திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 2 – 2

ஏன்… அவனுக்கு கல்லடி கூடக் கிடைத்திருக்கிறது! அதை நினைக்கையிலேயே ஆசையோடு தன் இடப்பக்க புருவத்துக்கு சற்று மேலே இருந்த தழும்பை மிக மிக மென்மையாக தடவிப் பார்த்தான். தன்னவளின் பொன்மேனியில் விரல் பட்ட பரவசம்!

 

அன்று வலித்தது இன்று அவன் வாழ்க்கையாகிப் போனது!

 

அந்தளவுதான் அவனுக்கும் அவளுக்குமான நேரடித் தொடர்பு. அதன் பிறகான நாட்களில் அவள் இங்கு வந்ததும் இல்லை. அவளை பற்றிய நினைவுகளும் அவனிடமில்லை.

 

அப்படியானவள் இன்று அவனின் ஊனிலும் உயிரிலும், சுவாசக் காற்றிலும் இரண்டரக் கலந்துவிட்டிருந்தாள்.

 

ரதனின் வீடு அவனது வில்லாவுக்கு அடுத்ததாக இருந்தாலும் பழக்கமென்று பெரிதாக எதுவுமில்லை. அவனுடைய உயரம் மிகப் பெரியது என்பதால் அவர்கள் இவனை நெருங்கியதில்லை. இவனுக்கும் அவர்களோடு கலந்து பழக நேரம் அமைந்ததுமில்லை. தன் உயரம் விட்டு இறங்கவும் தெரிந்ததில்லை. இவர்கள் என் அயல் வீட்டுக்காரர்கள் என்கிற அளவில் மட்டுமே தெரிந்திருந்தது.

—————————————————-

 

 

அவனுடைய அன்பு அம்மம்மாவின் மரணம் தான், எதிரெதிரே கண்டால் சம்பிரதாயத்துக்கு சுகம் விசாரிக்கும் நிலைக்கு அந்த இரு வீட்டாரையும் கொண்டுவந்ததே!

அவனுடைய முழுச் சொந்தமுமே அம்மம்மாதான்! அவரின் முகம் பார்த்து, அவரின் நல்வழிப்படுத்தலின் பேரில்தான் அவன் வளர்ந்ததே! பெற்றவர்களை நினைத்து ஏங்கும் நிலையில் அவனை அவர் விட்டதில்லை. அனைத்துமாய் இருந்தவர் அவனுடைய இருபத்திநான்காவது வயதில் விண்ணுலகம் சென்றபோது, அவனுடைய உலகமே இடிந்துதான் போயிற்று!

அந்த நேரம் சுற்றியிருந்த அனைவருமே அவனை மெய்யன்போடுதான் கவனித்துக்கொண்டனர். ஆனாலும், “அண்ணா, வாறீங்களா நானும் நீங்களும் ஒன்றாக சாப்பிடுவோம்..” என்று அவன் வயிற்றோடு மனதையும் சேர்த்துக் கவனித்தவன் ரதன்.

பதினைந்து வயதே நிரம்பிய சின்னவன், பெரியவனாக மாறி தன் நலம் நாடியபோது, அவன் அன்பில் இவன் உள்ளம் ததும்பித்தான் போனது!

எல்லோரும் ஆறுதல் சொல்கிறோம் என்கிற பெயரில் அம்மம்மாவின் இழப்பை இன்னுமின்னும் அதிகரிக்கச் செய்த வேளையில், “அண்ணா! நீங்க வாலிபால் பிளேயர் தானே. எனக்கும் சொல்லித் தாறீங்களா?” என்று கேட்டு, இவனை மாற்றியதும் அவனே!

 

அப்படியானவனின் மீது அன்றிலிருந்து இன்றுவரை பிரத்தியேகமான பிரியமொன்று இவனுக்குள் தோன்றியிருந்தது.

அந்தப் பிரியத்தில், அப்போதெல்லாம் அவன் தன் பள்ளிக்கதைகள், நடந்த சுவாரசியங்கள் என்று எதையாவது வளவளக்கும்போது, தனக்கு நேரமில்லாவிட்டாலும் சின்னப்புன்னகையோடு கேட்டிருப்பான். அந்த நாட்களில்தான் அவனின் அவள் அவனது செவிவழி அவனுக்குள் புகுந்ததும்!

 

அப்படி அவனோடு ரதன் இருந்த ஒரு நாளில் தான், ரதனுக்கு அழைத்தாள் ஜீவனி.

 

“அடேய் எருமைமாடு!”

 

அதிர்ந்துபோய் திரும்பி ரதனை பார்த்தான் நிரஞ்சன். ‘இப்படிக்கூட ஒருவரை விளிக்க முடியுமா என்ன?’

