அத்தியாயம் 12
எப்போதும்போல் அவளுக்கு மிகவும் பிடித்த மொட்டை மாடியில் நின்றிருந்தாள் ஜீவனிதா. கடலின் அருகில் நின்று அலைகள் கால்களை நனைக்க அதை ரசிப்பது ஓரழகு என்றால், உயரமான இடத்தில் நின்று கீழே பரந்து விரிந்து கிடக்கும் கடலையும், அதன் காற்றுக்கு அசைந்தாடும் தென்னை மரங்களையும், அந்தக் காற்று வந்து குழப்பும் முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட்டபடி ரசிப்பது பேரழகு!
அந்தப் பேரழகில் தன்னைத் தொலைப்பதுதான் அவளின் இத்தனைநாள் வழக்கமாயிருந்தது. இன்றோ, அந்த அழகைக்கூட உணரமுடியாமல் நின்றிருந்தவளின் மனம் முழுவதும் குழப்பமே நிறைந்து வழிந்தது.
அன்று ஹாஸ்பிட்டலில் நந்தினியையும் குழந்தை ஜீவிதாவையும் பார்த்ததில் இருந்து இப்படித்தான் அவள்.
பல கேள்விகள். அதுவும் விடையில்லாக் கேள்விகள்! ஜீவிதா என்கிற பெயரை நிரஞ்சன் ஏன் வைத்தான். பாலாவின் பேச்சுக்களுக்கு அர்த்தம் என்ன? நீயும் அண்ணாவும் சந்தோசமாக வாழோணும் என்று நந்தினி ஏன் சொன்னார்? அந்தப் பேப்பரில் இருக்கும் பெண் யார்? அந்தப் பெண்ணின்மேல் உயிரையே வைத்திருப்பவன் என் மனதைக் குழப்ப முயல்வது ஏன்? போதாக்குறைக்கு என் மனதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
ஆமாம்! குழம்பித்தான் நிற்கிறாள் அவள்! அன்று அவனின் பார்வையில் குழம்பித் தவித்தவள், சிலநேரம் நாம்தான் தப்பாக நினைக்கிறோமோ என்று எண்ணி அதனைத் தவிர்த்திருந்தாள்.
இனித் தேவையில்லாமல் அவனிடம் வம்பு வளர்க்கவேண்டாம் என்று எண்ணி அனைத்தையும் நிறுத்தி இருந்தாள்.
ஆனால், அவனோடு வெளியே சென்றுவந்ததன் பிறகு, அவள் உணர்ந்த விதமும் சரிதான் என்று உணர்த்தியது.
இப்போதெல்லாம் அவன் பார்வைகளும், செயல்களும் அவளுக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல முனைந்துகொண்டிருப்பதாகப் பட்டது. அவள் மனது வேற எதையோ உணர்ந்துகொள்ளவும் பரிதவித்துக்கொண்டிருந்தது.
என்ன சொல்ல வருகிறான்? இதற்குமேல் சிந்திக்க முடியாமல் அந்த விழிகள் இரண்டும் வந்துநின்று தடை போட்டது!
அப்போது கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கவும், பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தாள்.
நிரஞ்சனின் போர்ஷே! வொர்க் ஷாப் காரன் அதை நிறுத்திவிட்டு போனான்.
‘புதுக் கண்ணாடி போட்டாச்சு போல…’
‘உடச்சது நான்தான் எண்டு கண்டு பிடிச்சிட்டானே! கெட்டிக்காரன் தான்! ஆனாலும் கோவிக்கவே இல்லை.. அந்தளவுக்கு நல்லவனாடா நீ?’ சிரிப்பு வந்தது.
‘நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவன் நல்லவன்தான்.’ இப்போதெல்லாம் அவனை ரசிக்கத் தொடங்கியிருந்த ரசிகமனம் அவனுக்காக வாதாடியது.
அந்த மாற்றத்தை எண்ணி அவளுக்கே ஆச்சரியம்தான். இதே காலிக்கு வரும்போது அவன் மீது கொலைவெறியோடுதான் வந்தாள். இப்போது மருந்துக்கும் அது இல்லை.
அதற்குக் காரணம் சயந்தினி மூலம் அவள் அறிந்துகொண்ட நிரஞ்சனின் அற்புதமான மனம்! அதோடு, அவளை வம்புக்கிழுத்தாலும் அப்பழுக்கற்ற ஒரு நல்ல மனிதன் அவன் என்பதை அவனோடு கடைக்குச் சென்ற நாளில் அவளே உணர்ந்திருக்கிறாள். அன்று ஹோட்டலில் வைத்துப் பார்த்த அந்தத் தழும்பு வேறு ஏனோ தெரியவில்லை, பல மாயங்களை அவளுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தது. இதோ.. இப்போதும் இதழ்கள் புன்னகையால் மலர்ந்தது.
