திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 18 – 2

“நீங்களும் உங்கட மகளுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை துணையைத்தானே குடுக்க ஆசைப்படுவீங்க.” என்னை விடச் சிறந்த ஒருவனை உங்களால் அவளருகில் நிறுத்தவே முடியாது என்கிற உறுதியோடு சொன்னான் அவன்.

அவனது புத்திசாலித்தனத்தில் அவரது புன்னகை அகன்றது.

அதன்பிறகு நிறையக் கதைத்தார்கள். அவன் தொழில் பற்றி. வாழ்க்கை பற்றி. அவர் சிவகுமார் மூலம் கேள்விப் பட்டவைகள் பற்றி. அவனோ, எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தான். உண்மையை சொல்லப்போனால் தவநேசனுக்கு அவன்மேல் முழுத் திருப்தியே வந்திருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், “எங்க உள்ளுக்கு போனவர்களை இன்னும் காணேல்ல..” என்று இலகு குரலில் கேட்டார்.

“ஏதாவது சண்டையா இருக்கும். அதுல எங்கள மறந்திருப்பீனம் ரெண்டுபேரும்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு உள்ளுக்கு திரும்பி, “ஜீவனி! தேத்தண்ணி இண்டைக்கு வருமா?” என்று குரல் கொடுத்தான்.

“இந்த ரதன் என்ன வேலை செய்ய விடுறான் இல்ல நிரஞ்சன். இவன நீங்க அங்க கூப்பிடுங்கோ.” என்று பதில் வந்தது உள்ளிருந்து.

“இவள் பொய் சொல்றாள் அண்ணா. தேத்தண்ணியே ஊத்தத் தெரியேல்ல இவளுக்கு!” என்று குரல் கொடுத்தான் சின்னவன்.

“போடா டேய்!” என்று அவர்களின் பிடுங்குப்பாடு கேட்கத் தொடங்கவும் புன்னகையோடு எழுந்துகொண்டார் தவநேசன்.

“அவள் எதையாவது கொண்டுவந்தாலும் அத குடிக்கிற தைரியம் எனக்கில்ல தம்பி. நான் வாரன் போயிட்டு. இரவிரவா நித்திரையில்ல. ஒரே யோசனை. இனித்தான் நிம்மதியா படுக்கப்போறன். நாங்க பிறகு கதைப்பம்.” என்று விடைபெற்றார்.

வெளிப்படையாக ஒன்றும் சொல்லாத போதிலும் ‘இனித்தான் நிம்மதியா படுக்கப்போறன்’ என்றதிலேயே அவர் மனம் புரிந்துபோயிற்று அவனுக்கு.

அவர் சென்ற பிறகே தேநீர் என்கிற பெயரில் ஒன்றைக் கொண்டுவந்தாள் ஜீவனிதா.

“என்ன இது?” புருவங்களால் காட்டிக் கேட்டான் நிரஞ்சன்.

“தேத்தண்ணி. நானே போட்டனான். அப்பா எங்க?” பெருமையோடு சொல்லி அவள் கேட்க, “அவர் போய் ஒரு மணி நேரமாகுது.” என்றான் அவன் கேலியாக.

“அவ்..வளவு நேரமா..வா தேத்தண்ணி போட்டனான்.” என்று அசடு வழிந்தாள் அவள்.

“ப்ச்! என்ன நீங்க? எவ்வளவு நேரமானாலும் அவரை மறிச்சு வச்சிருக்க வேண்டாமா? முதன் முதலா நான் ஊத்தின தேத்தண்ணி அப்பா குடிச்சிருப்பார் எல்லோ.” என்று அவள் கவலைப்பட,

“ஏன்? அந்தத் தேத்தண்ணிய எனக்கு தரமாட்டியா?” என்று கேட்டு, கப்பை தான் எடுத்துப் பருகினான் நிரஞ்சன்.

“எப்படி இருக்கு?” ஆவலோடு அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“சூப்பரா இருக்கு. என்ர ஜீவனி போட்டது நல்லா இல்லாம இருக்குமா?” என்றதும் பூவாக மலர்ந்து போயிற்று அவள் முகம்.

“அதுசரி அப்பா என்னவாம்?” அவனை நெருங்கி ரகசியம்போல் அவள் கேட்க, மென்னகை மலர்ந்தது அவன் முகத்தில்.

“என்ன கேட்டா? தன்ர மகளை பார்க்க வந்திருப்பார்.” என்றுவிட்டு, “எங்க உன்ர தம்பி?” என்று கேட்டுக்கொண்டே, தேநீரை ரசித்துப் பருகினான் அவன்.

“அவன் அப்பவே பின் பக்கத்தால வீட்ட ஓடிட்டான். அதுசரி.. எங்களைப் பற்றி ஏதும் விசாரிச்சவரா?” என்று இவள் விசாரித்தாள்.

புன்சிரிப்பு அரும்பியது அவனிடத்தில். “அவர் வரேக்க நீ இங்க நிக்கிறாய். அப்ப கேக்கமாட்டாரா?” என்று பதிலுக்கு கேட்டான் அவன்.

“அதுதானே.” என்று அவள் சொல்ல, “இதுல என்னவோ உன்ர வீட்டுக்கு உன்னைப் பாக்க அவர் வந்த மாதிரி ஓடிப்போய் வாங்கோ வாங்கோ எண்டு கூப்பிடுறாய்? கொஞ்சம் கூட பயமே இல்லையா உனக்கு?” கண்களால் சிரித்துக்கொண்டு வேண்டுமென்றே கேட்டான்.

