நட்சத்திரா 12 -2

‘காதல்’ ஒரு தரம் மட்டுமே மலரும் தெய்வீகமான உணர்வென்று யாராவது சொல்வார்களா  என்ன? சொன்னாலும் அதைப்  பொய் என்று நிரூபித்தபடி இதோ நிற்கிறான், டேமியன். 

நெற்றி நிதானமாக மேலேறி இறங்க, “கண்டு கன காலம் என்ன? இண்டைக்கு ஃபிரீ தானே? ஓடிப்போய் ரெடியாகிட்டு வாங்க. ஜொக்கிங் போயிட்டு வருவம்.” சுதாரித்திருந்தவன், வெகு சாதாரணமாகச்  சொன்னான்.  

இவள்தான் தன்னைச் சமாளித்துக்கொள்ள  வேண்டியிருந்தது. இல்லை, நான் வரவில்லை என்று சொல் என்றது உள்ளம்.  மாறாக, “ஒரு ஐஞ்சு நிமிசம்.” என்றுவிட்டு உள்ளே திரும்ப, “ கல்யாணி” அழைத்து நிறுத்தினான், அவன்.

கேள்வியோடு திரும்பியவளிடம், “Buongiorno!” விழிகள் சுருங்கிய நகைப்போடு மீண்டும் சொல்ல, இப்போது முறைத்தாள், அவள்.

ஆனாலும் “காலை வணக்கம் சேர்!” நக்கல் குரலில் சொல்லிட்டே உள்ளே சென்றிருந்தாள். 

இந்த இரு கிழமைகளில், அவனைவிட்டுத் தள்ளி நிற்க  முடிவெடுத்து என்ன எல்லாம் நினைத்திருந்தாள். இப்போ என்ன செய்கிறாள் என்ற எண்ணமேயில்லாது, ஜொக்கிங் பான்ட்டை அணிந்து டீ சேர்ட்டைப் போட்டவள், தலைமயிரைக் கோதி உச்சியில் ஒரு பாண்ட் போட்டு, குதிரைவால் போல் வழியவிட்டுக் கொண்டாள். 

முகத்தில் கொஞ்சமாக கிரீம், உதடுகளுக்கு லிப் பாம். அவ்வளவும்தான்.

அடுத்த இரண்டாவது நிமிடம் கதவைப் பூட்டிக்கொண்டே எங்கே அவன் என்று விழிகளைச்  சுழற்றினாள்.

“கல்யாணி இங்க நிக்கிறன்.” மெல்லச் சொன்னவன் முன் வாயிலருகில் நின்றிருந்தான்.

வீட்டை விட்டு வெளியேறி மெல்ல ஓடத் தொடங்கிய இருவரும் பெரிதாகக் கதைத்துக் கொள்ளவில்லை. டேமியனுக்குக்  கதைக்கவே தேவையில்லை என்ற மனநிலை. அவள் அருகாமையை இரசித்தபடி ஓடிக்கொண்டிருந்தான். 

கல்யாணிக்கோ, தன் மனநிலை பற்றிச் சரியாக விளங்கவில்லை. இந்தக் கணத்தை அவள் ரசிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டாள். முற்றிலும் புதியதொரு மகிழ்வு, அதற்கு என்ன பெயர் என்று உண்மையிலும் விளங்கவில்லை. அந்தத் தடுமாற்றம் அவளுள் நிறையவே இருந்தது. அதேநேரம், அவன் வந்து நின்றது, காலை வணக்கம் சொன்னது, அவன் கனிவான பார்வை என்று, அவனைச் சுற்றியே  மனம் ஆக்கிரமித்திருக்க மிகவுமே நெகிழ்ந்துமிருந்தாள். 

அவன் பார்வையில் கனிவைக் கண்டவளுக்கு, அதில் ஒளிந்து கிடந்த நேசத்தை உணர முடியவில்லையா? உணர்ந்ததை ஆழ்ந்து அனுபவிக்க விரும்பவில்லையா? இந்தக் கேள்விகளின் பக்கமே, அவள் தலைவைத்தும்  படுக்கவில்லை. 

தாய்க்கு அடுத்து, இவன் அணுகுமுறைதான் இவள் பற்றிய கரிசனையோடு, புரிந்துணர்வோடு, குறிப்பாக நட்போடு இருந்தது. இப்படியே இருந்துவிட வேண்டும் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. தப்பித் தவறியும் வேறு கதைகள் அவன் வாயிலிருந்து வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் மனத்தில் ஆடியோடிக் திரிந்து கொண்டிருந்தது. 

‘என்னதான் சொல்லு, நீ வலு கெட்டிகாரிதான் கல்யாணி. தப்பிக்கும் வழி தேடியே சிந்தனையைச் செலுத்துகிறாய்.’ உள்ளிருந்து ஒரு குரல் சீண்டியது. அதைப் பொருட்படுத்தாது, 

மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள். 

அவனும் பார்த்தான், என்னவென்று ஏறியிறங்கிய நெற்றியும் முறுவலுமாக. 

