நட்சத்திரா 11- 3

அவள், இதைச்  சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அதேநேரம் உதறி விலகவும் இல்லை. ஆனால், எவ்வளவு நேரமாகும் டேமியன். நீயே மெல்ல விலகிவிடு! அவன் மனத்துள் கட்டளை விழுந்த கணமே இயல்பாக விலகிவிட்டான். மிகவும் சாதாரணமாக நிற்பது போல் காட்டிக்கொண்டான். மனத்துள் துளிர்விட்டிருந்த இதம் வெண் தோகை விரித்தாடும் மயிலாகிப் போனது அவனுக்கு மட்டுமே தெரியும். 

“grazie madem!(thanks madam )” என்றவன், கைப்பேசிக்காகக் கை நீட்டினான்.

“bellissime coppie!(beautiful couple)” என்று சொல்லி,  மகிழ்ச்சியோடு சிரித்தபடி கைபேசியைக் கொடுத்தார் அப்பெண். கல்யாணிதான் உறைநிலைக்குச் சென்றிருந்தாள்.

“ நாங்க கப்பில் இல்ல ஃப்ரெண்ட்ஸ்  எண்டு அவவைக் கூப்பிட்டு விளக்கம் குடுத்துக்கொண்டிருக்கவா  இஞ்ச வந்தம் சொல்லுங்க? எங்களுக்குத்  தேவை இந்த அருமையான வியூவில ஃபோட்டோ! ம்ம்ம் வாங்க.” அவள் கை பற்றி இயல்பாக நடந்தவனிடமிருந்து கரத்தை உருவிக்கொண்டவள் உள்ளம், இப்போது, வேறுவகையான தட தடப்பில் குதித்துவிட்டிருந்தது.

யோசித்துப் பார்த்தால், அவளால் அவன் செய்கைகளுக்கு விகல்பமான வண்ணம் தீட்ட முடியவில்லை. ஆனால், அவன் சாதாரணமாகச்  செய்யும் செயல்களில் எல்லாம் இவள் என்ன உணர்கிறாள்? அப்போ இவளில்தான் பிழை! இவள் மனம் என்ன எதிர்பார்க்கிறது? ‘செய்க்!’ மிகவுமே குன்றலாக இருந்தது அவளுக்கு. 

அதுவே வாயைக் கட்டிப் போட்டிருக்க, சுற்றம் இரசித்த விழிகள் கூட சோர்ந்திருக்க அவர்களோடு சேர்ந்து இழுபட்டாள்.

அவளையே கவனித்த டேமியன், பிள்ளைகளை அவளோடு சேர்த்துவிட்டுவிட்டு, சுமதியோடு சேர்ந்து நடந்தான். அது வேலை செய்தது. பிள்ளைகள் மூவரும் அவளை ஒரு வழி பண்ணி இயல்பாக்கிவிட்டிருந்தார்கள். 

அந்தப் பாதையின் முடிவு, நெளிந்து வளைந்து ஒடுக்கமாகச் சென்று, இறுதியில், வட்டவடிவில் சுற்றத்தை இரசிக்கும் வகையில் இருந்தது. 

அங்கிருந்த இருக்கையில் இவனும் சுமதியும் அமர்ந்துவிட்டார்கள். இப்போ ஏரியில் ஆரவாரம் எழுந்திருந்தது. சீறிச் செல்லும் இயந்திரப்படகுகள், வள்ளங்களின் எண்ணிக்கை கூடியிருந்தது. மேலே மர நிழலில்லாததால் ஆதவனின் உக்கிரம் கூட உறைத்தது. எதையும் கவனியாது கல்யாணியும் பிள்ளைகளும் சுற்றத்தை இரசித்துப்  புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்க, அவர்களை இரசித்துக்கொண்டிருந்தார்கள், சுமதியும் இவனும்.

அவன் என்னவோ பிள்ளைகளைப்  பார்க்கிறான் என்று நினைத்திருந்தார், சுமதி. அவன் பார்வை அவர்களோடு சேர்த்துத் தன் மகளையும் தழுவுவதை அவர் அவதானிக்கவில்லை.

 மனைவியின் மறைவு வீழ்த்தியிருந்த வெற்றிடம் மெல்ல மெல்ல மறையும் உணர்வில் இருந்தான், அவன். உரிமையாக, அவள் அருகண்மையை அனுபவிக்க விரும்பினான். சாத்தியமாகுமா? கல்யாணியின் கடந்த காலம் அறிந்தவனுள் பெரும் கேள்வி.

