Skip to content
‘சிலோன் டேஸ்ட்’ காலை உணவுப் பிரிவில் சுமதியின் தேவை இன்றியமையாதது. வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இதுவரை, அவர், அங்கு செல்லாமல் இருந்ததில்லை. இன்று, திலினி பொறுப்பெடுப்பதாகச் சொன்னாலும் அங்கத்தைய காலை நேரப் பரபரப்புக்கு பயிற்றப்பட்ட ஆட்களே தேவை.
அதுவே, “போய்ட்டு எட்டுமணியோட வந்திருவன்” என்றுவிட்டுச் சென்றிருந்தார், சுமதி.
தானே வந்து ஏற்றுவதாகச் சொல்லியிருந்தான், டேமியன்.
தாய் புறப்பட்டுச் செல்ல, சமையலைத் தொடங்கிவிட்டாள், கல்யாணி.
பொலபொலவென்று பொழுது புலர்ந்து வர ஓட்டம் முடித்து வீடு வந்த டேமியனைச் சமையல் வாசம் சுண்டி இழுத்திட்டு. அப்படித்தான் அவன் நினைத்துக்கொண்டான். மறுநிமிடமே, தோட்ட வீட்டுக் கதவில் மெல்லத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.
டேமியன்தான் என்ற யூகம் கல்யாணிக்கு. “கதவு திறந்துதான் இருக்கு டேமியன்.” என்றுவிட்டுத் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
“அதெப்பிடி நான்தான் எண்டு தெரிஞ்சிது?” கேட்டுக்கொண்டே உள்ளிட்டான், அவன்.
“ம்ம்… வேற ஆர் இஞ்ச வரப்போகினம்? பிள்ளைகள் எண்டா கனி அன்ரி எண்டு கூப்பிடுவினம்.”
“ஓ! அப்ப என்னை எதிர்பார்த்தீங்க போல!” என்றிருந்தான், அவன். சட்டென்று திரும்பி ஒரு பார்வை பார்த்தாள், கல்யாணி.
“அப்பிடி நீங்களா நினைச்சா நான் என்னதான் செய்யேலும் சொல்லுங்க?” என்றாள், ஒரு சாதிக் குரலில்.
டேமியன் விழித்துக்கொண்டான். “நான் சொன்னது உங்களை இல்ல கல்யாணி. இந்த ஆட்டிறைச்சியை. கறி வாசம் தான் இஞ்ச வரை இழுத்தது. ருசி பாக்காமப் போகேலாது எண்டு இந்த நாக்கு வேற அடம்பிடிக்குது!” கண்கள் நகைப்பில் சுருங்கச் சொன்னவன் இவளுள் வியப்பேற்படுத்தினான். எதற்காம்? இந்தளவுக்கு இலகுவாகக் கதைக்க வருவமா என்றுதான்.
நன்றாகக் கவனித்துப் பார்க்கையில் இந்தக் கதைப்பேச்சு எல்லாமே இவளோடுதான். அண்மைய நாட்களில் அது இவளுக்கும் விளங்கவே செய்தது. அதுவே, ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது சொல்லிவிடுவாள். அவளது பாவனையும் பேச்சும், என் எல்லை இது, உன் எல்லையில் நீ நின்றுவிடு என்ற எச்சரிக்கையைக் கொடுக்கும்.
தன் கரமிரண்டையும் சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டான், டேமியன். பார்வை, கண்ணாடி மூடியையும் தாண்டி, பிரட்டலாக இருந்த ஆட்டிறைச்சிக் கறியில் இருந்து கல்யாணி முகத்துக்கு வந்திருந்தது.
“அப்பிடி என்னதான் கேட்டிட்டன் எண்டு இப்பிடி யோசிக்கிறீங்க. தர விருப்பம் இல்லையெண்டா நான் போயிருரன் மேடம்!” கடித்தான்.
“இந்த விடிய வெள்ளனவே சாப்பிடுவீங்களா எண்டு யோசிச்சன்.” என்ற கல்யாணி, “ஆளப் பாத்தாச் சாப்பாட்டில வலு கட்டுப்பாடானவர் போல. சாப்பிடுறது நேர்மாறு!” என்றபடி, கறிச்சட்டி மூடியைத் திறந்தாள்.
“ஆர் சமைக்கினம் எண்டதைப் பொறுத்து எப்ப வேணும் எண்டாலும் சாப்பிடுவன்.” கண்களைச் சிமிட்டிக்கொண்டே சொன்னவன், “ கனக்க ஒண்ணும் வேணாம், கல்யாணி. கொஞ்சமா, நானே எடுக்கலாமா?” என்றான்.
அவன் கதைகளும் பார்வைகளும் அதில் இருந்த அவளுடனான நெருக்கமும் விளங்கியும் விளங்கவே விளங்காத பாவனையில் கதைத்தாள், கல்யாணி.