இன்று மட்டுமல்ல இந்த நாலைந்து நாட்களாக அந்தத் தழும்பை நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்கிறாள். சிறுவயது நாட்களும் மனக்கண்ணில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. இன்றும் நினைவுவர அங்கே இருந்த நீச்சல் குளத்தை எட்டிப் பார்த்தாள்.
இன்று எப்படி எட்டிப் பாக்கிறாளோ அப்படித்தான் முந்தியும்(முன்னரும்). அவளின் கூட்டாளிப் படைகளுடன் இணைந்து மாலைகளில் நிரஞ்சன் அவனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் அடிக்கும் கொட்டத்தை அவர்கள் அறியாமல் பார்த்துச் சிரித்துக் கொட்டமடிப்பதுதான் இவர்களின் பிரதான தொழிலே!
அன்றும் அப்படித்தான், இவர்களின் ரகசிய ஒற்றன் தந்த தகவலின் படி நிரஞ்சன் மற்றும் அவன் நண்பர்கள் குழாம் நீச்சல் குளத்தில் ஒன்று கூடப் போகிறார்கள் என்றறிந்து அவர்களுக்கு முதலே இவர்களின் படை மொட்டை மாடியில் முகாமிட்டிருந்தது.
ஒருவரோடு மற்றவர் உரசிக்கொண்டு, “தள்ளாதடா..” “தள்ளாதடி”என்று ரகசியக் குரலில் ஒருவரை மற்றவர் தள்ளிக்கொண்டு தலையை மட்டும் அவ்வப்போது மேலே தூக்கி எட்டிப் பார்த்து கீழே என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டு குசுகுசுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களும் வந்தார்கள். மேலே அணிந்திருந்த ஆடைகளை களையத் தொடங்கினார்கள். அப்போதே இவர்களுக்குள் கிளுக் என்கிற சிரிப்பு சத்தமில்லாமல் ஆரம்பித்திருந்தது.
இவர்கள் மேலிருந்து பார்க்கிறார்கள் என்பதை அறியாமல், வேலைக்காரர்கள் கூட நிரஞ்சனின் அனுமதி இல்லாமல் நீச்சல்குளப்பக்கம் வரமாட்டார்கள் என்கிற தைரியத்தில் ஜீன்சையும் கழட்டத் தொடங்கும்போதே, கையால் வாயை பொத்திக்கொண்டு கிக்கிக்கி என்று ஒருவரை மற்றவர் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருந்தனர். மோசமாக அங்கே எதுவும் நடக்கவில்லை. உள்ளே நீச்சலுக்கான சோர்ட்ஸ், மேலே வெற்றுடம்பு. அவ்வளவுதான். ஆனாலும் இவர்களின் சிரிப்புக்கு பஞ்சமில்லை.
அவர்களில் ஒருவன் நீச்சலுக்கான சோர்ட்ஸ் அணிந்துவர மறந்துவிட்டான் போலும், அவன் தான் குளிக்கவில்லை என்றதும், “இங்க யாருடா வரப்போறாங்க? ஜீன்ஸ கழட்டிட்டு வா!” என்றான் நிரஞ்சன் நீந்தியபடி.
மற்றவர்களும் சொல்லவும், அவனும் ஜீன்ஸை கழட்ட, ஜட்டியுடன் அவனைக் கண்டதும் இந்த வாண்டுகளுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. உருண்டு பிரண்டு சிரித்தவர்களால் ஒரு அளவுக்கு மேல் கையால் வாயை மூட முடியாமல் மூச்சு முட்டிப்போகவே சிரிப்பு வெடித்துக்கொண்டு கிளம்பி கீழேவரை எட்டியிருந்தது.
கலவரத்துடன் எல்லோரும் மேலே பார்க்க, இருந்த வாண்டுகள் எல்லாம் கீழே இறங்கி ஓடிவிட, நம் துணிச்சல் நாயகி மட்டும் எழுந்து நின்று கையால் வாயை பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கவும், ஜட்டியுடன் நின்றவனுக்கோ ஆத்திரமும் அவமானமும் பிடுங்கித் தின்றது. வேகமாக ஜீன்ஸை மாட்டிக்கொண்டு போய்விட்டான்.
அது நடந்து ஒருவாரம் கழிந்திருக்கும். அன்று ஜீவியின் சைக்கிள் நிரஞ்சனின் வீட்டுக்கு முன்னால் செயின் கழன்று போனது.
