திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 13

அத்தியாயம் 13

கோயிலில் ஏதோ விசேச பூசை போலும். ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. என்ன ஏதென்றெல்லாம் அவளுக்கு தெரியாது. நிறையப்பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் பக்திப் பழமாக கண்களை மூடி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர்.

இவளோ, அங்கிருந்த பெண்களின் சேலைகளை, அதற்கு ஏற்றார் போல் அணிந்துவந்த நகைகளை என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். புதிதாக அணிந்துகொண்ட சேலை அதையெல்லாம் கவனிக்க வைத்தது.

ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாக நின்று சுவாமி கும்புட்டுக்கொண்டிருக்க, அவள் கையை பிடித்து கூட்டிக்கொண்டு சென்று பெண்களின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டார் செல்வராணி. உள்ளே சற்றே எட்டிப் பார்த்தாள் ஜீவனிதா.

மிஸ்டர் சிவபெருமானை காணவில்லை. மிஸிஸ் சிவபெருமான் தான் நின்றிருந்தார். ‘இந்த ஆம்பிளைகளே இப்படித்தான். எப்ப பார் ஊர் சுத்த போறது. வீட்டுல இருக்கிறதே இல்ல. ஆனா மிஸிஸ் சிவபெருமான், உங்களிட்ட எனக்கு பிடிச்சதே உங்கட சாதுர்யம் தான். உங்கட ஹஸ்பண்டுக்கு செலவே இல்லாம புலித்தோல உடையா போடக் குடுத்துட்டு நீங்க மட்டும் பட்டுச்சாரியும் பனாரசுமா கலக்கிறீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க நீங்க. இதுல மேச்சிங்கா வைர நகை வேற. நான் லைக் பண்றன் உங்களை.’ என்று மனதில் மிஸிஸ் சிவபெருமானுடன் கதைத்துக் கொண்டிருந்தவளின் தோளில் கையால் இடித்தார் செல்வராணி.

அவள் திரும்பிப் பார்க்க, “சும்மா பிராக்குப் பாக்காம கடவுள கும்புடு!” என்றார் மற்றவர்களுக்கு கேட்காத குரலில்.

“என்ன கேட்டு கும்புடுறது.” அதே குரலில் முக்கியமான சந்தேகத்தை கேட்டாள். அவளுக்கெல்லாம் அப்படி கும்புடுவதற்கோ கேட்பதற்கோ எதுவும் இருக்கவில்லை.

அவளை முறைத்துவிட்டு, “உனக்கு நல்லவனா ஒருத்தன் வந்து மாட்டோணும். கல்யாணம் கெதியா நடக்கோணும் எண்டு கேள்.” என்றுவிட்டு அவர் தன் வேண்டுதலை ஆரம்பிக்க, அவளும் கண்களை மூடி, கரங்களை கூப்பினாள்.

அப்போதும் சிற்றன்னை சொன்னது போலவோ அல்லது வேறெதுவுமோ கேட்கத் தோன்றவில்லை. ஆனால் மனதால் ஒன்றிப்போனாள். ஒருவித அமைதி கிட்டுவது போலிருந்தது.

மனம் சாந்தமாக, ‘எல்லோரும் நல்லாருக்கோணும். எல்லாமே நல்லதா நடக்கட்டும்’ என்று வேண்டிக்கொண்டு கண்களை திறந்தாள்.

திறந்தவள் விழி மூட மறந்தாள். உள்ளம் இனிமையாக படபடத்தது. தேகமெல்லாம் சிலிர்ப்பு! அந்த நொடியில் அந்தக் கணத்தில் அவளின் விழிகளுக்குள்ளும், நெஞ்சுக்குள்ளும் ஏன் உயிருக்குள்ளும் அந்த உயிர் துடிக்கும் இதயத்துக்குள்ளும் உறைந்தவன் எதிரில் நின்ற நிரஞ்சன் மட்டுமே!

வெண்மையில் பளபளத்த வேட்டி. மேலே வெற்றுடம்பு. இடையில் சட்டையை கட்டியிருந்தான். கழுத்தில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் செயின் என்று முழுமையான ஆண்மகனாய் நின்றவனின் தோற்றத்தில் அவள் மனம் தடம் புரண்டது! அதுனால் வரை அவளின் கட்டுப்பாட்டில் இருந்த இதயம் அவனிடம் நழுவிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். ஏதோ ஒன்றை உணர்ந்துவிட பரிதவித்துக்கொண்டிருந்த ஆழ்மனம் இதுதான் என்று உணர்ந்துகொண்டது!