 நேசித்தவனை நினைத்துக்கொண்டே இத்தனை வருடங்களை கடத்தியவள், அவள். விழிகளை மூடிக்கொண்டான், டேமியன். சில நிமிடங்களில் கண்களைத் திறந்தவன் பார்வை மீண்டும் அவள் மீதுதான். சாத்தியமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டான். 

அடுத்து மேலேறி, வரிசையில் பொறுமையாக நின்று இயற்கை கொட்டிக்கிடக்கும் முன்புறத்தைப் பார்க்கும் வகையில் வில்லா வளைவில் நின்று புகைப்படங்களை எடுக்கத் தயாரானார்கள்.

“Star Wars ல வந்தது போலவே தான் எடுக்கோணும் .” என்ற ஜெரிக்சன், வரிசையில் முன்னால் நின்றவர்கள் எடுப்பதைக் காட்டி அப்படித்தான் நிற்க வேண்டும் என்றான். 

“இந்த விளையாட்டுக்கு நான்  வரேல்ல.” என்றுவிட்டாள், கல்யாணி. சுமதியும் “வேணாமே.” என்றார். அவர்கள் பின்னாலும் வரிசை நீண்டிருக்க, அதில் நின்று, முன்னால்  பார்த்துக்கொண்டு பின்னால் கரங்களைக் கட்டிக்கொண்டு என்று எடுக்க அவருக்கு வெட்கமாக வேறு இருந்தது. பிள்ளைகள் விட்டார்களா என்ன?

தாங்கள் மூவரும் எடுத்தபின் சுமதியை அனுப்பி ஒரு வழி  பண்ணினார்கள். கல்யாணி கையெடுத்துக் கும்பிட்டபடி சென்று, பின்னால் கரங்களைக் கோர்த்துக்கொண்டு நிற்க, டேமியன் கடகடவென்று தட்டித் தள்ளினான். 

“அப்படியே நிண்டுகொண்டு எங்களத் திரும்பிப் பாருங்க கனி அன்ரி.” என்ற பபிதாவின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் விடமாட்டாள் என்று தெரிந்ததில் மெதுவாக அவள் திரும்ப, அது, டேமியன் உள்ளத்தில் கவிதையாகப் பதிந்திட்டு. புகைப்படக்கருவியோ, போதுமடா என்று முனகும் சத்தம் கேட்டது . அந்தளவுக்கு  ஒரேயடியாக அத்தனை புகைப்படங்களைத் தட்டித் தள்ளியிருந்தான், டேமியன்.

கல்யாணியின் கையில் புகைப்படக்கருவியைக் கொடுத்துவிட்டுச் சென்று நின்றான், டேமியன். 

“வாவ் பப்பா!” பிள்ளைகள் கூவி விட்டார்களா,   பகிடிபகிடியாக நெளிந்து வளைந்து போஸ் கொடுத்தான், அவன். கல்யாணி சிரித்துக்கொண்டேதான் தட்டியிருந்தாள். 

இனிப்போதும் என்று சுமதி பிள்ளைகளை இழுத்துச் செல்ல, ‘ரெண்டு பேருமா நிண்டு ஒண்டு எடுப்பமா கல்யாணி?’ என்று, நாக்கு  நுனிக்கு வந்துவிட்ட வார்த்தைகளை, மனத்தின் ஆசையோடு சேர்த்து விழுங்கிக்கொண்டே சேர்ந்து நடந்தான், டேமியன்.

அப்படியே சென்று, பிள்ளைகளுக்கான மதிய உணவை அங்கிருந்த உணவகத்தில் முடித்துக்கொண்டு காருக்கு வந்தவர்கள், ஆட்டிறைச்சியும்  சோறும்  என்று தம் உணவை ஒரு கை பார்த்தார்கள். 

பிடித்த உணவுகளை வீட்டில் உண்பதையும் விட, இப்படிக்  களைத்துப் போயிருக்கையில் வெளியிடங்களில் உண்பது தனிச் சுவை! அதிலும் ஹொட் பாக்குகளில் கொண்டு வந்திருந்த உணவு சூட்டோடு இருந்தது. வெங்காயச் சம்பலில் உப்பு, மிளகுத்தூள் கலந்து எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கலந்துவிட்டு,  மூவருக்குமாகப் பரிமாறியது கல்யாணிதான்.

