Skip to content
“கல்யாணி தூங்கிட்டியாம்மா?” என்றவாறு, சுமதி அறைக்குள் வந்தபோது, அவள், குளியல் அறைக்குள் இருந்தாள்.
“இந்தா வாறன் அம்மா.” என்றவள், அடுத்த சில நிமிடங்களில் வெளியே வரும் வரை சுமதி அங்குதான் நின்றார்.
வீட்டில் காலை வேலைகளை முடித்துவிட்டு வேலைக்குப் புறப்பட வேண்டும். திலினி சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவாள். வாயிலில் காக்க வைப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காத வேலை. ஒவ்வொருநாளும் ஏற்றிக்கொண்டு செல்வதே பெரிய உதவி. அதற்குள் காக்க வைப்பதா என்று, ஐந்து நிமிடங்களுக்கு முதல் சென்று காத்து நிற்பவர்.
“என்னம்மா ஆறுதலா நிக்கிறீங்க? ” என்றபடி கட்டிலில் அமர்ந்த மகளை ஆராய்ந்தது, சுமதியின் பார்வை.
“என்னம்மா, ஏதாவது சொல்லோணுமா? சமையல் எண்டு ஒண்டும் செய்து மினக்கட வேணாம், நான் நிக்கிறன் தானே.” என்றவள் பார்வை தாயில்தான்.
மகள் கேட்ட கேள்விக்குப் பதிலாக,“டேமியனுக்கு ஏதாவது பிரச்சினையாம்மா?”என்றிருந்தார், சுமதி.
நெற்றி சுருங்க தாயைப் பார்த்தாள், கல்யாணி. “ஏன் அப்பிடிக் கேட்கிறீங்க? எனக்குத் தெரிய அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல. சொல்லேல்லம்மா.” என்றாள்.
“இல்ல… இவ்வளவு நேரம் விடிய விடியக் கதைச்சுக் கொண்டிருந்தீங்களே … அதான்.” என்றதும் கல்யாணி முகத்தில் சிறு முறுவல்.
“பிரச்சினை எண்டு ஒண்டும் கதைக்கேல்லம்மா. அங்க எல்லாம் ஒதுக்கிப்போட்டு ஒரு கோப்பி குடிச்சிட்டுப் போகலாம் எண்டுதான் இருந்தனாங்க. அப்பிடியே பியங்கா, அதான் டேமியனிட வைஃப் பற்றி நிறையச் சொன்னவர். உண்மையா நேரம் போனதே தெரியேல்ல.” சரிந்து போர்வைக்குள் புகுந்தபடி சொன்னவள், “அதைவிடப் பெரிய விசயம் ஒண்டும் சொன்னவர் அம்மா.” என்றவள், பிள்ளைகள் பற்றிச் சொன்னதும் சுமதிக்கும் வியப்புதான்.
“உண்மையாவோ! நம்பேலாமல் கிடக்கு .” என்றவர், “அட, அதான் முந்தி நாங்க வந்த புதிசில பபிதா , தம்பிய…அதான் டேமியனச் சித்தப்பா எண்ட நினைவு . பழக்க தோசத்தில சொல்லுறாள் எண்டு கிறிஸ்டினா சொன்ன நினைவா இருக்கு. நான் பெரிசு பண்ணேல்ல.” என்றார் சுமதி.
“எண்டாலும் நம்பேலாமல் இருக்குப் பிள்ள.”
“எனக்கும்தான். ஆனா உண்மையாவே டேமியன் பியங்காவுக்குப் பிள்ளைகள் இல்லையாம்.”
“ஓ! பெத்த பிள்ளைகள் போல எல்லா அந்த தம்பி பார்க்கிறவர். வெளிப்பார்வைக்கு முரடன் போல இருந்தாலும் நல்ல மனிசன்தான்!” என்றபடி, தன் வேலைகளைப் பார்க்கச் சென்றார், சுமதி.
விழிகளை மூடிக்கொண்ட அவர் மகள் மனத்திலும் அதே நினைவுதான். இங்கு வந்ததிலிருந்து ‘பொல்லாத செடில் பிடிச்சவன்’ என்ற இடத்தில் அவனை வைத்திருந்தாள். அண்மைய நாட்களில் நட்பாகப் பழகினாலும் இவள் கவனமாகத் தள்ளியேதான் நிற்பாள். இப்போது, தன்பாட்டில் அந்த இடைவெளி மறைந்திருந்தது.
ஏற்கனவே டேமியனுக்குக் கல்யாணி என்றால் நல்ல விருப்பம் ஆச்சே! அன்றைக்குப்பின் அவளுடனான நட்பில் நெருக்கம் கூடியதாக உணர்ந்தான், அவன். அந்த உணர்வு அவனுக்கு மிகவுமே பிடித்திருந்தது.
