திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 5

அத்தியாயம்-5

கதிரவன் தன் கடமையை முடித்துவிட்டு, களைத்துப்போய் ஓய்வெடுக்கப் போயிருந்தான். இனி எப்படிக் கெஞ்சினாலும் அவன் வரவே மாட்டான் என்றறிந்த நிலவுப் பெண்ணோ, மானிடருக்கு தன்னால் முடிந்த உதவியாய் ஒளியை பூமிக்கு வீசிக்கொண்டிருந்தாள்.

மெல்லிய பனி கொட்டும் இரவு! வீசிய குளிர் காற்று! சாலையோர விளக்குகள் தோரணமாய் தொங்கின! மின்மினிகளாய் மின்னி மின்னிப் போகும் வாகனங்கள். அப்போதும் ஓயாத கடலலைகள், அவை சுமந்துவந்த கடல் காற்று, இருள் தந்த துணிச்சலில், சோ சோ என்று சத்தமாய் காதல் கதை பேசிக்கொண்டிருந்த மரங்கள் என்று அந்த இரவுப் பொழுதே ரம்யமாய் ஒருவித போதையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

வீட்டு வாசலில் நின்றிருந்தாள் ஜீவனி!

அவளின் அப்பாவும் சித்தப்பாவும் எங்கோ வெளியில் சென்றிருக்க, தாயும் சித்தியும் சொல்வதெல்லாம் உண்மையில் தங்களை மறந்து லயித்திருந்தனர். அவளுக்கோ அவ்வளவு நேரம் அமர்ந்திருந்து அதைப் பார்க்கும் பொறுமையில்லை. வெளியே வந்திருந்தாள்.

அவளை வந்து மோதிய சில்லென்ற காற்றில் தேகம் சிலிர்க்க, அந்தக் குளிர் நெஞ்சுக்குள்ளும் சிலீர் என்று தாக்கிற்று!

“அப்பப்பா..! என்ன குளிர்!!” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சிலிர்த்தாள்.

கண்களோ கள்ளுண்ட வண்டாய் இயற்கையின் எழில்மிகு வனப்பை இன்னுமின்னும் ஆசையாசையாக விழுங்கியபடியே இருந்தன!

மாலை உறங்கி எழுந்ததும் ரதனோடு கடற்கரைக்கு போய்விட்டு வந்திருந்தாள். கடல் அலைகளை கண்டதும், தாயைக் கண்ட குழந்தையாய் ஓடிப்போய் அதில் நனைந்தாள். ரதனுக்கு அடித்துவிட்டு, அவன் அவளை துரத்தத் தொடங்கவும் ஆசை தீர அந்தக் கரையோரமெங்கும் ஓடித்திருந்தாள். காலைப் பதம் பார்த்த சிறு கற்கள் கூட இன்பமான வலியைத்தான் கொடுத்தது. மொத்தத்தில் அவள் விரும்பிய கடலன்னையையும், அவளின் கரையையும் ஒரு சுற்றுச் சுற்றியிருந்தாள்.

ஆனாலும், அந்த நகரின் மீது அவள் கொண்ட காதல் மட்டும் இம்மியளவும் குறையக் காணோம். திரும்பவும் கடற்கரைக்கு போக ஆசை எழுந்தது!

‘அம்மாவுக்கு தெரிஞ்சிது.. காலை முறிச்சு அடுப்பில வச்சிடுவா. அவ இங்க நிக்கிற வரைக்கும் நல்ல பிள்ளையா இருக்கோணும்.’

“பனியில அங்க நிண்டு என்ன செய்றாய் ஜீவி? உள்ளுக்கு வா! இருட்டிப்போட்டுது.” என்று தாயின் குரல் உள்ளிருந்து வந்தது.

‘இந்த மனிசிக்கு ஆயிசு நூறு!’ புறுபுறுத்துக்கொண்டாலும், அவரின் பேச்சை அவள் காதிலேயே விழுத்தவில்லை. அங்கேயே நின்றிருந்தாள்.

அப்போது, கறுப்பு நிற ‘போர்ஷே’ ஒன்று அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒளிவெள்ளத்தை வீதியில் பீய்ச்சியபடி பாய்ந்து வந்தது.

