ஏழை மக்கள் என்பதையும் தாண்டிய அதற்கும் கீழ் மட்டத்தவருக்கும் தன்னுடைய ‘டின் ஃபிஷ்’ கள் கிடைக்கவேண்டும் என்று, அதுவரை உற்பத்தி செய்துவந்ததின் அளவை காட்டிலும் சரிபாதி சிறியதான டின்னை உருவாக்கியிருந்தான்.
அதுவும், அதற்குள் அதிகமாக அதன் திராவகத்தை விடாமல், அதே நேரம் மீன் கெட்டும் போகாமல், வாங்குபவர்களுக்கு ஒரு நேரத்துக்கு திருப்தியான அளவில் மீன் கிடைக்கும் வகையில், அதே நேரம் குறைவான விலையில் உருவாக்கியிருந்தான்.
இந்த விலைக்கு இது கட்டுப்படியாகுமா? எங்களுக்கு இலாபம் கொஞ்சம் தானே, மார்க்கெட்டிங் சரியா வருமா? விற்பனை எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா என்று கேள்விக்கணைகளால் துளைத்தவர்களை எல்லாம் சமாளித்து, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதில் சொல்லி, மீட்டிங்கை மிக மிக வெற்றியாகவே முடித்திருந்தான்.
இதன் மூலம் அவன் ஈட்டப்போதும் கணிசமான லாபமே!
ஆனாலும், மனம் அயர்ச்சியின் வாய்ப்பட்டு இருந்தது. அதற்கு காரணம், வேலைப்பளுவோ அன்றய மீட்டிங்கோ அல்ல எனபதை அவனறிவான்!
தான் செய்யும் தொழிலை, அதன் சவால்களை விரும்பிச் செய்கிறவன் அவன். அவனை எந்தக் கடுமையான வேலைகளாலும் சாய்த்துவிட முடியாது! அத்தனை வேலைகளையும் அசுரனாய் மாறி நிமிடத்தில் முடித்துவிடும் வல்லமை கொண்டவன்!
ஆனால், ஒருத்தியின் பார்வை மட்டும் போதும் அவனை முற்றாக வீழ்த்திவிட! அந்த ஒருத்தி இன்று ஏனோ உள்ளுக்குள் இருந்து மாம்பழ வண்டாய் குடைந்து கொண்டிருந்தாள்.
‘இப்படியே போனா, இண்டைக்கு என்னை வேலை பாக்க விடமாட்டா இவ! பாலாவ வேற அதச்செய் இதச்செய் எண்டு சொல்லீட்டு நான் இப்படி இருந்தா சரியா வராது.’ தலையை உலுக்கி அவளின் நினைவுகளில் இருந்து விருப்பம் இல்லாமலே வெளியே வந்தான்.
லிப்ட்டில் இருந்தும் வெளியேறுகையில் பழைய நிரஞ்சன் மீண்டிருந்தான். இதுதான் நிரஞ்சன்! மிடுக்கான நடையோடு தனது அறையை நோக்கி நடந்தான்.
அறையின் கண்ணாடிக் கதவை திறந்ததும், தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்த பாலாதான் முதலில் பட்டான்.
புன்னகை அரும்ப, “என்ன?” என்றான் சிரிப்புடன்.
“தெரியாத்தனமா ஒரு கல்யாணத்தைக் கட்டி நான் படுற பாடு இருக்கே.. போதும்டா சாமி. இனி மறந்தும் இன்னொரு கல்யாணம் கட்டமாட்டன்!” என்றான் அவன்.
“ஓ..! அப்ப நந்தினிக்கு போன போட்டு இத சொல்லிவிடவா?” கோர்ட்டை தன் சுழல் நாற்காலியை சுற்றி போட்டுக்கொண்டே கேட்டான்.
“நீங்க வேற! சும்மாவே மனுஷன இருக்க விடமாட்டாள். இதுல இது வேற தெரிஞ்சுது.. நான் செத்தன்.”
சின்னச் சிரிப்போடு நாற்காலியில் அமர்ந்துகொண்டான் நிரஞ்சன்.
“பிள்ளைக்கு பெயர் சொல்லட்டாம். அதுவும் ஜா, ஜி, ஜூ, ஜோ வில இருக்கோணுமாம். நானும் ஒவ்வொரு பெயரா சொல்லுறன். அதுக்கு அவள் ஒவ்வொரு கதையா சொல்லுறாள்.” என்றான் சலிப்புடன்.