மனைவியின் பிரிவின் பின் அலைந்து திரிந்து வெறுமையைச் சுவாசித்த மனத்துக்கு, தன் தனிப்பட்ட விடயங்களைக் கதைக்க நெருங்கிய தோழி கிடைத்த மகிழ்வு. தொழில் பற்றி, பிள்ளைகள் பற்றி, தாய் பற்றி, அவர் உடல்நிலையைப் பற்றி என்று கதைக்க, பரிமாறிக்கொள்ள, ஆலோசனை கேட்கவென்று தினமும் ஏதோவொன்று அவனிடம் இருந்து கொண்டேயிருந்தது.
மனத்துள் புத்துணர்வும் இதமும் கலந்து வாசமடிக்க, முக்கி முனகி இழுத்த நாளாந்த வாழ்க்கை வண்டியில் புத்தம் புதிதாய் எண்ணெய் இட்ட சக்கரங்களை மாட்டிக்கொண்டு சத்தமே இல்லாது வழுக்கிச் செல்லும் பாங்கில் நாட்கள் நகரத் தொடங்கியிருந்தன. உற்சாகமாக உழைத்தான், நடமாடினான், அவன்.
கல்யாணி கூட, டேமியனுடனான பழக்கத்தில் உண்டான நெருக்கத்தை ஆராய்ந்து பார்க்காது அதுபாட்டில் நாட்களைக் கடந்தாள். ஒவ்வொரு நாளும் அதிக உற்சாகத்தைத் தந்தது. அதுவும் அவள், காலை வேளைகளில் வீட்டில் நின்றால் பிடிவாதமாக நின்று ஓட்டத்திற்கு அழைத்துச் செல்லத் தொடங்கியிருந்தான், டேமியன்.
அதுவெல்லாம் இவளுக்கு இன்னொரு அழகிய உலகை அறிமுகம் செய்து வைத்தது. விடிய வெள்ளன, கருமையும் கதிரவன் ஒளியும் கலக்க முற்படும் பொழுதில், நண்பனோடு ஓடுவது பெரும் சுவாரசியம் தருவதாக இருந்தது.
அவளையும் அறியாதே அவன் நட்பும் பழக்கமும் அருகண்மையும் வழங்கிய பாதுகாப்புணர்வை அனுபவித்துப் போர்த்திக்கொண்டவளில், அசாத்திய நிமிர்வு வந்திருந்தது. உடலில் புதுச்சக்தி பாய்ந்திருந்தது. ஏற்கனவே நல்ல சுறுசுறுப்பானவள், இப்போது எறும்பைப் போல் எந்நேரமும் ஏதோவொன்றை மகிழ்வாகச் செய்யத் தொடங்கியிருந்தாள்.
அப்படித்தான், சிலோன் டேஸ்டில் அவளது பிரசன்னமும் அடிக்கடி என்று ஆகிவிட்டிருந்தது. கோடை நெருங்க நெருங்க அங்கு ஆட்கள் தேவையும் அதிகரிக்க, வைத்தியசாலை போகாத வேளைகளில் கல்யாணி அங்கேதான் என்றானது.
இவர்களில் உருவாகும் சிறு சிறு மாற்றங்களையும் உன்னிப்பாக ஒருவர் கவனிப்பது இருவருக்குமே தெரியாது.
சுமதிதான். டேமியன் சிடுசிடுப்புக் குறைந்து நடமாடுவதை அங்கு வேலை செய்வோரே சிலாகித்துக்கொண்டார்கள். ஆனால் சுமதிக்கோ, மகளை எண்ணித்தான் அவ்வளவு வியப்பு!
பதின்ம வயதில் தன்னைவிட்டுப் பிரிந்த மகள், இளம் குமரியாகத்தான் திரும்பி வந்திருந்தாள். வாழ்வில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு, துவண்டு நின்றவருக்குக் கொழுகொம்பாகிப் போனாள், அவர் மகள்.
அதன் பின்னரான நாட்களில், அவள் முறுவலிப்பதைக் கூட இவர் காண்பதில்லை. தாயோடு கதை பேச்சுக்குக் குறைவிருப்பதில்லை. அன்றாடக் காரியங்களில் தங்குதடையின்றி இருந்தாலும் முகத்திரை போட்டுப் பழகும் வகையில் மகள் நடமாடுவது அவருக்கு விளங்காதா என்ன?
