Skip to content
கல்யாணியின் அறிமுகம், அதுவும் தாய் கனடா சென்ற பின்னரான இந்தச் சில மாதங்களில் பிள்ளைகளில் பெரும் மாற்றம் உண்டு பண்ணியுள்ளதை டேமியானால் அவதானிக்க முடிந்தது. அந்தளவுக்குக் கல்யாணியோடு சேர்ந்து கலகலக்கத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.
டேமியன், என்னதான் சுமதியோடு கதை பேச்சு என்று இருந்தாலும் ரியர் வியூவில் பின்புறப் பாதையை அவதானிக்கச் சென்று வரும் அவன் பார்வை, அவனையுமறியாதே கல்யாணியையும் அல்லவா தொட்டு வருகிறது.
இந்தக் கணம் அவனுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. பிரிவின் வலியில் நசுங்கிப்போய், காய்ந்து வறண்டு கிடந்த இதயமாச்சே! இந்த ஐந்து வருடங்களில் அறைக்குள் அடைந்தா கிடந்தான்? எவ்வளவு பேர்களோடு பழகுகிறான். யாரின் அறிமுகமும் நட்பும் பழக்கமும் இப்படியானதொரு உணர்வைத் தோற்றுவிக்கவில்லையே. அணுவணுவாக அனுபவித்தான், டேமியன்.
கிட்டதட்ட ஒன்றரை மணிநேரப் பயணம் , நேரம் சென்றதே தெரியவில்லை. பத்துமணிக்கு ‘Villa del Balbianello’ வந்துவிட்டார்கள்.
“Lake Como ட முழு வடிவத்தையும் அமைதியா ரசிக்கோணும் எண்டா, இதான் சரியான இடம். அதும் சின்னப்பிள்ளைகளோட வந்து ஆறுதலா ரெண்டு மூண்டு மணித்தியாலங்கள் காலாற நடந்தபடியே சுற்றிவர அவ்வளவு ரசிப்பாக இருக்கும்.” என்று சொல்லிக்கொண்டே வாகனத்தை நிறுத்தினான், டேமியன்.
“ நல்ல காலம் இஞ்ச பார்க்கிங் கிடைச்சிட்டு. இருந்தாலும் இஞ்ச இருந்து கிட்டத்தட்டப் பதினைஞ்சு இருவது நிமிசங்கள் நடக்கோணும்.” முதுகுப்பையை மாட்டிக்கொண்டு நடந்தவனோடு சுமதி நடக்க, மறுபுறமாகச் சேர்ந்துகொண்டாள்,பபிதா.
ஜெரிக்சனும் சிசிலியாவும் கல்யாணியோடு சலசலத்தபடி பின்தொடர்ந்தார்கள்.
“ இந்த வழியாலயா போகோணும் தம்பி? நல்ல ஏத்தம் தான் என்ன?” மேலே அண்ணாந்து பார்த்தபடி கேட்டார் , சுமதி. பச்சைப் பசேலென்று இருந்த சுற்றம், எறித்த வெம்மைக்குப் பெரும் வரமாக இருந்தாலுமே வியர்த்துக் கொட்டியது. நெளிந்து வளைந்து மேலே பாதை செல்வதை ஆவென்றுதான் சுமதி பார்த்து நின்றார்.
“ நல்ல காலம் அம்மா, நீங்க செருப்போட வரேல்ல.” என்றபடி, கல்யாணியும் அச்சுற்றத்தைத்தான் பார்த்தாள்.
“ அதெல்லாம் ஒண்டும் சிரமம் இல்ல சுமதிம்மா . செருப்போட வந்திருந்தாலும் ஏறியிருக்கலாம். இப்ப என்ன, வேலையா இன்டெர்வியூவா? சுத்திப் பாக்கத்தானே வந்திருக்கிறம். நிண்டு நிண்டு ஆறுதலாப் போகலாம். ஏலாது எண்டாச் சொல்லோணும் என்ன.” என்றான், டேமியன்.
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சின இல்லத்தம்பி. வாங்க போகலாம் .” என்றவர் கை, இப்போது பபிதாவின் கைக்குள் சென்றிருந்தது. இருவரும் முன்னால் நடக்கவே தொடங்கியிருந்தார்கள்.