“எவன்டா இவன் இவ்வளவு வேகமா வாறவன்?” என்று இவள் வாய்விட்டுச் சொல்லும்போதே, பக்கத்து மாளிகையின் கேட் திறக்கும் ஓசை, வெகு தெளிவாகக் கேட்க, யார் என்று யாரும் சொல்லாமலே புரிந்து போயிற்று.

ஜிவுஜிவு என்று சிவந்தது முகம்! உண்மையை சொல்லப்போனால், காலிக்கு வந்த சந்தோசத்தில் அவனை மறந்தே போயிருந்தாள்! இப்போது நினைவு வந்ததும், அவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் கருவ விறு விறு என்று உள்ளே சென்றாள்.

“எப்ப கூப்பிட்ட குரலுக்கு இப்ப வாறாள் பார்..” என்று தங்கையிடம் புஷ்பராணி சொல்ல,

“இப்பவாவது வந்தேனே எண்டு சந்தோசப்படுங்கோ!” என்றுவிட்டு பொத்தென்று சோஃபாவில் போய் விழுந்தாள்.

மூளைக்குள்ளோ, ‘அவனுக்கு என்ன செய்யலாம்? ஏதாவது செய்யோணுமே’ என்று ஓடியது.

‘அட்டாக் ஆரம்பிக்க முதல் அவன் வீட்டை செக் பண்ண வேணும். என்ன செய்யலாம்? மாடிக்கு போக அம்மா விடமாட்டாவே..’

இவளின் யோசனையை இடையிட்டது சித்தியின் சலித்த குரல்.

“நல்ல நேரம் பார்த்து விளையாட்டு காட்டுது இந்த டிவி…”

திரும்பிப் பார்த்தாள். டிவியில் கறுப்பும் வெள்ளையாக கோடுகோடாக விழ, காட்சிகள் தெரியவில்லை. பேச்சுக் குரல்களோ விட்டு விட்டு வந்தது.

“ஒரு ரிசீவரை வாங்கி பூட்டுங்கோப்பா எண்டு சொன்னா எங்க கேக்குது இந்த மனுஷன்! அந்தக் காலத்து அன்டனாவாம். எப்ப நல்ல புரோகிராம் போனாலும் ஏழரைய கூட்டிடும்!” அவர் சினக்கவும்,

“மழை பெய்யுது போல..” என்றார் இவளின் தாய்.

வெளியே எட்டிப் பார்த்துவிட்டு, “மழை இல்லையக்கா, பேய் மாதிரி காத்து வீசுது. இவ்வளவு நேரமும் நல்லா இருந்தது.” என்று சலித்தார் செல்வராணி.

“ரதன், மொட்டை மாடிக்கு போய் அன்டனாவை ஒருக்கா திருப்பிப்போட்டு வாப்பு..” என்றவரின் குரலில், சொல்வதெல்லாம் உண்மை முடிய போகுதே என்கிற தவிப்பிருந்தது.

செல்லில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தவனோ, “போங்கம்மா, இனி என்னால மொட்டை மாடிக்கு ஏற ஏலாது. நெட்டுல வரும், நாளைக்கு பாருங்கோ..” என்றான் சோம்பலாக இருந்த இடத்திலிருந்து அசையாது.

“பாருங்கோ அக்கா, ஒரு வேல சொன்னா செய்யமாட்டான்! இதுல இவருக்கு பெட்டை கேக்குதாம். மேல யாரும் பெட்டையள் இருக்கீனம் எண்டு சொன்னா இப்ப ஓடுவான்!” மகன் சொன்னதை செய்யவில்லை என்கிற எரிச்சலில் சினந்தார்.

பெரியன்னைக்கு முன் மானத்தை தாய் வாங்கவும், எல்லாம் உன்னால் என்று தமக்கையை முறைத்தான் ரதன்.

அதுவரை அவனை பார்த்துக்கொண்டிருந்தவள் படக்கென்று வேறு புறம் திரும்பிக்கொண்டாள். அடக்கப்பட்ட சிரிப்பில் இதழ்கள் துடிக்க, குறும்பில் பளபளத்தது விழிகள்!

சட்டென திட்டம் தோன்ற, “சித்தி! இப்ப என்ன உங்களுக்கு டிவி பாக்கோணும், அவ்வளவு தானே? நான் போறன் மேல..” என்றபடி எழுந்தாள்.,

“இந்த நேரத்தில நீ மேல போகாத பிள்ளை..” என்ற அவரின் பேச்சை கேக்காமல் மேலே ஏறத்தொடங்கினாள்.