 

ரதன் ஒன்றும் மைக் போட்டு கதைக்கவில்லை. ஆனாலும், இவன் காதுகளில் அவள் குரல் கணீர் என்று வந்து பாய்ந்தது.

 

‘அவள் பக்கத்தில எவனாவது இருந்தான் செத்தான்!’

 

ரதனோ, “சொல்லடி அக்கா.. ஆபரேஷன் சக்ஸஸா?” என்று கேட்டான்.

 

“பின்ன! இந்த ஜீவனி ஒரு விசயத்த கையிலெடுத்தா அது சக்ஸஸ் ஆகாம இருக்குமாடா?”

 

“அதுசரி! சொல்லு, போட்ட குண்டு வெடிச்சிட்டுதா இல்ல புகை வந்ததோடு சரியா?” என்ற ரதனை குழப்பத்தோடு பார்த்தான் நிரஞ்சன்.

 

“கேள்வியே தப்பு! ஜீவனி போட்ட குண்டு வெடிக்காம இருக்குமாடா லூசு?”

 

“வெடிக்கிற அளவுக்கு என்னடி செய்தாய்?” ஆர்வமாகக் கேட்டான்.

 

அந்தக் கேள்வியை அவன் கேட்பதற்காகவே காத்திருந்தாள் போலும். “அவன்ட(அவனுடைய) அப்பாவை கண்டுபிடிச்சு, அவரிட்ட போய் சொல்லீட்டன், உங்கட மகன் ரோட்டுல போற வார ஒரு பெட்டையளையும்(பெண்களையும்) விட்டு வைக்கிறான் இல்ல.. எப்ப பாத்தாலும் பெட்டையளுக்கு பின்னால திரியிறதுதான் அவனுக்கு வேலை. இதுக்குத்தான் பெத்து வளத்தனிங்களோ எண்டு நல்லா பிடிச்சு கேட்டுவிட்டன்.”

 

“விசராக்கா உனக்கு?” என்று இவன் அதிர்ந்து ஆத்திரப்பட,

 

“டேய்! யாரப்பாத்து விசரா எண்டு கேக்கிற? கொன்டேபோடுவன்(கொன்றுவிடுவேன்) படவா!” என்று இவனிடம் பாய்ந்தாள் அவள்.

“அந்தக் கிழவனுக்கு மகனுக்கு மேலால திமிர். தான் அப்படி தன்ர(தன்னுடைய) பிள்ளையை வளர்க்கேல்லையாம். என்னட்டையே சொல்லுது. அதுதான் அந்தாள பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் அவர் பெத்த மகனின்ட சீத்துவத்தை(குணத்தை) நேரடியாவே காட்டிவிட்டன்!” என்றாள் ஆத்திரத்தோடு.

 

“உனக்கேன் இந்த தேவையில்லாத வேலையக்கா. அந்தாள் உன்ன கவனிச்சு வச்சு ஆத்திரத்தில் ஏதாவது செய்தா?”

உண்மையிலேயே நடுங்கிப்போனான் ரத்தன். அவனுக்கு ஒரு வெடிகுண்டு போடப்போகிறேன் என்று ஜீவனி சொல்லியிருந்தாள் தான். என்றாலும் அது இந்தளவு தூரத்துக்கு என்று இவனும் எதிர்பார்க்கவில்லை.

 

“நீ எப்பவும் லூசுதான்டா. அந்தளவுக்கு உன்ர கொக்கா என்ன மக்குச்சியே? நான் தூசுக்கு மூடுற மாதிரி கண் மட்டும் வெளில தெரியிற மாதிரி ஷாலால முகத்தை மூடிக்கட்டி தொப்பி போட்டுத்தான் போனனான். இதுல கூலர்ஸ் வேற.”

 

அதைக்கேட்டு சற்றே ஆறுதலானான் ரதன்.

“அப்ப எல்லாம் பக்கா பிளான் எண்டு சொல்லு..”

 

“பின்ன?! எதைச்செய்தாலும் பிளான் பண்ணி செய்யோணும் தம்பி!” வடிவேலுவின் பாணியில் அவள் சொல்ல,

 

“ம்க்கும்!” என்று இவன் நொடித்தான்.

 

“டேய் அவசரம் எண்டா போய்ட்டுவா. முக்கி முனகாத. இங்க வரைக்கும் நாறுது..” என்றாள் அவள் வேண்டுமென்றே.

 

முதலில் புரியவே இல்லை ரதனுக்கு. புரிந்ததும், “அக்காஆ..!!”என்று அவன் பல்லை கடிக்க, அருகிலிருந்த நிரஞ்சனின் இதழ்களில் அவனையும் மீறிப் புன்னகை மலர்ந்தது.