“உண்மையா நான் பகிடிக்கு அப்பிடியெல்லாம் சொன்னன். நீங்க வடிவா எடுத்துச் சாப்பிடுங்க. பாண் டோஸ்ட் பண்ணித் தரவோ?” அவள் கேட்கும் வரை அவனுக்கு அப்படி உண்ணும் எண்ணமே இருக்கவில்லை.
இப்போ, இந்த நிமிடத் துளிகளை இரசிப்போடு உணர்ந்து அனுபவிக்க அவனுள்ளம் பெரிதும் விரும்பியது. ஏங்கிக் கிடந்தது போலொரு பரவசம். ‘கன்னம் பழுக்க வாங்கப் போற டேமியன்’ என்ற எச்சரிக்கைக் குரலும் ஒலித்திட்டு. இருந்தாலும், “ம்ம்ம் ஒரே ஒரு துண்டு தாங்க. நானே டோஸ்ட் செய்யிறன், நீங்க உங்கட வேலையப் பாருங்கவன்.” என்று, வலு சுவாதீனமாக அச்சிறு குசினிப்பகுதியில் தன்னைப் பொருத்திக்கொண்டான்.
“சரி, வடிவா எடுத்துச் சாப்பிடுங்க. கோப்பி போடவோ?” கேட்டுக்கொண்டே, சம்பா அரிசியைக் கழுவி எடுத்தாள்,அவள். போதியளவு நீரும் மஞ்சள், பட்டை, கராம்பு பிரியாணி இலை சேர்த்து ரைஸ் குக்கரில் வேக விட்டாள்.
“உங்களுக்கும் சேத்துப் போடுறது எண்டாப் போடுங்க, இல்லையோ வேணாம்.” என்றுவிட்டு, டோஸ்டில் ஒரு துண்டைப் பிய்த்து இறைச்சிக்கறியோடு கிள்ளியெடுத்து வாய்க்குள் வைத்துக்கொண்டான்.
அங்கால போயிருந்து சாப்பிடலாமே என்று சொல்ல வாயுண்ணினாள்,கல்யாணி. திரும்ப திரும்ப நொட்டுவான் ஏனெனென்று அமைதி காத்தவள் மனம் சும்மா இருக்கவில்லை.
‘விடியவெள்ளன வந்து நிண்டு இந்தாள் சதிராடுது! இப்பிடியே போனால் என்னட்ட நல்லா வாங்கிட்டு ஓடப் போறார்.’ முணுமுணுக்காது இருக்கவில்லை.
இதற்கே இப்படியென்றால் அடுத்து அவன் செய்த செயல்!
ஒரு துண்டுப் பாணோடு ஒட்டி உறவாடிய ஆட்டிறைச்சிக்கறி, அவள் வாயருகே வந்து நிற்கத் திடுக்கிட்டு விலகினாள், கல்யாணி.
“வேணாம் எண்டு சொல்லவே கூடாது சொல்லிட்டன். ஒரே ஒரு வாய்தான் தருவன், ருசி அந்த மாதிரி இருக்கு. சாப்பிட்டுப் பாருங்கவன்.” கெஞ்சலோடு சொல்லிக்கொண்டே அவள் உதடுகளில் வைத்துவிட, ஆவென்று வாங்கிவிட்டாள். இல்லையோ, அவனோடு அதில் பிரச்சினைப்பட வேண்டும் .
“கத்தரிக்காயும் சமைக்கப் போறீங்களா? இது வெங்காயச் சம்பலுக்கா? கனக்கத் தேவேல்ல கல்யாணி.” என்றவன் கரங்கள் வெங்காயத்தை எடுத்து உரிக்கத் தொடங்கியிருந்தன.
“நீங்க விடுங்க டேமியன், நான் செய்வன்.” என்றதைக் காதில் வாங்கவில்லை. “கோப்பியைக் குடிச்சிட்டு வாங்க முதல்.” நட்போடு கூடிய அதட்டல் தான்.
சிலோன் டேஸ்ட்டில் தொடங்கி, இப்போ செல்லப்போகும் இடம் வரை கதைத்துக்கொண்டே நின்றவன், வெளியேறுகையில் சமையல் முடிந்து, சமையலறையும் சுத்தம் செய்தாயிற்று.
“நாங்க போகப்போற வேன் திறந்துதான் இருக்கு, வைக்க வேண்டியதுகள வையுங்க. சுமதி அம்மாவக் கூட்டிக்கொண்டு வர, வெளிக்கிடுவம்.” என்றுவிட்டு நடந்தவன், “கல்யாணி!” அழைத்தான் .
“ம்ம்…என்ன?” என்று திரும்ப, “grazie molte mio caro(thanks a lot my dear)” என்றிருந்தான், அவன்.
கேட்டவளோ, சட்டென்று முகம் மாறினாள்.