“ஜாலி எண்டு சொன்னா, பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் ‘ஹேய் ஜாலி ஜாலி’ எண்டு பகடி செய்வீனமாம். ஜூலி எண்டு வைக்க சொன்னா, ‘என்ர பிள்ளை என்ன கிறிஸ்டியனே’ எண்டு கேக்கிறாள். சரி ஜோ இல்ல ஜோதிகா எண்டு வை எண்டா, ‘என்ர மகள் என்ன நடிகையே’ என்றாள். கடைசியா ஜூஜூ எண்டு வை எண்டு சொன்னா ‘அவள் என்ன நாயே?’ எண்டு சண்டைக்கு வாறாள். என்னை என்னதான் செய்ய சொல்றீங்க நிரஞ்சன். ‘அடியே வேற எழுத்திலே பெயர் வைப்பமடி’ எண்டு சொன்னா, இல்ல இந்த எழுத்துலதான் வைக்கோணும் எண்டு ஒற்றைக் கால்ல நிக்கிறாள். வயித்தில பிள்ளையோட நிக்கிறவள ஒண்டும் செய்யேலாம கிடக்கு!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியிருந்தான் நிரஞ்சன்.
“என்ரபாடு உங்களுக்கு சிரிப்பா இருக்கு போல. ஆனா, ஒண்டு சொல்றன் நிரஞ்சன், சத்தியமா கல்யாணம் கட்டாதீங்கோ.
கட்டினீங்க என்ர நிலைதான் உங்களுக்கும்!” என்றான் அனுபவஸ்தனாய்.
“இத நீங்க நந்தினியை யாருக்கும் தெரியாம தூக்க முதலே யோசிச்சு இருக்கோணும்.”
பாலாவின் காதல் கதையை அறிந்திருந்ததால் கேலியாகச் சொன்னான் நிரஞ்சன்.
“பின்னால நடக்கிறது முன்னாலேயே தெரியுமெண்டா (தெரியும் என்றால்) ஏன் இந்தப் பாடு? நாங்கள் எல்லாம் விளக்கு சுடும் எண்டு தெரியாம அத சுத்துற விட்டில் பூச்சிகள்.” என்றான் பெரும் சோகமாக.
கேலியாக நிரஞ்சன் பார்க்க, “நீங்களாவது சொல்லுங்க பாப்பம் நல்ல பெயரா?” என்று அவன் கேட்ட அடுத்த நிமிடமே, “ஜீவி, ஜீவனி, ஜீவனிதா.. ஜீவா..” என்றான் நிரஞ்சன்.
அதை சொல்லும்போதே அவன் குரல் கனிந்து ஒலித்தது. கண்களில் கனவு! இதழ்களில் மந்தகாசப் புன்னகை. அந்த பெயர்களுக்கு வலிக்குமோ என்று பார்த்துப் பார்த்து உச்சரித்தவனை வியப்போடு பார்த்தான் பாலா.
அந்தப் பார்வையை உணர்ந்துகொள்ளும் நிலையில் இல்லை அவன்!
“அவா எங்க இருக்கிறா நிரஞ்சன்?” மெல்ல நூல் விட்டான் பாலா.
“இங்க இருக்கிறா.” என்றான் தன் இதயத்தை தொட்டுக்காட்டி! “பத்திரமா! பாதுகாப்பா! பக்குவமா!” ஆழ்ந்த குரலில் சொன்னான்.
“வர்றேவா! இது காதல்! நீங்க காதலன் நிரஞ்சன். சூப்பர் போங்க..!” என்ற பாலாவின் உற்சாகக் குரலில் சட்டென்று நிமிர்ந்தான் நிரஞ்சன்.
தான் உளறிவிட்டது விளங்கியது.
‘கடவுளே.. இவனுக்கு இது போதுமே. என்ன வச்சு ஓட்டப்போறானே. இண்டைக்கு என்ன நடந்தது எனக்கு?
நடக்கிறது எல்லாமே என் கட்டுப்பாட்டை மீறிப் போகுது.’ என்று எண்ணியபடி நிமிர்ந்தவன், பாலாவின் குறுகுறு பார்வையில் சட்டெனச் சிரித்துவிட்டான்.
“என்ன பாலா இப்படி பாக்கிறீங்க?”
“வேற எப்படி பாக்க? இந்த மனுஷன் வேலையத் தவிர வேற எதையுமே யோசிக்க மாட்டாரா எண்டு எத்தனையோ தரம் நினைச்சிருக்கிறன். பாத்தா இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ர அளவுக்கு, உங்களுக்குள்ளையும் ஒரு காதல்.”
“ஏன் கூடாதா?” சின்னச் சிரிப்போடு வினவினான். கைகளால் மேசையில் இருந்த பேனையை உருட்டினான்.