முறைத்தாள் அவள். “இது என்ர வீடுதானே! பிறகு என்ர அப்பாவை நான் கூப்பிடாம வேற யார் கூப்பிடுறது? அதைவிட, நான் என்ன பிழை செய்தனான் எண்டு பயப்பட?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டாள் அவள்.

“உண்மையாவா? எனக்கு என்னவோ உள்ளுக்க கொஞ்சமா பயந்த மாதிரி இருந்ததே..” என்று வம்பிழுத்தான் அவன்.

“ஹேஹே கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று அசடு வழிந்துவிட்டு, அவன் காதருகில் எட்டி, “முதல் லைட்டா இருந்ததுதான். பிறகு நீங்க இருக்கேக்க ஒண்டும் நடக்காது என்ற தைரியத்துல வந்த பயம் ஒடியே போயிட்டுது!” என்றாள் அவள்.

“இங்க நான் காப்பாத்திட்டன். அங்க? அங்க தடியோட நிக்கிறார் மாமா. போ போ போய் வாங்கிக்கட்டு!” என்று சிரித்தான் அவன்.

“ஹலோ ஹலோ! உங்கட மாமாவும் அந்தளவு மோசமான ஆள் இல்ல என்ர நிரஞ்சனும் என்ன அடிக்கிற அளவுக்கு விடமாட்டார். விளங்குதா?!” என்றாள் அவள்.

“உனக்கு உன்ர அப்பா அடிச்சா நான் என்ன செய்ய முடியும்? முதல் அவர் ஏன் திடீரென்று வந்தவர்? அத யோசி!” என்றான் அவன்.

“அதுதானே? திடீரென்று எப்படி வந்தவர். எங்கட கதையை யாரு அவரிட்ட போட்டுக் கொடுத்தது? எனக்கே நேற்றுத்தானே தெரியும்?” என்று அவள் மும்முரமாக யோசிக்க, அவள் தலையில் தட்டி, “இதுக்குள்ள இருக்கிறத தூசு தட்டி நல்லா யோசி! எனக்கு நேரமாச்சு. வரட்டா?” என்றபடி கிளம்பினான் அவன்.

“முதல்ல நான் கேட்டதுக்கு பதில சொல்லிட்டு போங்கோ! என்னெண்டு அவருக்கு தெரிஞ்சது? இல்லாட்டி எனக்கு மண்டை வெடிச்சிடும்.” அவனுக்கு பின்னால் வால் பிடித்தபடி கேட்டாள்.

“எல்லாம் உடன தெரியனுமா உனக்கு? கொஞ்சம் பொறுமையா யோசிங்க மேடம்.” கேலியாக சொல்லிக்கொண்டே வாசலுக்கு நடந்தான் நிரஞ்சன்.

“பொறுமையும் எருமையும்! பின்னேரம் எத்தனை மணிக்கு வருவீங்க? இதுக்காவது பதில சொல்லுங்க.”

“தெரியேல்லம்மா. நிறைய வேல இருக்கு. அதெல்லாம் முடிக்கோணும். இப்பவே நல்ல லேட். வேலை எல்லாம் முடிஞ்சதும் தான் வருவன்.” காரின் கதவைத் திறந்து தன் பாக்கை உள்ளே வைத்துவிட்டு, ஏறி அமர்ந்துகொண்டே சொன்னான்.

காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, இறக்கியிருந்த கண்ணாடி வழியே, “அப்ப நான் வரட்டா?” என்று மனமேயில்லாமல் கேட்டான்.

என்னதான் வேலை அவனை அழைத்தாலும் தன்னவளை விட்டுப் போகவே பிடிக்கவில்லை. அவளுடான ஒவ்வொரு நிமிடத் துளிகளையும் அணுவணுவாக ரசித்து அனுபவித்துக்கொண்டிருந்தான். கணமும் விலகாது இன்னுமின்னும் அனுபவித்திடத்தான் ஆசை. இதெல்லாம் தன் வாழ்வில் நடக்குமா நடக்காதா என்று ஏங்கிய பொன்னான பொழுதுகள். இன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. காலம் காலமாக அனுபவித்திட காலநேரம் கூடி வரவேண்டாமா? அவளறியாமல் அவனுக்குள் பெருமூச்சொன்று எழுந்தடங்கியது!

அவளோ காரை சுற்றிக்கொண்டு வந்து மற்றப்பக்கம் ஏறிக்கொண்டாள்.

அவன் கேள்வியாகப் பார்க்க, “இண்டைக்கு உங்களோட எங்கயாவது வெளில போகோணும் எண்டு ஆசையா இருந்தது. அதுதான் நடக்கேல்ல, வீடு வரைக்குமாவது உங்களோட வாரேனே.” என்று அவள் சொல்ல அது அவன் மனதை தொட்டது. தொட்டது மட்டுமில்லாமல் மனதை பிசையவும் செய்தது. அவள் ஆசையாக கேட்டதை உடனேயே செய்ய முடியவில்லையே என்று.

காரை வட்டமடித்து திருப்பிக்கொண்டே, “கொஞ்சநாள் பொறுத்துக்கொள். பிறகு உன்ர விருப்பப்படி எல்லாம் செய்யலாம். பின்னேரம் இங்க வராத. அம்மா அப்பா வந்திருக்கீனம். நல்லபிள்ளையா அவையளோட இரு என்ன..” என்று புத்தி சொல்லி அவளின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றான் நிரஞ்சன்.

error: Alert: Content selection is disabled!!