நட்சத்திரா 1-1

யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை…

பளீரென்று வெயில் எறித்துக்கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாகச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது,காற்று. கடலில் வழமைக்கு மாறான கொந்தளிப்புத் தெரிந்தது. இது போதாதென்று,  மக்கள் கூட்டத்தின்  நெரிசலோ எக்கச்சக்கம். அவ்வழகிய கடற்கரைச் சுற்றமே, தடுமாறி, முழிபிதுங்கி நின்றுகொண்டிருந்தது. 

அவர்களில் ஒருத்தியாகக் கலந்து நின்றிருந்தாள், கல்யாணி. இருபதின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் கற்கையிலிருந்த துள்ளலும் துடியாட்டமும் இடைப்பட்ட வருடங்களில் காணாமல் போயிருந்தன. காணாமல் ஆக்கியிருந்தாள். கரடுமுரடாகக் கடந்துருண்ட வருடங்கள் முப்பத்தைந்தில்  வந்து முட்டி நிற்கிறது. இருப்பினும், சட்டென்று பார்த்தால் இருபத்தியைந்து வயது கூட மதிக்க மாட்டார்கள். 

தோற்றத்துக்கும் மனத்துக்கும்  சம்பந்தமே இல்லை என்ற வகையில், போந்து பொலிந்த மனநிலையில் நின்றிருந்தவள் பார்வையோ, அச்சனத்திரளுள் அவனை அடையாளம் கண்டுகொண்டது. அக்கணம் முதல் அவனையே தொடர்ந்துகொண்டிக்கிறது. 

நெற்றி கடந்து வழிந்த முக்காட்டைச் சரிபண்ணிக்கொண்டாள், கல்யாணி. அணிந்திருந்த குளிர்க்கண்ணாடியை மூக்கோடு சற்றே அழுத்திவிட்டபடி அவனையே பார்த்திருந்தவளுக்கு, அவன், தன்னை இனம் காணவேமாட்டான் என்கிற நிச்சயம்.  

அவள் நிச்சயங்கள், நம்பிக்கைகள் பொறுத்த தருவாயில் கைவிட்டுப் போயிருக்கிறதை மறந்துவிட்டாள் போலும்!

“கல்யாணி!” என்ற விளிப்பில், அதிர்ந்து வேரோடிப் போனாள். சில கணங்கள், அச்சுற்றமே உறைந்து நின்ற உணர்வு!

அவள் உயிர் மூச்சாகிப் போன குரலாச்சே! எத்தனை எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவளுள் இனிமையான உணர்வுகளை அறிமுகம் செய்த, தோற்றுவித்த, ‘ எனக்கு மட்டுமே உரிமையானவன்’ என்ற இறுமாப்பைத் தந்த குரல் அது. அவளைச் சீண்டி ரசித்த குரல். அவள் வாழ்வில் திடீரென்று வசந்தத்தை நுகரச் செய்த குரல். வாழும் காலம் முழுதும் கைகோர்த்து வருவேன் என்று உறுதி கொடுத்த குரல்!

கல்யாணியின் உள்ளம் தாங்க முடியாத அளவுக்குக்   கனத்திட்டு. சர்ரென்று சுரந்த விழிகள் அந்தக் குரலில் இருந்த அதிர்வைத் துல்லியமாக இனம் கண்டிட்டு. அதை மட்டுமா? அதையும் மீறிய மகிழ்வையும் உணரச் செய்ததே! 

சுயத்துக்கு வந்தாள், கல்யாணி. அவனோ, அழைத்துக்கொண்டே  அவளை நோக்கியல்லவா வருகிறான்! 

‘ஓடடி!’ மனத்தின்  ஒற்றைச் சொல்லின்  உறுக்கல் தாமதியாது வேலை செய்தது. 