“அவ்வளவு ருசி! இனி ஆட்டிறைச்சி எண்டா உங்கட கையால  மட்டும் தான் சாப்பிடுறது எண்டு முடிவு செய்திட்டன் கல்யாணி!” என்று, தன் மனம் மறைத்துச் சாதாரணமாகச்  சொல்ல நினைத்தான், டேமியன். பார்வை ஒத்துழைக்கவில்லை. நேசத்தோடு கலந்த தவிப்பு அவள் பார்வையோடு மோத , உறைந்து போனாள், கல்யாணி. இதையும் நட்பில் என்பாளா? தாயைத்தான் பார்த்தாள்.

“உண்மை தம்பி, நான் சமைக்கிறத விட பிள்ளேட  இறைச்சிக்கறி அருமையா இருக்கும். எங்கட  சிலோன் டேஸ்ட்டில ஆட்டிறைச்சிக்கறிக்கு இவவைப் பொறுப்பாப்  போட்டிரலாம்.” இலகுவாகச் சொல்லி முறுவலித்தார், அவர்.

“அட!  இது நல்ல ஐடியாவா இருக்கே சுமதிம்மா! ஃப்ரெண்டுக்காக கொஞ்சம் டைம் ஒதுக்கித் தரமாட்டீங்களா கல்யாணி?”  என்ற டேமியன் கல்யாணியை நன்றாகவே குழம்பினான்.

தன்னை மறந்து மனத்தில் விழுந்த நேசத்தை வெளிக்காட்டுவதும் கண்ணைமூடிக்கொண்டு மறுக்கக்கூடியவள் என்பதால், ஒன்றுமேயில்லை எல்லாமே நட்புப்பா என்பதுமாக நடந்துகொண்டான்.

கல்யாணி என்பவள் நிதானமாகக் கையாள வேண்டியள். ஒரு முறை மறுத்து ஒதுங்கிவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடலாம். தன் விருப்புக்கு, ‘நிதானம்’ என்கிற கடிவாளத்தை, அவசியமுணர்ந்து போட்டுக்கொண்டான், அவன்.

மதியம் ரெண்டு மணி கடந்திருக்கும் , அங்கிருந்து புறப்பட்டவர்கள், முக்கால் மணிநேர ஃபெரி பயணத்தின் பின்னர், Orrido di Bellano வந்து சேர்ந்திருந்தார்கள்.

ஆழமும் ஒடுக்கமுமான நீர்விழ்ச்சியோடு உள்ள பெரும் பள்ளத்தாக்கு அது. பதினைந்து மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்த அப்பள்ளத்தாக்கு,இரும்பு கேடர்களிலான தொங்கு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த படிகளுமே இரும்பினாலானவைதான். 

மேலே இருந்த தேவாலய கார் நிறுத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். 

சுமதியின் இரு கைகளையும் பெரிய பிள்ளைகள் இறுகப்பற்றியபடி முன்னால் நடந்துகொண்டிருக்க, கல்யாணியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு நடந்த சிசிலியா, எட்டி டேமியன் கரத்தையும் தனதாக்கி இருந்தாள். அவள் விழிகளில் மெல்லிய பயம் தெரிந்தது. 

வெள்ளையருவியாக நீர் கொட்டுவதும் ஓங்கி வளர்ந்த மலைக்காடுகளும் கீழே வழிந்து செல்லும் நீர் தேங்கி நின்ற பச்சைக் குட்டைகளும் ஒடுங்கிய கற்பாறைகளிடையால் நெளிந்து வளைந்தோடும் பால் அருவியுமாக மனத்தைக் கொள்ளை கொண்டது, இயற்கை! 

அதுவரை இருந்த தேவையற்ற எண்ணங்கள் நீங்கிட, அந்தச் சூழலோடு  ஒன்றிப்போனாள், கல்யாணி. 

அமைதி கொஞ்சும் இயற்கையோடு, தான் பெற்ற மகளாக வளர்ப்பவள் கரம் பற்றி நடப்பவளை, அப்பப்போ பார்த்தபடி நடந்த டேமியன் மனம் அவ்வளவு நிறைவானதாக இருந்தது. இதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்று கவலையும் வந்திருந்தது. 