எப்போதும் காலையில் எழுகையில் தடித்துச் சிவந்திருக்கும் விழிகளைப் பார்த்து இவர் கலங்கிவிடுவார். காரணம் தெரிந்தே என்னவென்று கேட்பது. நேர் சீராக்க இயலுமா? இல்லவே இல்லை. ஆனால், பிராயச்சித்தம் செய்ய இயலும் தானே. சூர்யா இல்லையென்றாலும் மகள், மனம் ஒத்து வாழ்கிற வகையில் ஒருவன் கிடைக்காமலா போவான்.
கடந்த காலத்தை மறப்பது இலகுவல்ல. ஆனால், அதில் துன்பமும் வலியும் வேதனையும் மட்டுமே இருக்கும் என்றால் பார்த்துப் பாராது மிதித்து உழக்கிக்கொண்டு வெளிவர வேண்டாமா என்ன?
இதைத்தான் மகளிடம் திருப்ப திருப்பச் சொன்னார். அதோடு நின்றுவிடாது அவளுக்குத் திருமணமும் பார்க்க ஆரம்பித்திருந்தார். அது எங்கே? முதல் ஆளாக முட்டுக்கட்டையிடுவதே கல்யாணிதான்.
இதோ, சுனிமலுக்கு என்ன செய்தாள்?
“விருப்பம் இல்லையெண்டு சொல்லிட்டாவாமே , விட்டிரு சுனிமல். உன்ன விரும்பிற பிள்ள விரைவில கிடைப்பா.” என்று, அன்று பிறந்தநாள் வீட்டில் வைத்தே டேமியன் சொன்ன பிறகும் சுமதியோடு கதைத்துப்பார்த்திருந்தான், அவன். சுமதியும் பெரும் எதிர்பார்ப்பும் கெஞ்சலுமாகவே மகளிடம் கதைத்துப்பார்த்தார்.
கேட்டவள் முகத்தில் எந்தப் பாவமும் இல்லை. தாயை நேருக்கு நேராகப் பார்த்தாள். “டைம் வேஸ்ட் பண்ண வேணாம் எண்டு அந்த நல்ல, அருமையான தம்பிட்டச் சொல்லிவிடுங்க அம்மா. இதுக்குப் பிறகு அந்த ஆளப் பற்றி என்னட்டக் கதைக்காதீங்க பிளீஸ் !” தீர்மானமாகச் சொல்லியிருந்தாள்.
இப்போதோ, இதே சிந்தனையாகத் திரிவதாலோ என்னவோ, மகளும் டேமியனும் நட்பைத் தாண்டி அடுத்த கட்டத்துக்குச் சென்றால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கற்பனையை அவரால் தவிர்க்க முடியவில்லை.
உண்மையில் இதுவெல்லாம் அவர்கள் தகுதிக்கு மீறிய மிகப்பெரும் ஆசைதான். அப்படி எண்ணுகையில் மனம் சுணங்கும். அவர் மகளின் தகுதிக்கு என்ன குறையாம்? அவளைப்போல் ஒரு அருமையான மகள் யாருக்குக் கிடைப்பார்கள் என்று எண்ணுகையில் அழவே கூடாதென்ற வைராக்கியம் கொண்ட சுமதி விம்மிவிடுவார். அவர் மகள் என்ற ஒன்று போதுமே. நல்லது நடக்க முட்டுக்கட்டையே அவர்தான் என்று தீவிரமாக நம்பி, தன்னைத்தானே சாடிக்கொண்டார், அவர்.
அப்படியான வேளைகளில், ஆசைப்படவும் அருகதையற்றவரா அவர் என்ற எண்ணமும் தோன்றும். ஒருவேளை, டேமியனும் மகளும் விரும்பினால் அதை விட வேறு எதுவும் அவருக்குத் தேவையில்லை. அவரை இந்த உலகில் இருந்து விடைபெறச் சொன்னாலும் செய்யத் தயார்!
ஆனால் என்ன? இது பற்றி மூச்சு விடும் தைரியம் கூட அவருக்கு இல்லை.
நாட்கள் இலகுவாகவே கடந்து சென்றன. கிறிஸ்டினா மேலும் சில மாதங்கள் நின்றுவிட்டு வருவதாகச் சொல்லியிருந்தார். இங்கு, பிள்ளைகளும் டேமியனும் இவர்கள் குடும்பம் போலாகிவிட்டார்கள். சமையல் கூட சுமதிதான்.
மிலான் வந்த இந்த மூன்று ஆண்டுகளில் ஊர் சுற்றிப்பார்க்க என்று தாயும் மகளும் வெளிக்கிட்டதில்லை. திலினி அப்பப்போ கேட்பாள்தான், சுமதி ஏதோவொரு காரணம் சொல்லித் தவிர்த்துவிடுவார். இம்முறை எந்தச் சாட்டும் பலிக்கவில்லையே!
error: Alert: Content selection is disabled!!