திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 20 – 2

கார் அவர்களின் வீதியை விட்டு வெளியேறியதுமே முடிந்தவரை அவனை நெருங்கி, அவன் கையை கட்டிக்கொண்டு தோள் மீது சாய்ந்துகொண்டாள் ஜீவனிதா. ஒரு கையால் அவள் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்தான் நிரஞ்சன்.

அந்த வருடலில், விழிகளை மட்டுமே உயர்த்தி அவனை பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தான். அந்தப் பார்வையே அவளை அமைதிப்படுத்த, அவனது அருகாமை மட்டுமே போதுமென்று அப்படியே சாய்ந்துகொண்டாள் ஜீவனி.

‘இனி என்ன என்றாலும் அவன் பார்த்துக்கொள்ளுவான்.’

நிரஞ்சன் காரை ஒரு அழகான கூரை வீட்டின் முன்னே நிறுத்திவிட்டு, அவளோடு உள்ளே சென்றான். காரிலிருந்து வீட்டுக்குள் வரைக்கும் அவனிடமிருந்து தள்ளி வந்ததே பெரும் பாடு என்பதுபோல் வீட்டுக்குள் வந்ததுமே அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் ஜீவனிதா.

அவள் முதுகை இதமாக தடவிக்கொடுத்தபடி என்னவென்று விசாரித்தான் நிரஞ்சன்.

அதற்காகவே காத்திருந்தவள், நெஞ்சை முட்டிக்கொண்டிருந்த அனைத்தையும் ஒருவித தவிப்போடு படபடவென்று கொட்டிவிட்டு, “நானும் உங்களுக்கு ஏற்ற மாதிரி மாறத்தான் முயற்சி செய்றன். இந்த ஒரு நாள்லயே எனக்கு மலைய புரட்டின மாதிரி இருக்கு நிரஞ்சன். என்னால முடியாம போனா? என்ன வெறுத்துடுவீங்களா?” கண்களில் கலக்கத்தோடு அவள் கேட்க, அதையே தாங்கமாட்டாமல் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் நிரஞ்சன்.

அன்னை நல்லதுக்கு புத்தி சொல்ல இவளோ தேவையில்லாமல் தன்னை ஒருநாள் முழுக்க வருத்தி இருக்கிறாளே என்றிருந்தது அவனுக்கு.

“மாமி என்ன சொன்னவா என்று ஒழுங்கா விளங்காம இப்படித்தான் உன்ன நீயே வருத்துவியா?” சின்னதாக கடிந்துகொண்டான் அவளை.

அப்போதும் பதிலுக்காக அவன் முகத்தையே அவள் பார்க்க, நன்றாகவே கலங்கி நிற்கிறாள் என்று தெரிந்து போனது.

தன் முன்னே நிறுத்தி அவள் முகத்தையே பார்த்து, “எனக்கு இந்த ஜீவனி தான் வேணும்! இதமா வீசுற காத்து மாதிரி சுகமா எனக்கே தெரியாம எனக்குள்ள நுழைஞ்ச அந்த ஜீவனி.. அதிரடியா வீட்டுக்கே வந்து என்ன காதலிக்கிறியாடா எண்டு சட்டைய பிடிச்சு கேட்ட அந்த சண்டிராணி ஜீவனி, காதல் வந்த நிமிசத்துல இருந்து அவ காதல வச்சே சூறாவளியா சுழட்டி அவ நெஞ்சுக்குள்ள என்ன முடிஞ்சு வச்சிருக்கிற அந்த ஜீவனி, இதோ.. இப்ப இந்த நிமிஷம் எனக்கு அவ பொருத்தம் இல்லையோ எண்டு நினச்சு தேவையில்லாம கலங்கி நிக்கிற இந்த ஜீவனிதான் எனக்கு வாழ்க்கை முழுக்கவும் வேணும். அவ இல்லை எண்டா இந்த நிரஞ்சன் இல்லவே இல்ல.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே அழுகையும் சிரிப்பும் ஒன்றாக மலர அவனை திரும்பவும் கட்டிக்கொண்டாள் ஜீவனிதா.

‘அப்பாடி சிரிச்சிட்டா..’ அதன் பிறகுதான் அவன் மனம் அமைதியானது.