‘இவ்வளவு நல்லவளா இவள்? இருக்காதே..’ சந்தேகமாக ரதன் பார்க்க, அன்னையர் அறியாமல் கண்ணை சிமிட்டினாள்.

“ஒரு பொம்புளப்புள்ள அவளுக்கு இருக்கிற அக்கறை, பாசம் கொஞ்சமாவது உனக்கு இருக்கா?” என்று மகனிடம் கோபப்பட்டவரிடம்,

“அவனையேன் திட்டுறீங்க சித்தி?” என்று படியேறிக்கொண்டே கேட்டாள் ஜீவனி.

‘இப்ப என்ன வரப்போகுதோ?’ கதிகலங்கிப்போய் ரதன் பார்க்க,

“அவனுக்கு செல்லம் குடுத்து, கெடுத்து குட்டிச்சுவரா மாத்தினது நீங்க. பிறகேன் அவனை திட்டுறீங்க. உங்கட வளப்பு பிழை சித்தி.” போகிற போக்கில் பெரும் குண்டை வீசிவிட்டு அவள் போக, தாயின் நெருப்புப் பார்வையில் பொசுங்கியே போனான் ரதன்.

மேலே போனவளோ, அங்கே ஒரு அன்டனா இருப்பதையே மறந்துபோனாள்.

விறுவிறு என்று மொட்டை மாடியின் விளிம்புக்குச் சென்று நிரஞ்சனின் வீட்டைத்தான் பார்த்தாள்.

பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தன! குன்றின்மேல் ஏற்றிய விளக்குப்போல் இருள் கவிழ்ந்திருந்த அந்தப் பொழுதில் வெண்ணிறத்தில் பளிச்சிட்டது மாளிகை! மூன்று மாடிகளிலும் சுற்றிவர பால்கனி. அந்த பால்கனி எங்கும் சரம் சரமாய் தொங்கின சர விளக்குகள்!! இருளை பகளாக்கிக்கொண்டு மிளிர்ந்த வில்லாவின் தரை நிலம்கூட விளக்குகளின் ஒளியை தாங்கி பளீர் என்று ஒளிர்ந்தது.

“ரசிகன்டா நீ!” அவனை பிடிக்காதபோதும் அவளையும் மீறி உதடுகள் உதிர்த்தது வார்த்தைகளை.

அந்த இடத்தை சுற்றி வந்தவளின் விழிகள் ஓரிடத்தில் திடீரென நின்றது!

‘யாரது?’

ஊன்றிப் பார்த்தாள்.

மல்லாந்து படுத்தபடி வானை வெறித்தபடி தரையில் கிடந்தான் அவன்!

‘இது…. நிரஞ்சன் எல்லோ..’ நம்பமுடியவில்லை அவளால்!