“ச்சே! இந்த ஓட்ட சைக்கிளோட நான் படுற பாடு!” என்று சினந்தபடி அவள் செயினை மாட்ட முயல, மிக வேகமாக இவளை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தான் நிரஞ்சன்.
‘இவன் ஏன் இப்படி ஓடி வாறான்?’ யோசனையோடு பார்த்தாள்.
‘அன்றைக்கு பாத்ததுக்கு ஏதும் திட்டுவானோ.. திட்டட்டும் குடுக்கிறன் திருப்பி.’ என்று அலட்சியமாக எண்ணியபடி எழுந்து நின்றாள்.
அவனோ வந்த வேகத்தில் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டான். அதை எதிர்பாராததில் தடுமாறிப்போய் விழுந்தவளின் கையை வீதியோரத்து கல் பதம் பாத்திருந்தது.
“அம்மா…!!!”
அந்த வலியை விட, நான் என்ன செய்தனான்? ஏன் தள்ளிவிட்டான்? என்கிற கேள்விகளும், அவன் தள்ளிவிட்டு விழுந்தோமே என்கிற அவமானமும் தான் மிகவும் பாதித்தது.
ஆத்திரத்துடன் எழுந்து பார்த்தாள். அவன் வந்ததற்கான சுவடேயில்லை! அவ்வளவு வேகமாக மறைந்திருந்தான். கையில் இரத்தம் சொட்டச் சொட்ட வீடு வந்தவளைக் கண்டு பதறிப்போனார் செல்வராணி.
அவர் விசாரித்தபோது, சைக்கிளால் விழுந்துவிட்டேன் என்று மறைத்துவிட்டாள்.
பின்னே, எவ்வளவு பெரிய அவமானம்?! அவளின் எதிரி அவளை தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என்பது!
அன்றிலிருந்து நிரஞ்சனின் மண்டையை உடைக்க நாள் பார்த்துத் காத்திருந்தவளுக்கு, யாழ்பாணம் செல்லும் அன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.
அங்கிருந்த தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருந்து போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். இதுதான் சந்தர்ப்பம் என்று ஜீவியின் கல் சரியாக அவன் நெற்றியை பதம் பார்க்க, வலியில் துடித்துப்போய் இரத்தம் வழிந்த நெற்றியை பற்றிக்கொண்டு அவன் நிமிர்ந்தபோது, ஆட்காட்டி விரலை நீட்டி அவனை மிரட்டிவிட்டு கீழே ஓடிவிட்டாள். ஆனாலும் ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை.
அவளை ஒருவன் தள்ளிவிடுவதா? கையில் காயம் வருமளவுக்கு!
கை வலிக்கிறது என்று சிணுங்கும் போதெல்லாம் அன்னையிடம் இருந்து கிடைத்த திட்டுக்களும், பொம்பிளப்புள்ளையா அடங்கி இருக்காம ஆடித்திரிஞ்சா இப்படித்தான் என்று அவர் அடக்கியபோதெல்லாம் என்று அவன் மீது ஆத்திரத்தை வளர்த்து வைத்திருந்த தன்னை நினைக்கையில் இப்போ சிரிப்புப் பொங்கியது.
பாவம்! அன்று எப்படி வலித்ததோ? இரத்தம் அப்படிக் கொட்டியதே..!
அவனை பார்க்கவேண்டும்போல்.. அந்த தழும்பை இன்னுமொரு முறை பார்க்க மனம் உந்தவும், ‘பயபுள்ள வேலைக்கு போயிருப்பானே.. அவன்தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு எண்டு எல்லாம் நிறைஞ்ச விசரனாச்சே..’ என்று எண்ணியபடி கீழே இறங்கி வந்தாள்.
அங்கே பூசைக்கான கூடையுடன் கோவிலுக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார் செல்வராணி.
“வாவ்! சாரி புதுசா சித்தி. நல்ல வடிவா இருக்கு..” என்றபடி அவரை அவள் சுற்றிச் சுற்றி வர, அவளின் கையைப் பற்றி நிறுத்தி செல்லமாக முறைத்தார் செல்வராணி.
“உனக்கு விதம் விதமா எத்தனையோ சாரி நான் வாங்கி வச்சிருக்கிறன். இந்த நூல் சாரிய பாத்து நல்லாருக்கு எண்டு கண்ண விரிக்கிற!” என்றார் அவர்.
“என்னது? எனக்கு சாரியா? போங்க சித்தி விளையாடாம!”
“அடிதான் போடப்போறன் இப்ப! பொம்பிளப்புள்ள உனக்கு வாங்காம ரதனுக்கா வாங்குறது?”
“நான்தான் கட்ட மாட்டேனே .”