நிரஞ்சன் கண்களை மூடி கரங்களை கூப்பி நின்றிருந்தான். அடர்ந்த சிகை அழகு சேர்க்க, நெற்றியில் தீட்டியிருந்த திருநீறும் சந்தனமும் களையை கொடுக்க, அன்று காலையில் அவன் செய்துகொண்ட சேவ்வின் பலனாக பளபளத்த கன்னங்கள் சற்றுமுன் தடவிப்பார்த்த சேலைகளின் மென்மையை நினைவூட்ட, அவன் கன்னத்தையும் வருடிப்பார்க்கும் ஆசை ஆழ்மனதிலிருந்து வேகமாய் எழுந்ததில் தடுமாறிப்போனாள் ஜீவனிதா.

இதென்ன.. அவளின் உணர்வுகள் அவள் வசமிழந்து கொண்டிருந்தது.

அதுவரை நேரமும் தன்னவள் தனக்கு கிடைத்துவிட வேண்டும் என்கிற வேண்டுதலை அந்தத் தாயிடம் முன் வைத்துவிட்டு கண்களை திறந்த நிரஞ்சன், தன் முன்னால் நின்றவளைக் கண்டதும் தன் வசமிழந்து போனான்.

ஆண்டவனின் சந்நிதானத்தில் அழகே உருவாக ரோஜா வண்ணச் சேலையில் அவன் வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் அத்தனை ரோஜாக்களின் அழகையும் தன்னந்தனி ஒருத்தியாய் தோற்கடித்துவிட்டு உயிருள்ள ரோஜாவை நின்றவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.

அதுவும் அவள் விழிகள்.. அவை சொன்ன சேதி.. அதை அவள் படித்தாளோ இல்லையோ.. அவன் படித்தான். அவள்மேல் பித்தாகிப் போயிருக்கும் அவனையன்றி வேறு யாரால் தான் அதைப் படிக்க முடியும்?!

இத்தனை வருடங்களாக எதற்காகக் காத்திருந்தானோ அது நடந்தேவிட்டது!

நெஞ்சம் துள்ள, நேசம் பொங்க விழிகளால் சிறையெடுத்தான் அவளை!

சிறைப்பட்டவளோ சந்தோசமாய் தன்னை இழந்தாள். அந்த நொடியில், உயிரை உருக்கும் அந்தப் பார்வையில், என் சொந்தம் நீதான் என்று சொல்லாமல் சொன்ன அந்தக் காதலில், நீயின்றி நானில்லை என்று சொன்ன அந்த நேசத்தில் விழிகள் ஏனோ கண்ணீரில் தளும்பிற்று!

அதுநாள் வரை புரியாத அவன் பார்வைகள் புரிய, சொல்லாத காதல் விளங்க, இதுதானா? அவன் பார்வைகள் உணர்த்திய செய்தி இதுதானா? என்று மனம் தளும்பிற்று!

அவனிடம் சரணடைந்துவிட்ட உயிரையும் உள்ளத்தையும் உணர்வுகளையும் பிரிக்கமுடியாமல் அவள் தவிக்க, அவன் நிலையும் அதுதான். ஓடிச்சென்று தன்னவளை தன் கைப்பிடிக்குள் அடக்கிவிட அவனுக்குள் எழுந்த உந்துதலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப்போனான். இப்படியே விட்டால் இருவர் நிலையம் ஆபத்தில் முடிந்துவிடும் என்றறிந்து, திடீரெனக் கண்ணடித்தான்!

அதிர்ந்தாள் ஜீவி. வேகமாக அப்படியும் இப்படியுமாகப் பார்த்தாள் யாராவது பார்த்தார்களா என்று? இல்லை என்றதும் அவனை முறைத்தாள். அவனது குறும்பை ரசிக்கும் சிரிப்பொன்று அவளின் உதட்டோரத்தில் ஒளிந்துநின்று எட்டிப்பார்த்தது.