தலையாட்டிச் சிரித்தவன், “ பிறகென்ன?” என்ற வேகத்தில், “ என்ர கையை ஆரும் பிடிக்கிறது எண்டால் பிடிக்கலாம்.” என்று சொல்லியிருந்தான். சொன்னதோடு நிறுத்தாமல் கல்யாணியை வேறு பார்த்துமிருந்தான். நல்லவேளை அவள் பார்க்கவில்லை. ஜெரிக்சனின் முதுக்குப்பையில் இருந்து எதையோ எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
பார்வையைத் திரும்பியவன் முகத்தில் முறுவல் வந்திருந்தது. ‘பகிடி சேட்டை கூடுது டேமியன். பல்லு உடை படப்போறாய் அப்பன்!’ சிரிப்போடு மனத்துள் முணுமுணுத்துக்கொண்டான்.
“ அப்பாட கையப் பிடிச்சுக்கொண்டு நடவுங்கோ பிள்ளைகள்.” என்று சொன்ன கல்யாணி, அவன் சொன்னது கேட்டது என்றாள். ஒரு அசட்டுத் சிரிப்போடு திரும்பியவன் , “ஜெரி பப்பாட்ட வாங்கோ!” என்று கை நீட்டினான்.
“ நோ பப்பா, நாங்க மூணு பேரும் ஒரு குரூப். நீங்க மூணு பேரும் ஒரு குரூப்.” என்றான் அவன்.
“ அடோய்! அந்தளவுக்கு வந்திட்டோ!” பகிடியாகச் சொல்லிக்கொண்டு எட்டி நடந்தவன் சுமதி, பபிதாவோடு இணைந்துகொண்டான்.
‘Villa del Balbianello’ மாளிகையும் பரந்த தோட்டமுமாக இருந்தது. அந்தக் காலைப் பொழுதில் கணிசமாக உல்லாசப்பயணிகள் வருகை இருந்தது. புகைப்படங்கள் எடுக்கவென்றே வருவார்கள் போலும். அந்த வகையில் ஒரே நிற ஆடைகள், அழகிய சட்டைகள் என்று ஒரு ஒருவரின் ஆடையலங்காரங்களுமே நேர்த்தியாக, கவருவதாக இருந்தன. அவர்களோடு சேர்ந்து இவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.
“Casino Royale எண்ட James Bond படம் பாத்திருக்கிறீரா கல்யாணி?” திரும்பிப் பார்த்துத் திடுமென்று கேட்டான், டேமியன். நெற்றி சுருக்கினாள், அவள். அதே வேகத்தில், “என்ன நக்கலா?” என்று கேட்டுமிருந்தாள்.
“இல்ல, உண்மையாத்தான் கேட்டனான்.” என்று அவன் சொல்ல, “அவா தமிழ் படமே பாக்க மாட்டா தம்பி.” என்றார், சுமதி.
“ஓ! நல்ல படங்கள் பாக்கலாம் சுமதிம்மா. இனிப் பாக்க வச்சிட்டாப் போச்சி!” பகிடியாகச் சொன்னவன், “அந்த ஜேம்ஸ் பொண்ட் படம் இஞ்ச வச்சும் எடுத்திருக்கினம். அதைச் சொல்ல வந்தன்.” என்றான்.
பதில் சொல்ல முயன்றவள் அவன் பார்வையில் இருந்த நெருக்க உணர்வில் சட்டென்று திரும்பிவிட்டாள் . காலையில் வந்த அதே உணர்வு உள்ளெழுந்தது. ஏனோ அந்த வழியில் நினைக்கவே விருப்பம் வரவில்லை.
‘நட்போடு ஒரு வார்த்தை சொன்னால் நீ கண்டபடி யோசிப்பாயோ?’ என்று தன்னையே ஏசிக்கொண்டவள், சட்டென்று, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசிய தோட்டமாக இருந்த சுற்றத்தை அலசினாள். மிகவும் கவனமான பராமரிப்பிலுள்ளது என்பது பார்த்ததும் தெரிந்தது.
“Star Wars Episode II இல இந்த வில்லா(மாளிகை) வரும். Padmé and Anakin வெடிங்… பிறகு kiss பண்ணுற சீன் அந்த பால்கனியில வச்சுத்தான் எடுத்தவேயாம்.” என்றாள், பெரியவள். அப்போ பார்த்து, ஒரு திருமணச் சோடி உள்ளே நுழைந்தது.