“ஏன் கூடாம? அதெல்லாம் நல்லா கூடும்! சரி சொல்லுங்க உங்கட லவ் ஸ்டோரிய?”
இப்போது சூழல் நாற்காலியில் நன்றாக சாய்ந்துகொண்டான் நிரஞ்சன். நாற்காலி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக மெல்லச் சுழல, பாலாவைப் பார்த்து சின்னதாகச் சிரித்தான்.
அவ்வளவுதான் பாலாவின் கேள்விக்கான பதில்!
நிரஞ்சனை முற்றாக அறிந்து வைத்திருப்பவன் பாலா. அந்தச் சிரிப்பே அவனிடமிருந்து எதையும் பிடுங்க முடியாது என்பதை உணர்த்தியது.
பாலாவும் எதையும் அவ்வளவு எளிதில் விடுகிறவன் அல்லவே!
எனவே, “அவவ முதல்ல எங்க பாத்தீங்க?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டான்.
அப்போதும் மறையாத முறுவலோடு அவன் பார்க்க, “நிரஞ்சன், இது மோசம்! உண்மை தெரியாட்டி என்ர மண்டை வெடிச்சிடும். அத காப்பாத்தவாவது சொல்லுங்கோ.” என்றான் கெஞ்சலாக.
“சொல்லக்கூடாது எண்டில்லை பாலா. இது என்னோட விருப்பம் மட்டும் தான். அவளுக்கு என்னைப் பிடிக்காது.”
“என்னது??? அவவுக்கு என்ன விசரா? உங்களை யாருக்காவது பிடிக்காம போகுமா?” நம்ப மாட்டாமல் கேட்டான்.
“அவளுக்கு பிடிக்காது” என்றான் இளஞ்சிரிப்போடு.
“என்ர மண்டைய வேற உடைக்கப்போறன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு திரியிறாள்.” என்று சொல்லும்போதே அவன் உதடுகளில் அடக்கமுடியாத சிரிப்பு.
கையோ, புருவத்து காயத்தை தானாகவே தடவிற்று!
பாலாவின் பார்வையும் குறுகுறு என்று அங்கேயே தாவியது.
“ஏற்கனவே வாங்கிக்கட்டி இருக்கிறீங்க போல.” என்றான் சந்தேகக்கண்ணோடு நோக்கி.
அவன் கேட்ட விதத்தில் புன்னகை விரிய, “ம்ம்..” என்றான்.
“அப்ப வீட்டில் பூச்சி சங்கத்து தலைவரே நீங்கதான் போலயிருக்கு..”
“ச்சே ச்சே! இது விட்டில் பூச்சி ஆக முதலே வாங்கினது!” என்றான் அவன்.
கிட்டத்தட்ட இருவருமே ஒரே வயதினர் என்பதில் இலகுவான பேச்சு இயல்பாகவே நடந்தது.
“அது..க்..கு..ம் முதலேவா? அப்ப எப்ப நடந்தது இதெல்லாம்? நான் வேலைக்கு சேர்ந்து நாலு வருஷமாகுது. அப்பவே இந்தக் காயம் இருந்தது. அப்ப அதுக்கு முதலே லவ்வா? அம்மம்மாக்கு தெரியுமா? எப்படி உங்களுக்குள்ள இந்தக் காதல் வந்தது? நிச்சயமா சொல்றன், நீங்க அவவை விரும்புறது தெரிஞ்சா கடைசிவந்தாலும் மறுக்க மாட்டா. உங்கள மாதிரி நல்ல மனுசன எந்த பிள்ளையும் தவற விடமாட்டினம். ஐயோ.. எனக்கு தலையே வெடிக்கும் போல இருக்கே. சொல்லுங்க, எப்படி உங்களுக்குள்ள இந்தக் காதல் வந்தது?”
அந்தக் கேள்வி, சற்றே அடங்கியிருந்த நிரஞ்சனின் தவிப்பை மீண்டும் கிளறி விட்டது.
ஊதுபத்தியில் இருந்து கிளம்பும் வாசம் வீடு முழுவதையும் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பதை போல, அவனது ஆழ் நெஞ்சத்தில் நிரம்பியிருந்த அவளின் நினைவுகள் மெல்ல மெல்ல மேலெழுந்து அவனையே மூழ்கடிக்கப் பார்க்கவும், எங்கே தன்னை மீறி பாலாவிடம் கொட்டிவிடுவோமோ என்று பயந்து தன்னுடைய பிரத்தியோக அறைக்குள் புகுந்துகொண்டான் நிரஞ்சன்!