டேமியன் அதைக் கவனித்தான் போலில்லை. தொடர்ந்தான். “நிறைய நாள்களுக்குப் பிறகு…நாள்கள் என்ன மாதங்கள் வருடங்கள் எண்டே சொல்லலாம். அருமையானதொரு காலை நேரம்! எல்லாம் உங்களால தான் கல்யாணி .” என்றுவிட்டுச் செல்ல, இவளோ அசையாது நின்றாள்.
அவன் குரலில் இருந்த ஏதோவொன்று, இவள் உள்ளத்தைச் சட்டென்று தட்டிச் சென்றிருந்தது. அந்த அதிர்வில் கல்யாணி வியர்த்துப் போனாள். அதே, உள்ளத்தை நிரப்பிக்கொண்டிருந்த சூர்யாவின் நினைவுகள் முறைப்போடு எழுவது போன்றதொரு உணர்வு! நெற்றிப் பொட்டை அழுத்தியவளுக்குத் தலை விண்ணென்று வலித்தது. மனத்துள் பலமான எச்சரிக்கை மணி ஒலித்தது.
“ பச்! எனக்கு உண்மையாவே விசர்தான் பிடிச்சிட்டு.” தன்னைத்தானே வார்த்தைகளால் அதட்டிக்கொண்டாள். ‘உன்னோட கதைச்சுப் பேசுற எல்லாருக்கும் உன்னில கண் எண்டுற நினைப்பு நல்லதில்ல கல்யாணி! அது மனவியாதி ஆகிரும் கவனம்.’ டேமியனை அப்படி எண்ணியதற்குத் தன்னில் கோபம்கூட வந்திட்டு. அதுவும் டேமியன் இத்தாலியில் பிறந்து வளர்ந்தவன். நட்போடு பழகுவதில் குறை காண்பாளா என்ன?
அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தயாராகச் சென்றாள்.
*****
ஆனந்தத்தில் மூச்சடைக்க வைத்துவிடும் வியத்தகு இயற்கைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற, உயர்தர ரிசோர்ட் பகுதியான ‘லேக் கோமோ’, இத்தாலி வடக்கின் ‘லோம்பார்டி’ பகுதியில் அமைத்துள்ளதாம். ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திற்கு நிகரானதாம்.
அந்த ஏரியானது, ரிசோர்ட் நகரமான பெல்லாஜியோவில் சந்திக்கும் மூன்று மெல்லிய கிளைகளுடன், தலைகீழான ‘Y’ வடிவில் அமைந்துள்ளதாம்.
ஒன்பது பேர் வரை அமரக்கூடிய ‘மெர்சிடஸ் பென்ஸ்’ டேமியன் கரத்தில் நிதானமாகச் சென்றுகொண்டிருக்க, தாம் செல்கிற இடம் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தான், அவன்.
சுமதிதான் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இதுவரை அவனோடு இந்தளவுக்குக் கதைத்துப் பழக்கம் இல்லை. பெற்ற மகன் இருந்திருந்தால் இப்படித்தான் கரிசனையாக அழைத்துச் செல்வானாக இருக்கும். டேமியனின் செய்கைகள் ஒன்று ஒன்றும் இப்படி ஏங்க வைக்கும் விதமாய் இருக்கின்றனவே. கண்கள் கலங்க, அதை மறைத்துச் சமாளித்தபடி பயணப்பட்டார், சுமதி. அதுவும் பின்னாலிருந்து வரும் மகளின் குரலில் ஒட்டிக்கிடந்த மகிழ்வும் துள்ளலும் மிகப்புதிதாகவும் இருந்தன்.
உவகை மெல்ல மெல்ல ஊறத் தொடங்க, நத்தையோட்டினுள் சுருண்டு கிடப்பது போல் வாழ்ந்து வரும் சுமதியே கலகலப்பாகத் தொடங்கிவிட்டார்.
அத்தனை நாளாந்த வேலைகள், கடமைகள் பொறுப்புகளையும் ஏன், நாம் உழன்று கொண்டிருக்கும் உணர்வுகளையும் ஒதுக்கிவிட்டு, இப்படி, சிறிதோ பெரிதோ பயணங்களை மேற்கொள்கையில் மகிழ்வும் அமைதியும் தானாகவே வந்துவிடும். அந்த நிலை, பயண ஆரம்பத்திலேயே சுமதிக்கு வந்துவிட்டிருந்தது.
பியங்கா இருக்கையில் ஒவ்வொரு கிழமையும் இப்படிக் குடும்பமாக வெளியில் சென்று விடுவார்கள். இடைப்பட்ட இந்த ஐந்து வருடங்களில் அது இல்லாதிருந்தது. அப்படியே சென்றாலும் தமக்கு அறிந்த தெரிந்தவர்களுடன் அழைத்துச் செல்வார்,கிறிஸ்டினா. பிள்ளைகளும் பெரும்பாலும் தத்தம் அறைகளும் முடங்கி, தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருக்கத் தொடங்கியிருந்தார்கள்.
error: Alert: Content selection is disabled!!