“பப்பா, என்ர கலியாணமும் இங்கதான் நடக்கோணும்.” என்றான், ஜெரிக்சன்.
“நண்டு சிண்டுக்கெல்லாம் கலியாண நினைவா?” என்றுகொண்டே அடிப்பதுபோல் டேமியன் பாவனை செய்ய, அவர்கள் மூவரும் முன்னால் ஓடினார்கள். சிரித்துக்கொண்டே அவர்களோடு சேர்ந்து கொண்டான், டேமியன்.
மாளிகைக்குள் பிறகு பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள், அப்படியே ஏரியின் வடிவை உள்வாங்கிக்கொண்டே நெளிந்து விளைந்து சென்ற பாதையால் நடந்தார்கள்.மேலிருந்து வளைந்து நெளிந்து சரிவில் இறங்கும் வகையில் இருந்தது அந்த வழி. இடையிடை செதுக்கி வைக்கப்பட்டிருந்த உயர்ந்த சிற்பங்கள் ஒன்று ஒன்றும் அந்தத் தோட்டத்துக்கு இன்னுமே கம்பீரமும் அழகும் சேர்த்தன.
காலை பத்துமணிதான் என்றாலும் வெயிலுக்குக் குறைவே இல்லை. இருந்தபோதும் சுற்றமே பச்சைப் பசேல் என்று இருந்ததில் அது உறைக்கவில்லை. அதிலும் நீல நிறத்தில், மெல்லிய சலசலப்பில் இருந்த ஏரி, குளிர்மையை வாரியிறைத்துக்கொண்டிருந்தது.
எதிரே, கண்முன்னால், எட்டித் தொட்டுவிடும் தூரம் போல் உயர்ந்து படர்ந்திருந்தது, மலைத்தொடர். இடையிடை பாலம் பாலமாக இடைவெளிகளோடு பசுமையாக இருந்த மலைத்தொடரோடு வந்து கொஞ்சி விளையாடின, வெண்பஞ்சு மேகப் பொதிகள்.
சர்ரென்று சீறிச் சென்று கவனத்தைக் கலைக்க முயன்ற மோட்டார் படகுகள் தோற்றுப் போயிருக்க, கன்னமிரண்டிலும் கரங்களால் பொத்திப் பிடித்தபடி அந்தப் புதிய உலகை, உணர்வைத் துளி துளியாக இரசித்து நின்றாள், கல்யாணி.
அந்தத் தோட்டத்தின் பாதையோரமாக நீட்டுக்கும் நெளிந்து வளைந்து மதில் கட்டியிருந்தார்கள். அதில் ஆங்காங்கே மலர்த் தொட்டிகள் வைத்திருந்தார்கள்.
அங்கங்கே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டே முன்னேறிச் சென்றிருந்தார்கள், மற்றவர்கள். அதிலும் சுமதியை வழிநடத்துவதைச் சிறுவர்கள் தம் பொறுப்பாக்கியிருக்க, அருகில் கல்யாணியின் சத்தமேயில்லை என்றுதான் திரும்பிப் பார்த்தான், டேமியன்.
மென் செம்மஞ்சளில் அள்ளித் தெளித்த குட்டி குட்டி வெள்ளை மற்றும் நீலப் பூக்களோடு ஃபிளையாட் சட்டை அணிந்திருந்தாள், கல்யாணி. சற்றே மூழங்காலின் கீழ் நின்றது , அது. காற்றுவாக்கில் அங்கும் இங்குமாகப் பறந்து அவள் இருப்பைச் சட்டென்று காட்டிக்கொடுத்தது. அநேகமாக பான்ட்ஸ் பிளவுஸ் தான் அவள் அணிவது. அதுவே, இன்று சற்றே வித்தியாசமாக இன்னமும் வயதில் குறைந்தவளாக அவளைக் காட்டியது. அதிலும் சுற்றம் ஏற்படுத்திய தாக்கமாக்கும் முகம் மின்னியது.
அவள் முகத்தையே பார்த்தபடி நெருங்கினான், டேமியன்.
அதற்குள் அவன் கைப்பேசி சும்மாயிருக்கவில்லை. பிடிவாதம் பிடியோ பிடியென்று பிடித்து, அவளை, சில புகைப்படங்களாக அடக்கிவிட்டிருந்தது. அவள் அனுமதியேயில்லாதுதான், என்றாலும் செய்திருந்தான்.
