊரே மதிக்கும் ஒருவனை ஒரு பெண் சுண்டி அழைத்ததும் அல்லாமல், அதிகாரம் செய்கிறாளே என்று அதிர்ச்சியோடு நிரஞ்சனை பார்த்தார்.
அதை கவனியாதவன்போல் பின்னால் வந்து ஏறினான் நிரஞ்சன்.
அவன் அமர்ந்ததும், “நல்லா தள்ளி அந்த கதவுப் பக்கமா இருக்கோணும்!” என்றாள் கறார் குரலில்.
திரும்பி அவளை பார்த்தான். அந்தப் பார்வையை எதிர்கொண்ட ஜீவனிதாவால் சில நொடிகளுக்கு மேலும் தொடர முடியவில்லை. அன்றைய பார்வையை நினைவூட்டுவது போலிருக்கவும் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டாள். மெல்லிய படபடப்பு அவளுக்குள்.
அவனை தூரத்தில் நிறுத்திவை என்று அன்று சொன்ன அதே மனம் இன்று இப்படி தடதடக்கிறதே.. ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு!
கடைக்குள் அவன் கால் வைத்ததுமே முகமெல்லாம் பல்லாக முதலாளி ஓடிவந்து வரவேற்றார்.
‘பார்ரா! காசு குடுத்து ஆள செட் பண்ணி இருப்பானோ..‘ நக்கலாக நினைத்துக்கொண்டே விழிகளைச் சுழற்றினாள்.
அங்கிருந்த பெண்கள் அனைவரின் பார்வையும் அவன்மேல் ஆர்வமாகவும் ஏக்கமாகவும் படிவதைக் கண்டதும் சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு!
இதில் மெல்லிய பொறாமையுடன் கூடிய ஆராய்ச்சியாக அவளை வேறு பார்த்தனர்.
‘என்ன கொடும சரவணா இது? போயும் போயும் இவனோடு வந்ததுக்கா இந்தப்பார்வை..’ என்று நினைத்துக்கொண்டே திரும்பியவள், கட்டுக்கோப்பான தேகத்துடன் களையான முகத்தோடு வரிசையாக அமைந்த வெண்ணிற பற்கள் பளீரிட நின்று கதைத்துக்கொண்டிருந்தவனின் வசீகரத்தில் உறைந்துதான் போனாள்.
கறுப்பு நிற ஃபிட் ஜீன்ஸ். சாம்பல் வண்ண முழுக்கை டி ஷர்ட் அணிந்திருந்தான். தொப்பை மருந்துக்கும் இல்லாத கட்டுமஸ்தான உடம்பு! சட்டைக் கழுத்தில் கூலிங்கிளாஸ் காதலியைப்போல் தொங்கிக்கொண்டிருக்க, கையில் கறுப்பு மணிக்கூடு. கழுத்தை ஒட்டிய செயின் ஒன்று. கடையின் முதலாளி பற்றிய அவனது கையை விடாமலேயே உரையாடிக்கொண்டிருந்தார். மறு கையின் கட்டை விரலை மட்டும் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் விட்டபடி நின்றவனிடமிருந்து அவளால் விழிகளை அகற்றவே முடியவில்லை.
அவரிடம் என்னவோ சொல்லிக்கொண்டே கண்களால் அவன் அவளைத் தேடவும், வேகமாக பார்வையை திருப்பிக்கொண்டாள். முகம் சூடாக்கிச் சிவந்து போயிற்று!
‘ஹே.. ஜீவி என்னடி இது.. எல்லாமே புதுசா இருக்கு…‘ என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டபோது, “இங்க வந்து நிறைய நாளாச்சா. அதான் பிடித்துக்கொண்டார்.” என்றான் அவன் காதருகில் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.
மனம் தடுமாறி நின்ற அந்த நேரத்தில் உரிமையாய் அவன் சொன்ன சமாதானம் அவளுக்குள் படபடப்பை உருவாக்கிற்று!
“ம்ம்.. பரவாயில்ல.” என்று அவன் முகம் பாராமல் முணுமுணுத்தவளை புதிராகப் பார்த்தான் அவன்.
அந்தப் பார்வையிலிருந்து தப்பிக்க “என்ன குழந்தை?” என்று கேட்டு, குட்டி குட்டியாக குழந்தைகளுக்கு போடும் சட்டைகள் சிலது.. விளையாட்டு பொருட்கள்.. குட்டி ஷூக்கள்.. என்று படபடவென்று சிவப்பிலும் பிங்க் நிறத்திலும் அழகான பொருட்களை எடுத்துதள்ளினாள்.
அவனோ அவளின் தெரிவுகளில் தலையிடாது கையை கட்டிக்கொண்டு பார்த்திருந்தான். ‘பரவாயில்ல.. நம் குழந்தைகளின் வேலைய இவளே பாத்துக்கொள்ளுவா..‘ மனம் அதன்பாட்டுக்கு எண்ணியது.
அந்த எண்ணம் வந்ததுமே கண்கள் அவளை நாட, குதிரைவால் கொண்டை அங்கும் மிங்கும் அசைந்தாட அதை எடுங்க இதை எடுங்க என்று சேல்ஸ் பெண்ணை ஒருவழி செய்தபடி பொருட்களை தெரிவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். அப்போதும் சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தது அவளது வாய்.
‘இருப்பத்தினாலு மணிநேர சர்விஸ் தான்போல.. யாரையாவது திட்டும் இல்ல எதையாவது அரைக்கும்!’ சின்னதாக சிரித்துக்கொண்டான்.
எவ்வளவு துணிவா அவனை பின்னுக்கு இருக்கச் சொல்லி சொன்னாள். அதுவும் கதவுப் பக்கமா தள்ளி இருக்கோணுமாம். நினைக்கையிலேயே புன்னகை மலர்ந்தது.
‘காற்றே புகாத பந்தத்தை நான் உருவாக்க நினச்சா.. என்னையே தள்ளியிருக்க சொல்றியா நீ.. வாயாடி! இன்னும் எத்தனை நாளைக்கு என்று நானும் பாக்கிறன்!’
கதிரவன் இல்லாதிருந்திருக்க இன்னும் அவளை சீண்டித்தான் இருப்பான். அந்த எண்ணம் வந்ததுமே கதிரவனை அழைத்து, பஸ்ஸில் போகும்படி அனுப்பி வைத்தான்.
அவள் தெரிவு செய்துவிட்டு திரும்பிப் பார்க்க, அதற்காகவே காத்திருந்தவன் பின் பாக்கெட்டிலிருந்து பர்சை எடுத்து கிரடிட் கார்ட்டை எடுத்து நீட்டினான்.
சற்றே இவள் பக்கமாக சரிந்து ஒரு கையை பின்னால் கொண்டுபோய் அவன் பர்சை எடுத்த விதமும், பர்சிலிருந்து மிக லாவகமாக கார்ட்டை எடுத்து நீட்டிய விதமும் அவளை கவர்ந்திழுத்தது.