இருவருக்குள்ளும் இடைவெளி சிறுமி மட்டுமே! உள்ளங்களிடையே அதுகூட இருக்கக் கூடாது என்ற பேராசை அவனுள். அவள் முகத்தைப் பார்த்தவன் பார்வை சிலகணங்கள் அதிகமாகவே தங்கி நின்றுவிட்டது. சட்டென்று கல்யாணியின் பார்வை திரும்பியிருந்தது. கள்ளம் பிடிபட்ட உணர்வு அவனுள். அதையும் ஒழித்துக்கொண்டு, “வந்ததுக்கு வெர்த் என்ன கல்யாணி?”  என்றான். 

அப்படியே அங்கிருந்து புறப்பட்டவர்கள் அடுத்த ஒன்றரை மணித்தியால ஓட்டத்தில்  Cathedral (Duomo) / Duomo di Milano வந்திருந்தார்கள். 

உலகில் மூன்றாவது பெரிய தேவாலயம் இது. அதேநேரம் ஐரோப்பாவில் முதலிடம் பெற்றது. ஆயிரக்கனக்கான சித்திரத் துண்டுகள் கொண்டு கட்டப்பட்டதும் கூட. வணங்கும் பகுதிகளை விட, மேலே கூரைப்பகுதி மியூசியம். பார்வையிட நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டும் . 

இந்த விபரங்களைச்  சொல்லிக்கொண்டு நடந்த டேமியன்,  “ரூஃப் பகுதிக்கு இன்னொரு நாள் வரலாம். இப்ப உள்ளுக்குப் போய்க் கும்பிட்டுட்டுப் போவம் என்ன?” என்றான்.

“நீங்க போயிட்டு வாங்க, நாங்க வெளில பார்த்துக்கொண்டு நிக்கிறம்.” என்றாள் , கல்யாணி.

பிள்ளைகள் விட்டார்களா? இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருந்தார்கள். 

தெய்வம் என்ற ஒன்றுள்ளதா என்ற சந்தேகமே இல்லாது அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் வாழ்பவர்கள் தாயும் மகளும். மனத்தில் வஞ்சம் இல்லை, தம் செயல்களால், சொற்களால் அடுத்தவருக்குப் பாதிப்பில்லை. இந்த வாழ்வில் கடவுளுக்கு என்ன வேலை. மனிதத்தோடு வாழ, கண்ணால் கண்டிராத ஒரு சக்தியின் வழிநடத்தலோ நம்பிக்கையோ தேவையே இல்லை என்பவர்கள், இயற்கையை மதித்து வாழ்பவர்கள் நாங்கள் என்பார்கள். இது அவர்கள் நிலைப்பாடு என்ற தெளிவும் உண்டு. யாரோடும் வாதாடவோ திணிக்கவோ  முயலுவதில்லை. 

அதுவே, பிள்ளைகளின் ஆசைக்கு இழுபட்டு உள்ளிட்டிருந்தாள். அங்கிருந்த கலைநயம் நெஞ்சைத் தொட, ரசித்துக்கொண்டு நடந்தவள் வாயிலால் வெளிவருகையில்,  அங்கிருந்த தீர்த்தத்தைத் தொட்டு, அவள் நெற்றியில் இட்டுவிட்டுச் சென்ற டேமியனின் செய்கையில் அப்படியே நின்றுவிட்டாள். 

முன்னால் சென்றுவிட்டுத் திரும்பினான், டேமியன். “அப்பிடியே நில்லுங்க கல்யாணி.” என்று ஒரு ஃபோட்டோ வேற. 

‘எது எப்பிடியோ இவரோட தள்ளியே நின்றுவிடு கல்யாணி!’ என்று எச்சரித்த மனத்துக்குச் செவி சாய்த்தபடி நடந்தவளில், இரவுணவை உணவகம் ஒன்றில் முடித்துவிட்டு வீடு வரும் வரை ஒதுக்கம் தெரிந்ததில் சோர்ந்து போனான், டேமியன்.

அதையும் கடந்து , அவன் மிகுதி வாழ்வுக்கு இவள் என்று நிர்ணயமும் செய்திருந்தவன், விடைபெற்றுத் தம் பகுதிக்கு நடந்தவளை நேசமுடன் பார்த்து நின்றான். 

 

error: Alert: Content selection is disabled!!