திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 19 – 2

“சரி விடு!” என்று தட்டிக்கொடுத்தார் அவர். “ சின்ன வயசில இருந்தே அவள் அப்படித்தானே! தன்ர விருப்பத்த சொல்லி இருக்கிறாள். அவளின்ர தெரிவும் பிழையில்ல. பிறகும் சும்மா சின்ன விசயங்கள தூக்கி பிடிக்கக்கூடாது!” என்றார் மனைவியிடம் ஆதரவாக.

“அத்தான் சொல்றதுதான் சரி அக்கா. ஜீவின்ர குணம் அதுதானே. எனக்கு அந்த தம்பி கேட்ட அந்த நிமிஷம் துள்ளிக்குதிக்கோணும் மாதிரி இருந்தது. அவ்வளவு சந்தோசம். இதே அவள் நான் பெத்த மகளா இருந்திருந்தா இந்த நேரம் கல்யாணத்தையே முடிச்சு வச்சிருப்பன்.” என்று சொல்லவும், தங்கையின் பேச்சில் புன்னகை அரும்பியது அவர் முகத்தில்.

“என்னடியப்பா ஆளாளுக்கு இந்தளவுக்கு புகழ்ந்து தல்லுறீங்க. நீங்க சொல்லச் சொல்ல எனக்கு இப்பவே அந்தப் பெடியன பாக்கோணும் மாதிரி இருக்கே.” என்றார் அவர்.

“நீ பாத்து உனக்கு பிடிக்காட்டியும் உன்ர மகள் அந்த தம்பியைத்தான் கட்டுவாள்.” என்றார் தவநேசன் அரும்பிய புன்னகையோடு.

புஸ்பராணியின் முகத்திலும் மெல்லப் புன்னகை மலர்ந்தது. அதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி இலகுவானது.

“எனக்கு அந்த பெடியன இப்பவே பாக்கோணுமே…” என்றார் திரும்பவும்.

அதுவரை பெரியவர்களின் பேச்சை கவனித்துக்கொண்டிருந்தாலும், ஒருவித பயத்துடன் அமர்ந்திருந்த ரதன், “நிரஞ்சன் அண்ணா ஹீரோ மாதிரி இருப்பார் பெரியம்மா. எனக்கும் அவர மட்டும்தான் அத்தான் எண்டு கூப்பிட விருப்பம்.” என்றான் ஆவலோடு.

“முதல்ல போட்டோ ஏதும் இருந்தா காட்டு.” என்றார் பெரியன்னை.

தன் செல்லில் இருந்த கலரிக்கு சென்றுகொண்டே, “அண்ணான்ட போட்டோ என்னட்ட இருக்கா தெரியேல்ல, ஆனா கூகிள்ல பாத்தா அண்ணாவ பற்றி முழுக்கத் தெரியவரும்.” என்றான்.

“டேய்! உளறாதடா!” என்றார் அன்னை.

“உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் உளறல்தான்.” என்று அவரை முறைத்துவிட்டு,

“பெரியப்பா இங்க பாருங்க, நிரஞ்சன் பிரகலாதன் காலி எண்டு குடுக்க அண்ணாவ பற்றி வருது பாருங்கோ..” என்று செல்லைக் காட்டவும், உண்மையிலேயே அங்கே நிரஞ்சனை பற்றிய முழு விடயமும் இருக்கக் கண்டு விஞ்ஞானம் போகும் போக்கைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது பெரியவர்களுக்கு.

ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தனர். அவன் பிறந்தது, படித்தது, வெளிநாட்டில் தொழில்துறை படிப்பை முடித்தது, வியாபாரத்தை கையிலெடுத்துக்கொண்டது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இளம் தொழிலதிபருக்கான விருதினை பெற்றுக்கொண்டது என்று அவன் சரித்திரமே இருந்தது.

ஓரிடத்தில் கூட பெண் நட்பு, பெண் தொடர்பு என்று எதுவுமில்லை.

அனைத்துமே படிக்கப் படிக்க வியப்பையும் ஆச்சரியத்தையும் மட்டுமே கொடுத்தது தவநேசன் தம்பதியருக்கு. அதுவும் தேவநேசனுக்கு, ‘நீங்க மறுக்கிற இடத்தில நான் இல்ல அங்கிள்!’ என்று அவன் சொன்னதுதான் காதில் எதிரொலித்தது. இப்படியானவன் அப்படிச் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம்.

இவ்வளவு சிறப்பான இடத்திலிருக்கும் ஒருவன் தம் மகளை விரும்பிக் கேட்டதில் பெருமிதமாகவும் உணர்ந்தனர்.

“டேய் போட்டோவை காட்டேன்டா..” என்றார் புஷ்பராணி ஆர்வத்தை அடக்க முடியாமல்.