ஆனாலும், “சும்மா எதுக்கு இந்தக் கண்ணீர்! அத கட் பண்ணிட்டு சிரிப்ப மட்டும் காட்டு பாப்பம்! மனுஷன் ஏங்கிப்போய் இருக்கிறான்.” என்றபடி அவளின் முகத்தை தாங்கி கண்ணீரை துடைத்துவிட்டான்.

அவளோ, தன் ஆனந்தக் கண்ணீரைக் கூட தாங்காமல் துடைக்கிறவனை விழியகற்றாமல் பார்க்க, அந்த விழிகளோடு தன் விழிகளை கலந்து, “என்னைக் கல்யாணம் கட்டினதால ‘என்ர வாழ்க்கையில இத நான் இழந்திட்டன்’ எண்டு உனக்கு எதுவுமே இருக்கக் கூடாது. இன்னுமின்னும் நீ சந்தோசமாத்தான் இருக்கோணும். எப்பவும் நீ நீயா இரு! எந்தக் கவலையும் இல்லாம உன்னோட முழு காதலையும் கொஞ்சம் கூட குறையாம எனக்கு தா! அது மட்டும் தான் நீ செய்ய வேண்டியது. வாழ்க்கைல வர்ற எந்த சவாலையும் நான் சமாளிப்பன்!” என்றான் மீண்டும் உறுதியாக.

“சரி சரி விடுங்க பாஸ்! தெரிஞ்ச விசயத்த திரும்பத் திரும்ப எத்தனை தரம் தான் சொல்லுவீங்க.” என்றாள் வழக்கமான துள்ளலுடன்.

அவளை அவளாகவே ஏற்றுக்கொண்ட அவன் காதல் தந்த துள்ளல் அது!

அவனோ, “அடிப்பாவி. நான் இங்க உயிரை குடுத்து டயலாக் பேசினா நீ இப்படி சொல்ற.” என்றான்.

அதன் பின் அவளை அடக்குவாரும் யாருமில்லை. அன்னையின் அடக்கு முறைகளை அவள் காதில் விழுத்தவும் இல்லை.

இப்போதெல்லாம் அவன் வீட்டுக்கு போவதற்கு ஆயிரம் அலுவல்கள் அவளுக்கு இருந்தன.

போடும் சுடிதாருக்கு பொருத்தமாக சூடிக்கொள்ள ரோஜா அவன் வீட்டில் மட்டுமே இருந்தது.

மட்டமாக வெட்டியா முடி நன்றாக இருக்கிறதா என்று நிரஞ்சனிடம் கேட்கவேண்டி இருந்தது.

அவள் பூசும் நகச்சாயம் கூட அவளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்கிற உலகமகா முடிவைக்கூட அவன்தான் எடுக்கவேண்டி இருந்தது.

அவளை பெற்றவர்களுக்கே, மகள் திருமணமாகி இன்னோர் வீட்டுக்கு போகப்போகிறாளே என்கிற கவலை போய், இவளைக் கட்டி அந்த தம்பி என்ன பாடு படப் போகிறாரோ என்கிற கவலைதான் மேலோங்கத் தொடங்கியிருந்தது.

எப்போதும்போல, அன்றைக்கும் காலையிலேயே அவள் வந்து நிற்க,
“ஏய் அடாவடி! ஓடு வீட்ட.” என்று துரத்தினான் நிரஞ்சன்.

“மாட்டன்! வேணுமெண்டா நீங்களும் வாங்க ரெண்டுபேருமா ஊர விட்டே ஓடுவம்.” குறும்புடன் கண்ணடித்துச் சொன்னாள் அவள்.

அவள் வாயிலேயே ஒன்று போட்டான் செல்லமாக. “என்னவெல்லாம் கதைக்கிறாய்? அன்றைக்கு வடிவா(அழகா) இருக்கிறாய் எண்டு சொன்னதுக்கே கண்ண நோண்டி காக்காக்கு வச்சிடுவன் எண்டு சொன்னவளா இப்படியெல்லாம் கதைக்கிறது?” நம்ப முடியாத சிரிப்போடு கேட்டான் நிரஞ்சன்.

“அந்த நிரஞ்சன் என்ர எதிரி. அவன் எனக்கு யாரோ. அவனிட்ட அப்படித்தான் கதைப்பன். இந்த நிரஞ்சன்..” என்று ஆட்காட்டி விரலால் அவன் மார்பில் குத்தினாள். “இவன் எனக்கு மட்டும் தான் சொந்தம். இவனுக்கு நான்தான் எல்லாம். இவனிட்ட நான் இப்படித்தான் கதைப்பன். இப்ப என்ன அதுக்கு?” திமிரோடு கேட்டாள்.

