அத்தியாயம்-6
அப்போதெல்லாம் ஜீவனியின் குரலிலும், அவளின் குறும்பிலும் மனம் ஈர்க்கத் தொடங்கிற்று நிரஞ்சனுக்கு.
ரதன் வரும் நாட்களில் எல்லாம், “இண்டைக்கு என்ன சண்டை உனக்கும் உன்ர அக்காவுக்கும்?” என்று கேட்குமளவுக்கு மாறியிருந்தான்.
“பிரச்சனையே இல்லாட்டியும் நீங்களே உருவாக்கி விட்டுடுவீங்க போலண்ணா.”
“அந்தளவுக்கு நீயும் உன்ர அக்காவும் நல்லவங்க பார்!” என்றான் கேலியாக.
“எனக்குத்தான் இப்படியெல்லாம் கதைக்க யாருமில்லையே. நீ உன் அக்காவோட சண்டை பிடிக்கிறதை கேட்டாவது ரசிக்கலாம் என்று நினைச்சன்.” சோகம் போல் அவன் சொல்ல, அதுக்குப் பிறக்குமா ரதன் சும்மா இருப்பான்.
ஜீவனிக்கு ஃபோனை போட்டு ஒரு செல்லச் சண்டையை பிடிப்பான்.
பக்கத்தில் இருந்து கேட்கிறவனின் மனதின் தாகமோ, கணீர் என்று பேசி, கலகலத்துச் சிரிக்கிறவளின் குரலில் மெல்ல மெல்ல அடங்கும்!
அவளின் குரலை கேட்கவேண்டும் என்கிற வேகம் எழும்போதெல்லாம் இதுவே நடந்தது. நிரஞ்சனின் உள்ளத்தை அறியாத ரதனும் நன்றாகவே அவனுக்கு உதவி செய்தான்.
அப்படித்தான் அவர்களின் சொந்தத்தில் நடந்த திருமணம் ஒன்றிக்கு சென்றுவந்த ரதன், “இத பாருங்க அண்ணா. அந்த காளியோட வேலையை..” என்று தன் போனை அவனிடம் காட்டினான்.
கிட்டத்தட்ட ஒருவாரமாக அவளின் குரலை கேட்காமல் ஏங்கிப்போயிருந்தவன், சட்டென்று வாங்கிப்பார்த்தான். நாகரீகம் கருதியோ, பெயருக்கோ மறுக்கவேயில்லை.
அந்த நேரம் பார்த்து தன்னைத்தேடி தன் வீட்டுக்கு நண்பன் வருவதை கண்ட ரதன், “நீங்க பார்த்துக்கொண்டு இருங்கண்ணா, நான் இப்ப வாறன்..” என்றுவிட்டு நண்பனிடம் விரைந்தான்.
அந்த வீடியோவை ஆன் செய்ததுமே, மஜெந்தாவும் மாம்பழ வண்ணமும் கலந்த சோளியில் நின்றவளை பார்த்தவனின் கண்கள் விரிந்தது.
‘அவளா இது?’ நம்பவே முடியவில்லை. அந்தளவுக்கு எழில்மிகு மங்கையென கண்ணை கவர்ந்தாள்.
அவளின் குரல் பிடிக்கும். அதிலே வழியும் உற்சாகமும் துள்ளலும் பிடிக்கும், அவளின் சேட்டைகள் இன்னுமின்னும் பிடிக்கும். ஆனாலும், அவளை பார்க்கவேண்டும் என்று நினைத்ததில்லை. குரலைத்தான் கேட்டுவிடத் துடிப்பான்.
இன்று எதிர்பாராமல் காண நேரிட்டதும் கண்கள் அவளை தாண்டி வேறெங்கும் நகர மறுத்தது.
‘இது அவள் தானா? அவளே தானா?’ உள்ளம் எம்பி எம்பிக் குதித்தபடி கேட்டுக்கொண்டே இருந்தது.
மூன்று நான்கு நிமிட வீடியோ தான். ஆனாலும், திரும்பத்திரும்பப் போட்டுப்பார்த்தான். ஒவ்வொரு முறையும் அந்த வீடியோ முடிந்தபோது, விரல்கள் அவனை அறியாது மீண்டும் மீண்டும் அழுத்தின!