கலைந்த கேசம், களைத்த முகம், உணர்வுகளை தொலைத்த விழிகள் வானை வெறிக்க அந்த விழிகளிலோ வார்த்தைகளில் அடக்க முடியாத தவிப்பு.
அனாதரவற்ற சிறுவனைப்போல் கிடந்தவனை கண்டு அதிர்ந்துபோனாள். நெஞ்சுக்குள் என்னவோ பிசைய, ஒருகணம் அசையாமல் அப்படியே நின்றுவிட்டாள்.
அவள் அறிந்த நிரஞ்சன் எப்போதும் துடிப்பும் துள்ளலும் நிறைந்தவன். நண்பர்கள், விளையாட்டு, சிரிப்பு, சேட்டை என்று அவன் உலகமே அழகுமயமானது. இதே மொட்டைமாடியில் நின்று எத்தனையோ நாட்கள் அவர்கள் விளையாடுவதை பார்த்து தானாக சிரித்திருக்கிறாள். ரசித்திருக்கிறாள். தன்னையும் அவர்களோடு சேர்த்து விளையாடவில்லையே என்பதுதான் அவர்கள் மீது அவள் வைத்த முதல் குற்றச்சாட்டு!
கவலை என்றால் என்னவென்றே தெரியாதவன். அவன் முகத்தில் இத்தனை சோகமா? எதற்காக?
இன்னுமே கூர்ந்து கவனித்தாள்.
அது ஒரு நினைவுத்தூபி. நிலத்திலிருந்து மூன்று படிகள் உயரத்தில் ஐங்கோணத்தில் ஆன தரை சீமெந்தினாலும், அதிலிருந்து எழுந்த மூன்று தூண்கள் தாங்கி நின்ற கூரை சிவப்பு ஓடுகளினாலும் அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் நின்றிருந்தார் நிரஞ்சனின் அம்மம்மா! பக்கவாட்டிலிருந்து ஒளிவெள்ளம் அவரின் மீது பாய்ந்துகொண்டிருந்தது.
அவர் இறந்துவிட்டார் என்பது அவள் அறிந்ததுதான்! என்றாலும் உயிரோடு சாந்தம் தவழும் முகத்தோடு நடமாடிய ஒரு பெண்மணியை சிலையாக கண்டபோதும் மனம் பிசையாத்தான் செய்தது!
அவளுக்கே அப்படியென்றால் அவனுக்கு?
அவனின் வேதனைக்கும் தவிப்புக்கு தான் மட்டுமே, தன் மீது அவன் கொண்ட காதல் மட்டுமே காரணம் என்று அறியாதவள் எண்ணிக்கொண்டாள்.
அவரின் காலடியில், ஒரு கையை தலைக்குக் கொடுத்து மற்றக் கையை வயிற்றின் மீது போட்டபடி மல்லாந்து படுத்திருந்தான் அவன்.
உள்ளுக்குள்ளே என்னவோ செய்தாலும், இயல்பான அவளின் துடுக்குத்தனம் தலை தூக்கியது!
‘இவன் ஏன் ஓவரா சீன்போடுறான்… கூடாதே..!’

‘நான் வந்ததை ரதன் சொல்லிட்டானோ?’

‘அப்படித்தான் இருக்கும்! பயந்திட்டான் பயபுள்ள!‘

‘ரெத்தம் கக்கி சாகிற மாதிரி நீ சீன போட்டாலும் இந்த ஜீவனிட்ட இருந்து தப்பேலாது தம்பி! யாருட்ட காட்டுற உன்ர விளையாட்ட? உன்ர மண்டைய உடைக்க எண்டே ட்ரெயின் ஏறி வந்தவள் நான்! என்னட்டயேவா?’

மனம் வேக வேகமாக அவனோடு முரண்டத்தொடங்க, அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தாள்.
அவள் தேடியது கிடைத்ததும், வேகமாக குனிந்து அதை எடுத்து அவன் நெற்றிக்கு குறி பார்த்தாள். அப்போதும் அவன் முகத்தில் தெரிந்த வேதனை அவளை அசைத்தது! குறியை மாற்றி காலுக்கு வைத்தாள்.
அடுத்த கணமே அவள் கையிலிருந்த கல் அம்பென பாய்ந்து சென்று நீட்டியிருந்த அவன் காலில் சென்று தாக்கியது.

“அம்மா..!” கூவிக்கொண்டே எழுந்து தன் காலை பற்றினான் நிரஞ்சன்.

குறி தப்பாமல் பட்டுவிட்ட பெருமிதத்தில் தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக்கொண்டாள் அவள்.
பெருமையோடு அவள் நிற்க, விழுக்கென்று நிமிர்ந்தவனின் கூர் விழிகள் கவிழ்ந்திருந்த இருளைக் கிழித்துக்கொண்டு சினத்துடன் கல்லெறிந்த நபரைத் துழாவியது!
‘எஸ்கேப் ஜீவனி!’ என்றபடி மின்னலென மறைந்தது பெண்ணோவியம்!
சட்டென ஆனந்தமாய் அதிர்ந்தான் நிரஞ்சன்!
அவளா?
அவன் கண்கள் பொய் சொல்லாது!
அவளேதான்!

இந்தக் காலியில் அவளுக்கன்றி வேறொருவருக்கு அவனைக் கல்கொண்டு தாக்கும் தைரியம் வரவே வராது! நெஞ்சை சில்லென்று தாக்கியது அவளின் வரவு!
காலில் அவள் உண்டாக்கிவிட்ட காயமோ இப்போது வலிக்கவேயில்லை.