போட்டோஸ் என்பதை அவன் அழுத்த முதலில் வந்தது நீல வானமும் நீலக்கடலும் சங்கமிக்கும் பொன்மணல் கடற்கரை பரப்பில், பார்மல் ட்ரெஸ்ஸில் சின்னச் சிரிப்புடன் நின்றிருந்த நிரஞ்சன்! கண்களில் கூலிங்கிளாஸ். கையில் செல்.

அந்தச் சிரிப்பில் புஷ்பராணி முற்றிலுமாக கவிழ்ந்தார் என்பதுதான் உண்மை! “ரெண்டுபேருக்கும் நல்ல ஜோடிப்பொருத்தம் என்னப்பா?” என்றார் கணவரிடம் கண்களை அவனிடமிருந்து அகற்றாமல். மனக்கண்ணில் அவனையும் மகளையும் பொருத்திப்பார்த்து பூரித்துப்போனார்.

“ம்ம்.. மனப்பொருத்தமும் அந்நியோன்யமும் இதவிட கூட!” என்றார் அவர்.

புஷ்பராணி கணவரை திரும்பி பார்க்க, “எனக்கு அவே ரெண்டுபேரையும் ஒண்டா பாக்க கண்ணுக்கு அத்தனை நிறைவா இருந்தது.” என்றார் குரல் நெகிழ.

அந்தக் காட்சியை தான் பாக்காமல் போனோமே என்று ஏங்கிப்போனார் புஷ்பராணி.

அந்த பெற்றவர்களின் மனதில் அப்போதே சின்னச் சின்னதாய் மகளின் கல்யாணக் கனவுகள் விரியலாயிற்று!

இங்கே அறைக்குள் இருந்தவளோ அவர்கள் மீது பெரும் கோபத்தில் இருந்தாள்.

நேரம் செல்லச் செல்ல தான் சொல்லாமல் சென்றது பிழைதான் என்பது விளங்கினாலும் நிரஞ்சனை பற்றி அவர்கள் கதைத்ததை மறப்பதாயில்லை அவள்.

‘நடந்ததை எல்லாம் நிரஞ்சனிட்ட சொல்லோணுமே..’ செல்லை எட்டி எடுத்தவளுக்கு, அப்போதுதான் அவன் நம்பர் தன்னிடம் இல்லை என்பதே தெரிந்தது.

‘சரியான லூசுடி நீ!’ கையிலிருந்த செல்லாலேயே நெற்றியில் ஒன்று போட்டுக்கொண்டாள்.

‘சரி நாளைக்கு சொல்லுவம். அங்க போறதுக்கும் ஒரு சாட்டு வேணுமே..’ என்று திட்டம் போட்டுக்கொண்டே வெளியே வந்தாள்.

“சித்தி பசிக்குது. சாப்பாடு போடுங்க..” நிரஞ்சனோடு சாப்பிட்டிருந்தாலும் பெற்றவர்களோடு சண்டையிட்டதில் உண்மையிலேயே இப்போதும் பசித்தது அவளுக்கு.

ரதனோ அவளை நெருங்கி உற்று உற்றுப் பார்த்தான்.

“என்னடா?” ஒன்றும் விளங்காமல் அவள் கேட்க,

“அழுத அடையாளம் எதையும் காணேல்லையே..?” என்றான் அவன்.

“எரும! சொல்றத ஒழுங்கா சொல்லு!?” சினத்தில் அவனிடம் ஏறினாள்.

“அதுதான், பெரியம்மாவும் பெரியப்பாவும் உன்ர லவ்வுக்கு ஓகே சொல்லேல்லையே. அப்ப நீ கட்டில்ல குப்புற விழுந்து குமுறி குமுறி அழுற சீன் தானே இப்ப வரோணும்.”

எப்போதும்போல நங் என்று ஒன்று போட்டாள் அவன் மண்டையில். “நான் ஏன் அழ? நிரஞ்சன் என்ன அழ விடமாட்டார். அவருக்குத் தெரியும் என்ன செய்யோணும் எண்டு.” என்றுவிட்டு அவள் மேசையில் அமர, நிரஞ்சன் மீதான அவளின் அசைக்க முடியாத நம்பிக்கையை எண்ணி பெரியவர்களுக்கு பெரும் வியப்பு.

அதை மறைத்துக்கொண்டு வந்து புஷ்பராணி சாப்பாடு போட்டார். அவருக்கும் மகளுக்கு தன் கையால் பரிமாறி நிறைய நாட்களாகிவிட்டதே!

“சித்தீஈ!!! சாப்பாட்ட நீங்க போடுங்க! சும்மா இங்க ஒருத்தரும் நடிக்கத் தேவையில்ல.” என்றாள் தாயை முறைத்துக்கொண்டே.

“பேசாம சாப்பிடு!” அவளுக்கு மேலால் அதட்டினார் புஷ்பராணி.

“முறைக்கு கோபம் வரவேண்டியது எனக்கு. ஆனா உனக்கு வருது. எல்லாம் நேரம்!”

“உங்களுக்கு ஏன் கோபம் வரோணும்? நான் அப்படி என்ன செய்தனான்?” என்று மல்லுக்கு நின்றாள் அவரின் மகள்.