 

‘இன்னும் மாறவேயில்லை..! அப்படியே இருக்கிறா.’

 

ரதனுக்கோ பயம் போகவேயில்லை. “இந்தளவு தூரத்துக்கு போகோணுமாடி? விளையாட்டு வினையாகப் போகுதக்கா.”

 

“ஒண்டும்(ஒன்றும்) நடக்காது. பேசாம இரு! எத்தனை நாள் எனக்குப் பின்னால திரிஞ்சு என்னை படுத்தி எடுத்தவன். நான் பேசி துரத்திவிட்ட கோபத்தில், எங்கட தலைவர் படம் கபாலி பாக்க போனத அம்மாட்ட போட்டுக் குடுத்தவனல்லோ, அவன்ட வழியிலேயே போய் அவனை மாட்டிவிட்டுட்டன். இப்ப ஜீவனிக்கு ‘மகிழ்ச்சி!’” என்றாள் அவளின் தலைவரின் பாணியில்.

 

“ம்க்கும்! அவர் பெரிய தலைவர்! இவ பெரிய தொண்டி!”

 

“என்னடா.. நக்கலா? கனக்க(நிறைய) கதைச்ச எண்டு வை உன்ர பக்கத்துவீட்டுக்காரன்ட மண்டையை உடைச்ச மாதிரி உனக்கும் வைத்தியம் பாத்துடுவன்!” மிரட்டினாள் அவள்.

 

ரதன் படக்கென்று திரும்பி இவனைப் பார்த்தான்.

‘இவனின் பக்கத்து வீட்டுக்காரனா? யாரது?’ என்று அதுவரை அவளின் பேச்சை கேட்டு உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்த நிரஞ்சன் யோசித்தான்.

 

‘ஐயோ அது நான்..!’ அதிர்ந்தவனின் கை அவசரமாக தன் புருவத்துக்கு மேலே தடவ, இப்போது அவனும் ரதனை படக்கென்று திரும்பிப் பார்த்தான்.

 

அண்ணாக்கு கேட்டுட்டுதோ?

அவன் இவனை ஆராய, பட்டென்று நெற்றியில் இருந்து கையை எடுத்துவிட்டு ஒன்றுமே தெரியாதவன் போல், ஒற்றைப் புருவத்தை மட்டும் கேள்வியாக உயர்த்தினான் நிரஞ்சன்.

 

மனம் மட்டும், ‘கடவுளே.. இவள் அத இன்னும் மறக்கவேயில்ல..’ என்றது.

 

 

“அது அப்ப! இப்ப வந்தாய் என்று வை, அவர் இருக்கிற பலத்துக்கு உன்னை சுண்டெலி மாதிரி தூக்கிப்போட்டு மிதிச்சிடுவார்.” நிரஞ்சனுக்கு கேட்டிருக்காது என்கிற முடிவுக்கு வந்து, தமக்கைக்கு பதில் சொன்னான் ரதன்.

 

கேட்டிருந்த நிரஞ்சனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இதுக்கு என்ன சொல்லுவாள்? ஆர்வம் மேலிட காதைத் தீட்டிக்கொண்டான்.

 

“ஆரு(யாரு)? அந்த பயில்வான் பக்கிரி.. என்ன தூக்கிப்போட்டு மிதிப்பானா?” என்று கேட்டுவிட்டு, அவள் சிரித்த கேவலமான சிரிப்பில் நொந்தே போனான் நிரஞ்சன்.

 

‘என்ன கண்றாவி சிரிப்புடா சாமி!‘

அவள் சொன்னதை விடவும் சிரித்த சிரிப்புத்தான் மிக்க கேவலமாக இருந்தது அவனுக்கு!

 

‘பயில்வானா? நானா?’ உருண்டு திரண்டிருந்த கை தசைக் கோளங்களை ஒருமுறை முறுக்கிப்பார்த்தான். திண் என்றிருந்தது. ‘என்னோட ஒரு கைக்கு வருவாளா? ஆனா அந்த வாய் மட்டும் அப்படியே இருக்கு..’

 

பதினெட்டு வயதில் நெடு நெடு என்று வளர்ந்து கொஞ்சம் மெலிவாகத்தான் இருந்தான்.

 

“அதுக்காக…?! மானத்த வாங்குறாளே.. அதைவிட எவ்வளவு கேவலமான சிரிப்பு!” அன்று முழுக்க பொருமிக்கொண்டு திரிந்தான் நிரஞ்சன்.

 

error: Alert: Content selection is disabled!!