சனத்திரளில் புகுந்து வேகமாக ஓடினாள். கையில் இருந்த புத்தகம் விழுந்து சனத்திரளில் மிதிபட்டது. தாள்கள் ஒன்று ஒன்றும் அவள் உணர்வுகள் போலவே, நைந்து கிழிந்தன. படபடவென்று அடித்தபடி காற்றோட்டத்தின் வழியில் பறந்து சென்றன.  அதுவரை மூடியிருந்த முக்காடு கூட விலகிப் பறந்து பட்டம் போலானது. கால்களில் இருந்த சோலாப்பூரி செருப்புகள் எங்கோ சிதறிப் போயின.

தலைதெறிக்க ஓடினாள், கல்யாணி. பின்னால், அவதியோடு கலைத்து வந்தது, அவன் குரல். அதோடு இணைந்து இன்னுமிரு குரல்கள். ஓடிக்கொண்டே சட்டென்று திரும்பினாள்.

 பதற்றம், வியப்பு, மகிழ்வு என்று, பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடி ஓடி வந்துகொண்டிருந்தான், சூர்யா. அவன் பின்னால், பதறி அழுதவாறே அவன் மனைவியும் மகளும் ஓடிவந்தபடி இருந்தார்கள். 

இவளால் எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிந்தது. தன் ஸ்கூட்டியை எப்படி உயிர்ப்பித்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை.

அவளைத் தாங்கிய றோஸ் வண்ண ஸ்கூட்டி காற்றாகப் பறந்தது. பரிசளிக்க எண்ணியவன் தொடுகை   வருடக்கணக்கில் பட்டதாலோ என்னவோ அதற்கு  அவ்வளவு வேகம்!

அவள்… புள்ளியாக மறைந்து போனாள். 

மடிந்து விழுந்து  கதறி அழுதான்,சூர்யா. நொடியும் தாமதியாது, அவன் மீது வந்து விழுந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்கள், அவன் அன்பு மனைவி உதயாவும் செல்ல மகளும்.

சம்மட்டியால் நெஞ்சில் அடிவாங்கிய வலியோடு திடுக்கிட்டு முழிப்படைந்தாள், கல்யாணி. ஆனாலும் விழிகளைத்  திறக்க முடியவில்லை. கை கால்கள் மரத்துவிட்டது போல் உணர்ந்தாள். இயலா நிலை வாய்விட்டு அழ வைத்தது. 

இப்படியே சில நிமிடங்கள் கனத்தோடு கடந்திருக்க, காத்திரமான இரும்பு  வலைக்குள் இருந்து பிய்த்துக்கொண்டு வந்த வலி வேதனையோடு விழிகளைத் திறந்தவள், அலங்க மலங்க விழித்தாள். கண்களைக் கசக்கினாள்.

அவள் பார்வை அங்குமிங்குமாக அவதியோடு அலைந்து திரிந்தது. அங்கிருந்த புகைப்படச் சட்டத்தில் பட்டதும் நிலைத்து நின்றிட்டு. அதில், தாயும் அவளுமாக நின்றார்கள். சட்டென்று சுயத்துக்கு வந்தவள் மீண்டும் கண்களை அழுந்தத்  தேய்த்துக்கொண்டாள். எல்லாமே கனவு என்று விளங்கியது. 

மூன்று நாள்களுக்கு முன்தான் கசூரினா கடற்கரைக்குப்  போயிருந்தாள். உயிராக நேசித்த சூர்யாவை, மகிழ்வு நிறைந்த அவன் நடமாட்டத்தை, மனைவி மகள் சொந்தங்களோடு கண்டுவிட்டு, ‘எனக்கு உரிமையில்லாதவன், இனிமேல்பட்டு   என்ர நினைவில கூட  அவன் இருக்க மாட்டான்.’ என்ற உறுதியான  முடிவோடு புறப்பட்டவளா இவள்? 

‘இந்த உறுதிமொழிய இதுவரைக்கும் எத்தின தடவைகள் எடுத்திட்ட நீ?’ என்று, மனச்சாட்சி நக்கலடித்தது. 

அதையும் மீறி, இதென்ன கனவு என்ற கேள்வியெழுந்தது.  மனத்தின் இயலாமை கனவில் வந்து வதைக்கிறதோ! கட்டுப்படுத்த முடியாது கண்ணீர் வழிந்தது. அழுதழுது வற்றினாலும் சுரந்து தொலைக்கும் கண்ணீரை என்ன செய்வது?