பெர்முடா முக்கோணத்துக்குள் தொலைந்துபோகும் விமானங்களைப்போல காரணமறியாது அவளின் விழிகளுக்குள் அவன் தொலைந்துகொண்டிருந்தான்.
“ஓகேடா.. பாய் மச்சான்! நான் பின்னேரம் வாறன்.” என்று ரதனின் குரல் எங்கோ தொலைவிலிருந்து அவன் செவிப்புலன்களை எட்டியது.
அதை மூளை மெல்ல மெல்ல உணர, ‘அவனிடம் ஃபோன திருப்பி குடுத்தா அவள பாக்க முடியாதே..’ மனம் பரபரக்கத் தொடங்கிற்று!
‘என்ன செய்யலாம்?’ வேகமாக யோசித்தான். சட்டென்று ‘வாட்ஸ்அப்’பில் அதை தன் செல்லுக்கு அனுப்பிவிட்டு, அனுப்பிய அடையாளமின்றி ரதனின் போனில் அழித்தும் விட்டான்.
அதன் பிறகுதான் மனம் அமைதியடைந்து.
அதை எடுக்க ஏன் அந்த பாடுபட்டான்? முதலில் ஏன் எடுத்தான்? இந்தக் கேள்விகள் அவன் மனதில் எழவே இல்லை.
அதேபோல, அவனது படுக்கையறை திரையில் அவள் ஏன் குடியேறினாள்? தினமும் உறங்க முதலும் விடிந்ததும் அதையே ஏன் போட்டுப் போட்டுப் பார்க்கிறான்? என்பதற்கான காரணத்தை அவன் உள்ளம் உணர்ந்ததில்லை. இன்னதுதான் காரணம் என்றும் சொன்னதில்லை.
ஆனால், அவளின் முகம் பாராமல் அவனது நாட்கள் விடிந்ததும் இல்லை; முடிந்ததும் இல்லை.
இரவினில் அவள் மிரட்டுகையில் அமைதியடையும் உள்ளம் காலையில் மிரட்டுகையில் உற்சாகம் அடையும் அதிசயத்தை தினம் தினம் உணர்ந்திருக்கிறான்.
இந்த உணர்வுக்கான ஒரு பெயரை அவன் தேட முற்பட்டதேயில்லை. அவனின் தேடல்கள் தவிப்புக்கள் அத்தனையுமே ஒற்றை விரலை நீட்டி, “உன்ன கொல்லப்போறன் இப்ப..” என்கிற வார்த்தைகளில் அடங்கி அமைதி பெற்றுவிடும்.
அன்றொருநாள், அவனது குடும்ப நண்பரும், வக்கீலுமான அங்கிள் தாமோதரன், “எப்போதப்பா கல்யாணம்?” என்று விசாரித்தபோது,
அந்தக்கேள்வி உண்டாக்கிய சின்னச் சிரிப்போடு, “பார்க்கலாம் அங்கிள்.” என்றவனின் கை தன்பாட்டுக்கு அவனது புருவத்தை தடவிக்கொடுக்க, விரலில் தட்டுப்பட்டது புருவத்துக்கு மேலிருந்த தழும்பு.
அதோடு சேர்த்து அதை தந்தவளின் நினைவும் வர, ‘அந்த தழும்பை அவனுக்கு தந்தவள் தன்னையே தரமாட்டாளா? என்கிற கேள்வி அதன்பாட்டுக்கு எழவும், ஆனந்தமாய் அதிர்ந்துபோனான் நிரஞ்சன்.
ஷணத்தில் உற்சாக ஊற்றொன்று புயலென பொங்கிற்று!
‘என்ன இது..?’ தன்னை உணர்ந்துகொண்டவனின் நாடி நரம்பெங்கும் பரவசம்! புதிதாய் பிறந்தது போல்..
“இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி தனியாவே இருப்பாய் நிரஞ்சன்? வயதும் இருபத்திஐந்து ஆகுதே. பெண் பாக்கவா.” என்று கேட்டார் அங்கிள்.
அவனிடம் பதிலில்லை. தன்னவளின் நினைவுகளில் தொலைந்திருந்தான்.