அவளருகில் அமர்ந்து அவளின் தலையை தடவி, “சாப்பிடு!” என்றார் தகப்பன் தன்மையாக.

“அப்பா..” தாய் அதட்டியபோது வராத அழுகை தந்தையின் ஒற்றை தடவலில் வரவும் சின்ன விம்மலோடு அவர் தோள் சாய்ந்து அழுதாள் ஜீவனி.

“என்னம்மா இது? இப்ப எதுக்கு அழுறாய்?” அவர் கேட்க,

“உங்களிட்ட சொல்லாம இருப்பனாப்பா? நேற்று இரவுதான் எனக்கே தெரியும். பிறகு எப்படி உடனே சொல்றது? எனக்கே முதல் இதையெல்லாம் உணரவேண்டி இருந்தது.” என்றாள் மகள்.

“சரிசரி கண்ணை துடை.” என்று அவர் தானே துடைத்துவிடவும், “எதையும் மறைக்காம சொல்ற அளவுக்கு சுதந்திரம் தந்துதானேப்பா நீங்க என்ன வளத்திருக்கிறீங்க? பிறகு எப்படிப்பா நான் சொல்லாம இருப்பன் எண்டு நினைச்சீங்க?” என்று அவள் கண்ணீரோடு அவரையே கேட்டபோது, மனைவியை அண்ணாந்து பார்த்தவரின் கண்கள், ‘பார்த்தாயா?’ என்று கேட்டது.

அதோடு, மகள் தன்னிடம் மறைத்துவிட்டாளே என்கிற வருத்தம்போய், அவள் சொன்னதுபோல என் மகள் மறைக்கமாட்டாள் என்று நினைக்காமல் போனோமே என்றாயிற்று அவருக்கு. ஆனாலும் மனதில் சந்தோசமாய் உணர்ந்தார்.

“சரிடாம்மா. அப்பாக்கு வயசு போயிட்டுது தானே. அதுதான் கொஞ்சம் அவசரப்பட்டுடன். நீ கோவிக்காம இப்ப சாப்பிடு!” என்கிறார் அவர்.

அதன்பிறகே உணவில் கையை வைத்தாள் ஜீவி.

உணவை முடித்ததும், ரதனையும் இழுத்துக்கொண்டு கடற்கரைக்கு புறப்பட்டாள். வாசலில் செருப்பை மாட்டிவிட்டு, “எல்லாரும் நல்லா கேட்டுக்கொள்ளுங்கோ நான் கடற்கரைக்கு போறன். பிறகு சொல்லாம அங்க போய்ட்டாள் இங்க போய்ட்டாள் எண்டு ஆளாளுக்கு சீன போடாதிங்க சொல்லிட்டன்.” என்றுவிட்டு அவள் செல்ல, அது புஷ்பராணிக்கான மறைமுக அடி என்பதை உணர்ந்துகொண்ட மற்ற மூவரும் சிரிப்போடு அவரை பார்த்தனர்.

“இவளுக்கு இருக்கிற கொழுப்புக்கு.. எல்லாம் இவர் குடுக்கிற இடம்!” என்று கணவரை முறைக்க முயன்றவர் முகத்திலும் சிரிப்பே!

ஆண்களும் அப்படியே நிரஞ்சனை பற்றி விசாரிக்க என்று புறப்பட்டுவிட, லாப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் புஷ்பராணி. இணையத்தில் நிரஞ்சனை அக்குவேறு ஆணி வேறாக அலசினார்.. போட்டோக்கள் ஒவ்வொன்றாக எடுத்தெடுத்துப் பார்த்தார். பெண்களுடன்.. நடிகைகளுடன் அல்லது மாடல்களுடன் நிற்கிறானா என்று. சாம்ன்யர்களிடம் சிக்காத போட்டோக்கள் கூட இன்று இணையத்தில் சிக்குமே! யு டூபில் கூட அவன் விழாக்களில், மீட்டிங்களில் பங்கெடுத்த வீடியோக்களை எடுத்துப் பார்த்தார். குடிக்கிறானா புகைக்கிறானா என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

வெளியில் ஆண்கள் பார்த்த வேலையை அவர் வீட்டிலிருந்தே பார்த்தார்.

அவன் பேசுவதை கேட்டார். அலட்டல்கள் இல்லாமல் அளவான முறுவலோடு அவனது கம்பீரமான பேச்சையும் குரலையும் கேட்கக் கேட்க மகளுக்கு இவனே பொருத்தமானவன் என்று அவர் மனமே அவருக்குச் சொல்லிற்று!

மாலையில் வந்தவர்களும் அதையே சொல்ல, எல்லோருக்கும் சந்தோசம். பொருத்தம் வேறு அமோகமாகப் பொருந்தியிருந்தது. அதுவரை இருந்த யோசனைகளை கவலைகள் எல்லாம் அகல, மன நிறைவுடனேயே உறங்கினர்.

error: Alert: Content selection is disabled!!