திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 17 – 2

“அடங்கவே மாட்டியா?”

அவளோ, இல்லை என்பதாக தலையை அசைத்தபடி இன்னுமே அவனை இறுக்கிக் கட்டிக்கொள்ள, அவள் நெற்றியில் ஆசையோடு ஒரு முத்தம் பதித்தான். மீண்டும் கைகள் அவன் கட்டுப்பாட்டை மீறி அவள் முகத்தை வருடத் தொடங்க, “திரைல கூட உன்ன தொடாம இருந்தவன, ஒரே இரவுல இப்படி மாத்திட்ட நீ.” என்றான் செல்லமாக.

“கத விடாதிங்க! அன்றைக்கு ஹோட்டல்ல வச்சு என்ர கைய பிடிச்சு கூட்டிக்கொண்டு போயிட்டு திரைல கூட தொடேல்லையாம்.”

“கைய பிடிச்சேனா?” வியப்போடு கேட்டான். அந்த நாளை மீட்டு பார்த்தான். கரத்தைப் பற்றிய நினைவே இல்லை. அவளைத் தொடக்கூடாது என்பது அவன் கொண்ட விரதம். அதையும் மீறி அவன் தொட்டது என்பது மனதின் ஆழத்தில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் அவளோடான வாழ்க்கை! அவளை யாரோவாக என்றுமே பார்க்காத அவன் அவனறியாமலேயே தொட்டிருக்கிறான்.

“ஜீவனி..”

“ம்..”

“டேய் ஜீவா…”

“ம்ம்..”

“வேலைக்கு போகோணும். பாலா வேற இண்டைக்கு லேட்டாத்தான் வருவான்.”

அவனை முறைத்தாள் ஜீவனி. “அப்ப என்ன வெளில கூட்டிக்கொண்டு போக மாட்டீங்க?”

அவனுக்கு மறுக்க முடியவில்லை. அதேநேரம் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொல்லவும் முடியாமல் நிற்க, “ஆனா ஒன்று! கல்யாணத்துக்கு பிறகும் இப்படி கெஞ்சிக்கொண்டு இருப்பன் எண்டு நினைக்காதீங்க. நானே உங்கள இழுத்துக்கொண்டு போவன். ஆனா இப்ப நாங்க போறது லவ்வர்சா. இந்த பீலிங்க்ஸ் அதுல கிடைக்காதே.” என்றாள் பெரும் சோகமாக.

“என்ன இழுத்துக்கொண்டு போவியா? உனக்கு இப்படியெல்லாம் வேற எண்ணமா? அதெல்லாம் இங்க நடக்காது மேடம்!” அவளை சீண்டினான்.

“அதையும் பாப்பம்!” தலையை சிலுப்பிச் சவாலாகச் சொன்னாள் அவள்.

“பாக்கிற நேரம் பார். இப்ப வந்து சாப்பாட்ட போடு. நேரமாகுது.” என்றபடி தன் செல்லையும், லாப்டப் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டான்.

“இதென்ன புதுசா? இவ்வளவு நாளும் எப்படி சாப்பிட்டீங்களோ அப்படியே சாப்பிடுங்க.” வெளியே வர அவன் சம்மதிக்கவில்லை என்கிற கோபத்தில் சொன்னாள்.

“புதுசுதான். இனி எல்லாமே! இவ்வளவு நாளும் யாருமில்லாத நிரஞ்சனா இருந்த நான் இனி இந்த ஜீவனியின் நிரஞ்சன். எனக்கு எல்லாமே இவதான். அப்ப இந்த ஜீவனிதானே என்ன கவனிக்கோணும்.” சலுகையோடு சொல்லிவிட்டு விளையாட்டாக நெற்றியில் முட்டியவனின் விழிகள் அதை ஏக்கத்தோடு எதிர்பார்த்தது அவளிடம்.

அதற்குமேல் மறுக்காமல் அவனோடு கீழே சென்றாள் ஜீவனிதா.

அங்கு ஜோடியாக வந்த இருவரையும் பார்த்ததுமே மேசையில் உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த அன்னம்மா அப்படியே நின்றுவிட்டார். அவர் கண்களில் ஆனந்த அதிர்ச்சி!

அவரைப் பார்த்து புன்னகைத்து, “இவள் ஜீவனி அன்னம்மா. தெரியும்தானே?” என்றான் நிரஞ்சன்.

“ஜீவிய தெரியாதா தம்பி?” என்றவருக்கு மேலே எதுவும் சொல்லவேண்டி இருக்கவில்லை. நிரஞ்சனின் அறையிலிருந்து இருவரும் ஜோடியாக வந்ததே போதுமெனில், நிரஞ்சனின் முகத்திலிருந்த சந்தோசமும் மலர்ச்சியும் மீதிக் கதையினை சொல்லிற்று.

ஜீவியை அணைத்து உச்சி முகர்ந்தார்.

“போதும் தம்பி! இது போதும் எனக்கு! எங்களுக்கு ஒரு குறையும் இல்லாம பாக்கிற தம்பி இப்படி தனியா நிக்குதே. ஒரு கல்யாணம் காட்சி எப்ப நடக்குமோ எண்டு நான் கவலைப்படாத நாள் இல்ல. இண்டைக்கு என்ர மனம் நிறைஞ்சு போச்சு. கெதியா கல்யாணத்த கட்டி குடும்பம் குட்டி எண்டு சந்தோசமா வாழோணும் தம்பி.!” என்றார் உணர்ச்சி வசப்பட்டதில் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

“கவலைபடாதிங்க அன்னம்மா. உங்கட தம்பிய கண்கலங்காம காப்பாத்த வேண்டியது என்ர பொறுப்பு.” என்றாள் ஜீவனி, இவனிடம் குறும்பாகக் கண்ணடித்து.