“காலம் முழுக்க கட்டாமையே இருப்பியா? அதுதான் இப்பவே உனக்கு நல்லாருக்கும் என்றதை எல்லாம் வாங்கி வச்சிருக்கிறன். நானும் வேற யாருக்குத்தான் வாங்கி அழகு பாக்கிறது?” என்றவர், அவளை கையோடு இழுத்துச் சென்று தன் கப்போர்ட்டை திறந்து காட்டினார்.
அந்த கப்போர்ட் முழுவதும் ஹாங்கரில் அழகழகா விதம் விதமான கலரில் பட்டு, சில்க், பனாரஸ் அது இது என்று சேலைகள் தொங்கியது.
விழிகள் விரிய, “இவ்வளவும் எனக்கா சித்தி.” என்று கேட்டாள். ஒரு கையை நீட்டி தொங்கிய அத்தனை சேலைகளையும் கோடாக வருடியவளை, அதன் மென்மை அப்படியே தனக்குள் இழுப்பது போலிருக்க, விரல்களை அதிலிருந்து அகற்றவே முடியவில்லை அவளால்.
அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தில் “கட்டிப் பாக்கிறியா.. நல்லாருக்கும்!” என்று ஆசைகாட்டினார் செல்வராணி.
“ம்ஹூம்! இல்ல.. எனக்கு கட்டத் தெரியாதே..” ஆவலும் தயக்கமும் போட்டிபோடச் சொன்னாள்.
“நான் எதுக்கு இருக்கிறன்..” என்றபடி ஒரு சேலையை அதிலிருந்து வெளியே எடுத்தார் சிற்றன்னை.
“பார் இத. உன்ர பொன் நிறத்துக்கு இந்த ரோஜா நிற சாரி எடுப்பா இருக்கும்.” என்றார் சேலையை அப்படியும் இப்படியும் காட்டி.
ரோஜா வண்ணத்தில் பொன்னிற கொடிகள் உடல் முழுவதும் ஓட, ஆகாய நீலத்தில் பார்டர் கொண்ட அழகான பட்டு மனதை பறிக்கத்தான் செய்தது
ஆசையோடு கையில் வாங்கினாலும் அவள் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் தயக்கம் எட்டிப் பார்க்க, அதை அவளின் தோளில் போட்டு அவளை இழுத்து கண்ணாடியின் முன் நிறுத்தினார். “இப்ப பார். எவ்வளவு வடிவா இருக்கு என்று. இன்னும் ஒழுங்கா கட்டினா எப்படி இருக்கும் சொல்லு பாப்பம்?” என்று அவளின் ஆவலை கூட்டவும், மெல்ல சம்மதித்தாள் ஜீவனிதா.
அடுத்த நிமிடமே, அவளது மனம் மாற முதலே ரெடிமேட் ப்ளவுஸ் அணியவைத்து அவளை தயார் படுத்தியிருந்தார் செல்வராணி.
தலையும் வாரி, அழகாய் பின்னலிட்டு, மிதமாக மேக்கப் போட்டுவிட்டு நிமிர்ந்த செல்வராணிக்கு தன் கண்ணையே அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை.
“என்ர கண்ணே பட்டுடும் போல!” என்று அவளின் கன்னம் வளித்தார்.
“போங்க சித்தி!” என்று சிணுங்கியவளைப் பார்த்து,
“இப்பதான் பொம்பிளப்புள்ளையா அழகா இருக்கிற. இப்படியே சித்தியோட கோயிலுக்கும் வா.” என்றார்.
“ஐயோ நான் மாட்டன்! நடக்க தெரியாம நடந்து, விழுந்து மானம் போய்டும்.” என்றவளை சமாளித்து கூட்டிக்கொண்டு வர, அங்கே வந்த அவளின் சித்தப்பாவின் விழிகள் விரிந்தது.
“நன்றாக வளர்ந்துவிட்டாள்!” என்றார் பெருமையோடு மனைவியிடம்.
எப்போதும் அவளைக் கேலி செய்யும் ரதன் கூட வாயை பிளந்துவிட்டான். “என்னம்மா இது? அக்கா இண்டைக்கு வடிவா இருக்கிறாள்?”
நங் என்று குட்டு விழுந்தது அவன் மண்டையில். “இதுக்கு முதல் நான் என்ன வடிவில்லாமலா இருந்தனான்?”
அருகில் என்பதால் எல்லோருமாக காலி சிவன் கோவிலுக்கு நடந்தே சென்றனர். இவள் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்துவருவதை பார்த்துவிட்டு ரதன் தகப்பனோடு முன்னே சென்றுவிட பெண்கள் இருவருமாக பின்னே சென்றனர்.