அவனை ஊன்றிப் பார்த்துவிட்டு, “உன்ர மனதில் யாரோ இருக்கீனம் போல..” என்றார் அவர்.
அனுபவஸ்தர் இல்லையா.. ஒற்றைப் பார்வையில் பிடித்தார்.
பிடிபட்ட உணர்வை மறைத்துக்கொண்டு, “நீங்க வேற அங்கிள்!” என்று மழுப்பலாக சிரித்தான் நிரஞ்சன்.
தன் கேள்விக்கு பதில் சொல்லாதவனின் சிரிப்பு உண்மையை சொல்லிவிட, “எனக்கு வேலை மிச்சம்.” என்றுவிட்டுச் சென்றுவிட்டார் அவர்.
அவர் சென்ற அடுத்த ஷணமே தன்னவளை தேடி ஓடி வந்திருந்தான் அவன்!
“அன்றைக்கு என் மண்டையை உடச்சது போதாது எண்டு இன்றைக்கு என் இதயத்தையும் திருடிட்டியா?” ஆசையோடு அவளிடம் கேட்டான்.
‘உன்ன கொல்லப்போறன் இப்ப!’ அப்போதும் விரல் நீட்டி எச்சரித்துக்கொண்டிருந்தாள் அவள்!
அந்த நிமிடமே அவளை தனக்கே தனக்கென்று சொந்தமாக்கும் வேகம் அவனுக்குள் மிக வேகமாய் பரவ, அதை அவனது அம்மம்மாவின் கனிவான சொற்கள் கட்டுப்படுத்தியது.
அவரின் நினைவு வந்ததும் நெஞ்சு முழுக்க காதல் தழும்பியிருந்த அந்த நேரத்திலும் விழியோரங்கள் கரிக்க, யன்னல் வழியே தோட்டத்தில் நின்றவரைப் பார்த்தான்.
‘நீங்க பக்கத்தில இல்லை என்றதை இப்பவும் நம்ப முடியேல்ல அம்மம்மா. என்ர கல்யாணத்த பாக்கிறத விட தாத்தாட்ட போறதில அப்படி என்ன அவசரம் உங்களுக்கு?’ மௌனத்தால் அவரிடம் வாதிட்டான்.
‘நீங்க சொன்ன மாதிரி என்ர மனசுக்கு பிடிச்சவள நான் பாத்திட்டன். அத உங்களிட்ட தான் முதல்ல சொல்லோணும். ஆனா..’ கலங்கிப்போனான் நிரஞ்சன்.
‘இப்பவும் என்னிடம் தான் ராஜா முதலில் சொல்றாய்..’ அவரின் வார்த்தைகள் அசரீரியாய் அவன் செவிகளை நனைக்கவும், மனம் அமைதியானது.
“அவளை உங்களுக்கும் தெரியும் தானே அம்மம்மா. நீங்க கூட சொல்லி இருக்கிறீங்க, சரியான சேட்டைக்காரி எண்டு. அவள் தான் எனக்கு வேணும். இப்பவே போய் அவளிட்ட கேக்கத்தான் ஆசையா இருக்கு. ஆனா, உன்ர மனசுக்கு பிடிச்சவள் உன்ன தேடி வருவாள் எண்டு சொன்னீங்க. சொன்ன மாதிரி அவள வர வைக்கிறது உங்கட பொறுப்பு.” என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.
அவரின் மீதான அவனின் பாசம் எதற்கும் ஒப்பாகாதது! அதே போலத்தான் அவரின் பாசமும்! அந்தப் பாசம்.. இன்று அவனோடு அவர் இல்லாத போதிலும் அவன் தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றும் வல்லமை மிக்கது என்று நம்பினான்!
அந்த நம்பிக்கை அவளின் வரவுக்காக அவனை காக்க வைத்தது!
‘இல்லையோ.. இந்த நிமிஷமே அங்கவந்து உன்ன தூக்கிடுவன்!’ கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தவளிடம் மனதால் சொன்னான்.
இதென்ன கையாலாகாத்தனம் என்று காதல் நெஞ்சம் சிணுங்கியபோதும் திடமாகவே நின்றான். இது அவனுக்கே அவன் வைக்கும் சோதனை!