“நிக்கப் போறீங்களா? இதில இருந்திட்டுப் போகலாம்.” அவள் பதிலை எதிர்பாராதே கேட்டிருந்தான்.

 

“இல்ல, போகலாம்.” தொடர்ந்து ஓடியவள், “நான் ஒண்டு கேக்கலாமா கல்யாணி?” என்று, அவன் கேட்க, உச்சபட்சமாக அதிர்ந்தாள். 

அதே அதிர்வோடு அவனைப் பார்த்தவள் ஓட்டம் மெதுவாகியிருந்தது. முன்னே சென்றுவிட்டவன் திரும்பிப் பார்த்தான். அவள் அதிர்வு துல்லியமாகத் தெரிய மென்மையாகச் சிரித்தவனுக்கு, என்ன கேட்டுவிடப் போகிறான் என்று நினைத்திருப்பாள் என்பதை ஊகிக்க முடிந்தது. 

‘அவ்வளவு கெதியாக் கேக்க மாட்டன் கல்யாணி. உங்களிட்ட இருந்து மறுப்பு எனக்கு வரக்கூடாது.’ மனத்துள் சொல்லிக்கொண்டவன், “என்ன ஷொக்  ஆகிட்டிங்க? அப்பிடி என்னத்தக் கேட்டிரப்போறன் சொல்லுங்க.” நக்கல் அடிக்கிறானா என்ற எண்ணம் வரும்படிதான்  கேட்டிருந்தான்.

இதற்கு என்ன பதில் சொல்வது? அவள் வாயெல்லாம் வறண்டுபோன  உணர்வு. எச்சிலைக் கூட்டி விழுங்கினாள். அவனை நிமிர்வாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றது உள்ளம் . முடிந்தால் தானே. பார்வை, அவன் முகத்துக்குச் செல்வதும் அப்பால் அலைமோதுவதுமாக இருக்க, அவள் தவிப்பைத் துளித்துளியாக ரசித்தவன், “அது ஒண்ணும் இல்ல கல்யாணி…” வேண்டும் என்றே இழுத்தான். 

“வாங்கவன் , போய்க்கொண்டே கதைக்கலாம்.” என்று நகர, வேற வழியில்லாது சேர்ந்து ஓடத் தொடங்கினாள். 

“என்ன டப்பெண்டு  முகமெல்லாம் ஒரு மாதிரி ஆயிற்று. ஆட்டிறைச்சிக்கறி  சமைச்சுத் தரச் சொல்லிக் கேப்பன் எண்டு நினைச்சுப் பயந்திட்டிங்களோ?” இலகுக் குரலில் கேட்க, முறைத்தாள் இவள். அவனின் இலகுவான குரலும் பாவனையும் இவளையும் சற்றே இலகுவாக்கியது.

“இதுக்கு முதல், என்னைப் போல ஃப்ரெண்ட் ஆராவது உங்களுக்கு இருந்தவேயா கல்யாணி?” நமுட்டுச் சிரிப்போடு கேட்டவன் பார்வை அவளில்.

 சற்றும் எதிர்பாராத கேள்வியாச்சே! “உப்ஸ்” என்ற பெரிய மூச்சை வெளியேற்றியபடி, அங்கிருந்த மர வாங்கிலில்  அமர்ந்துவிட்டாள், அவள். அவன் முகம் பார்க்கவில்லை. 

தொடைகளில் கரங்களை முண்டு கொடுத்து, கரங்களால் கன்னங்களைத் தாங்கியபடி இருந்தவள் பார்வை நிலத்தில். எவ்வளவு நேரம் இருந்தாளோ, ஆடாது அசையாது அப்படியே இருந்தாள். 

மனம் அப்படி இருக்கவில்லை. அவன் இக்கேள்வி கேட்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அப்போ, என்னதான் எதிர்பார்த்தாய் என்ற மனசாட்சிக்கு எல்லாம் அவள் பதில் சொல்லத் தயாரில்லை. ஆனால், அவன் கேட்ட கேள்வி, அண்மைய நாட்களில் அவள் மறந்திருந்த பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருந்தது. ‘நீ எப்படி மறக்கலாம்?’ என்ற சாடலும் கூடவே எழுந்துவிட்டிருந்தது. 

அவளையே பார்த்தபடி நின்றிருந்தவன், அங்கிருந்த மரத்திலிருந்து இளங்கொப்பொன்றை உடைத்து எடுத்துக்கொண்டான். நிறைந்த இலைகளோடு இருந்த கொப்பை முறுவலோடு பார்த்தவன், நிதானமாக அவளை நோக்கி அதைக் கொண்டு சென்றான்.

அவள் தலையில் மரக்கொப்பால் தட்டினான். அதுவோ மென்மையாக உரசி வைத்தது. விலுக்கென்று நிமிர்ந்துவிட்டாள், கல்யாணி.

மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான், டேமியன்.