அதுவரை அவனை சூழ்ந்த தனிமையும் வெறுமையும் அவளைப் போலவே மின்னலாய் ஓடிவிட, துள்ளி எழுந்தான்!
இதழ்களில் மலர்ந்துவிட்ட புன்னகையோடு மனம் துள்ளிக்குதிக்க, அம்மம்மாவை கட்டியணைத்து அவரின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“தேங்க்ஸ் அம்ம்ம்மா! நீங்க சொன்ன மாதிரியே அவ வந்திட்டா..!” என்றுவிட்டு துள்ளலோடு வீட்டை நோக்கி நடந்தான்.
சற்றுத்தூரம் சென்றுவிட்டு திரும்பவும் அவரிடம் வந்தவனின் முகத்தில் மந்தகாசப் புன்னகை!
“அம்மம்மா, இனி அவ எனக்குத்தான்!” என்றுவிட்டு சென்றவனை, வான்வெளியில் பூத்திருந்த நட்சத்திரங்களோடு நட்சத்திரமாய் பாசத்தோடு பார்த்திருந்தார் அவர்!

மனம் உற்சாகத்தின் உச்சத்தை தொட்டிருந்ததில் வீட்டுக்குள் செல்லாமல், நீச்சல் குளத்தின் அருகே சென்று, தன் ஆடைகளை களைந்துவிட்டு, அப்படியே குதித்தான்!

சில்லென்ற நீருக்குள் அமிழ்ந்தபோது அவளுக்குள்ளேயே மூழ்குவது போன்ற பரவசம்! மேலே எழுந்தவனின் உடலை தாக்கிய குளிரை காட்டிலும் அவள் வந்துவிட்டாள் என்கிற நினைவு தாக்கிய இனிமையும் சிலிர்ப்பும் அதிகமாகவே இருந்தது.

நீருக்குள்ளேயே மல்லாந்து கிடந்தபடி உல்லாசமாய் வானை பார்த்தவனுக்கு, அன்று விடிந்ததில் இருந்து அவன் மனம் அலைபாய்ந்ததுக்கான காரணம் பிடிபட்டது.
அவன் காலையில் கிளம்பும்போது ஆட்டோவில் வந்தது அவள்தான். அவனது கண்கள் அவளைக் காணாதபோதும் மனம் உணர்ந்திருக்கிறது.
நினைக்கையிலேயே இனித்தது!
இப்போது எப்படியிருப்பாள்?
உயரமாய் வளர்ந்திருந்தாள். மெல்லிய மேனி. அந்த முகம் எப்படி இருக்கும்? அந்தக் கண்கள்? அந்த இதழ்கள்? அவற்றைத் தேடியது இத்தனை நாட்களாய் தனிமையில் தவித்திருந்த இதயம்!
இருளுக்குள் அவன் கண்ட அந்த வடிவத்துக்கு முழுமை கொடுக்க முனைந்தான்.
கலங்கலாய்த்தான் காட்சி தந்தாள்!
‘இப்பவே அங்கபோய் அவளை பாத்திட்டு வந்தா என்ன?’ மனம் வேகம் கொண்டது.
‘இல்லையில்லை. அவசரப்படக்கூடாது. பிறகு திரும்பியும் பாக்க மாட்டா.. ராங்கி பிடிச்சவள்!’
அடுத்த கணமே மனம் சிணுங்கியது. ‘இவ்வளவு நாட்களும் பொறுத்தது போதாதா?’
‘ப்ச்! கொஞ்சம் முகத்தையாவது காட்டிட்டு போயிருக்கலாம். எல்லாத்துலயும் அவசரம்.’ ஆசைகொண்ட நெஞ்சம் தன்னவளை தரிசிக்காத சினத்தில் பொங்கித் தவித்தது!
‘அதுதான் பக்கத்திலேயே வந்திட்டாளே. இனி எங்க போகப்போறா? அவள் எனக்குத்தான்!’ அதுக்குப் பிறகுதான் கொஞ்சமேனும் சமாதானமானான் நிரஞ்சன்.
தன்னவள் தன்னருகில் வந்துவிட்டாள் என்கிற நினைவே தேகமெல்லாம் சுகமாய் பரவ, கண்களை மூடி நீரில் மிதந்தபடி தன்னவளின் நினைவுகளுக்குள் அமிழ்ந்தான் நிரஞ்சன்!

error: Alert: Content selection is disabled!!