அந்த ஒற்றை விரலின் நுனிப்பாகமே அவன் தேகம் முழுவதையும் சிலிர்க்க வைக்கும் சக்தி கொண்டதாய் இருக்க, “ஒண்டுமில்லையே!” என்றான் கிறங்கிப்போய்.

“சரி அத விடுங்க. எனக்கு இண்டைக்கு பிறந்தநாள். இண்டைக்காவது என்ன எங்கயாவது கூட்டிக்கொண்டுபோய் சந்தோசப்படுத்துற ப்ளான் ஏதும் இருக்கா.. இல்ல இண்டைக்கும் வேல தானா?” என்று நக்கலோடு கேட்டாள்.

“ஹேய்! இண்டைக்கு பிறந்தநாளா? சொல்லவேயில்ல.” என்று அவளின் கைப்பற்றி அவன் வாழ்த்த, “சரியான சாமியார் மாதிரியே வாழ்த்துறான்பார்.” என்று முணுமுணுத்தாள்.

“வேறென்ன வேணும் உனக்கு?” அவளை ரசிக்கும் முறுவலோடு கேட்டான் நிரஞ்சன்.

“ம்.. ஒரு கட்டிப்பிடி வைத்தியம்.. அப்படியே ஒரு கிஸ்.. மனசிருந்தா அதுக்கு மேலயும் தரலாம். கிடைக்குமா?” என்னவோ ஒரு கிலோ அரிசி கிடைக்குமா என்பதுபோல் அவள் கேட்க,

“கிடைக்குமே” என்றான் அவனும் கண்களில் சிரிப்புடன்.

“தாங்க தாங்க” என்று அவள் பரபரக்க, ஒரு ரோபோவைப்போல் பட்டும் படமால் கட்டிப்பிடித்து ஒரு முத்தத்தை சும்மா பெயருக்கு அவன் வைக்கவும், அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள் ஜீவி.

“இதுக்கு நீங்க தராமலே இருந்திருக்கலாம்!”

“நீ கேட்ட நான் தந்திட்டன். இன்னும் என்ன?”

“ஐய…! இவன் தொல்ல தாங்கமுடியல சாமி!” என்றபடி தலையை கையில் தாங்கிக்கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள் ஜீவனி.

அவளின் செய்கையை ரசித்தபடி அவன் நிற்க, நிமிர்ந்து பார்த்து, “பீலிங்க்ஸ் பாஸ் பீலிங்க்ஸ். அது இங்க அடி வயித்தில இருந்து வரோணும்.. அப்படி தந்தாத்தான் கிஸ்ஸுக்கே ஒரு கிக் வரும்.” என்றாள் அவள்.

“பீலிங்க்ஸா? எனக்கு இப்ப சாப்பிட்டதுதான் மேல வருது.. தரவா?” வேண்டுமென்றே சீண்டினான் நிரஞ்சன். அதுதான் அவனுக்கு மிகவுமே பிடித்த விசயமாயிற்றே!

“டேய்!!!!! இப்ப உன்ன கொல்லப் போறன்!” என்று பல்லைக்கடித்தபடி எழுந்து வந்தவளை, இடையில் கையை போட்டு தன்னருகில் இழுத்தான் நிரஞ்சன்.

அவள் நெற்றியில் ஆசையோடு இதழ் பதித்து, “என் தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!” என்றான் காதலோடு.

“செல்லாது செல்லாது! இதெல்லாம் செல்லாது. என்ன நீங்க வெளில கூட்டிக்கொண்டு போகோணும்.”

அன்று கேட்டும் செய்யவில்லை. இன்று பிறந்தநாள், ஆசையாக கேட்கிறாள். மறுக்க மனம் வர மறுத்தது.

“சரி. நீ கீழ போய் கார்ல ஏறு. நான் இப்ப வாறன்.” என்று அவன் சொல்லவும், அவன் மனம் மாறிவிட்டாலும் என்று அவள் ஓடியே போக, இவன் சில வேலைகளை செல் மூலமே முடித்தான். வீடியோவில் சிலதை பார்த்து ஆர்டர் செய்துவிட்டு கீழே சென்றான்.

error: Alert: Content selection is disabled!!