அதேநேரம் மெல்லப் பக்கவாட்டில் திரும்பிய கல்யாணியின் பார்வை, சில கணங்கள் அதிகமாக அங்கு புகைப்படம், ஒளிப்படம் என்று எடுத்துக்கொண்டிருந்த திருமணச் சோடியில் பதிந்து விலகியது.
நட்புகள்,உறவுகள் சூழ நின்றவர்களது மகிழ்வு இவளை யாழ்ப்பாணத்துக்கு வலிந்து இழுத்திட்டு. சட்டென்று விழிகள் கலங்கிப் போயின. எத்தனை நாட்கள் சூர்யாவுடனான இந்தத் தருணத்தைக் கனவில், கற்பனையில் கண்டவள் அவள்.
மீண்டும் பார்வை அங்கே சென்றது. விழிகளில் நீர்ப்படலம் ஊறத் தொடங்கியிருக்க, சட்டென்று திரும்பி எதிரேயிருந்த மலைப்பிரதேசத்தைப் பார்த்தாள். தன்னைக் கட்டுப்படுத்த, பலவீனமாக்கும் சக்திகொண்ட உணர்வுகளைக் கட்டுக்குள் அடக்கப்போராடினாள், கல்யாணி.
இல்லாது ஏங்குபவளுக்கு தொலைத்ததின் அருமை நெற்றியடியாகத் தன்னை உணர்த்திக்கொண்டேதான் இருக்கும். தொலைத்தாளா என்ன? சற்றும் யோசியாது ஒதுக்கி உதறினாளே! பார்வைகள் உரசி உரசி, முறுவல்கள் ஒருவருக்கொருவர் அன்பூற்றை ஊறச் செய்து, ஒருவர் மற்றவர் பற்றி யோசித்து, அவரவரை அப்படியே ஏற்று நேசித்த ஒவ்வொரு கணமும் ஆயுள் உள்ளவரை மறப்பேனா என்று வதைக்கிறதே! என்ன செய்வாள்?
முகிழ்ந்த நேசத்தைக் கொய்து எறிந்துவிட்டதாகச் சொன்னவளால் அதைச் செய்ய முடியவே இல்லை. உதயாவின் முகம் எக்கச்சக்கச் சுளிப்பில் சுருங்கிக் கிடந்தது. பின்னர் கோபமாகவே பார்த்தது. இவளுக்கு விளங்கவில்லையா என்ன? அவள் நேசித்தவன் இப்போது உதயாவின் கணவன். இந்த நினைவோடு கைகோர்த்து எழுந்தது, ‘அதுக்காக ?’ என்ற ஒற்றைச் சொல்!
நினைவுகள், சற்றும் சலிக்காது ரசித்து வாழ்ந்த உணர்வுகள் எல்லாம் சேர்ந்து பின்னிப்பிணைந்த நினைவுகள் ஆயுளற்றவையா என்ன?
மீட்சியில்லா உணர்வுகளின் பிடியில் நெரிபட்டுத் தளர்ந்து நின்றவள் தோளில் விழுந்த மெல்லிய தட்டில், பெரிதாகத் திடுக்கிட்டுத் திரும்பியிருந்தாள், அவள்.
ஏக்கமும் கண்ணீரும் வெட்டவெளிச்சமாகத் தெரியத் திரும்பியவளைத் திகைப்போடு பார்த்தான், டேமியன்.
“கல்யாணி! என்ன நடந்திட்டுக் கல்யாணி ? என்ன பிரச்சின? அழுகிறீங்களா என்ன?” பதைபதைப்போடு கேட்டவன் திரண்ட விழிநீரை வழிந்தோடச் செய்துவிட்டான்.
பட்டென்று திரும்பிப் பார்த்தான். சுமதியும் பிள்ளைகளும் சுற்றத்தில் தொலைந்து போனபடி மெல்ல மெல்ல பார்த்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
“என்ன நடந்தது கல்யாணி?” சற்றே நெருங்கி உரிமையாகக் கேட்டவனைக் கூட உணராது நின்றாள், அவள்.
“கல்யாணி, கண்ணைத் துடையுங்க, எல்லாரும் பாத்துக்கொண்டு போகினம் பாருங்க.”என்றவன் வலக்கை ஆட்காட்டி விரல், மிக்க துணிச்சல் கொண்டது போலும். சற்றும் தயங்கவில்லை, அவள் கன்னங்களை நனைத்துருண்ட கண்ணீரைத் துடைத்துவிட்டது.