உள்ளம் துள்ள அவள் விழிகளாலோடு தன் விழிகளைக் கலந்தான். அவனது விழிச்சிறையில் கட்டுண்டு கிடந்தவளுக்கு, திடீரென்று அவளுக்குள் சடசடவென்று மொட்டுவிட்டு மலர்ந்துவிட்ட அந்த நேசப்பூவின் வாசத்தை அவனிடம் பகிர, இருவருமாக அனுபவிக்க, உணர தனிமை வேண்டும் போலிருந்தது. அவனுக்கும் அவளுக்கும் மட்டுமேயான தனிமை!

அவளை அறிந்தவனில்லையா அவன்! என்ன என்று கண்ணால் கேட்டான்.

ஒன்றுமில்லை என்று மெல்ல தலையசைத்தவளை புதிதாய் நாணம் வந்து ஆட்கொண்டது. எப்படிச் சொல்வாள் தன் மனதை? அதைவிட, அத்தனைபேருக்கு மத்தியிலும் அவனும் அவளும் கண்ணால் பேசிக்கொள்கிறார்களே!

புதிதாய் பூத்த காதலில் இதயம் ததும்பி வழிய, அவன் விழியோடு விழி கலந்து காதல் மொழி பேசு என்று ஆசைகொண்ட மனம் உந்த, பாலாய்ப்போன வெட்கம் திடீரென்று வந்துநின்று தடுக்க என்று பல உணர்ச்சிகளின் கலவையில் சிக்கித் தவித்தவளின் விழிகள் அவள் மனதைப்போலவே படபடத்து அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

தயக்கத்தை ஆசை வெல்ல மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அதற்காகவே காத்திருந்தவன், கண்ணால் அவள் அணிந்திருந்த சேலையை காட்டி, கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் மட்டும் சேர்த்து கையால் சூப்பர் என்று காட்டி, “அழகா இருக்கடா” என்று உதடுகளை அசைத்தபோது, வெட்கச் சிரிப்பில் உதடுகள் விரிய அவன் கண்களை மேற்கொண்டு நோக்கமுடியாமல் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

சித்தி பாராட்டியபோது வராத சந்தோசம், சித்தப்பா மகிழ்ந்தபோது வராத பூரிப்பு, ரதன் கிண்டல் போல் வியந்தபோது வராத ஆனந்தம் இப்போது வந்தது.

‘இனி நானே சாரி கட்டிப் பழகோணும்.’ நினைத்துக்கொண்டாள்.

அவனும் அப்படித்தானே மனதை மயக்குகிறான் என்று எண்ணிக்கொண்டு அதை சொல்லத் தெரியாமல் தடுமாறியவளின் பார்வையில் அப்போதுதான் அங்கிருந்த மற்ற இளம் பெண்களும் விழிகளால் அவனை விழுங்குவது விழுந்தது. புசுபுசு என்று ஆத்திரம் ஏற அவனை முறைத்தாள்.

திகைத்தான் நிரஞ்சன். என்ன என்று கண்களாலேயே கேட்டான். அவளும் வெட்டும் பார்வையால் அவன் மார்பைக் காட்டிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள அவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.

என்ன என்று மீண்டும் கேட்டான். இவளுக்கு பொறுமை பறக்கும் போலிருந்தது. மற்றவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு, கும்பிட்டபடி இருந்த கரங்களை மெல்லப் பிரித்து தன் மார்புக்கு முன் பிடித்து பட்டன்களை போடுவதுபோல் செய்துகாட்டி, சட்டையை போடும்படி சைகையில் சொன்னாள்.

அவனுக்கோ அப்போதும் புரியவில்லை. அவன் கண்கள் அவள் கைகள் சைகை செய்த இடத்தை தன்னிடம் அல்லாமல் அவளிடம் நோக்கவும், ‘டேய்! உன்ன கொல்லப் போறான் இப்ப!’ என்று கண்களாலேயே மிரட்டினாள் அவனின் அழகான ராட்சசி.

‘ம்கும்! இதுல மட்டும் நல்ல கவனமா இருப்பா!’ சிரிப்புத்தான் வந்தது அவனுக்கு. அதை அடக்கிக்கொண்டு, விளங்கவில்லை என்பதாக உதட்டைப் பிதுக்கினான்.

ஆத்திரத்தோடு அவனை முறைத்தபடி, “சட்டைய போடுடா!” என்று உதடுகளை அசைத்தாள்.