இப்போ, அவள் தன் பார்வையை விலக்கவில்லை. சிறு சிரிப்போடு எதிர்கொண்டாள். 

“அப்பாடா! சிரிக்க மறந்து போனீங்கள் எண்டு நினைச்சிட்டன் தெரியுமா?” சீண்டினான். அது தந்த சுவாரசியம் இருக்கே!

“என்ன இதெல்லாம் சின்னப் பெடியன்கள் போல!”அவளையே சுற்றி வந்த கொப்பைப் பிடித்து விலக்கி விட்டவள், பகிடி போலக் கதைத்து அவன் கேள்வியைக் கடக்க நினைத்தாள்.

“இதில என்ன சின்னப்பிள்ளைத்தனம் இருக்கு. முதல், நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க கல்யாணி!” இப்போது அவன் குரலில் பிடிவாதம் வந்திருந்தது.

அவளுக்கு மூன்று தடவைகள் கொரோனா வந்திருக்கு. அந்நேரமெல்லாம் எச்சில் விழுங்கும் போதே, வறண்டு கிழிந்த தொண்டையால் கரடுமுரடான கற்களை விழுங்கும் வலி கொடுக்கும். அப்படித்தான் இப்போதும் உணர்ந்தாள். முட்களால் திரண்ட பெரிய உருண்டையொன்று  தொண்டைக்குழியில் சிக்கிவிட்ட  உணர்வு. இதயம் வேறு கனத்திட்டு. கண்கள் கலங்கி விட்டன. அவன் முன்னால் உடைந்து போவாளோ! 

கூடவே கூடாது என்ற வைராக்கியத்தோடு அவள் வேதனை சண்டையிட்டுக்கொண்டிருக்க, “சொல்ல மாட்டீங்களா கல்யாணி?” அவள் மனநிலை தெரியாது சீண்டல் குரலில் அருட்டிக்கொண்டே இருந்தான்,டேமியன். 

அவன்  கையிலிருந்த சிறு கொப்பு வேறு, அவள் தலையில் இருந்து முகத்துக்கு இறங்கி வருடியது.

“ப்ச்! என்ன இது சேட்டை டேமியன் ?” வெடுக்கென்றுதான் கேட்டுவிட்டாள். விழிகள் வேறு இடுங்கி, கோபப்பார்வை சிந்தியது. முகத்தில் அவ்வளவு கடினம் வந்திருந்தது. அன்று, சுனிமல் கலைத்து கலைத்துக் கதைக்கையில் நின்ற பாவனையேதான். 

டேமியன் திடுக்கிட்டு விட்டான். ‘போச்சா!’ அவன் உள்ளம் அலறிக்கொண்டிருக்க,  “போவம் வாங்க!” எழுந்து  ஓடத் தொடங்கிவிட்டாள், கல்யாணி.

அவன் அசையவேயில்லை. சின்னக் குரலில் தான் சொல்லியிருந்தாள். அதில் இருந்த கடுமை பட்டென்று முகத்தில் ஒன்று போட்ட உணர்வைத் தந்துவிட்டதே! டேமியன் முகம் இறுகிக் கறுத்திட்டு. சற்றுத் தூரம் சென்றுவிட்டவளுக்கு அவன் தொடரவில்லை என்று தெரியும். மனம் கேட்காது நின்று திரும்பினாள். அவனோ, அசைவேனா பார் என்ற கணக்கில் நின்றிருந்தான்.

விறுவிறுவென்று அவனை நோக்கி நடந்து வந்தாள். தன்  பார்வையில் பாவனைகளைக் காட்டாது கவனமாக  நின்றான், டேமியன்.

“காலம காட்டி  உங்களுக்கு என்ன பிரச்சின டேமியன்? எத்தின நாள் கண்ணிலயே காணக் கிடைக்கேல்ல. இப்ப வந்து நிண்டு…என்ன இதெல்லாம்?  நல்லாத்தானே இருந்தனீங்க? ப்ளீஸ் டேமியன், எப்பவும் போல இருங்க ப்ளீஸ்!” என்றவள் கண்கள் கலங்கிப் போயின.

அவனுக்கே ஒரு மாதிரியாகிற்று.சட்டென்று தளர்ந்து இயல்பாகினான். அவள் கண்ணீருக்கு அவ்வளவு சக்தியுண்டு என்று அப்போதுதான் தெரிந்தது. அவன் ஆசைக்கே பலத்த குட்டுக் கொடுத்துவிட்டு அவளின் நண்பனாக நின்றான், டேமியன்.

“வேற ஃபிரெண்ட்ஸ் இருந்தவேயா, இருக்கினமா எண்டு மட்டும் தானே கேட்டனான்? அது பிழையா? veramente dispiaciuto (really sorry )…உண்மையாவே  சொறி கல்யாணி! இனி இப்பிடி எல்லாம் கதைக்க மாட்டன் போதுமா? வாங்க போகலாம்.” ஓடத் தொடங்க, இணைந்துகொண்டாள், அவள்.

error: Alert: Content selection is disabled!!