அவன் குரல் தராத விழிப்பை அந்தத் தொடுகை தந்துவிட்டிருந்தது.
சில அடிகள் பின்னால் நகர்ந்து விலகினாள், அவள். அக்கணம் அவனைப் பார்த்த பார்வையில் அத்தனை உக்கிரம். டேமியன் திகைத்துப் போனான்.
“இல்ல கல்யாணி…” தடுமாற்றத்தோடு ஆரம்பித்தான்.
“அது…ஒண்ணுமில்ல டேமியன், ஏதோ தூசி விழுந்திட்டு.” விழிகளிரண்டையும் அழுத்தமாகத் துடைத்துக்கொண்டே, ஒரு சிரிப்பை உதிர்க்க முயன்றாள், அவள்.
நீ எப்படி என்னை நெருங்கலாம்? அதுவும் இவ்வளவு உரிமையாக! நான் உனக்கு அந்த அனுமதி, இடம் தந்தேனா என்ன என்று, சீறிட முனைந்த உள்ளத்துக்கு எப்படித் தடா போட்டாள் என்றே தெரியவில்லை. அவன் மிகவும் சாதாரணமாகச் செய்த ஒரு செயலாக இருக்கலாமே! அவளின் நண்பி இந்நிலையில் நின்றிருந்தால் பார்த்துக்கொண்டா இருந்திருப்பாள்? அதற்கு அவளே வர்ணம் பூசி, வேறு மார்க்கத்துக்குத் திருப்பி விடுவான் ஏனென்ற எண்ணம் அமைதியாக்கி இருந்தது.
அவளையேதான் பார்த்து நின்றான், டேமியன். இப்போது அவன் உதடுகளில் மென்னகை வேறு வந்துவிட்டிருந்தது.
“போறவாற சனம் எல்லாம் இதைத்தான் சொல்லினம்.” என்றான். கேள்வியாகப் பார்த்தவளிடம், “இந்த இடத்தில தூசி தும்பு எண்டு கூடவாம்! கவனிச்சுப் பாருங்க, எல்லாரும் கண்ணீரோட தான் நடமாடினம். சரி விடுங்க.” என்றவன், மீண்டும் அவள் விழிகளில் கசிவை உற்பத்தி செய்திருந்தான்.
அதைக் கவனியாத பாவனையில் , “பாருங்க, எங்கட ஆக்கள் முன்னுக்குப் போய்ட்டினம். சுமதிம்மா சின்னப்பிள்ளைபோல அவேயோட இழுபட்டுக்கொண்டு போறா! வாங்க ஒரு செல்ஃபீ எடுத்திட்டுப் போவம். இதில வியூ அருமையா இருக்கு!” என்று அவளோடு நெருங்கி நின்று கைப்பேசியைத் தூக்கிப் பிடிக்க, மீண்டும் விலகத் தோன்றாது அவனைப் பார்த்து நின்றாள், கல்யாணி.
துண்டித் துருவவில்லை. அதேநேரம் கவனியாத பாவனையில் கடக்கவும் இல்லை. இதுதான் அவன். சிறு முறுவல் முகத்தில் உதித்திருக்க அவள் பார்வையும் கைப்பேசிக்குச் செல்லவும், “ஃபோட்டோ எடுத்து விடவோ?” என்றபடி முன்னால் வந்து நின்றார், ஒரு பெண்.
“sì grazie”(yes please )என்று, கைப்பேசியைக் கொடுத்துவிட்டு அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டு நின்றான், டேமியன். சில கணங்கள்தான், சில கிளிக்குகளை எடுத்திருந்தாள், அந்தப் பெண். அதிலொன்று, அவன் செய்கையில் அதிர்ந்து போனவள் விலகக் கூடத் தோன்றாது அவன் முகத்தை நிமிர்ந்து நோக்கியது, கவிதையாக கைப்பேசிக்குள் பதிந்துவிட்டிருந்தது. அடுத்து, அவள் பார்வையுணர்ந்து விழிகளைத் தாழ்த்தியவன் பார்வையில் இருந்த அன்பும்தான், துள்ளளோடு கைப்பேசிக்குள் அடங்கிவிட்டிருந்தது.
error: Alert: Content selection is disabled!!