மெய்யாகவே அவனுக்கு அப்போதும் விளங்கவில்லை. அவன் புரியாமல் திகைக்க, இவளோ அவனை முறைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாள். சற்றே தள்ளியிருந்த கோவில் தூண் ஒன்றின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

அவனைப் பார்க்கும் அத்தனை பெண்களையும் முடியை பிடித்து இழுத்துவந்து கன்னம் கன்னமாக விளாசவேண்டும் போல் வெறியே வந்தது.

‘இவன் வேற பெரிய இவனாட்டம் காட்டிக்கொண்டு நிக்கிறான். கொல்லோணும் அவன பிடிச்சு!’ என்று இவள் முணுமுணுக்கும் போதே, “இப்ப கோபம் போச்சா?” என்று காதோரம் கிறங்கியது அவன் குரல்.

திரும்பிப் பார்த்தாள் ஜீவனிதா. சட்டையை மாட்டிக்கொண்டு சிரிக்கும் கண்களோடு அவளருகில் நின்றிருந்தான். இதயத்தில் மீண்டும் படபடப்பு. இதென்ன இவ்வளவு பக்கத்தில நிக்கிறான்.. யாரும் பார்த்தாலும் என்று அவள் விழிகளை சுழற்ற, “ஒருத்தருக்கும் தெரியாது!” என்றான் அவன் உதட்டில் உறைந்த சிரிப்புடன்.

சட்டென முகம் சூடாகிப்போனது அவளுக்கு!

கள்ளன்! கேட்டா ஊருக்கு பெரிய இவனாம். செய்றது முழுக்க திருகுதாளம்!

“இந்த சாரில அப்படியே குட்டி ரோஜாப்பூ மாதிரியே இருக்கிற தங்கம்!” அவன் உருகிப்போய் குழைந்தபோது, கரைந்துபோயிற்று அவள் உள்ளம்!

விழிகளில் காதலை தேக்கி, ஆசையோடு அவளைப் பார்த்து நின்றவனின் கழுத்துக்கு கரங்களை மாலையாக்கி மார்பினில் சாய்ந்திட எழுந்த பேராவளில், அதனைத் தடுக்கும் வகையும் தெரியாமல் ஆவலை நிறைவேற்றிடவும் முடியாமல் தடுமாறித்தான் போனாள் அவள். என்ன இது? அவள் உள்ளத்தின் ஆசைகள் அவளுக்கே அதிர்ச்சி அலைகளைக் கிளம்பிவிட, தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவன் போட்டிருந்த பட்டுச் சட்டை சற்றுமுன்னர் அவள் கொண்ட கோபத்தை மீண்டும் இழுத்துக்கொண்டு வந்துவிட, சட்டையையும் அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, முகத்தை திருப்பிக்கொண்டாள். மற்றப் பெண்கள் அவனைப் பார்த்த கோபம் மீண்டும் அவன் மீது பாய்ந்தது.

தன்னவளின் உள்ளத்தையும் அதன் உள்ளிருந்து அவனுக்காகத் துடிக்கும் இதயத்தையும் தன்னகத்தே கொண்டவன் இல்லையா இந்தக் கணத்தில் அவள் முன்னால் நிற்கும் இந்த நிரஞ்சன், அந்த நிரஞ்சன் அவள் கொண்ட ஊடலை மிக நன்றாகவே புரிந்துகொண்டான்.

உதட்டில் உறைந்த சிரிப்புடன் அவளையே பார்த்தான். காதல் வந்த கணமே அவனை மொத்தமாய் சொந்தம் கொண்டாடுகிறாளே, இத்தனை நாட்களாய் அவன் கொண்ட காதலை அறிந்தால் என்ன செய்வாள்?

அறியச் செய்துவிடத்தான் ஆவல் கொண்டான். ஆயினும் அடக்கினான். பெரியவர்களிடம் முறையாகச் சொல்லி, சம்மதம் பெற்று தடையெதுவும் இல்லை என்கிற நிலையில், அவளைத் தன் கைகளுக்குள் வைத்து நேசத்தை சொல்ல வேண்டும்!

அறிவு அடுத்து செய்ய வேண்டியதுகளை வரிசைப்படுத்த மனமோ ஊடல் கொண்டு நின்றவள் அருகாமையை விட்டு விலகமாட்டேன் என்று அடம் பிடித்தது.

error: Alert: Content selection is disabled!!