அந்தக் கண்களின் மீதே முத்தமிடத் துடித்த உதடுகளின் குறுகுறுப்பை அடக்கும் சக்தியற்றவனாக அவன் நிற்க, அவளின் குறும்புகளை பற்றி அறிந்திருந்தவரும், “எனக்கு அது போதும்மா..” என்றபடி, அவர்களுக்கான தட்டை எடுத்துவைக்க தொடங்கினார்.

அதைக் கவனித்துவிட்டு, “நாங்களே பாக்கிறம்.” என்றான் நிரஞ்சன்.

அதன் பொருள் புரிந்து அங்கிருந்து சென்றவர் அதன்பிறகு தானும் வரவில்லை, மற்றவர்களையும் வர விடவில்லை.

அவன் அமர்ந்ததும் அங்கு மூடி வைத்திருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள் ஜீவி. இட்டலி, இடியப்பம், வெண் பொங்கல், வடை, சட்டினி அது இது என்று இருக்க, “பணக்கார தொரைக்கு பத்துவகைச் சாப்பாடு..” என்றாள் வேண்டுமென்றே.

சிரிப்போடு அவள் மண்டையில் தட்டிவிட்டு, “பெரும்பாலும் காலைச் சாப்பாடு மட்டும்தான் வீட்டுல. அதால ஒரு நேரமாவது நான் நல்ல சாப்பாடு சாப்பிடோணுமாம் எண்டு இதையெல்லாம் செய்றது அன்னம்மா. அதுக்கு என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்?” என்றான் அவன்.

“சும்மா நடிக்காதிங்க பாஸ்!” என்றபடி அவள் போட, “உனக்கும் போடு.” என்று, தன்னவள் தனக்காக பரிமாறும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே சொன்னான்.

“என்னத்துக்கு சும்மா இன்னொரு தட்டு. அன்னம்மாக்கும் வேல கூட.” என்று கேட்டுவிட்டு, அவனருகில் அமர்ந்து அவன் தட்டிலேயே இருந்த இட்டலியை பிய்த்து சட்னியில் தொட்டு தன் வாயில் போட்டுக்கொண்டாள் ஜீவனிதா.

அப்படித்தான் அன்றைய அவளின் காலை உணவு முடிந்தது!

சாப்பிட்டுவிட்டு வாஷ் பேசினில் கையை கழுவியவன், அங்கே தாங்கியில் துவாலை தொங்கியபோதும் தன்னோடு கை கழுவியவளின் சுடிதாரின் துப்பட்டாவை இழுத்து அதில் கையை துடைத்தான்.

“ஹேய்! என்ன செய்றீங்க? ஷாலை அழுக்காக்காம விடுங்க..” என்று அவள் பிடுங்க, “இதெல்லாம் செய்யோணும் எண்டு ஆசையா இருக்கு. விடேன்!” என்றவன் துடைத்துவிட்டே விட்டான்.

“உங்கள!” என்று பல்லைக் கடித்தவள் கண்ணில் அவன் அணிந்திருந்த வெண்மை பளிச்சிடும் சட்டை பட்டது. “எனக்கும் உங்கட ஷர்ட்ல கை துடைக்கோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்றபடி அவனிடம் விரைய, ஒருகணம் திகைத்துவிட்டு, வெண் பற்கள் பளீரிடச் சிரித்தான் நிரஞ்சன்.

“எத செய்தாலும் அத திருப்பிச் செய்யோணும் உனக்கு! ஆனா நான் மாட்டமாட்டன்!” என்றபடி அவளிடம் அகப்படாமல் தப்பி ஓடினான்.

“மரியாதையா நில்லுங்க நிரஞ்சன்!” என்றபடி, ஜீவனியும் விடாமல் துரத்த, வாசலுக்கு விரைந்தவனின் ஓட்டம் ரதனோடு வந்துகொண்டிருந்தவரை பார்த்ததும் நின்றது.

“மாட்டினீங்களா..” சிரித்தபடி வந்தவளின் ஓட்டமும் அவரைக் கண்டதும் நின்றது. அவரை எதிர்பாராத அதிர்வில் நிரஞ்சனை திரும்பிப் பார்த்தாள். அவளிடம் தெரிந்த சின்ன அதிர்வில் மென்மையாகப் புன்னகைத்தான் நிரஞ்சன். அடுத்த கணமே, “அப்பா!” என்று ஆனந்தமாகக் கூவியபடி ஓடிப்போய் அவர் கைப்பற்றி வரவேற்றாள்.

“வாங்கப்பா. எப்பப்பா வந்தனீங்க? என்னட்ட சொல்லவே இல்ல.” என்ற மகளை, நடை நிற்க கூர்ந்தார் தகப்பன்.

அவர் முகத்தில் அவளை அங்கே எதிர்பாராததில் உண்டான இறுக்கம்! ஏற்கனவே அவன் மாளிகையும் அது தந்த மலைப்புமே பெரிதாக இருந்தது. அவன் தோட்டத்து செடி கொடிகள் கூட அந்த வீட்டின் செழிப்பை பறை சாற்றியபடி நிற்க, தகுதிக்கு மீறிய இடத்தில் பெண்ணை கொடுக்கவேண்டுமா என்றுதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

மகளோ அந்த வீட்டிலேயே நிற்கிறாள்!

error: Alert: Content selection is disabled!!