தாயும் அவளுமாக இத்தாலி வந்த இந்த மூன்று வருடங்களில் மனத்துள் சபிக்கும் வார்த்தைகள், ‘இனிமேல்பட்டு இலங்கைக்குப் போறது இல்ல’ என்றது. அதையேதான் இப்போதும் முணுமுணுத்துக்கொண்டாள். 

நேசித்தவனைத் தானாகவேதான் உதறிவிட்டு வந்தாள். அந்த வேலையைச் சூர்யா செய்யவில்லையே!  அவளை நினைத்து நினைத்துக் குடித்துச் சீரழிந்து கொண்டிருந்தான்.  மிகுதி வாழ்வுக்கு அவளென்று இருக்க, இறந்துவிட்டாள். அதுவும் அகால மரணம். தனக்கென்று இனி வாழ்வே இல்லை என்று தன்னைத்தானே வருத்தி வதைத்துக்கொண்டிருந்தான், அந்த உயிர்க் காதலன். ஒவ்வொரு கணமும் இவளைக் குற்றவுணர்வில் தள்ளி அணுவணுவாக வதைக்கும் படியல்லவா அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். 

அந்த மூன்றரை வருடங்களில் இவள் என்ன செய்தாள்?  மீள வழியற்ற சூழ்நிலைக் கைதியாகியிருந்தாள். தாய்க்கோழியாக அரவணைத்த தீபா அம்மாவின் முழு முயற்சியில்,  தாயோடு கொழும்பில் வசிக்க ஆரம்பித்தவள், மிகுதி ஒன்றரை வருடத் தாதியர் பயிற்சிப் படிப்பை அங்கேயே முடித்துவிட்டு வேலை செய்யத்  தொடங்கிவிட்டிருந்தாள்.

இருந்தாலும் மனத்தளவில்  இத்துப் போயிருந்தாள். அந்தக் கொடூர வேதனையில் இருந்து இவளுக்கும் மீட்சி கொடுத்தவள் உதயாதான். சூர்யா வாழ்வில் அவள் நுழைந்தது அவனுக்கு மட்டுமா, குற்றவுணர்வில் புழுவாகத் துடித்துக் கிடந்த இவளுக்கும் தான் பேருதவி!

அவள் கைங்கரியம், இன்று, மிகவும் நிறைவாக வாழ்கிறான்,சூர்யா.  

 நான், அவன் மகிழ்வில் மகிழ்ந்துவிட்டுப் போக வேண்டும் .  அவ்வளவுதான் என்கிறது புத்தி. பாழ்பட்ட மனம்தான் அந்தரத்தில் தொங்கி ஊஞ்சல் ஆடுகிறது. ஒன்றா இரண்டா? எத்தனை வருடங்களாகிற்று! 

அவன், இனி உனக்கானவன் இல்லை. நினைவாலும் தீண்டாதே கல்யாணி! நீ அவனில் வைத்த அன்புக்குக்  கறுப்பு வண்ணம் பூசி விடாதே! 

எப்போதும் போலவே தன்னைத்தான் கடுமையாகவே சாடிக்கொண்டாள்.

முதல் நாள் கொழும்பிலிருந்து ‘மிலான்’ புறப்பட்டவள் வந்து சேர இராவாகிவிட்டிருந்தது. ஏற்கனவே சோர்வில் இருந்த உள்ளம்,  நீண்ட பயணம் செய்ததும் சேர  நன்றாகவே களைத்திருந்தாள்.  தாயோடு கூடச் சரியாகக் கதைக்கவில்லை. தன்னைச் சுத்தப்படுத்திய வேகத்தில்  படுத்துவிட்டாள். ஒருபோதுமின்றி, கிட்டதட்ட பத்து மணித்தியாலங்கள் நித்திரை கொண்டிருக்கிறாளே!

 

error: Alert: Content selection is disabled!!